c கண்டதைச் சொல்கிறோம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கண்டதைச் சொல்கிறோம்

நடைபாதை?

நடந்து செல்கிறவர்களுக்காகவும், வாக னங்களுக்கு சுதந்திரமாக வழிவிடுவதற் காகவும், விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும் இருப்பவைதான் நடைபாதை.
ஆனால் நடைபாதையின் இன்றைய நிலை அப்படியா இருக்கிறது. முதலில் மரங்கள் வைத்தார்கள். அழகு. அவசியம். பிறகு பேருந்து நிழற்குடைகளை வைத்தார்கள். அதுவும் கூட அத்தியாவசியம்தான். ஆகவே இவை நடைபாதைகளைத் தொந்தரவு செய்வதாக ஆகாது. ஆக்கிரமிப்பாகவும் கொள்ள முடியாது.
இந்த மரத்தடிகளிலும், பேருந்து நிழற் குடைகளிலும் முதலில் பிச்சைக்காரர்
களும், வீடுகளால் கைவிடப்பட்டவர்களும் உட்காரத் தொடங்கினார்கள். பிறகு படுத்து உறங்கினார்கள். ஓட்டைக் குடிசைவாசிகள் நிரந்தரமாக தார்ப்பாய் தங்குமிடத்தையே அமைத்தார்கள். அதிலேயே உண்டு, உடுத்தி, குடும்பத்தை நடத்தினார்கள். அக்குடிசைகளுக்கு இருபுறமும் முன்புறமும் பாத்திரங்களையும், துணிமூட்டைகளையும் போட்டுக்கொண்டார்கள். பிறகு பல குடிசைகள் அமைக்கப்பட்டன. நடைபாதை, சாலையோரத் தெருபோல ஆனது. இடைப்பட்ட வெற்றிடங்களில் இளநீர் வியாபாரிகள், தள்ளுவண்டி பழச்சாறுக் கடைகள், தற்காலிகமாகத் தொடங்கி நிரந்தரமாக நின்றுவிட்டன. கையேந்தி பவன்களும் தன் பங்கை எடுத்துக்கொள்ள, எஞ்சிய இடங்கள் கார்களை ஓரங்கட்டவும், இரு சக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்ளவும் எடுத்துக்கொள்ளப் பட்டன. அது ஏழை மக்கள் வாழும் பகுதியாக இருந்தால் சிறுவர்கள், மலஜலம் கழிக்கவும் செய்தார்கள். பாலடைந்த வாகனங்கள் வேறு நிரந்தரமாக டேராவைப் போட்டுவிட்டன.
இதில் நடைபாதைவாசிகள் செல்ல எங்கே இருக்கிறது நடைபாதை!
மக்கள் சகிப்புத்தன்மை நிரம்பியவர்கள். வளைந்து நெளிந்து ஒத்தையடிப் பாதையில் பயணிப்பதுபோல போய் வருகிறார்கள். சில இடங்களில் நடைபாதை மேடைக்கும் கீழ் சாலையை ஒட்டியே போய் வருகிறார்கள். தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம் போன்ற வியாபார நெரிசல் மிகுந்த பகுதிகளில் நடைபாதை என்கிற ஒன்றே இருப்பதில்லை. வாகனங்களுடன் மக்களும் வாக்கிங் போவதுபோல ஊர்ந்து செல்கிறார்கள்.
மக்கள் கண்டுகொள்ளாமல் போகலாம். அவர்களுக்கு யாரைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்கிற சிக்கல்கள் இருக்கலாம். பிளாட்பாரவாசிகளின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காகவும் அமைதியாகச் செல்லலாம்! பாவம்... என்றுகூட போகலாம்.
ஆனால், இந்த மாபெரும் தலைநகரில், இத்தனை பிரமாண்ட சாலைகளில் எத்தனை அதிகாரிகள் செல்கிறார்கள். எத்தனை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போகிறார்கள். எத்தனை மேயர்கள் செல்கிறார்கள். முதல்வர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் கூடவா கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். எத்தனை குப்பைகளையும், எத்தனை இடர்பாடுகளையும் பார்க்கிறார்கள். எத்தனை டிராபிக்ஜாம் இம்சைகளைப் பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு எப்படி அப்படியே செல்ல முடிகிறது.
முக்கியமாக கவனிக்கவேண்டியது. எந்த இடத்திலும் நடைபாதை பயணத்திற்கென குடிநீர் பைப்புகளோ, ஓய்வெடுக்கும் சிமெண்ட் நாற்காலிகளோ இல்லை. இந்த ஆக்கிரமிப்புகள் மட்டும் மிகவும் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன.
சாலைகள், கழிவறைகள், நடைபாதை, குடிநீர், வடிகால்வாய்கள், பூங்காக்கள், உணவுக் கூடங்கள், குடியிருப்புகள், மரங்கள், அலுவலகங்கள், கடைத்தெரு என கச்சிதமாக நிர்மாணிக்கப்படுவதே ஒரு நகரம். அது சென்னை போன்ற மாநிலத் தலைமையிடமாகவோ, டெல்லி போன்ற தேசத் தலைமையிடமாகவோ இருந்தால்,
அழகும், நேர்த்தியும், தூய்மையான, நவீனமான சாலைகளும் மிகமிக அவசியம்.
அயல்நாட்டினர், வெளிமாநிலத்தவர் எனப் பலர் வந்து போகும் இடமென்பதால் கச்சிதமான ஒழுங்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.
அதற்காக மட்டுமல்ல, மக்களையும், சுற்றுப்புறத்தையும் ஆரோக்கியமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருப்பது யதார்த்தமான ஒன்றுதான்.
மக்கள் பெருகப் பெருக, மானுடம் வளர வளர, தேவைகளும், வாய்ப்புகளும் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான உட்கட்டமைப்பும், அத்தியாவசியத் தேவையும் நவீனப்பட்டுக் கொண்டே வரவேண்டும். அப்படி இல்லையெனில் கண்ணுக்கு முன்னால் நகரம் மூச்சுத் திணறிக்கொண்டேதான் இருக்கும்.
அரசும் அதிகாரிகளும் அக்கறையுடன்
தம் கடமையை உணரக் கடவதாக!


 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions