c என் படம் வடசென்னையின் படம்தான்!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

என் படம் வடசென்னையின் படம்தான்!

- இயக்குநர் சுதா கொங்கரா

பெண் குத்துச்சண்டையைக் கதைக்களமாகக் கொண்டு வந்த ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் தமிழின் நல்ல படங்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டது. ‘துரோகி’ படத்தின் இயக்குநரான சுதாகொங்கராவின் இரண்டாவது படம். படத்தின் நாயகி ரித்திகாவிற்கு சிறந்த நடிகைக்கான சிறப்பு தேசிய விருதும் கிடைத்துள்ளது.  இரண்டே படங்களில்  நல்ல இயக்குநர் எனப் பெயரெடுத்துள்ள அவரைப் பல்சுவை காவியத்திற்காகச் சந்தித்தோம்.

பெரும்பாலும் பெண்கள் கவனம் செலுத்தாத திரைப்பட இயக்குநர் துறைக்கு எப்படி வந்தீர்கள்?
நான் பார்த்த திரைப்படங்கள்தான் எனக்குள் திரைத்துறை மீதான ஈடுபாட்டை ஏற்படுத்தின. குறிப்பாக மணிரத்னம் சாரின் படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அப்படியாக வந்ததுதான் இயக்குநர் ஆசை. அதன் தொடக்கமாக 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கிய ‘மித்தர் மை ஃப்ரண்ட்’ எனும் தேசிய விருது பெற்ற ஆங்கிலப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினேன். அதன் மூலம் கிடைத்த தொடர்பைக்கொண்டு மணிரத்னம் சாரிடம் உதவியாளராக இணைந்தேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் சமயத்தில் இணைந்த நான் ‘குரு’ படம் வரைக்கும் ஆறு ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்திருக்கிறேன். ஸ்க்ரிப்ட் அறிவு இருந்தாலும் ஒரு படத்தை எடுப்பதற்கு கள அறிவு மிகவும் முக்கியம். மணிரத்னம் சாரிடம் பணிபுரியும்போது நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. தனியாக ஒரு படத்தை இயக்கி விட முடியும் என்கிற நம்பிக்கை வந்த பின்னர்தான் நான் அவரிடமிருந்து வெளியே வந்தேன்.

குத்துச்சண்டை வீராங்கனைகளைப் பற்றி படமெடுக்கவேண்டுமென்ற எண்ணம் எப்படி வந்தது?
‘இறுதிச்சுற்று’ படத்தின் கதையை 15 ஆண்டுகளுக்கு முன்பே யோசித்திருந்தேன். தடகளத்தைக் களமாகக் கொண்டிருந்தேன். ஆங்கில நாளேட்டில் வடசென்னை இளம்பெண்கள் பலரும் விளையாட்டுக் கோட்டாவில் அரசு வேலை வாங்குவதற்காக பாக்ஸிங்குக்கு அனுப்பப்படுகிறார்கள் என்கிற செய்தியைப் படித்தேன். அந்த செய்திதான் எனது கதைக்களத்தை குத்துச்சண்டை நோக்கித் திருப்பியது. நொச்சிக்குப்பம் போன்ற குப்பங்களில் பிறந்த ஏழைகளுக்கு அரசு வேலை என்பது மிகப்பெரும் கனவு. அதற்காக அவர்கள் கையுறை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிறார்கள். இது நம்மைச் சுற்றித்தான் நிகழ்கிறது. இருந்தும் இதுபற்றிப் பலருக்குத் தெரியாது. அதைத் தெரியப்படுத்த விரும்பினேன்.

கிட்டத்தட்ட இந்தியா முழுக்க இப்படத்திற்காகப் பயணித்து அனுபவத் தகவல்களைச் சேகரித்ததாக பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறீர்கள். அதைப்பற்றி பகிர்ந்து கொள்ளமுடியுமா?
நான் தென்சென்னையைச் சேர்ந்தவள். என்னுடைய உலகம் முற்றிலும் வேறுபட்டது. வடசென்னையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மேலும் குத்துச்சண்டை பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. அரசாங்க வேலைக்காக கையுறையை மாட்டிக்கொண்டு முகத்தில் குத்து வாங்குகிறார்கள் என்றால் அது என்ன மாதிரியான விளையாட்டு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் ஒரு களத்தைப் பதிவு செய்யும்போது அது குறித்த ஆழமான தெளிவு மிகவும் அவசியம். நான் ஜர்னலிஸம் படித்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாளராக களத்தில் இறங்கித் தகவல்களைச் சேகரித்தேன். இதற்காக இந்தியாவின் குத்துச்சண்டை தொடர்பான பல இடங்களுக்குப் பயணம் செய்தேன். குத்துச்சண்டை வீரர்கள், பயிற்சியாளர்களையெல்லாம் சந்தித்துப் பேசினேன். என்னுடைய கேள்விகளுக்கான பதில்கள் பயணங்கள் மூலம்தான் கிடைத்தது. அந்தப் பயணங்களால்தான் பாக்ஸர்களின் வாழ்க்கையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அத்திரைப்படத்தை எடுக்க முடிந்தது. ஒருவிதத்தில் இது வடசென்னையின் படமும் கூட.

ரித்திகாவின் உடல்மொழியும், முகபாவங்களும் படத்தில் மிக இயல்பாக இருக்கிறது. எப்படி அவரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

2012ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில்தான் முதல்முறையாக ரித்திகாவைப் பார்த்தேன். பார்த்த மறுகணமே எனது மதி கதாப்பாத்திரத்துக்கு இந்தப் பெண் கச்சிதமாகப் பொருந்துவாள் என்று தோன்றியது. மும்பையில் வளர்ந்த பெண்ணை சென்னைக் குப்பத்து பாஷையைப் பேச வைத்து படமாக்குவது என்பது சவாலான காரியமாகத்தான் இருந்தது. வசனங்களை வடசென்னையைச் சேர்ந்த மீனவப் பெண்களைப் பேச வைத்து அதை பதிவு செய்து ரித்திகாவுக்குக் கொடுத்தேன். அதைக்கொண்டே அந்த ஸ்லாங்கைக் கத்துக்கிட்டார்.  ஒரு மீனவப் பெண்ணுக்கான உடல்மொழியைக் கூத்துப்பட்டறை கலைஞர்கள் மூலம் கற்றுக்கொடுத்தோம். ஆரம்பத்தில் ரித்திகாவின் கண்ணில் உணர்ச்சிகள் அவ்வளவு சரியாக வெளிப்படவில்லை. கூத்துப்பட்டறை கலைவாணி மேடம் மூலமாக அதற்கும் பயிற்சி கொடுத்தோம். இப்படியாக என் கதாப்பாத்திரத்துக்கு கனக்கச்சிதமாகப் பொருந்தும் அளவுக்கு அவரைத் தயார் செய்த பிறகுதான் படப்பிடிப்பையே நடத்தினோம்.

ரித்திகாவின் சொந்த அனுபவங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளதா?

ரித்திகாவிடம் நான் கதையைச் சொன்னதுமே அவர் தன்னுடைய வாழ்க்கை  போலவே இருக்கிறது என்று சொன்னார். மாதவனின் கதாப்பாத்திரமான பிரபு கதாப்பாத்திரம் தனது அப்பாவைப்போலவே இருக்கிறது என்றார். ஏனென்றால் ரித்திகா சிங்கின் அப்பாவும் குத்துச்சண்டை பயிற்சியாளர்தான். ரித்திகாவுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்ததும் அவர்தான். ரித்திகா மட்டுமல்ல ஒவ்வொரு குத்துச்சண்டை வீரரும் இந்தப் படத்தை அவர்களது சொந்த வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க முடியும். ஏனென்றால் இது என் கற்பனை அல்ல. முழுக்க முழுக்க குத்துச்சண்டை வீரர்களின் வாழ்வில் நடந்த பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. அந்தப் பொண்ணு ஸ்க்ரிப்டைப் படிக்கும்போது ‘பிரபு மாஸ்டர் மாதிரி என் அப்பா இருந்தார். அதேமாதிரி இருக்கு’ என்றாள். எல்லோரும் அவர்களின் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தியிருக்காங்க. உண்மைச் சம்பவங்களை வைத்துதான் கதையை எழுதியிருக்கிறேன்.

சேகரித்த தகவல்களில் திரையில் இடம் பெறாத முக்கியப் பகுதிகள் ஏதாவது இருக்கின்றனவா?
நிறைய தகவல்களைச் சேகரித்திருந்தேன். அவற்றில் சிலவற்றை காட்சிகளாகச் சேர்த்தேன். அதிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு பிறகு படத்தொகுப்பில் நீக்கப்பட்டன. உதாரணமாக ‘குப்பத்துப் பெண்கள் ஏன் பாக்ஸிங்குக்கே வருகிறார்கள்?’ என்கிற நிருபரின் கேள்விக்கு “எங்களையெல்லாம் டென்னிஸ் ஸ்டேடியத்துகிட்டயே விடமாட்டாங்க. ஏன்னா அது பணக்காரங்க விளையாட்டு. குத்துச்சண்டையா இருந்தா 250 ரூபாய்க்கு க்ளௌஸ் வாங்கினா போதும்’’ என்பது போலான காட்சிகளை வைத்திருந்தேன். ஆனால் சினிமா என்பது ஆவணப்படமாக மாறிவிடக்கூடாது இல்லையா. அதனால் கதையின் ஓட்டத்துக்குத் தகுந்தாற்போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தகவல்களைச் சேர்த்திருக்கிறேன். சேகரித்த எல்லாத் தகவல்களையும் சேர்த்திருந்தால் திரைப்படம் சுவாரஸ்யமாக இருந்திருக்காது. அப்படிச் செய்யவும் முடியாதே.
‘இறுதிச்சுற்று’ படத்தின் கடைசிக் காட்சிக்கு முந்தைய காட்சியில் ‘எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு தெருவுல நிக்கிற, இது லவ்வில்லாம என்ன மாஸ்டர்?’ என்று நாயகி கேட்கும்போது மாதவன் மவுனமாகப் பார்க்கிற பார்வை ‘இது காதல்தான்’ என்று ஏற்றுக்கொள்வதைப் போலத் தெரிகிறது. என்னதான் மாறுபட்ட கதையானாலும் சினிமா என்றால் கட்டாயம் காதல் இருக்க வேண்டுமா?
இல்லை, நான் அந்தக் காட்சியை அப்படியாக வைக்கவில்லை. கதைப்படி அந்தப் பெண்ணுக்கு 17 வயது. பதின் வயதுப் பெண்ணுக்கு ஹார்மோன் தூண்டுதலால் காதல் போன்ற ஓர் ஈர்ப்பு வருவது இயல்பான ஒன்று. பயிற்சியாளரைக் காதலிப்பது பலரது வாழ்க்கையில் நடந்த கதை. அந்தப் பெண் அளவில் அவள் கேட்டதில் நியாயம் இருக்கிறது. ஆனால் மாதவன் அதை ஏற்றுக்கொள்வதுபோல் பார்க்கவில்லை. அந்த மௌனமான பார்வைக்கான அர்த்தத்தைப் பார்வையாளர்கள் வசம் விட்டுவிட்டேன். என்னளவில் பிரபு மாஸ்டருக்கு இருக்கும் மெச்சூரிட்டிக்கு தனது செயல்களை அவள் காதல் என அர்த்தப்படுத்திக்கொள்கிறாளே என்கிற ஆதங்கம்தான். காதல் இல்லை. இறுதிக்காட்சியில் வெற்றி பெற்று ஓடி வந்து தாவி அமர்வதுகூட ஒரு தகப்பன் மடியில் உட்கார்வதைப்போல் இருந்தது என படம் பார்த்த பலரும் சொன்னார்கள்.

பாலியல் தொந்தரவு தொடர்பான காட்சிகள் சற்று தீவிரமாகவே வைக்கப்பட்டுள்ளன. குத்துச் சண்டையாளர்கள், கமிட்டிகள் போன்ற தளங்களிலிருந்து ஏதேனும் எதிர்வினைகள் வந்ததா?
இதுவரைக்கும் எதுவும் வரவில்லை இனியும் வரப்போவதில்லை. நான் அவதூறாக எடுத்திருந்தால்தானே அவர்கள் எதிர்வினையாற்றுவார்கள். நான் உண்மையைப் பதிவு செய்திருக்கிறேன். 150க்கும் மேற்பட்ட பாக்ஸர்கள் மற்றும் கோச்களிடம் பேசியிருக்கிறேன். எல்லோரும் அவர்களுடைய கதையை மனம் திறந்து பகிர்ந்துகொண்டனர். அதில் பெரும்பாலும் பாலியல் துன்புறுத்தல் நிறைந்து காணப்பட்டது. இந்தியாவில் பாக்ஸிங் அசோசியேசன் ஒழுங்குமுறையோடு செயல்படுவதில்லை. உலக பாக்ஸிங் அசோசியேசன் இந்திய பாக்ஸிங் அசோசியேசனை தடை செய்திருக்கிறது. இந்த ஒழுங்கில் இருக்கும் இந்திய பாக்ஸிங் அசோசியேசன் குறித்து நான் காட்டியது ஒரு பகுதிதான்.

படத்தில் ரித்திகா தவிர வேறு குத்துச்சண்டை தொடர்பானவர்கள் இடம்பெற்றுள்ளார்களா?
மாதவனைத் தவிர படத்தில் பாக்ஸிங் செய்த எல்லோரும் உண்மையிலும் குத்துச்சண்டை வீரர்கள்தான். குத்துச்சண்டை தெரியாதவர்களை வைத்து எடுத்தால் அது ஒரிஜினலாக இல்லாமல் போய்விடும் என்பதற்காக குத்துச்சண்டை வீரர்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினோம். இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து குத்துச்சண்டை வீரர்களை அழைத்து வந்தோம். நாயகி ரித்திகா சிங் மட்டுமல்ல நாயகியின் அக்கா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த மும்தாஜ் சர்க்கார் கூட மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் வென்றவர்தான்.

இந்தக் கதை இந்திக்கு பயணித்தது எப்படி? அங்கே இப்படம் எப்படிப் பார்க்கப்பட்டது?
‘இறுதிச்சுற்று’ இந்தியில் ‘ஷாலோ கடூஸ்’ ஆக மாறியதற்குக் காரணம் மாதவன்தான். நான் அவரிடம் கதையைச் சொன்னபோது மிகவும் பிடித்திருக்கிறது என்றதோடு அந்தக் கதையை ராஜ்குமார் ஹிரானியிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். அப்படியாக இரண்டு மொழிகளிலும் உருவாகிய இப்படம் தமிழில் அடைந்த அளவுக்கு இந்தியில் பெரும் வெற்றியை அடையவில்லை. ஏனென்றால் அச்சமயத்தில்தான் ‘ஏர்லிஃப்ட்’ எனும் பெரிய பட்ஜெட் படம் வெளியாகியிருந்தது. மேலும் 500 திரையரங்குகளில் மட்டுமே ‘ஷாலோ கடூஸ்’ திரையிடப்பட்டிருந்தது. இந்தித் திரையுலகில் 500 திரையரங்குகள் என்பது மிகவும் குறைவுதான். இருந்தாலும் திரையிட்ட இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடின. மக்கள் 3.75 ரேட்டிங் கொடுத்திருந்தார்கள்.

அடுத்து என்ன திட்டம்?
அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறேன். நான் எப்போதும் ஸ்க்ரிப்ட் எழுத அதிக நாட்கள் எடுத்துக்கொள்வேன். ஸ்க்ரிப்ட் ஒர்க்கில் நாம் தெளிவாக இருந்துவிட்டால் போதும், படப்பிடிப்பில் எந்தச் சிக்கலும் இருக்காது. 

- நேர்காணல் : அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions