c நாமிருக்கும் நாடு-26
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-26

சா.வைத்தியநாதன்
சின்ன அண்ணாமலை

தமிழக வரலாறு மறந்த மகத்தான மனிதர்களுள் ஒருவர் சின்ன அண்ணாமலை. இந்திய சுதந்திரத்துக்குத் தன் வாழ்க்கையைப் பலிகொடுத்த காந்தியவாதி. கலாச்சாரப் பண்பாட்டு மலர்ச்சிக்காகத் தொண்டாற்றிய கலை அன்பர். என்றாலும் என்ன, எண்ணற்ற தியாகிகளுக்கு நேர்ந்த இருட்டடிப்பு போலச் சின்ன அண்ணாமலையும் இத்தலைமுறை அறியாதவரானார்.
அண்மையில் ஒரு அரசியல் விமர்சகர், “இன்றைய தலைமுறை இலட்சியமாகக் கொண்டு இயங்கத்தக்க முன் உதாரணத் தலைவர்கள் இருக்கிறார்களா’’ என்று எழுதினார். எப்படி இருக்க முடியும், இருந்தவர்களை எல்லாம் புறக்கணித்து முடித்த பிறகு?
காரைக்குடிக்கு அருகிலுள்ள சிறுவயல் எனும் ஊரில் பாங்கர் நாச்சியப்பச் செட்டியார்_மீனாட்சி ஆகியோருக்கு 1920 ஜூன் 18ல் பிறந்தவர் அண்ணாமலை.
பள்ளி இறுதி வகுப்பில் படித்தபோது கமலா நேரு அம்மையார் இறந்ததை ஒட்டிப் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டார் அண்ணாமலை. தலைமை ஆசிரியர் மறுத்தார். வேறு வழியில்லாமல் மாணவர்களைத் திரட்டிக்கொண்டு ஊர்வலம் சென்றார். விளைவாகப் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அண்ணாமலை டிஸ்மிஸ் செய்யப்பட்டது காரணமாக மாணவர்கள் தொடர்ந்து ஹர்த்தால் (போராட்டம்) செய்ததால் நிர்வாகம் ஸ்தம்பித்தது. தலைமை ஆசிரியர் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். அண்ணாமலையின் பள்ளிக்கல்வியும் அத்துடன் முடிந்தது. அவர் முழுநேர அரசியல்வாதியானார்.
பிள்ளை இப்படி அரசியலில் “கெட்டுப்’’ போவதில் அண்ணாமலையின் தந்தைக்கு விருப்பமில்லை. உருப்படவேண்டும் என்று மலேயாவுக்கு அனுப்பி வைத்தார். அங்கு இவருக்குச் சொந்தமான ரப்பர் எஸ்டேட்டும் வட்டிக்கடையும் இருந்தது. அண்ணாமலைக்கு தன் மாமாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டுக்குள் இருந்த கள்ளுக்கடை கண்ணை உறுத்தியது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கள்ளுக்கடைப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது. தான் சும்மா இருக்கலாமா? தொழிலாளர்கள்  வீட்டுப் பெண்களைத் திரட்டினார். மறியல் _  தடியடி _ போராட்டம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் பெண்கள் கள்ளுக்கடைக்குத் தீவைத்து விட்டார்கள். அண்ணாமலை கைது செய்யப்பட்டார். கவர்னர் முன் நிறுத்தப்பட்டார். கவர்னர் இவரைப் பார்த்து, ‘பையனாக இருக்கிறாய். வயதும் 17 தான் ஆகிறது. ஒரு மாசம் டைம் தருகிறேன். அதற்குள் மலேயாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்றார்.
நாடு திரும்பினார் அண்ணாமலை. 17 வயதிற்குள் அவர் ஒரு மகனுக்குத் தந்தை ஆகியிருந்தார்.
மாபெரும் 1942 ஆகஸ்ட் போராட்டம்  தொடங்கப்பட்டது. நாடு கொந்தளித்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் தீயாகப் பரவியது. போராட்டத்தில் அண்ணாமலை 144 தடை உத்தரவை மீறிக் கூட்டம் நடத்தி தீவிரமாகப் பேசினார். கைது செய்யப்பட்டார்.
1942 ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். இரவு 12 மணி. கையில் விலங்கு பூட்டி, நூற்றுக்கணக்கான ரிசர்வ் போலீஸ் பாதுகாவலில் தேவகோட்டையிலிருந்து 22 மைல் தொலைவில் இருக்கும் திருவாடானையில் இருக்கும் சப் ஜெயிலில் கொண்டுபோய் அடைத்தது போலீஸ். விஷயம் பரவியது. மக்கள் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகை இட்டார்கள். கடைகள் மூடப்பட்டன. அவரை ஏற்றிவந்த இராமவிலாஸ் பஸ் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. பலர் இறந்தார்கள்.
சுமார் இருபதாயிரம் பேர் திரண்டு திருவாடானைக்கு ஊர்வலமாக கோஷம் எழுப்பிக்கொண்டு நடந்தே வந்தார்கள். போலீஸ் பயந்து போய் என்ன செய்யலாம் என்று அண்ணாமலையிடமே கேட்டார்கள். “காக்கிச் சட்டையை கழற்றிப் போட்டுத் தப்பித்துக்கொள்ளுங்கள்’’ என்றார் அண்ணாமலை.  மக்கள் திரள் சப்ஜெயிலை உடைத்து, அண்ணாமலையை விடுதலை செய்தது.
இந்திய அளவில், ஒரு போராளிக்கு மக்கள் சிறையை உடைத்து விடுதலை தந்தது அதுவே முதல்முறை. என்ன காரணமாகவோ வரலாறும்  இதை மறந்தது. தலைவர்களும் இதை மறந்தார்கள்.
திருவாடானைப் போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அண்ணாமலை கையில் குண்டு பாய்ந்தது. தொண்டர்கள் பலர் இறந்தார்கள். அண்ணாமலையின் மேல் வெள்ளை அரசு போட்ட வழக்குகள் ஏராளம். ராஜாஜி, மிகப்பெரிய வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து, தானே தன் கைப்பட ‘பாய்ண்ட்டுகள்’ எழுதிக்கொடுத்து, நான்காண்டுகள் தண்டனையை ஆறு மாதமாக மாற்றி விடுதலை வாங்கித் தந்தார்.
விடுதலையான அண்ணாமலையின் கவனம், கலாச்சாரம் பக்கம் திரும்பியது. ராஜா அண்ணாமலைச் செட்டியார் தமிழிசை இயக்கம் நடத்திக்கொண்டிருந்தார். ‘தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டுக்கு இடம் இல்லையா’ என்றபடி இந்த இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார் அண்ணாமலை. நிறைய மேடைகளில் ராஜா அண்ணாமலையும் இந்த அண்ணாமலையும் கலந்துகொள்வதில் ஏற்பட்ட குழப்பம் தீர்க்க ராஜாஜிதான் இவரைச் சின்ன அணணாமலை என்றார். அதுவே நிலைத்துவிட்டது.
உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே. செட்டியார், தமிழ்ப் புத்தகப் பதிப்பு வரலாற்றில் அழகிய புத்தகம் வெளியிட்ட சக்தி வை. கோவிந்தன், அச்சுக் கலைஞர் சத்ருக்கனன் மூவரும் இணைந்து சின்ன அண்ணாமலைக்குப் பதிப்பகம் ஒன்றை வைத்துத் தந்தார்கள். பதிப்பகம் பெயர் ‘தமிழ்ப்பண்ணை’ என்பது. அதற்கு முன்னர் ‘தமிழ்ப்பண்ணை’ பதிப்பித்தது போன்ற அழகான பதிப்பை தமிழகம் கண்டதில்லை. ராஜாஜி, கல்கி, வ.ரா, டி.எஸ். சொக்கலிங்கம், பொ. திருகூடசுந்தரம்பிள்ளை, ம.பொ. சிவஞானம் தி.ஜ.ரங்கநாதன், நாடோடி முதல் பலருடைய புத்தகங்களை அருமையாக வெளியிட்டார் சின்ன அண்ணாமலை. நாமக்கல் கவிஞருக்கு விழா நடத்திப் பணமுடிப்பு அளிக்கச் செய்தார். இன்றைய தி.நகர் பனகல்பார்க் அருகில் நல்லிக்குப் பக்கத்துக் கடையே தமிழ்ப்பண்ணை.
ஒருமுறை காந்தியிடம் சின்ன அண்ணாமலையை அறிமுகம் செய்து வைத்தார் ராஜாஜி. இது பற்றிக் காந்தியே தன் ஹரிஜன் பத்திரிகையில் இப்படி எழுதுகிறார்:
“ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஒரு இளைஞரை ஸ்ரீராஜாஜி இந்திப் பிரச்சார சபையில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர் என்றும், குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் இவர் இருந்த திருவாடானைச் சிறையை உடைத்து மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சர்யம் அடைந்தேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்துப் பெருமை அடைகிறேன். எனவே ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்த   ஸ்ரீ சின்ன அண்ணாமலைக்கு நான் அனுமதி வழங்கி என் வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’. காந்தியின் மறைவு வரைக்கும் தமிழ் ‘ஹரிஜன்’ பத்திரிகையை சின்ன அண்ணாமலை வெளியிட்டார்.
அறுபதாம் வயதைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே 1980 ஜூன் 18ல் சின்ன அண்ணாமலை, மரணம் அடைந்தார்.

- போராட்டம் தொடரும்...

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions