c யூத் பக்கங்கள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யூத் பக்கங்கள்

ஒருவழியாக தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தல் இதோ நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் வாக்களிக்கவும் தயாராகிவிட்டோம். அடுத்த  சில நாட்களில் தேர்தல் முடிவுகளும் வந்துவிடும். இதற்கு முன்பிருந்ததைப் போலில்லாமல் இத்தேர்தலில் பல்முனைப் போட்டி களை கட்டியுள்ளது. ‘மாற்று’என்கிற வார்த்தை முக்கியமான ஒன்றாக   இருக்கிறது. ஆகவே மக்களின் எதிர்பார்ப்புகளும் வழக்கத்தைவிட மேம்பட்டிருக்கின்றன என்றே சொல்லவேண்டும். இந்நிலையில் தனித்தோ, கூட்டாகவோ ஏதேனுமொரு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. எனவே அமைய உள்ள ‘புதிய அரசு’ என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? என்ற கேள்வியை இவ்விதழுக்கான இளைஞர்களிடம் முன்வைத்தோம்.

வறுமை நிலையை ஒழிக்கவேண்டும்
-சேதுக்கரசி,மென்பொறியாளர்

இந்த அரசு நமக்காகத்தான் இயங்குகிறது என ஒவ்வொரு குடிமகனும் உணரும் வகையில் இயங்கவேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கி வறுமை நிலையை ஒழிக்கவேண்டும். விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். பொருளியல் சார்ந்த திட்டங்களை நன்கு வகுக்க வேண்டும். சிங்கப்பூர் அளவுக்கான வளர்ச்சியை தமிழ்நாடு அடைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்றார் பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென். வரும் அரசு அதை எப்படிச் சாத்தியப்படுத்துகிறது என்பதில்தான் அது இருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவத்துக்கான உத்திரவாதத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கான சமூகச் சூழலை உருவாக்க வேண்டும்.


விவசாயத்துக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்கக் கூடாது
-நிரஞ்சனா இராஜமாணிக்கம்,

தனியார் நிறுவன ஊழியர்
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதைப் போல் அறநெறிகளுடன் வரும் அரசு செயல்பட வேண்டும். நேர்மையான அரசு அதிகாரிகளுக்கு அரசின் குறுக்கீடோ அல்லது  இடையூறோ இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழல் இருக்கவேண்டும். பெரும்பாலான கட்சிகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அப்படி அமல்படுத்துவது மகிழ்ச்சி என்றாலும் செய்வார்களா என்பது நம் முன் நிற்கும் கேள்வி. செய்தால் நலம்.  சென்னைப் பெருவெள்ளம் உணர்த்திய பாடத்தை அரசியல்வாதிகள் உணர்ந்தார்களா? என்பது மிக முக்கியமான கேள்வி. நீர் மேலாண்மையை அரசு முன்னெடுத்தாக வேண்டிய கட்டாயமிருக்கிறது. ஏரி,குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளைத் தூர் வாரவேண்டும். மீத்தேன் திட்டம் போன்ற சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்காமல் விவசாயத்தை வளர்த்தெடுக்கும் செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது என்றார் காந்தி. அதற்கேற்ப கிராமிய உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளைக் களைவதற்கு முனைய வேண்டும்.


சூழலியலுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்
-பெனில் கின்ஸ்பர்,
மென்பொறியாளர்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதைப் போல் நமது சுற்றுச்சூழல் நன்றாக இருந்தால்தான் நாம் சுகாதாரமாக வாழ முடியும். கேரளாவில் விரட்டியடிக்கப்பட்ட கொக்கொ-கோலா ஆலையை தமிழ்நாடு அரசு அனுமதித்தது. அது மட்டுமா பவானி ஆற்றைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன காகிதத் தொழிற்சாலைகள். காவிரியைப் பாழாக்குகின்றன தோல் தொழிற்சாலைகள். இப்படியாக ஒவ்வொரு நதியும் தொழிற்சாலைக் கழிவுகளால் கலங்கப்பட்டு வருகின்றது. உலகில் பல நாடுகள் அனுமதிக்க மறுத்த தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. தமிழகம் என்ன குப்பைத் தொட்டியா? இனி வரப்போகும் அரசு சூழலியலுக்கு முக்கியத்துவம் அளித்து சூழலை சீர்குலைக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்காமலும், ஏற்கனவே உள்ள ஆலைகளை இழுத்து மூடவும் செய்யவேண்டும்.

தொழிற்துறை வளர்ச்சியைப் பரவலாக்கவேண்டும்  
-சித்திகா, மென்பொறியாளர்

ஒரு மையத்தில் எல்லாம் வந்து குவிவது என்பது இயற்கையின் சமநிலைக்கு எதிரானது. தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு பகுதி மக்களும் சென்னையில் வந்து குவிந்துள்ளனர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியில் ஒரு கோடி பேர் சென்னையில் வாழ்கிறார்கள் என்றால் இது எவ்வளவு நெருக்கடி மிகுந்த நகரமாக இருக்கிறது. இதற்குக் காரணம் தொழில் வாய்ப்புகளை சென்னையில் மட்டுமே பெருவாரியாக ஏற்படுத்தியதுதான். சென்னை மட்டுமல்லாமல் மற்ற நகரங்களில் தொழிற்துறை வளர்ச்சியை ஏற்படுத்தினால் பணி நிமித்தமாக சென்னைக்கு குடிபெயர வேண்டிய தேவை இருக்காது. தொழிற்துறை வளர்ச்சியை விட நமக்கு மிகவும் முக்கியமானது விவசாயம். குறிப்பாக இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும் கல்வியும் மருத்துவமும் அரசின் வசம் மட்டுமே இருக்க வேண்டும்.
நீர் மேலாண்மையை
நவீனப்படுத்த வேண்டும்!

- ஆர்க்கர் மணிகண்டவேல், காட்சி ஊடகவியலாளர்
அணை கட்டும் தொழில் நுட்பத்தில் உலகுக்கே முன் மாதிரியாக இருந்தது நமது கல்லணைதான். இப்படியாக நீர் மேலாண்மையில் நமது முன்னோர்கள் தலைத்தோங்கியிருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நீர் மேலாண்மை என்கிற சொல்லுக்கு அர்த்தம் கூடத் தெரியாத அரசைத்தான் நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் வீணாய் போன நீர் மட்டும் கிட்டத்தட்ட 250 டி.எம்.சிக்கும் மேல் இருக்கும். வெள்ளமாக்கி வீணாக்கிவிட்டோம். இந்த நீரை தேக்கி வைக்கக்கூடிய திறமை மட்டும் அரசுக்கு இருந்திருந்தால் இன்னும் 10 வருடங்களுக்கு நம்மூரில் தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையே இருக்காது. போகட்டும், இனி வரப்போகும் அரசாவது எதிர்கால நோக்கோடு திட்டங்கள் தீட்டி, எங்கெங்கெல்லாம் அணைகள் கட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் அணைகள் கட்டி, தமிழ்நாட்டின் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும். நீர் என்பது உயிர் வாழ்தலுக்கான ஆதாரம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


நமக்கான தலைவனாக இருக்கவேண்டும்!
-காயத்ரி, உயிரி வேதியியலர்

இதுவரை தமிழகம் கடந்து வந்த ஆட்சிகளுக்கு மாற்றான ஒரு புதிய ஆட்சி என்பது இப்போதைக்கு சாத்தியமோ இல்லையோ,  நிச்சயமாக மாற்றம் என்பது காலத்தின் தேவையே. இதுவரை ஆண்டவர்களை நாம் முற்றாகப் புறக்கணிக்கவில்லை. பல நற்காரியங்கள் செய்திருக்கிறார்கள்தான். அதேசமயம் ஊழல் முதற்கொண்டு பல பெரிய தீங்குகளுக்கும் இவர்களே காரணமாக இருக்கிறார்கள். நல்லதுக்காக நாம் பாராட்டியது போலவே தீயவைகளுக்காக இவர்களைப் புறம்தள்ளிப்   புதிய சக்திகளை முன்மொழிய மக்கள் தயாராகிவிட்டனர். ஆக மாற்றம் அவசியம்தான். அதேசமயம் அதை  நம்மிலிருந்தும் தொடங்க வேண்டும். தனிமனித மாற்றமே சமுதாய மாற்றத்திற்கான படிக் கல்லாக அமையும். தனிமனிதர்கள் ஒன்று சேர்ந்ததே சமூகம். ஆக, சமூகத்தை மாற்றியமைக்க ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் எழுச்சி ஏற்பட வேண்டும். மாறாக அரசியல் கட்சிகளை நம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. கெஜ்ரிவால் போல் தமிழகத்தில் சகாயத்தை பலரும் முன் நிறுத்துகின்றனர். மக்கள் தங்களுக்குள் இருக்கும் தலைவனை உணரவேண்டும். வெளியிலிருந்து ஒரு தலைவனைத் தேடி அவர் வசம் சமூகத்தை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிட நினைக்கக் கூடாது.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions