c தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குறுந்தொடர்-4
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குறுந்தொடர்-4

வாழை இலையில் சில பாடல்கள்!
பழநிபாரதி

‘‘சாப்டீங்களா’’
“சாப்பிடலாமா’’

இந்த மிகச் சிறிய சொல்லாடலின் சாராம்சம்தான் உலகின் எல்லா நீளமான உரையாடல்களும்.

பசிக்கும் உணவுக்கும் இடையில்தான் நாம் அழுகிறோம். சிரிக்கிறோம். கனவு காண்கிறோம். காதலிக்கிறோம்.

தமிழர்களின் உணவு வகைகள் பற்றியும் சுவையுணர்வுகள் பற்றியும் பழந்தமிழ் இலக்கியங்களில் நிறைய பரிமாறப்பட்டிருக்கின்றன.

குறுந்தொகையில் ஒரு சித்திரம்:

தலைவனுக்குப் புளிக்குழம்பு என்றால் கொள்ளைப் பிரியம். அது தலைவிக்குத் தெரியும். அவள் தன் மெல்லிய காந்தள்பூ விரல்களால் கட்டித் தயிரைப் பிசைகிறாள். அந்த விரல்களைத் தன் புடவையிலேயே துடைத்துக்கொள்கிறாள். குழம்பு தாளிக்கும் புகை அவளது குவளைக் கண்களைக் கலங்க வைக்கிறது. அதையெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் அவள் அவனுக்குப் பரிமாறுகிறாள். அவன் அந்த இனிமையை அனுபவித்துச் சுவைக்கிறான். அதைக் கண்மலரப் பார்க்கிறாள். ஒளிரும் நெற்றியைக் கொண்ட அவள் முகம் அந்தக் காட்சியில் மேலும் ஒளிர்கிறது.

உணவு என்பது வெறும் உணவல்ல. அது நம்மை உருவாக்கும் உணர்வு. நம்மைப் பிறருக்கு வெளிப்படுத்தும் உணர்வு.

திரையிசைப் பாடல்களில் இப்படி சாப்பாடு குறித்த சூழல்களை அசைபோடத் தொடங்கினேன்.

கல்யாண சமையல் சாதம்                                                         காய்கறிகளும் பிரமாதம்                                                                                                     இந்தக் கௌரவப் பிரசாதம்                                                                    இதுவே எனக்குப் போதும்

என்று ‘மாயா பஜார்’ படத்தில் ரங்காராவ் சந்தத்தில் சிரித்துக்கொண்டே கடந்து போகிறார்.

எனக்கு முன்னால், ‘முள்ளும் மலரும்’ படத்தின் ரஜினிகாந்தும் படாபட் ஜெயலட்சுமியும்...
ஒரு கையை இழந்த ரஜினிகாந்த், தங்கையின் கல்யாண வேலைகளாலும் சிந்தனைகளாலும் சோர்ந்துபோய் உறங்கிக் கொண்டிருப்பார். பசியோடு உறங்கும் அவரை படாபட் ஒரு சாப்‘பாட்டால்’ எழுப்புவார். அவருக்காக ஆக்கி வைத்திருக்கும் சாப்பாட்டுப் பட்டியலைச் சொல்லிச் சொல்லிப் பாடுவார். சொல்லச் சொல்லச் சுவை கூடிக்கொண்டே போகும். அது இன்னொரு சுவை.

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா(ய்)
நேத்து வச்ச மீன்குழம்பு
என்னை இழுக்குதய்யா
நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு
வந்து மயக்குதய்யா”

அரைத் தூக்கம் கலைந்தவரை அள்ளித் தின்னும்படி முழுதாக எழுப்ப வேண்டு மில்லையா? ‘பச்சரிசி சோறு, உப்புக் கறுவாடு, சின்னமனூர் வாய்க்கால் சேலக்கெண்டை மீனு, முளைக்கீரை, சிறுகீரை, காளான்’  என்று  பட்டியல் நீண்டுகொண்டே போகும். எந்த உணவுக்குத் தொட்டுக்கொள்ள எது பொருத்தம் என்பது ஒரு ஆணுக்குத் தெரியும். ஆனால் அதைவிடவும் சமைத்த பெண்ணுக்குத் தானே சங்கதி அதிகம் தெரியும். இந்தப் பாடல் முடியும்போது சமையல் முதலெழுத்தை இழந்து முழுமையான மையலாகிவிடும். இளையராஜா இசையில் கங்கைஅமரன் வைத்த காதல் விருந்து இது.

‘வாகை சூட வா’ என்றொரு படம். கதாநாயகன் அந்தக் குக்கிராமத்திற்குள் ஒரு வாத்தியாராக அடியெடுத்து வைப்பான். அங்கே அவனுக்காகச் சமைத்துக் கொடுக்கும் ஒரு பெண், மெல்ல மெல்ல கதாநாயகிக் கனவில் நிறம் மாறிக்கொண்டிருப்பாள். ஒருநாள் உணவு பரிமாறும்போது, கனவு மிதக்கும் கண்களால் அவள் அவனைக் கேட்கிறாள்.

“எங்க ஊரு பிடிக்குதா
எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா
முட்டக் கோழி பிடிக்கவா
முறைப்படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கையில்
என்னைக் கொஞ்சம் நினைக்கவா
கம்பஞ்சோறு ருசிக்கவா - சமைச்ச
கைய கொஞ்சம் ரசிக்கவா
முடக்கத்தான் ரசம்வச்சு
மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டதோசை சுட்டுவச்சு
காவல் காக்குறேன்
முக்கண்ணு நுங்குநான் நிக்குறேன்
மண்டு நீ கங்க ஏன் கேக்குற?”

இங்கே ஜிப்ரான் இசையில் கவிஞர் வைரமுத்து வைத்திருப்பது வரிவிருந்தல்ல, ஒரு கறி விருந்து.

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது, திரும்பிப் பார்த்தால் கண்ணதாசன்.

“கரும்போ கனியோ
கவிதைச் சுவையோ
விருந்தா கொடுத்தான்
விழுந்தாள் மடியில்”

காதலின் தீராத பசிக்கு விருந்து அவன் கொடுத்தால் என்ன, அவள் கொடுத்தால் என்ன இரண்டும் ஒன்றுதான் என்கிறார்.

உலகில் பிறக்கும் எல்லா உயிர்களின் பசிக்கும் இந்த உலகத்திலேயே உணவையும் படைத்திருக்கிறது இயற்கை. இதைப் புரிந்துகொள்ளாத முரண்பாட்டில்தான் ஆயிரமாயிரம் போராட்டங்கள் நடக்கின்றன.

‘பாபு’ படத்தில் தலையில் சோற்றுக்கூடை தூக்கி வருகிற ஒரு பெண்ணை வர்ணித்துப் பாடுகிற பாட்டு -_

“வரதப்பா வரதப்பா  கஞ்சி வருதப்பா - கஞ்சி
கலயம் தன்னைத் தலையில் தாங்கி
வஞ்சி வருதப்பா”

இந்தப் பாடலின் இடையில் சில வரிகள் வரும். உணவு வகைகளைச் சொல்லியே கவிஞர் வாலி மதங்களுக்கு இடையில்  ஒரு மனிதாபிமான பாலத்தைக் கட்டியெழுப்பியிருப்பார்.

“குலாம்காதர் புலாவிலே
கறி கெடக்குது - அது
அனுமந்தராவ் அவியலிலே
கலந்திருக்குது.
மேரியம்மா கேரியரில்
எறா இருக்குது - அது
பத்மநாபர் அய்யர் வீட்டுக்
குழம்பில் மிதக்குது
சமையலெல்லாம் கலக்குது - அது
சமத்துவத்தை வளர்க்குது
சாதிமத பேதமெல்லாம்
சோத்தைக் கண்டால் பறக்குது”

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவு, தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, காமம்  ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்துபோம் என்கிறார் அவ்வை. கவிஞர் வாலி அதை எவ்வளவு அழகாக _ எளிமையாக எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். அதுதான் அவருடைய பாட்டின் வெற்றி.

“இந்தப் பொறப்புத்தான் - நல்லா
ருசிச்சு சாப்பிடக் கெடச்சுது
அ(¬)த நெனச்சுத்தான் - மனம்
ஒலகம் முழுவதும் பறக்குது”

‘உன் சமையலறை’படத்தில் இளையராஜா இசையில் நான் எழுதிய பாடலொன்று இப்படித் தொடங்கி,

“உணவிலே ஒரு உறவு இருக்குது
உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது
பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில
ஒவ்வொரு சுவையிலும் மனசு லயிக்குது”

என்று முடியும்.

ஒவ்வொரு ஊரின் மண்ணுக்கும் நீருக்கும் உணவுக்கும் உள்ளத்துக்கும் ஒவ்வொரு சுவை இருக்கத்தானே செய்யும். இல்லையென்றால் இந்த வாழ்க்கை சுவையில்லாமல் போய்விடும்.

- முற்றும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions