c புதுக்கவிதை: வேரும் விழுதும் - 14
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 14

வானம்பாடியின் சிறகுச் சிலிர்ப்புகள்

வானம்பாடியை உருவாக்கியவர்களில் முக்கியமான ஒருவர் ஞானி. மிகச் சில கவிதைகளையே அவர் எழுதியிருந்தாலும் இவ்வியக்கத்தின் அறிவுத் தளத்தில் இயங்கியவர். இவருடைய ‘கல்லிகை’ என்னும் நெடுங்கவிதை ஏழாம் இதழில் வெளியாகி மிகுந்த கவனத்துக்குரியதாயிற்று.
‘அகலிகை’ பல கவிஞர்கள், எழுத்தாளர்களின் பார்வைக்கேற்பப் புதுப்புது அர்த்தங்கள் தந்த தொன்மப் பாத்திரம். ஞானியின் கரங்களில் இன்னொரு பரிமாணமாக மாறினாள் அகலிகை. ‘கல்லிகை’ என்று பெயரிட்டிருப்பதே ஒரு புதுமைதான். அகலிகை தன் கூற்றாகப் பேசத் தொடங்குகிறாள்.
“நான் கல்லாகிக் கொண்டிருக்கிறேன்,
மனித வடிவினர் என்னைத் துரத்துவதால்
அவர்கள் எல்லையிலிருந்து ஒடி
ஓட ஓடக் கல்லாகிக் கொண்டிருக்கிறேன்”

அவளுடைய கந்தகப் பேச்சில் கவுதம முனிவனும் இந்திரனும் இருவருமே சுட்டெரிக்கப்படுகிறார்கள். உருவகக் கவிதையில் ஆர்வம் பூண்ட ஞானியின் கல்லிகையில் விதம் விதமாகப் பொருள்கொள்ளும் வகையில் கவிதை பெருக்கெடுக்கிறது.
பெண்ணுக்கு அடிமைச் சாசனம் வழங்கிய பழமைக் கொடுமையாக முனிவன் அமைகிறானென்றால், வஞ்சகமாக அவளை உறிஞ்சும் காமுகனாகிறான் இந்திரன். இருவருமே அவளை வெவ்வேறு வகையில் அடிமைப்படுத்துகிறார்கள். புதிய விழிப்பாக இராமன் வருவதை எதிர்நோக்குகிறது அடிமைப்படுத்தப்பட்ட பெண்மை.
“ஒருவன் என்னைக்
காலுக்குச் செருப்பாக்கிக்
கழற்றி எறிந்தான்
மற்றவன்
தோலுக்குப் போர்வையாக்கி
தூர எறிந்தான்”

என்பார் ஞானி. பெண்ணியப் பார்வையை விடுத்துச் சமூகப் பார்வையில் நோக்கினால் ஆண்டான் அடிமைச் சமுதாய வாழ்வின் அவலமும், எளியோரின் ஆன்ம விடுதலைத் தாகமுமாக இக்கவிதையைப் பொருள்படுத்திக் கொள்ள முடியும்.
சுரண்டல் பிசாசின்
தொல்லையிலிருந்து
உலகைக் காக்க... உத்தமன்
அதோ வருகிறான்”

என்ற கூற்றில் இந்தக் கருத்து சுடர் வீசுவதைக் காண்கிறோம். எவ்வாறாயினும் தத்துவக் கோட்பாடுகளில் முக்குளித்தெழும் ஞானியை இக்கவிதை அடையாளப்படுத்துகிறது.
வானம்பாடியில் தனக்கே உரிய கவித்துவ வீச்சுடன் மு. மேத்தா புதுக்கவிதை உலகுக்கு அறிமுகமாகியதைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். கடுமையான விமர்சனங்களைப் பல கோணங்களில் பலரும் இவர்மீது ஏவியபோதிலும் வானம்பாடியின் களத்தில் தன் கொடியை உயர உயரப் பிடித்தவர் மேத்தா என்பதைப் பதிவு செய்யவேண்டும்.
முதல் இதழில் ‘அந்த மனிதாபிமானக் கவிதையை யார் பாடப் போகிறீர்கள்?’ என்ற வினாவை எழுப்பினார்.
“வைகறைப் போதுக்கு
வார்த்தைத் தவமிருக்கும்
வானம்பாடிகளே - ஓ
வானம்பாடிகளே
இந்த
பூமி உருண்டையைப்
புரட்டிவிடக் கூடிய
நெம்புகோல் கவிதையை
யார் பாடப் போகிறீர்கள்?”

இந்த வினா ஒரு புதுப் பயணத்தை மேற்கொண்டிருக்கக் கூடிய வானம்பாடிக் கவிஞர்களை நோக்கி மேத்தா தொடுத்த தூண்டுகோல் கவிதை. கற்பனையும், நேர்த்தியும், சொல்லழகும், வீரியமும் அமைந்த கவிதை நம்மிடமிருந்து பிறக்க வேண்டுமென்ற பேராவலின் அறைகூவலே இக்கவிதை.
‘ஓ, இவர்கள் பூமி உருண்டையைப் புரட்டப் போகிறார்களாம்’ என்று சிலர் ஏளனங்களை எடுத்தெறிந்த போதிலும் இது சக கவிஞர்களை எழுச்சிகொள்ள வைத்த ‘பாஞ்ச சன்னியத்தின்’ ஓசை. மூன்றாம் இதழில் வெளிவந்தது மு.மேத்தாவின் ‘வாழையடி வாழை’. இக்கவிதை காலந்தோறும் நடைபெறும் போராட்ட வீரனுக்கு உரம் போடுகிற கவிதை. ‘மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை’ என்று தொடங்கும் கவிதை மெல்ல மெல்ல வேகம் கொள்கிறது.
“மண்ணில் வேரோடி
மாநிலத்தில் கால்பதித்து
வீசும் புயற்காற்றை
விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்
நின்றெதிர்த்த முடிவினில் நான்
நிலத்தில் விழுந்துவிட்டால்
கன்றெதிர்க்கும் - கன்றுகளின்
கன்றெதிர்க்கும் - கன்றுடைய
கன்றெதிர்க்கும்’’

என்று தொடரும்போது வாழை வானுயர்ந்த தேக்குமரம்போல் தேவதாரு போல ஓங்கியெழக் காணலாம். நன்மையின் பக்கம் நின்று போராடும் போராட்டம் ஒரு தலைமுறையில் ஓய்வதல்ல. அது தொடரும் வாள் வீச்சு என்று கவிதை அழுத்தமாய் உரைக்கிறது.
‘தாலாட்டுக் கேட்காத தொட்டில்கள்’ என்ற கவிதையில் தாய்மையும் வறுமையும் நடத்திய போட்டியில் வறுமை வெல்கிறது. அதனால் குழந்தை குப்பைத் தொட்டிக்குப் போகிறது.
“ஆலமரத்தடியில்
ஆளுயரக் குப்பைத் தொட்டி
ஆளுயரக் குப்பைத் தொட்டி
அழுகின்ற குரல் கேட்கும்,
கண்ணில் வளர்த்தெடுத்த
கனவுகளில் சிறுகனவு
கனவுகளில் சிறுகனவு
கலங்குகின்ற குரல் கேட்கும்”

மரபும், நாட்டுப்புறச் சந்த லயமும் இழையோடும் பல புதுக்கவிதைகள் மு.மேத்தாவிடம் பிறந்து வானம்பாடியை வளமுறுத்தின. பிற்காலத்தில் புதுக்கவிதையில் அழியா இடம் பெற்ற ‘கண்ணீர்ப் பூக்கள்’ மலர்ந்த இடம் கோவை என்பது வரலாறு. ‘செருப்புடன் ஒரு பேட்டி’ என்ற புகழ்பெற்ற மு. மேத்தாவின் அரசியல் அங்கதக் கவிதை வானம்பாடியில்தான் வெளியாயிற்று.
சமகாலக் கவிஞர்கள் பலருடைய அருமையான கவிதைகள் வானம்பாடிக்குப் பெருமை சேர்த்தன. குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதிய தேனரசனின் ‘ஆதிவாசிகள்’, ‘ச்ச்சேஎஎ’ ‘என்னால் முடிகிறது’ முதலிய கவிதைகள் குறிப்பிடத் தக்கவை. பாரம்பரியத்தை ஓர் ஆலமரமாக உருவகம் செய்து, ‘நிழல் மழை பொழியும் பூமி மேகமே, பரந்து கால் கொண்ட பாரம்பரியமே’ என அழைத்து,
“உன் நிழலில்
ஒரு செடி முளையாதாமே
ச்ச்சேஎஎ”

என்று முடிக்கும் அழகு மறக்க முடியாதது.
மரபில் கம்பீரமான கவிதைகள் பல எழுதிய சக்திக்கனல் சற்று  வேகமாகவே வானம்பாடியில் எழுதினார். அவருடைய கவிதைகளில், ‘ஒரு ரோடு ரோலரின் பவனி’ தனித்துச் சொல்லவேண்டிய ஒன்று.
அப்துல்ரகுமான், அபி, மீரா, கல்யாண்ஜி எனப் பலரும் வானம்பாடியில் எழுதியிருக்கிறார்கள். தருமுசிவராம் கவிதையும் வானம்பாடியில் வெளிவந்தது.
“வரங்களே
சாபங்கள் ஆகுமென்றால்
இங்கு
தவங்கள் எதற்காக?”

என்பது ரகுமான் எழுதிய கவிதைகளில் முத்திரை சூடிய கவிதை. ஆழங்களில் சஞ்சரிக்கும் அபி வானம்பாடிக்கு எழுதிய கவிதைகளில் ஒன்று ‘முத்திரைகள்’. இக்கவிதையில் மெய்யான கவிதை குறித்து அவர் எழுதுவார்:
“உங்கள் நாக்குகளை
நான்
கொலம்பசின்
திசை காட்டி முள்ளினால்
செய்யவில்லை
ஸ்வயத்தின் தோலுரிதலில்
பிரளய சாரங்களை அடக்கிய
நரம்புகளாய்
வெளியேறுங்கள்”

என்று கவிதையின் உள்முகங்களை அடையாளம் காட்டுவார்.
வானம்பாடி இயக்கத்தில் சற்றே இளைப்பாறிய பிரபஞ்சன் அன்று பிரபஞ்ச கவியாய் விளங்கியவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒன்று பாப்லோ நெருடாவின் மரணத்தைக் குறித்த ‘மரணம் மரணிக்கும்’ என்ற சிறந்த கவிதை.
“உன்னைச்
சிறையென்ன செய்யும்?
மகத்துவனே
மரணந்தான் என்ன செய்யும்?
மரணம் மரணிக்கும்”

என்று நெருடாவை நிரந்தரமானவனாக ஆக்கினார் பிரபஞ்ச கவி.
வானம்பாடிக்குப் பெயர் சூட்டிய பெருமைக்குரிய இளமுருகு ‘சாலைக் கடவுள்கள்’ போன்ற மாறுபட்ட பொருண்மைகளைத் தன் கவிதைப் பொருள் ஆக்கியவர். ‘விடைபெறுகிறேன்’ என்று அவர் எழுதிய கவிதை ஏறக்குறைய வானம்பாடியை விட்டு விலகுகிற கவிதையாகவே ஆயிற்று.
தமிழ்நாடன் வானம்பாடியில் எழுதியதை விடச் சிறந்த கவிதைகளைப் பின்னர் எழுதினார் என்று சொல்ல வேண்டும். கல்யாண்ஜி, கலாப்ரியா, இன்குலாப், நா. காமராசன், தமிழவன், தமிழன்பன், பாலா, வண்ண நிலவன், கோ. ராஜாராம் ஆகிய பலரும் வானம்பாடியில் அவ்வப்போது தம் கவிதைகளால் வலம் வந்ததுண்டு.
“இமயப் பறவைகள் நாம்
எரிமலையின் உள்மனம் நாம்
நமது சிறகசைப்பில்
ஞால நரம்பதிரும்’’

என்ற கம்பீரமான கவிதையைத் தமிழன்பன் எழுதினார். வானம்பாடியைக் கரித்துக் கொட்டும் வெங்கட்சாமிநாதனுக்குக் கூட இந்தக் கவிதை பிடித்திருந்தது ஒரு வியப்பே ஆகும்.
ஈழம் தீப்பிடித்து எரியத் தொடங்கிய சூழலில் அங்கே தங்கள் இதய ஒலியை வெளியிட முடியாத ஒரு சூழலில் வானம்பாடி ஈழச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அவ்விதழை உருவாக்க எம்.ஏ. நுஃமான், அ. யேசுராசா,   உ . சேரன் ஆகியோரும் பத்மநாப அய்யரும் உதவினார்கள்.
மஹாகவி, முருகையன், நீலாவணன், மு. பொன்னம்பலம், தா. இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான், அ. யேசுராசா, சேரன், சிவசேகரம், வ.ஐ.ச. ஜெயபாலன், கவியரசன், மு. புஷ்பராஜன், வில்வரத்தினம், உமா வரதராஜன், எச்செம். பாறூக், ஹம்சத்வனி, ஊர்வசி, ஆதவன், பாலமுருகன், ந. சவேசன், செ. யோகராசா, நிர்மலா நித்யானந்தன் ஆகிய ஈழக் கவிஞர்கள், எழுத்தாளர்களின் பதிவுகளை வானம்பாடி ஏந்தி வந்தது.
சேரனும், யோகராசாவும் கட்டுரைகளையும் அளித்திருந்தனர்.
ஈழக்கவிதைகள் தமிழகக் கவிதை களிலிருந்து எப்படி வேறுபடுகின்றன என்பதைத் தலையங்கம் தொட்டுக் காட்டியது.
இவ்வாறு வானம்பாடி எளிய பறவையென்றாலும் கனமான பாடல்களைத் தாங்கிச் சிறகு விரித்தது. வானம்பாடியின் சிறகுச் சிலிர்ப்புகளை இதுவரை பார்த்தோம்.
வானம்பாடிக் கவிஞர்களில் இதுவரை சொல்லாமல் விடு பட்ட சிற்பியின் கவிதைகள் குறித்துச் சில அவதானிப் புகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

- தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions