c இலக்கியத்தின் ஆன்மா விமர்சனம்தான்!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இலக்கியத்தின் ஆன்மா விமர்சனம்தான்!

- முனைவர் க.பஞ்சாங்கம்

தமிழ்த் திறனாய்வு உலகில் அனைவருக்கும் அறிமுகமான பெயர் பஞ்சாங்கம். படைப்பு, திறனாய்வு, பெண்ணியம், தலித்தியம் போன்ற துறைகளில் விரிந்த பார்வை கொண்டவர். ஒட்டுப்புல், நூற்றாண்டுக் கவலை, பயணம் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், மத்தியில் உள்ள மனிதர்கள், ஒரு தலித்-
ஒரு அதிகாரி -
ஒரு மரணம் ஆகிய புதினங்களையும், 20க்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்களையும் ஏராளமான கட்டுரைத் தொகுதிகளையும் படைத்துள்ளார்.
சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர். புதுவை பாரதி அன்பர்கள் அறக்கட்டளை மூலம் சமூகப்பணிகளைச்  செய்து வருகிறார்.

கவிதையிலிருந்தே உங்களின் எழுத்துப் பயணம் தொடங்குகிறது என்றாலும் இத்தனை ஆண்டுகளில் குறைந்த கவிதைகளையே எழுதியிருக்கிறீர்களே?

‘ஒட்டுப்புல்’ எனும் கவிதைத் தொகுப்பின் மூலம்தான் எனது இலக்கியப் பிரவேசம் தொடங்கியது. இதுவரையிலும் மூன்று நாவல்களையும், நான்கு கவிதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறேன். படைப்பிலக்கியத் தளத்தில் தொடர்ந்து இயங்கமுடியாமற் போனதற்கான காரணம் எனது பணிச்சூழல்தான். நான் பேராசிரியராக வேலை பார்த்ததால் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வுக் கட்டுரை எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக படைப்பிலக்கியங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இருந்தாலும் படைப்பு மனம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. இலக்கியத்தைப் படைப்பது மட்டுமல்ல ஆய்வுக்குட்படுத்தி விமர்சிப்பதும்கூட ஒரு வகையான இலக்கியச் செயல்பாடுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் நல்லதொரு விமர்சகனாக நான் அறியப்பட்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. தமிழவனின் ‘சிற்றேடு’ இதழ் சார்பாக ‘சிறந்த விமர்சகர்’ என்கிற விருது கடந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது.

விமர்சனக் கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகளின் பக்கம் எப்போது வந்தீர்கள்?

சிலப்பதிகாரத்தின் மீதான திறனாய்வுகள் குறித்து திறனாய்வு மேற்கொண்டுதான் நான் முனைவர் பட்டம் பெற்றேன். சிலப்பதிகாரத்தை திராவிட இயக்கங்கள் தமிழர் வரலாறு என சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் நுட்பமான பார்வையோடு வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம் ஆகியோர்தான் சிலப்பதிகாரத்தை தமிழரின் தொன்மம் எனச் சொன்னார்கள். தொன்மத் திறனாய்வுக் கோட்பாடுகளைப் படித்தபோதுதான் திறனாய்வின் மீதான ஆர்வம் வந்தது. நார்த்தராஃப் ப்ரை என்பவர் எழுதிய ஆர்க்கி டைப்ஸ் ஆப் லிட்ரச்சர் (Archy types of literature) எனும் கட்டுரையை ‘இலக்கியத்தில் தொல் படிவம்’ எனும் தலைப்பில் மொழிபெயர்த்ததுதான் எனது திறனாய்வுப் பணிகளின் தொடக்கப்புள்ளி.


இலக்கியத்தில் திறனாய்வுகளின் முக்கியத்துவம் அல்லது திறனாய்வுகளுக்கு உள்ள இடம் என்ன?

நாம் இன்றைக்கு பரபரப்பான காலச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது பெரும்பான்மையான நேரத்தை நவீன தொழில் நுட்பங்களுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். இச்சூழலில் வாசிக்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் தொடர்ச்சியாகப் பல புத்தகங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இச்சூழலில் நல்ல இலக்கியங்களைத் தேர்ந் தெடுத்துப் படித்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதற்குதான் திறனாய்வுகள் அவசியமாகின்றன. நல்ல நூல்களை வளர்த்தெடுக்கும்போது இலக்கியம் செழுமையடையும். இலக்கிய பலமே இல்லாதவர்கள் பணபலம் மற்றும் தொண்டர் பலத்தை வைத்து தங்களது படைப்பைப் பெரிதாகக் காட்டிக் கொள்கிறார்கள். திறனாய்வாளன் போலியான இலக்கியங்களைத் தவிர்த்து விட்டு நல்ல இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலையைச் சிறப்புறச் செய்யவேண்டும். இலக்கியத்தின் தரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, எங்கோ ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் எழுதிக்கொண்டிருப்பவர்களைக்கூட அடையாளப்படுத்தும் வேலையை திறனாய்வாளர்கள் செய்துகொண்டிருக் கிறார்கள். இலக்கியத்தின் ஆன்மாவைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது திறனாய்வுகள் தான். இலக்கிய வரலாற்றில் திறனாய்வுகள் எப்போதெல்லாம் செழித்திருக்கிறதோ அப்போதெல்லாம் இலக்கியமும் செழித்திருந்திருக்கிறது. திறனாய்வுகளை நாம் இலக்கியத்தைப் பற்றிய ஒரு இலக்கியம் என்றுதான் பார்க்கவேண்டும். ஊமையாக இருக்கும் இலக்கியத்துக்கு பல்வேறு நாக்குகளைக் கொடுப்பது விமர்சனங்கள்தான் என்று சொல்வார்கள். இலக்கியம் தளைத்தோங்க விமர்சனங்கள் என்பது அடிப்படைத் தேவை.

தமிழ்ப்  படைப்புத் தளத்தில் தவிர்க்க முடியாத திறனாய்வுகள் உங்களுடையது. படைப்புத் திறமை கொண்ட கலைத்தரமான திறனாய்வுகள் அருகிவரக் காரணம் என்ன?
திறனாய்வாளர்கள் இன்றைக்கு படைப்பு மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியக் காரணம். படைப்பின் ஆன்மாவை அறிய படைப்பு மனம் தேவை. ஆனால் இன்றைக்கு படைப்பு மனம் என்பதையெல்லாம் தாண்டி தங்களுடைய நண்பர்கள் அல்லது தங்களது குழுவில் இருப்பவர்களின் நூலை சந்தைப்படுத்தும் தொனியில்தான் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு பத்திரிகையுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அப்பத்திரிகைகள் பதிப்பகங்களை நடத்தி வருவதால் அப்பதிப்பகத்தில் வெளியாகும் நூல்களை ப்ரமோட் செய்வதற்காக பல விமர்சகர்களை ப்ரமோட்டர் ஆக்கியிருக்கும் அபத்தத்தைக் கூடப் பார்க்க முடிகிறது. தமிழ்ச் சூழலில் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து கிடப்பதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

நடுநிலையான சிற்றிதழ்களும் இப்போது இல்லை, விமர்சகர்களும் இல்லை என்கிற வாதத்தில் உண்மை இருக்கிறதா?

இந்த வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்றாலும் இதில் முற்றிலும் உண்மை இல்லை. வியாபாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இலக்கியத் தேடலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிற்றிதழ்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சிற்றேடு, புது எழுத்து, விசை, சிலேடு, கல்குதிரை போன்ற சிற்றிதழ்களில் தீவிரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இடைநிலை பத்திரிகைகளின் ஆக்கிரமிப்பு இப்போது அதிகரித்துவிட்டது. அவற்றைத் தமிழ் இலக்கியச் சூழலின் அவலம் என்றே குறிப்பிடலாம். காரணம் என்னவென்றால் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் நோக்கமின்றி வணிகத்தை மட்டுமே கருதுகோளாகக்கொண்டு அவை செயல்படுகின்றன. தீவிர எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் அப்பத்திரிகைகளில் ஓரங்கட்டப்படுகின்றனர்.  தீவிரத்தைக் கொண்டாடாமல் பாப்புலாரிட்டியைக் கொண்டாடும் வியாபாரிகளாக இருக்கிறார்கள்.

விமர்சனம் ஒரு மொழிக்கு எந்த விதத்தில் பயனளிக்கிறது? உங்களுக்கு வழிகாட்டியாக இருந்த விமர்சகர்கள் யார்?
முதலிலேயே சொன்னதுபோல் இலக்கியத்தின் ஆன்மாவைக் கண்டறிய விமர்சனங்கள் வழிவகை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகளை இன்றைக்கு வாசிக்கிறோம். இலக்கியத்தை மக்களிடம் கொண்டு செல்வதும், காலத்தினால் அழிந்து விடாமல் நிலைப்படுத்துவதும் விமர்சன எழுத்துகள்தான். தமிழவனின் விமர்சன எழுத்துகள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. நானொரு கல்வியாளன் என்பதால், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் அவர்களின் இலக்கிய அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்தமானது. மார்க்சிய தளத்திலும் நான் செயல்பட்ட காரணத்தால் கோவை ஞானி எழுத்துகள் எனக்கு ஆதர்சமாக இருந்தன. எனது விமர்சன எழுத்து போகும் திசையைத் தீர்மானிப்பதில் இவர்களுக்குப் பங்கு இருக்கிறது.

எழுத்து காலகட்டம், வானம்பாடி காலகட்டம், மணிக்கொடி காலகட்டம் மாதிரி ஒரு அலை போன்ற இலக்கியப்போக்கு அல்லது இலக்கிய எழுச்சி சமீபத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா?

பத்திரிகை சார்ந்து இல்லாமல் தலித்தியம், பெண்ணியம் குறித்த எழுத்துகள் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகமாகவே வெளிவரத் துவங்கியிருக்கின்றன. இவற்றுள் திருநங்கையரின் எழுத்துகளும் அடங்கும். இன்றைக்கு புதிய படைப்பாளிகள் பலர் உருவாகியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பல கலாப்பூர்வமான படைப்புகள் வெளிப் பட்டுக்கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு வாசிக்கிறவர்களைக் காட்டிலும் எழுதுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்கிற சூழல் இருக்கிறது. எழுத வருகிறவர்கள் தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளின் வாசிப்பே இல்லாமல் வருகிறார்கள். இது ஆரோக்கியமான சூழலை உருவாக்குமா?
இன்றைக்கு முகநூல், வலைப்பூ, வாட்ஸ் ஆப் என நவீன மின்னணு ஊடகங்கள் மூலம் யார் வேண்டுமானாலும் தங்களை எளிதாக விளம்பரப்படுத்திக்கொள்ள முடிகிறது. நண்பர்கள் குழு போல் பத்து பேர் கூடிவிட்டார்கள் என்றால் ஒருவருக்கொருவர் புகழ்ந்து பேசிவிட்டுப் புத்தகம் போடுகிறார்கள். தங்களைச் சுற்றி பெரிய பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்கிறார்கள். இப்படியானவர்களின் எழுத்தின் தரத்தை வாசகன் நிர்ணயிக்கவில்லை. ஆனால் சமூக ஊடகங்கள் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. இது அபாயமான சூழல். இலக்கியத்தின் செறிவையும் நுட்பத்தையும் பாதிக்கக் கூடியது.
சங்க இலக்கியம் தொடங்கி புதிய பெண்ணியக் கோட்பாட்டாளர் ஹெலன் சீக்சு உட்பட பல பெண்ணிய திறனாய்வு நூல்களை

எழுதியிருக்கிறீர்கள். நவீன இலக்கியத்தில் பெண்சார்ந்த இலக்கியக் கோட்பாடுகள் எப்படி இருக்கின்றன?
பெண்ணியம் வந்தபிறகு பெண் எழுத்தாளர்கள் மிகப்பெரும் சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். நிறைய பெண் படைப்பாளிகள் வந்திருக்கிறார்கள். மாலதி மைத்ரி, குட்டிரேவதி, லீனா போன்றவர்கள் ஒரு போராட்ட குணம்கொண்ட எழுத்துக்களைப் படைக்கிறார்கள். படித்த பெண்கள் மத்தியில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பெண்களின் உணர்வுகளை, வலிகளைக் கடத்த சக பெண்ணால்தான் முடியும். பெண்களிலிருந்து இன்னும் புதிய கீற்றுகள் பல முளைக்க வேண்டும். அவர்கள் பெண் விடுதலை குறித்து சீற்றம்மிகு படைப்புகளைப் படைக்கவேண்டும். படைப்பார்கள்.

பெண்ணின் வலிகளை ஆண் படைப்பாளியால் எழுத முடியாது என்கிறீர்களா? இதுவரையிலும் ஆண் படைப்பாளிகள் முன் நிறுத்தவில்லையா?

ஆண் படைப்பாளிகள் முன் நிறுத்தினாலும் அது நம்பத் தகுந்ததாக இருக்காது. படைப்பாளிக்குள் இருக்கும் ஆண் மனப்பான்மை அவனைவிட்டு அவ்வளவு சீக்கிரத்தில் அகன்றுவிடாது. பெண்களின் அவலங்களை அவர்களது நிலையிலிருந்து எழுதுவது தான் உண்மைத் தன்மையோடு இருக்கும். தலித்திய எழுத்துகளுக்கும் இதேதான். சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் படைக்கும் போதுதான் அது உண்மையான வலியைக் கடத்தும் படைப்பாக இருக்கும்.

திருநங்கைகளின் வாழ்வை திருநங்கைகளை விட சிறப்பாக பதிந்திருக்கும் நாவல் என சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவல் விமர்சகர்களால் போற்றப்படுகிறது. ஒரு படைப்பாளியால் அந்தக் கதாப்பாத்திரமாகவே உருமாறிப் படைப்புகளைப் படைக்க முடியும் என்கிற கருத்தில் நீங்கள் மாறுபடுகிறீர்களா?
ஒரு ஆண் படைப்பாளியால் பெண்கள் மற்றும் திருநங்கைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அவலம் குறித்து இலக்கியம் படைக்க முடியும். ஆனால் பெண்கள் மற்றும் திருநங்கைகளே எழுத வந்த பிற்பாடு அதை ஆண் படைப்பாளிகள் மேற்கொள்ளும்போது நம்பிக்கைக்குரிய எழுத்தாக இல்லாமல் போய்விடும். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்றோர் பெண்களின் மனநிலையிலிருந்து கதைகள் எழுதியிருக்கிறார்கள். ஆனால்  பெண்களே எழுதவந்த பிறகுதான் அவற்றின் போதாமை மற்றும் அதனுள் இருக்கும் ஆணாதிக்கப் பார்வை வெளிப்படுகிறது. ‘வாடாமல்லி’ நாவலில் திருநங்கைகளின் உணர்வுகளைக் காட்டிலும் தொழில்நுட்பம்தான் மேலோங்கித் தெரியும். ஏனென்றால் அந்த வாழ்க்கையை அனுபவிக்காத ஒருவரால் அதன் வலியையும் வேதனையையும் வாசகனுக்குக் கடத்துவது மிகவும் கடினமானது.

புதுவை பாரதி அன்பர்கள் அறக்கட்டளை மூலமாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அறிகிறோம். என்ன மாதிரியான பணிகள் அவை?

பாரதியாருடைய சமூகம் சார்ந்த சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது என்கிற நோக்கில் பாரதியார் நினைவில்லத்தில் மாதந்தோறும் 11ஆம் தேதி கூட்டம் நடத்துகிறோம். பாரதியாரின் இலக்கியத்தை நன்றாகப் படித்தவர்களை அழைத்து வந்து பேசவைக்கிறோம். பள்ளிக் கூடங்களில் பாரதியார் இலக்கியங்கள் குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். பாரதியாரின் பெண்ணியப் படைப்புகளைத் தனியே நூலாக வெளியிட்டிருக்கிறோம். பாரதியாரின் படைப்புகள் வழியாக சமூக அக்கறையை ஊட்டுவதுதான் எங்களின் நோக்கம். முன்னாள் ஐ.ஏ.எஸ் ஹேமச்சந்திரன் பின்னணியிலிருந்து இந்த அமைப்பு செயல்படுகிறது.

உங்கள் மாணவர்களோ அல்லது வெளியிலோ எழுதி வரும் புதிய தலைமுறை எழுத்தாளர்களின் திறனாய்வுப் பார்வை எப்படி இருக்கிறது?
எனது மாணவர்களும் கட்டுரை எழுதுகிறார்கள். தொழில் ரீதியாகத்தான் எழுதுகிறார்களே தவிர புதிதாக வரும் இலக்கியங்களைப் படித்து எழுதும் முயற்சியில் பின்தங்கி விடுகிறார்கள். ஊடகங்கள் ஒருவித குழு வாதமாக மாறியிருக்கிறது. அதற்குள் இவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு  தங்களது எழுத்துகளைக் கொண்டுவரச் சிரமப்படுகிறார்கள். சூழலியல் திறனாய்வு, புலம்பெயரிலக்கியத் திறனாய்வு, பின்காலனியத்துவ திறனாய்வு என புதிய கோட்பாடுகளை படித்துக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற கோட்பாடுகளை வாசித்து சிந்தனாப்பூர்வமாக எழுத வரும் திறமையான இளைஞர்களுக்கு ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின் போக்கு பற்றி?
சிறப்பான இலக்கியங்கள் படைக்கப் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஊடக செல்வாக்கின் காரணமாக புதிய எழுத்தாளர்கள் பலர் வருகை புரிந்தாலும் அவர்களில் சிலரே நன்றாக எழுதுகிறார்கள். குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை, கார்த்திகைப் பாண்டியன் இப்படியாக பரவலாக அறியப்படாதவர்கள் நல்ல படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள். இன்றைய இலக்கியப் போக்கு செழுமையாக இருக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம். நவீன வாழ்க்கையின் அவலங்களை இன்றைய இளம்படைப்பாளர்கள் புதிய தொணிகளில் பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நம்பிக்கை அளிக்கும் வகையில்தான் போய்க்கொண்டிருக்கிறது.

தற்போது புதிதாக எழுதி வரும் நாவல் பற்றிச் சொல்ல முடியுமா?

‘அக்கா’ என்றொரு நாவலை எழுதி முடித்திருக்கிறேன். அன்னம் பதிப்பகம் மூலம் வெளியாகப் போகும் இந்நாவல் சுயசரிதை நாவல் ஆகும். ராஜபாளையத்துக்கு அருகே இருக்கக் கூடிய புத்தூர் என்கிற கிராமத்தை மையமாக வைத்து அங்கே இருக்கக்கூடிய பனையேறிகளின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறேன்.

- நேர்காணல்: அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions