c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

போராட்டமும் மனித நாகரிகமும்
ஒரு மனிதன் தன் எதிர்ப்பை அல்லது விருப்பமின்மையை வெளிப்படுத்தும் முறை பலவாறாக இருக்கலாம்.

தொடக்கத்தில் அந்த எதிர்ப்பைப் பகை என்கிறார்கள். வெறுப்பு என்கிறார்கள். மோதல் என்கிறார்கள். தனிமனிதர்களின் ஊடே தோன்றும் இந்த முரண்கள் இரண்டு வகையில் தீர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஒன்று, சம்பந்தப்பட்டவர்களே பேசித் தீர்த்துக்கொள்வது. இரண்டு, அடிதடிப் போக்கில் வளர்ந்து பஞ்சாயத்து, நீதிமன்றம் என்று வளர்வது.

ஆனால் ஒரு தத்துவத்தை, கொள்கையை முன்வைத்து ஆளும் அரசுக்கு எதிராக, அந்த அரசின் குடிமக்கள் தம் எதிர்ப்புக் குரலை எழுப்புவதைப் ‘போராட்டம்’ என்ற பெயராலேயே வரலாறு குறித்து வந்திருக்கிறது. போராட்டம் எப்போதும் தனிமனிதன் சார்ந்ததன்று. அது மக்கள் கூட்டத்தின் அதிருப்தி வடிவம். அரசுகளுக்கு அல்லது ஆட்சிக்கு எதிரான போராட்ட வடிவம்.

அண்மைக் காலத்து இந்திய வரலாற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக மக்களுக்கு இருந்த எதிர்ப்புக்கும் கோபத்துக்கும் ஒரு வடிவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் மகாத்மா காந்தி ஆவார். காந்தி, இரண்டு விஷயங்களைச் செய்யவேண்டி இருந்தது. ஒன்று, ஆங்கில அரசு செய்கிற மக்களுக்கு  எதிரான கொடுமைகளைக் கண்டுபிடித்து அவற்றை மக்களுக்குச் சொன்னது. இரண்டாவது, மக்களைத் திரட்டி அரசுக்கு எதிரான போராட்ட வடிவங்களை உருவாக்கி மக்களை அந்த வழியில் செலுத்தியது.

காந்தியின் போராட்ட வடிவம், உலகை ஆச்சரியப்பட வைத்த போராட்ட வடிவமாக அன்று இருந்தது. அதன் பேர் ‘அகிம்சைப் போராட்டம்’. இதன் பொருள், எதிரி ஆயுதத்துடன் இருப்பான். எதிர்க்கும் மக்கள் தங்கள் மனவுறுதியையே, உடலையே ஆயுதமாக்கி நிற்பது, போராடுவது என்பதாகும். ஆங்கிலக் காவல்துறையோ, இராணுவமோ அரசுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்கும்போது அவர்களுக்கு எதிராக மக்கள் தங்கள் ஆத்மபலம் என்ற ஒன்றையே துணையாகக் கொண்டு களத்துக்கு வந்தார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால், இந்திய மக்களின் போராட்ட வடிவம் ஆங்கிலேயரை யோசிக்க வைத்தது. பின்வாங்க வைத்தது. இறுதியில் தோற்றுப் பின்வாங்கச் செய்தது.

இதுவே காந்திய சகாப்தத்தின் வரலாறு.
போராட்ட வடிவம், காந்தியத்தின் அகிம்சைக்கு எதிராகவும் வடிவம் எடுக்கத்தான் செய்தது. கட்டுப்பாடு இழந்து மக்கள் திரள், வன்முறையில் இறங்கியபோதெல்லாம் (உதாரணமாக ஆகஸ்டுப் போராட்டம்) காந்தி, போராட்டத்தையே நிறுத்தினார். பின்வாங்கினார். போராளிகள் பலருக்கும் காந்தியின் பின்வாங்கல் அப்போதைக்கு வருத்தம் தந்தாலும், வரலாறு அவரைப் புரிந்துகொண்டது. எதிரிகளான ஆங்கிலேயரும் அவரைப் புரிந்துகொண்டார்கள்.

காந்தி வடிவமைத்த போராட்டத்தின் தத்துவம் மிக நுட்பமானது. “எதிரியின் கொள்கையை, வன்முறையை நீ எதிர்க்கலாம். எதிர்க்கவேண்டியது சமூகக் கடமை. அதிலும், வன்முறைக்கு இடம் இல்லை. எதிரியின் ஆயுதத்துக்கு முன் நீ உயர்த்தவேண்டியது உன் அறத்தை. அதுவே  எதிரியின் ஆத்மாவைத் தொடும்’’ என்றார் காந்தி.

இதைத்தான் பாரதி, ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று இறைவனிடம் கேட்டார்.
நிறைய போராட்டங்கள் நடக்கின்றன. எத்தகையப் போராட்டங்கள் தேவை, இன்றியமையாதவை என்ற கணக்குக்குள் போக விரும்பவில்லை. ஆனால், கூட்டத்துக்குள்ளிருந்து வரும், ‘இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா’ என்ற குரலுக்கு என்ன அர்த்தம். யாரைப் பார்த்துக் கேட்கிறார்கள். மக்கள், மக்களைப் பார்த்து மிரட்டுவதுபோல இல்லை?

போராளிக்கு முன் இருக்கும் முதல் கடமை, தம் எதிர்ப்பை, விருப்பமின்மையைத் தெரிவிப்பது. யாரை முன்நிறுத்திப் போராட்டம் நடக்கிறதோ அவர்களுக்குத் தெளிவாகச் சொல்வது. ஆனால், பெரும்பான்மையான போராட்டங்கள், மக்களை மிரட்டுவதாக இருக்கிறது. அது தவறு.
அலுவலகம் போகிறவர்கள், பள்ளிக்குப் போகும் அல்லது பள்ளியிலிருந்து திரும்பும் சிறுவர்கள், மருத்துவமனைக்குப் போகிறவர்கள், பற்பல காரணங்களை முன்னிட்டு பயணிப்பவர்கள், ரயில், பேருந்து, விமானத்துக்குச் செல்பவர்கள், போராட்ட ஊர்வலங்களால் தடைப்படுவது நியாயம்தானா என்பதைப் போராட்டத் தலைவர்கள் உணர்கிறார்களா என்றால் இல்லை.

பத்து இருபது பேர் போதும், கடைகளை அடைத்துவிட. கடைகளை மூடச் சொல்வதும், அச்சுறுத்துவதும் சட்டப்படியும், தார்மிகப்படியும் பெரும் தவறுகள், குற்றங்கள். நம் காலத்தில் இவை  மிகப் பெரும் அளவில் நடக்கும் குற்றங்கள். வியாபாரம் நடக்காமல் தடுப்பது, ஒரு பெரிய தேசிய நஷ்டம். பல ஆயிரம் கோடி ரூபாய் செலாவணி இல்லாமல் இருப்பது, முடங்குவது ஒரு பெரிய தேசிய நஷ்டம் என்பதை உணர்வார் இல்லாமலா போனார்கள்.

போராட்டக்காரர்கள் தங்கள் அதிருப்தியை முதலில் தெரிவிக்கிறார்கள் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிறுவனங்கள், அதிருப்தியாளர்களை, தொழிலாளர்களை அழைத்து, உட்கார்ந்து பேசிப் பிரச்சனைகளைத் தீர்த்துவிட முடியும். ஏனோ, அவர்கள் அதைச் செய்வதில்லை. பிரச்சனைகள் வளர்வது, தீர்க்க வேண்டியவர்களின் அலட்சியம் அல்லது அக்கறை இல்லாமையாலே ஆகும். முளையில் கிள்ளி ஒழுங்கு செய்வதை விட்டு, அது மரமாக வளர நீர்விட்டும் போஷிக்கிற தவறுகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்துவிடக்கூடாது.
தெரு ஓரமாக நின்று, கைகோர்த்து, யாருக்கும் இடையூறு செய்யாமல் கோஷம் எழுப்பித் தங்கள் எதிர்ப்பைச் சொல்வது அண்மைக் காலத்துப் போராட்ட வடிவமாக வளர்ந்திருப்பது பற்றிப் போராட்டக்காரர்கள் சிந்திக்கலாமே! அல்லது மக்களுக்குத் தொந்தரவு செய்யாத போராட்ட முறைகளைக் கண்டுபிடிக்கலாமே!

நூற்று இருபது கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தில் குறைகள், கோபங்கள் இருக்கத்தான் செய்யும். அதன் வெளிப்பாடு நாகரிமாகவும், பண்பாடு சார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதே நம் கருத்தாகும். எந்தப் போராட்டத்திலும் தனிமனிதன் பாதிக்கப்படக்கூடாது. வன்முறை வெடிக்கக்கூடாது என்பதே நம் எண்ணமாகும்.

எதிரிகள் என்று எண்ணுபவர்களை நோக்கிப் போராட்டக்காரர்கள் கைகளை உயர்த்தும்போது, முதலில் மக்களோடு அவர்கள் கைகுலுக்கிக்கொண்ட பிறகே, அதைச் செய்ய முன்வர வேண்டும்.

 

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions