c நமது நூலகம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நமது நூலகம்

வள்ளலார் பற்றிய புதிய ஆய்வுகள்
பிரமன்

கருத்து மற்றும் சிந்தனை சார்ந்த துறைகளில், உழைப்பை முன்வைத்து உண்மைகளைத் தேடுவது ஆய்வு என்று சொல்லப்படும். கருத்தே இல்லாத பிரதேசங்களில் புதிய கருத்தை உருவாக்குவதும், உருவாக்கப்பட்ட கருத்து   தவறு என்று தோன்றினால் புதிய கருத்தை உருவாக்குவதும், இந்த ஆய்வுகளின் நோக்கமாகும்.
மொழி தத்துவம், இலக்கியம் சார்ந்த அண்மைக்கால ஆய்வுகள் உழைப்பைக் கோராமலும், மேம்போக்காகவும், முன்னர் வேறு ஆய்வாளர்களால் கொடுக்கப்பட்ட தரவுகளைப் பெயர் குறிப்பிடாமல் தமதே போலப் பயன்படுத்திக்கொள்ளும் ‘மாரீச’ ஆய்வுகளாக வெளிவருவதைப் பல உண்மை ஆராய்ச்சியாளர்கள் வருத்தமுடன் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
திரு. டாக்டர் ப. சரவணன் அண்மையில் உருவாகி தமிழுக்கு வந்திருக்கும் மிக முக்கியமான ஆய்வாளர். உண்மை சார்ந்த எழுத்தாளர். தமிழ்ச் சமூகம் பற்றிய ஆவணப்படுத்துதலில் உழைப்பவர். முன்னர், இராமலிங்க வள்ளலார் பற்றி இவர் பதிப்பித்தும் எழுதியதும், வள்ளலார் மேல் கடந்த இருபது ஆண்டுகளில் புதிய ஒளியைப் பாய்ச்சியவை. அருட்பா, மருட்பா பற்றிய பல தவறான புரிதலை அவர் நூல்கள் தகர்த்தன. வள்ளலாரின் பல புதிய பரிமாணங்களை அவரே வெளிப்படுத்தினார்.
இப்போது பேசப்புகும் ‘வாழையடி வாழையென’ எனப் பெயரிய இந்த நூல், ஒப்பிலக்கியத் துறைக்கு ஒரு புதுப்பாதை அமைப்பது. இந்த நூலில், திராவிட இயக்கத்துக்கு வள்ளலார் தந்த கருத்துக் கொடை, வள்ளலார் என்ற ஞானிக்கும் நாராயண குரு எனப்படும் கேரள ஞானிக்கும் ஊடே நிலவும் சிந்தனை ஒப்புமை, பாரதி, வள்ளுவர், வைகுண்ட சுவாமிகள் முதலான பேரருளாளர்களுக்கும் வள்ளலார்க்கும் ஊடே நிலவும் சிந்தனை ஒற்றுமைகள், அக்கறைகள், லட்சியங்களைக் கண்டடைதலில் உருவாக்கிய புதிய பாதைகளை ஒப்புநோக்கி மிக நுணுக்கமாக ஆராய்ந்து எழுதி இருக்கிறார் ப. சரவணன்.
1925 நவம்பரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண மாநாட்டில் பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தைத் திரு.வி.க. அனுமதிக்க மறுத்து நிராகரிக்கவும் செய்தார். ஏற்கனவே, காங்கிரஸ் மேல்சாதிக்காரர்களின் சட்டைப்பையில் இருப்பதாகக் கருதி இருந்த பெரியார், மாநாட்டை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கம் தொடங்குகிறார். சுயமரியாதை இயக்கம் பிறகு பல பெயரில் உருமாறித் திராவிட இயக்கமாக உருப்பெற்றது என்பதை அறிவோம். எனினும் திராவிட இயக்கம், வள்ளலாரின் ஒருமைப்பாட்டு மனித நேயச் சித்தாந்தத்துக்குக் கடமைப்பட்டது என்பதை பல ஆதாரத்துடன் ப. சரவணன் நிறுவுகிறார். குடியரசு பத்திரிகையில் பெரியாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சமயத்துறையில் நாராயணகுரு செய்த பெரும் புரட்சியின் அடிநாதமான சில கூறுகளுக்கும், வள்ளலாரின் ஆறாம் திருமுறைச் சித்தாந்தத்துக்கும் ஊடே நிலவும் சிந்தனைப் பொதுமைக் கூறு மிக முக்கியமான கருதுகோளாகும். இதை ஒரு கட்டுரையாக எழுதி இருக்கிறார் ப. சரவணன்.
புதிய விழிப்பின் முன்னோடி என்று வள்ளலாரை வியப்பார் பாரதி. எப்படி, எது புதிய விழிப்பு? புதிய விழிப்புக்கும், வள்ளலாருக்கும், புதிய விழிப்பு பாரதிக்குச் சாத்தியப்படும் பிரதேசத்தையும் ஆராய்கிறது ஒரு கட்டுரை.
கடந்த இரு நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமூகம், சமய, ஆன்மிக, அறிவுத் துறைகளில் பெற்ற அடர்த்திகள், செறிவுகள், புதிய பதிவுகள் என்று நுணுக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட சிறந்த ஆய்வு நூல், ‘வாழையடி வாழையென’ என்று உறுதியாகச் சொல்லலாம்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions