c தேன்மொழி கவிதைகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தேன்மொழி கவிதைகள்

பறவைகளின் உலகில்
கவிதையெழுத வானம் இருக்கிறது
மொழிதான் இல்லை
உதிர்ந்த இறகுகள் எழுதிச்சென்ற கவிதைகளைக்
காற்று அழித்துவிட்டது
இப்போதிருப்பதோ நிர்மல வானம்
பாடும் நதிகளின்மேல்
இறகுகள் விழுந்து
கூழாங்கற்களாய் மாறுகின்றன
வானம் கிழிந்து துண்டுகள் பலவாகி
வயல்களை மூடுகிறது
அதில்
நாற்றுகளும் நண்டுகளும்
எழுதுகின்றன தங்களின்    கதைகளை
மரங்களில் அடையும்
தனிமை
பறவைகளுக்காய் காத்திருக்கிறது
வானம் விரிகிறது
பறவை தொலைகிறது
பறத்தல் தொடர்கிறது

யார் தட்டினாலும்
சிறுமி ஓடிச் சென்று கதவைத் திறக்கிறாள்
ஓசை எழுப்பாத கதவையும்
ஆர்வமுடன் திறந்து பார்க்கிறாள்
மூடிய கதவு தட்டப்பட வேண்டும்
ஓடிச்சென்று திறக்க வேண்டுமென்பது
அவளது ஆசை
கதவுகளெல்லாம் திறப்பதற்கானவை என்பது
அவளது நம்பிக்கை.
அவளது பாதங்கள் பட்டு
பூமி திறக்கிறது
கைகள் வீசும்போது காற்று திறக்கிறது
பார்வை தொடும்போது
வானம் திறக்கிறது.
அவள் தனது பிஞ்சு விரல்களால் என்
இதயத்தைத் தட்டுகிறாள்
கவிதை மூடிக்கொள்கிறது
கண்ணீர் பெருக்கெடுக்கிறது
வெள்ளைக் காகிதத்தில்
பறவை வரைகிறேன்
சிறுமி அருகில் வருகிறாள்
அதன் சிறகுகளை விரிக்கிறாள்
மரக்கிளையொன்றைக் கொடுத்து
பறவையைப் பறக்க விடுகிறாள்
மீன் வரைகிறேன்
வேறொரு பக்கத்தில் மீன்வலை
இருந்த இடத்தைக் கிழிக்கிறாள்
மீன் தொட்டியை உடைக்கிறாள்
வற்றாத தடாகத்தில்
பத்திரமாய் அதை நீந்த விடுகிறாள்
குரங்குக்குட்டி ஒன்றை வரைகிறேன்
சிறிதுநேரம் விளையாடுகிறாள்
பின்பு
தாயின் வயிற்றோடு ஒட்டவைத்துவிட்டுத்
திரும்புகிறாள்
சிங்கம் வரைந்தபோது
அவள் முகம் வெளிரியது
அடர்ந்த காட்டைக் கூட்டி வந்தாள்
சிங்கம் அதனுள் மறைந்தது
உன்னுடைய சிறந்த ஓவியம்
இதனுள் இருக்கிறது
வெள்ளைக் காகிதத்தைத் தந்துவிட்டு
ஓவியத்திலிருந்து பறந்து செல்கிறாள்

- தினைப்புனம் கவிதைகள்
(மணற்கேணி வெளியீடு)

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions