c கண்டதைச் சொல்கிறோம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கண்டதைச் சொல்கிறோம்

சென்னையின் புகழ்களில் ஒன்று அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை. அங்கே ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. அதற்கடுத்து எல்.ஐ.சி. க்கு அருகில் ஒன்று உள்ளது. அதையும் தாண்டினால் ஆயிரம் விளக்கு, டி.எம்.எஸ். அருகிலும் தலா ஒன்று உள்ளது. அதையும் விட்டால் சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்திற்கும் சற்று மேற்கேதான் ஒன்று உள்ளது. பிறகு கிண்டி பேருந்து நிலையத்துடன் ரயில் நிலையத்தைத் தொடர்புபடுத்தும் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. இதைவிட்டால் அந்தப் பக்கம் போரூர் வரையிலும், இந்தப் பக்கம் மீனம்பாக்கம் வரையிலும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இவற்றிற்கு நடுவே ஆறு அல்லது ஏழு பெரிய சிக்னல்களும் மூன்று அல்லது நான்கு சிறிய சிக்னல்களுமே உள்ளன.

சென்னையின் பிரதான சாலையென புகழப்படும் இவ்வளவு பெரிய சாலையில் மக்கள் சாலைகளைக் கடப்பதற்கு உள்ள வசதிகள் இவ்வளவுதான்.

இவற்றின் வழியாகவே இவ்வளவு காலமும் இத்தனை ஆயிரம் ஜனங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறார்கள்.
ஜன நெருக்கடி குறைவாக இருந்த காலத்திற்கும், வாழ்க்கையின் வேகம் குறைவாக இருந்த சூழலுக்கும் இது ஒத்து வந்திருக்கலாம். போதுமானவையாக இருந்திருக்கலாம்.

காலம் வளர வளர, மக்கள் தொகையும் தேவையும் பெருகப் பெருக, வாழ்க்கையின் வேகம் கூடக்கூட, அவசரம் அல்லது விரைவு என்கிற இடத்திற்கு மக்கள் நகர்வது யதார்த்தமானதுதான்.

அதற்கேற்பவே சாலைகளின் தன்மை, அதில் மக்களுக்கான பாதுகாப்பு வசதிகள், நவீனத் தன்மை ஆகியவையும் அமைய வேண்டும்.
அப்படி வாய்க்காதபோது தற்காலிக அல்லது சுருக்கமான யோசனைகளை ஜனங்கள் கையிலெடுக்கிறார்கள்.
விளைவு-நடுவிலுள்ள தடுப்புச் சுவர்களின் பிளவுகள் வழியாக நுழைந்து ஓட்ட நடையில் கடக்க முயற்சிக்கிறார்கள். ஆபத்தான வளைவுகளிலும், நான்கு வழிச் சாலைகள் சந்திப்பில் குறுக்கு நெடுக்கிலும் கடந்து செல்கிறார்கள்.

ஒருவர், இருவர் நிற்க, பலர் கூடியதும் குழுவாகப் போவதில் சிக்கலும் விபத்தும் குறைவு தான். ஒருவர் அல்லது இருவர் தனியாக, துப்பாக்கியினின்று விடுபட்ட தோட்டாவைப் போல புதுக்கிட்டு ஓடும்போது விபரீதம் நேர்கிறது. அவர் மீது மட்டுமல்ல முன் செல்லும் வாகனங்கள், அதன்பின் வரும் வாகனங்கள் என்று ஒன்றுக்கொன்று வேகத்தைச் சட்டெனக் குறைக்கவியலாமல் தர்மசங்கடமான மோதல்கள் நேர்ந்துவிடுகின்றன. ஓட்டுநர் காயத்துடன் திட்டுகளும், மெமோவும் வாங்குவதுடன் சமயத்தில் வேலையையும் இழக்கலாம்.

பிறகு சிறிய டிராபிக் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து பல சிக்கல்கள் விளைகின்றன. இவ்வளவு ஆபத்தின் விளிம்பில் மக்கள் சாலை களைக் கடப்பதன் காரணம், சிக்னல்களோ, சுரங்கப் பாதைகளோ அருகருகில் இல்லை என்பதுதான். ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் நடுவில் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. அவசரம், அவ்வளவு தூரம் சுற்றிவர முடியாத அலுப்பு என்பது இன்னொரு காரணம். முன்கூட்டியே கிளம்பாததும், மக்கள் மனம் பொறுமைக்கும் நிதானத்திற்கும் பழகாததும் அல்லது பழக்கப்படாதிருப்பதும் இன்னொரு காரணம்.

நிறைய சிக்னல்கள் வைக்க இயலாதுதான். சுரங்கப்பாதை அமைக்கலாம். அதில் செலவும் ரிஸ்க்கும் அதிகமெனில் சாலைக்கு மேல் தகரப் பாலங்கள் போடலாம். மிகவும் எளிதான முயற்சியும் செலவும் அதற்குப் போதும். அடுத்து சாலைகளை நடுவில் கடக்க இயலாத வகையில் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் வைக்கவேண்டும். அதாவது மக்கள் எக்காரணத்தாலும் ஆபத்தான வழிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்காமல் இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு சிறிய வேண்டுதல், பேருந்து நிழற்குடைகளை வெயிலுக்கும் மழைக்கும் ஓரளவிற் கேனும் தாக்குபிடிக்குமளவிற்கு அமைத்துத் தாங்கப்பா. ப்ளீஸ். முடிந்தால் அண்ணா சாலை ஓரத்தில் தொடர்ச்சியாக மரங்கள் நடுங்கள்.

அடுத்து ரெயில்வே லெவல் கிராசிங் மேட்டருக்கு வருவோம்.
பல கிலோமீட்டருக்கு ஒரு கிராசிங் என்பது ரயில் விசயத்தில் தவிர்க்க இயலாததுதான். சரி, இருக்கிற வசதிகளில் மக்கள் எப்படிப் பயணிக்கிறார்கள்.

லெவல் கிராசிங் மூடப்பட்டுள்ளது தெரிந்தும் குறுக்குக் கம்பிகளுக்குள் நுழைந்து போகிறார்கள். இரு சக்கர வாகனத்தைப் படுக்கை வசத்தில் சாய்த்து நுழைந்துப் போகிறார்கள். இருபதடி தூரத்தில் ரயில் வரும் நொடிகளில்கூட திடுதிடுவென ஓடுகிறார்கள். ஓடும் இரண்டு ரயில்களுக்கு நடுவில் நிற்கிறார்கள். கைபேசியில் ‘கடலை’ வேறு. நண்பர்களுடன் விவாதம் வேறு. குறைந்தபட்சம் நெருங்கி வரும் ரயிலின் மீது கூட கவனம் இருப்பதில்லை.

அவசரகதியான வாழ்க்கையை மட்டுமே எல்லா வற்றிற்கும் காரணம் என சொல்லி மக்களை நியாயப் படுத்தவும் முடியாது. அவர்கள் பக்கம் தவறுகள் இருக்கிறதுதான்.ஏதாவது நேர்ந்தால் முழு இழப்பும் மக்களை மட்டுமேதான் சாரும்.
நம்முடைய இன்னொரு கேள்வி! அப்படியெல்லாம் செல்ல வழிகள் இருப்பதால்தானே அவர்கள் அப்படிச் செல்கிறார்கள்! ஓட்டையுள்ள குடமே ஒழுகும், இல்லையா?

தடைக் கம்பியை கதவுபோல போடலாமா? அதன் தூணுக்கு இருபுறமும் வலிமையான சிமெண்ட் மதில்கள் அமைக்கலாமா? மீறி வருவோர் மீது அபராதம் விதிக்கலாமா? வாகனங்கள் செல்ல தாழ்தள வழிகளும் (Under Way Bridge) மக்கள் செல்ல மேல்வழி தகரப் பாலங்களும் போடலாமா? என்றெல்லாம் யோசித்தால் இதெல்லாம் ஒரு மேட்டரா என்ன?

குறைந்தது லெவல் கிராசிங்கின் இருபுறமும் ஒரு வாட்ச்மேனையாவது போடலாம். பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். சென்ற ஆண்டுப்படி பதினைந்து ஆயிரம் ரயில்வே லெவல் கிராசிங்கில் காவலர்களே இல்லை என்கிறதொரு புள்ளி விவரம்.

இப்படியெல்லாம் யோசிக்கவும், இதையெல்லாம் மக்களுக்குச் செய்துத் தரவும்தான் அரசும், அதிகாரிகளும், அமைப்புகளும், சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். அதை வாகாக மறந்துவிடுகிறோம். அதற்குப் பதிலாக, மக்கள் சரியாகத்தான் இருக்கி றார்கள் என அரசும், அரசு சொல்லட்டும் என அதிகாரிகளும், ஆணை வரட்டும் பூனை வரட்டும் என அடுத்தடுத்தப் படிநிலைகளும் எண்ணிக் கிடப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார்கள் நம்மவர்கள்.

யார் கேட்டும் எதுவும் தரவேண்டாம், யார் கொடுத்தும் எதுவும் பெற வேண்டாம் எல்லாம் சுமூகமாக இயல்பாக நடக்க வேண்டும். அதற்கு ஒன்றே ஒன்று மட்டும் வேண்டும்.

எல்லாத் தளங்களிலும், எமது தேசத்தை நவீனப்படுத்துவது எமது கடமை என்கிற ‘நவீன சிந்தனையே’ அது!

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions