c மண்ணும் மக்களும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மண்ணும் மக்களும்

செங்கான் கார்முகில்

நைனம்மா திருடு
அந்தி...
பழுப்பு இருட்டு மெல்ல மெல்லக் கருத்துக் கொண்டிருந்தது. காடெங்கும் பறவைகள் கூடடைந்துவிட்ட அமைதி வியாபித்திருந்தது. எங்கோ ஒருசில பறவைகள் அதிவேகமாக கூடு திரும்பிக்கொண்டிருந்தன.
அந்திக் குளுமையிலும் மண் வாசத்திலும் மயங்கித்தான் போனது நைனம்மா ஆயா. எழுத்தூரான் காட்டு கொத்தமல்லி வாசம்வேறு பொட்டிலடித்ததுபோல நிறுத்தியிருந்தது.
நைனம்மாவுக்கு ரெண்டு பொண்ணுங்க மட்டும்தான். அதுகளையும் கட்டிக் கொடுத்துப் பேரப் பிள்ளைகளையும் பாத்தாச்சி. கட்டினவன் எப்பவோ போய் சேர்ந்துவிட தனியொருத்தியாக காலம் தள்ளி வருகிறாள். ஒண்டியாக இருப்பதால் சோறு தண்ணிக்கு அதிகம் சிரத்தையெடுக்கத் தேவையில்லை இல்லையா. களைவெட்ட, புல்லு பொறுக்க என்று கிடைக்கிற வேலைக்குப் போய், வருவதைக்கொண்டு வரகோ சோளமோ, கம்போ பொங்கித் தின்பாள். காலையில் பெரும்பாலும் பழையதுதான், புள்ளேன்னு பிறந்ததிலி ருந்தே இப்படித்தான். எப்பவாச்சும்தான் கொழம்பு வைக்கிறது. வெள்ளாமை காலமாக இருந்தால் அதுகூட இல்லை. வேலை கலைந்து வரும்போது காட்டு வழியில் புளிச்சக்கீரை, பசலைக்கீரை, தண்டுக்கீரை, காய் கசங்கு என்று கிடைப்பதைக் கொண்டு வந்து கடைந்து வைத்துக்கொண்டு ஒரு வாரம், பத்து நாட்கள் என ஓட்டுவாள். கடைக்குப் போய் காய்கறி வாங்கி வருசமாச்சு.
அப்படியொரு ரசனையாகப் பார்த்துக்கொண்டே நிற்கிறாள் இன்னமும் எழுத்தூரன் கொத்தமல்லிக் காட்டை. அந்திக் காற்றில் அலை அலையாய் வந்தது கொத்தமல்லித் தழை வாசம். முதலில் வரப்போரமாகவே நடந்து நான்கு மூலைகளையும் நோட்டம் விட்டாள். தொபுக்கென்று அப்படியே குந்தி கொத்தமல்லிக் கீரைகளைச் சேகரிக்கத் தொடங்கினாள்.
இவளுக்கு ஒரு பழக்கம். இப்படி அடுத்தவன் காட்டில் திருடும்போது மற்ற திருடர்கள்போல ஒரே இடத்தில் பிடிங்கிக்கொண்டு, எது எப்படிப் போனா நமக்கென்ன என்று போய்விடமாட்டாள்.
இப்போ இந்தக் காட்டில் கொத்தமல்லிப் பிடுங்குறான்னா கீரைக்குப் பக்கத்திலிருக்கிற புல்லுப் பொடி எல்லாத்தையும் பிடுங்கிப் போட்டுவிடுவாள். ஒரே இடத்திலும் பிடுங்கமாட்டாள். ஒரு எட்டுமுழ வேட்டி  நெட்டுக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாகப் கலைத்துப் பிடுங்குவாள். இப்படிப் பயிர் கலைத்துப் பிடிங்கினால் வெள்ளாமை சுதந்திரமாகத் திமிறி வரும். இவள் போனதும் பார்த்தால் இவள் களவாடிய இடம் மட்டும் சொட்டையாக தெரியாமல், பயிர்கள் சீராக, பார்க்கவே அழகாக இருக்கும். காட்டுக்காரன் காலையில் வந்து பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லுவான், ‘நேத்து நைனம்மா வந்திருப்பாளாட்டக்கே’ என்று. அந்தளவிற்கு தானே தன்னை காட்டிக் கொடுத்துவிட்டுப் போகிற ‘பொறவி’ இவள். ‘நைனம்மா திருடு’ என்று பெயர் இதற்கு.
போகிற வழியில் எந்தெந்தக் காட்டில் என்னென்ன காய்கறிச்செடிகொடிகள் எந்தெந்த மூலையில் இருக்கிறது, பயித்தங் காய், மொச்சை, பீர்க்கு, பொடலை, சுக்காம் பழம், வெள்ளரி, அவரை, எல்லாம் எவன் காட்டில் இருக்கிறது, எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் நோட்டம் விட்டபடியே போவாள்.
‘இன்னிக்குப் பீர்க்கங் கடைசல்தாம்’ என்று முடிவு பண்ணிவிட்டாள் என்றாள் நினைவைச் சுழற்றிச் சம்பந்தப்பட்ட காட்டுக்குப் போய் எல்லா மூலைகளையும் சுத்தியடித்துப் பார்த்துவிட்டுத் தனக்குத் தேவையானதை மட்டும் பிய்த்துக்கொண்டு வந்துவிடுவாள். இப்பவோ பொறைக்கோ பறிக்கலாம் என்கிறமாதிரி இருப்பதை மற்றவர் எவரும் களவாடாமலிருக்க அதையெடுத்துப் பக்கத்திலிருக்கிற வெள்ளாமைச் செடியின் மறைவில் வைத்துவிட்டுப் போவாள். அந்தக் காட்டுக்காரனை காண நேரிட்டால் ‘காட்டுப் பக்கம் போவுலியாப்பா, காயெல்லாம் பறிக்காம கெடக்கு. வீணாப் போவுது, பறிச்சாந்து புள்ளிவளுக்குப் போடறதானே’ என்பாள். ‘போவுணும் பெரியாயி, நேரமில்ல’ என்பார்கள். ‘நீ போனியா, காய்கசங்கு ஏதும் அறுத்தியா’ என்று மட்டும் எவரும் கேட்டதே இல்லை, ஒரு நாளும்.
நைனம்மா, ஒருவரின் காட்டுக்குள் போய்விட்டு வருகிறாள் என்றால் அவருடைய காட்டின் வெள்ளாமை நிலவரம், காய்கறி, ஆள் நடமாட்டம், எந்த மூலையில் பயிர் சொணங்கி இருக்கிறது, எந்தப் பக்கம் ஆடு மாடுகள் மேய்ந்திருக்கிறது எங்கிற விவரம் பூராவும் அத்துப்படி. கூலி வேலைகளுக்கோ, ஊர் சேதிக்கோ போய்விட்டு நான்கைந்து நாட்கள் கழித்து வருபவர்கள் ‘பெரியாயி காட்டுப் பக்கமேதும் போனியா?’ என்பார்கள். அறிவிக்கப்படாத காவலாளி மாதிரி  நைனம்மா, திருடியில்லை.
ராத்திரி தூங்குகிற நேரம்போக மற்ற நேரங்களில் காட்டில்தான் கிடப்பாள். வெள்ளாமை காலம் தவிர்த்துக் கோடைக் காலங்களில் வேப்பங்கொட்டைப் பொறுக்க, புங்கங்கொட்டைப் பொறுக்க. என்று எப்போதும் இவள் ஆவுசம் காடு காடு என்றேதான் திரியும். கோடையில் இவள் தூங்கி எழாத காட்டு மரத்தடிகள், பாவம் செய்தவை மட்டும்தான்.
‘ஊட்டுல இருக்க மசமசப்பா இருக்கு’ என்று சும்மான்னாலும் ‘காட்டப்பக்கம் போய்ட்டு வருவமா’ என்று போய் வருவாள். காட்டுக் காற்றின் சுகம் அவள் தேகத்திற்கு அப்படிப் பிரியப் பட்டிருந்தது.
ஒருநாள்! ராத்திரி சோத்து நேரம் முடிந்து வெகு நேரமாகிவிட்டது. வயிற்றைக் கலக்கியதென்று ரோட்டுப் பக்கமாக வந்துகொண்டிருந்தாள். வந்தவள், திடுக்கிட்டு நின்றாள். வீதியில் ஆங்காங்கே ரெண்டு பேர், மூணு பேர் என்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டார்கள். என்னமோ ஏதோவெனப் பதைபதைக்கிறது நைனம்மாவுக்கு. இங்கபோயி என்னடியம்மாங்கிறாள். அங்கபோயி என்னடியம்மாங்கிறாள். ‘நக்கசேலத்தார் காட்டுல இஞ்சின் பெல்ட்டை காணமாம்’ங்கிறார்களே தவிர எந்த விவரத்தையும் சொல்லவில்லை. ‘இவகிட்டல்லாம் என்னாத்த சொல்றது’ அப்படிங்கிற மாதிரி இருக்கு, அவர்கள் பேசிக்கொள்கிற தொனி. ‘அடி போங்கடீ’ என்று போய்விட்டாள்.
ஊரெங்கும் பெரிய குபேராக இருந்தது இந்த பெல்ட் திருடு. கும்பல் கும்பலாகப் போவதும், எஞ்சினைச் சுற்றிச் சுற்றிப் பார்ப்பதுமாக இருந்தார்கள். இவனாத்தான் இருக்கும். அவனாத்தான் இருக்கும்’ என்று பேசிக்கொண்டது ஊர். ‘அட அதெல்லாம் இல்லப்பா. உள்ளாளு இல்லாம திடீர்னு மொளச்சி படீர்னு வந்துட்டானா திருடன்’ங்கிறான் ஒருத்தன். அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் நைனம்மாவையும் விடவில்லை சந்தேகம். அவளுக்கு எதுவும் தெரியவில்லை.
‘ஒரெட்டுப் பாத்துட்டுத்தான் வருவமே’ என நக்கசேலத்தார் காட்டுக்குப் போனாள். கிணற்றை நாலா பக்கமும் சுற்றித் தடயம் துலாவிவிட்டு எஞ்சின்கிட்டே வந்து கழுத்தை வளைத்து இதையும் இதையும் உற்றுப் பார்க்கிறாள். தாவாயில் ஆள்காட்டி விரலை வைத்து யோசிக்கிறாள். இப்படி இவள் பார்த்துக்கொண்டிருக்கும் போது சற்றுத் தள்ளிப் சில பேச்சுக்குரல்கள் கேட்டது. ‘அவளாத்தான் இருக்கணும். பேத்தி வேற வயசுக்கு வந்துருக்கா. ஆக்கிப்போடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா. செலவுக்கு’ என்றன அக்குரல்கள். இது அப்படியே எந்த சேதாரமும் இல்லாமல் நைனம்மா காதுக்குப் போனது.
திகைச்சிப் போய் நின்றாள். தாங்கவில்லை மனசு. நெஞ்சில் அப்பின ரெண்டு கைகளையும் எடுக்காமல் நிக்கிறாள், சிலையாக.
பேச்சுக்குரல் தலைக்குமேல் நின்றபோது, வந்தவர்களும் பேசவில்லை. கிணற்றுள் இஞ்சினுக்குப் பக்கத்தில் நின்ற இவளும் பேசவில்லை. பூச்சாட்டம் ஏறி நடந்தாள். அவமானத்தில் காய்ந்து போயிருந்தன கண்கள். முள்ளு குத்தியதா கல்லு தைத்ததா எதுவும் தெரியவில்லை. ரோட்டோரத்து வாகைமர நிழலில் குந்தினாள். மனம் கமறியது. அன்னிக்கு அவள் எழுந்து வீடு போகப் பொழுதாயிற்று.
இரண்டு மூன்று நாட்களாகக் எந்தக் காட்டுப் பக்கமும் பேகவில்லை. வெளியதுறவுக்கு போனால் கம்முன்னே போயி ஊமையாட்டம் வந்தாள். யாரும் இவளிடம் பேச்சுக் கொடுக்கவில்லை. இவளுக்கும் பேச முடியவில்லை. தலையைக் கவுத்துக்கிட்டே போகிறாள், வருகிறாள். சின்ன மகள் வீட்டுக்குப் போய் நான்கு நாள்கள் இருந்தாள். மனசு ஒண்ணும் சரியாகவில்லை. திருடுகள் நாளுக்குநாள் பெருகிக்கிட்டே போயின.
‘எங்க இந்தக் கெழவிய காணம்’, ‘சின்னமக வூட்டுப் பேத்தி வயசுக்கு வந்துட்டாளாம், அங்க போயிருப்பா’, ‘அநியாயத்துக்கும் அந்த அப்பாவி மேல போட்டானுவளே பழியை’, மனசு வெறுத்தாப்ல வேற எங்கியாவது போயிருப்பாளோ’, ‘அவ நடமட்டாத்துலதான் அடுத்தவன் காட்டுல நொழையவே அச்சப்பட்டானுவ, அவளயும் தொரத்திப்புட்டானுவ’
ஆளுக்கொரு புலம்பல், ஆளுக்கொரு ஆதங்கம் ஊரெங்கும்.
‘யெண்ணியா...’
குரல்கேட்டு வெளிவந்தாள் நைனம்மாவின் சின்னமகள்.
நக்கசேலத்தார் சைக்கிளோடு நின்றார். ‘வாங்கப்பா’ என்றாள். முதல் வார்த்தயாக, ‘அம்மா இங்கியாமா இருக்கு’ன்னார். ‘ஆமா’ங்கிறமாதிரி தலையசைக்க, ‘எங்கே’ என்கிற மாதிரி கையால் கேட்டார்.
“படுத்துருக்கு’
மளமளன்னு உள்ளே போனார். ‘வாப்பா’ன்னுகிட்டே எழுந்து சுவரில் சாய்ந்து குந்தினாள் நைனம்மா.
பச்சப்புள்ளை மாதிரி அவளின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கையெடுத்துக் கும்புட்டு, ‘என்னா காரியம் பண்ணிப்புட்ட அண்ணியா. ஒண்ணப்போயி நாஞ் சந்தேகம் புடிப்பனா. எவனோ ஏதோ சொன்னா, அதுக்கு நீ மனங் கசங்கலாமா. பத்து நாளுக்கு மேல இருக்கும், நீ என் காட்டுப்பக்கம் வந்து. பெல்ட் திருடுபோன அண்ணிக்கே எனக்குத் தெரியும் அது. நீ வந்து போன அடையாளமே இல்லியே. நீ வந்து போயிருந்தா அன்னிக்கி திருடே போயிருக்காதே.  பஞ்சன் அப்பாவை (சுற்றுப்பட்டில் திருடு பற்றின ஆருடம் சொல்வதில் நிபுணர்) அழைச்சிக்கிட்டுப் போயி காட்டுனப்பவும் ‘நைனம்மா ரொம்ப நாளா இந்தப் பக்கம் வரலியோ?’ன்னுதான் கேட்டாரு. நீ வந்து போவாததாலதான் திருட்டே போச்சு அண்ணியா. காய் கசங்கு, பயிர், வெங்காயம்னு வயிற்றுக்கு நீ எடுத்துக்கிட்டுப் போறதெல்லாம் திருட்டா. எதுக்கு எதோட முடிச்சுப் போடறது. ஊரானுவளுக்குத்தான் புத்தியில்லன்னா’ என்றபடியே முட்டிக் கால்களில் வைத்திருந்த அவள் கைகளைத் தொட்டார். எந்தச் சலனமுமில்லாத அவள் முகத்தில் அமைதியாக வழிந்து கொண்டிருந்தது, மாலை மாலையாகக் கண்ணீர்.
‘வா...ண்ணியா போவம், ஊருக்கு’
அப்பவும் கம்முன்னே இருந்தாள்.
‘அப்படியா நான் கல்நெஞ்சிக்காரன்’
எந்த அசைவுமில்லை அவளிடம்.
‘நீ மட்டும் வரல. போற வழியிலேயே இந்த உசுற மடிச்சிக்குவன். அப்படியெல்லாம் இருந்து வாழ்ந்து என்னாப் பண்ணப் போறன் நான்.’
இந்த வார்த்தைகள் அவள் மனதைச் லேசாகச் சிதைத்தன. அவர் ஒன்றும் சொந்தக் கொழுந்தன் இல்லை. பங்காளிகூட இல்லை. ஒரு முறைக்கு ‘அண்ணியா’ வேணும் அவருக்கு இவள். இப்படியிருந்த போதும் நைனம்மா மீது அவர் வைத்திருக்கிற நம்பிக்கையும் பாசமும் அவளை அசைத்துவிட்டது.
“ஏம்ப்பா அப்புடிச் சொல்ற. வாரன், போலாம். எம்மா சித்தப்பாவுக்கு தண்ணிமொண்டு குடு, மொதல்ல சாப்புடு சாமி’’ என்றாள்.
செம்மண்பாளையக் குளத்து மேட்டில் வந்து கொண்டிருந்தார்கள். எப்படிடா ஊரில் முகம் காட்டுறது என்று தயக்கம் இருந்திருக்கும்போல. சைக்கிளை நிறுத்தச் சொன்னாள். ‘நீ போப்பா. நம்ப காட்டப்பறம் போயி புளிச்சக் கீரை அஞ்சாறு பார்த்துக்கிட்டு வாரன்’ என்று இறங்கிக்கொண்டாள். அன்று இறங்கியவள்தான். இன்றுவரை வீடு வந்து சேரவில்லை. எங்கே போனாள். என்ன ஆனாள். ஒரு தகவலுமில்லை. ‘எங்கியாவது போயிருப்பா’ என்றும், ‘செத்துக்கித்துப் போயிருப்பாளோ’ என்றும் பேசிக்கொண்டது ஊர். கொஞ்ச நாட்களுக்கு முன், முள்ளுக்குளத்துக் காட்டில் உருத்தெரியாமல் அழுகிக் கிடந்த பெண்ணின் பிணம் அவள்தான் என்கிறார்கள். ‘அவளில்லையப்பா. அது பிச்சைக்காரி’ என்றார்கள்.
இதற்கு நடுவே, நடுத்தெரு சஞ்சீவ் சொன்னதுதான் ஆச்சர்யமாகயிருந்தது. ஆடு மேய்க்கும்போது தண்ணீர் குடிக்க, கிணற்றுள் இறங்கி கைகளால் நீரள்ளும்போது படல்மாதிரி ஒரு உருவம் நீருள் தெரிந்ததாம். உற்றுப்பார்த்தால் அது நம்ம நைனம்மாவாம். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மேலே வந்து பார்த்தாராம். ஆள் நின்றதற்கான எந்த அறிகுறியுமே இல்லையாம். அவரை மாதிரியே பலரும் பலவிதமாகச் சொன்னார்கள்.
ஊரே கிடுதாங்கிப் போய் கிடந்தது. எல்லாத்தையும் விட ஆச்சர்யம், திருட்டுக்கு வில்லப்பேர்வழியான ‘வீரமுத்து’ செத்ததுதான்.
‘அதே நக்கசேலத்தார் காடு. வெள்ளாமை நிமிர்ந்து தளையுது. நெல் அறுப்பு அறுத்துக் கட்டுக் கட்டாகக் கட்டிக் கிடக்குது. வயலுக்கு நாற்பது கட்டு அப்படின்னா எட்டு ஏக்கருக்கும் எத்தனைக் கட்டெனப் பாத்துக்க வேண்டியதுதான். கட்டுகள், காட்டில் கிடக்க வீட்டில் திருடன் பயத்தில் கிடக்கிறார் நக்கசேலத்தார். தூக்கம் வரலை. மனசு ஒண்ணும் சரிப்பட்டு வரலை. ‘ஓரெட்டு பாத்துட்டுத்தான் வருவமே’ என்று கை லைட்டோடு புறப்பட்டார்.
காட்டில் வீரனும் அவனது கோஷ்டியும் நெற்கதிர்களை உருவி உருவி மூட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பயமும் வேகமான நடையுமாய் காட்டை நெருங்குகிறார் நக்கசேலத்தார். கறுப்பான உருவ அசைவுகளை நெல்கட்டின் வெள்ளையில் பார்க்கிறார். ‘போச்சே மோசம் போச்சே,  எலே கொலகாரப் பாவிகளா’ என்று கூச்சலிட வாயைத் திறக்கிற சமயம், வீரன் கோஷ்டி பராச்சிட்டு ஓடியது. ஓடினவேகத்தில் மரத்தில் இடித்து விழுந்தான் ஒருத்தன். வேலி முள்ளில் புரண்டெழுந்து ஓடினான் ஒருவன். ரோட்டோர மைல்கல்லில் இடித்து முழங்காலுடைந்தது ஒருவனுக்கு. எலிக்குப் போட்ட கரண்ட் கம்பி இடறியது ஒருவனுக்கு.
எதுவும் புரியவில்லை நக்கசேலத்தாருக்கு. ‘ஏன் ஓடுறானுங்க, எதுக்கு ஓடுறானுங்க, நானும் கத்தலியே’ என்று முனகிக்கிட்டே கை லைட்டை நாலாப்பக்கமும் அடித்தார். ஒரு ராட்சச காற்று அவரை நெருங்கி வருகிற மாதிரியான அரவமும் சலசலப்பும் தெரிந்தது. தொடை நடுங்கியது. பின்னால் திரும்பி லைட்டை அடித்தார். மலைத்துப்போய் “அய்யோ சிவனே’’ என்றார்.
முகமெங்கும் தீக்காயம் போன்ற தழும்புகளும், அலங்கோலமாய் விரிந்த கூந்தலும், எண்ணெய் வழியும் முகமும், உலகையே விழுங்கும் விழிகளும், ஒடுங்கிய கன்னங்களும், கைகளில் கொடூர முள் கிளைகளுமாய் ஆகாயப் பாய்ச்சலில் போய்கொண்டிருந்தது அந்த உருவம்.
முழங்கால்வரை தொங்கிய ஏழெட்டு சிவப்புப் பட்டுத்துண்டுகள் அந்த இருட்டின் வெளிச்சத்தில் கொலைவெறியை ஞாபகப்படுத்தின. நக்கசேலத்தார் ‘காளிதான்’ என்று தரையில் விழுந்து வணங்கினர். சில விநாடிகள் கழித்து, தரையில் கிடந்தபடியே அதன் முகத்தைப் பார்த்தார். ‘சொரக்’கென்றது மனம்.
“யெண்ணியா...’’ மனசுக்குள் சொல்லிக்கொண்டார். மின்னலடிக்கிற நேரத்தில கள்ளிவேலி முட்களையெல்லாம் மிதித்துத் தாண்டி மறைந்து போனாள் நைனம்மா.
அந்த அதிர்ச்சியில் மாரடைத்ததுதான் வீரனுக்கு. “நைனா, நைனா’ன்னு ஒருவாரமாகச் சொல்லிக்கொண்டே கிடந்து போய்ச் சேர்ந்துவிட்டான். பிறகு அவன் கோஷ்டியும் திருட்டை விட்டுவிட்டது.
ஊர்க்காட்டில் இப்போது திருடே இல்லை. கடைசி வரையிலும் நைனம்மா யார் கண்ணிலும் சிக்கவில்லை, வீட்டிற்கும் வரவில்லை.

-மண் மனக்கும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions