c நன்றொன்று சொல்வேன்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நன்றொன்று சொல்வேன்

சொல் அட்சதை! அட்சதைச் சொல்!!
- கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
ஆண் அகராதியில்
பெண் சீண்டல் சொல்லைக் கொளுத்திப் போடுங்கள். பெண் இழிவுச் சொல்லை அழித்துப் போடுங்கள். பெண் கேலிச் சொல்லைக் கிழித்துப் போடுங்கள். உங்கள் சொல்லைப் புனிதமாக்குங்கள். நீங்களும் புனிதமாகுங்கள். அப்போதுதான் பூமியின் வெப்பம் குறையும்.
“அவ என்னைப் பாத்து இப்படிச் சொல்லிட்டா’’
“அவன் சொன்ன சொல் என்னைக் கொன்னுடுச்சு’’
“ஆஹா, அந்த வார்த்தை அமுதம்’’
“த்தூ, அந்த வார்த்தை சாக்கடை’’
“உங்க சொல்தான் எனக்கு உயிர் கொடுத்துச்சு’’
“இப்படி சொல்லிட்டியே, இனிமே உன் சங்காத்தமே வேண்டாம்’’
எத்தனை எத்தனை அவதாரம் எடுக்கிறது சொல். ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்.
ஒரு சொல் ஜெயிக்க வைக்கும்.
ஒரு சொல் தவிக்க வைக்கும்.
ஒரு சொல் தாயாகத் தாலாட்டும்.
ஒரு சொல் நாயாக வாலாட்டும்.
ஒரு சொல் அமுதமாகும்.
ஒரு சொல் விஷமாகும்.
சொல்தான் ஆகப் பெரும் சொத்து. ஆகப் பெரும் ஆயுதம். ஆகப் பெரும் வரம். ஆகப் பெரும் சாபம். ஆகப் பெரும் தானம். ஆகப் பெரும் பாணம். ஆகப் பெரும் அகல் வெளிச்சம். ஆகப் பெரும் தீப்பிழம்பு. ஆகப் பெரும் அமுதம். ஆகப் பெரும் விஷம். ஆகப் பெரும் மழலை. ஆகப் பெரும் முதுமை. ஆகப் பெரும் சந்தோஷம். ஆகப் பெரும் சோகம். ஆகப் பெரும் பன்னீர். ஆகப் பெரும் கண்ணீர். இதுவாக இருக்கும். அதுவாக இருக்கும். எல்லாமுமாகவும் இருக்கும். ஒற்றை அரூபம் சொல்.
சொல் _ வெறுமனே ஒலியின் கூட்டமைப்பா? அரூபத்தின் கூட்டமைப்பா?  சப்த அதிர்வுகளின் கூட்டமைப்பா? இல்லை. இவையும் சொல்தான். இதற்கு மேலானவையும் சொல்தான்.
சொன்ன சொல் _ கொல்லும். குப்புறத் தள்ளும். குழி பறிக்கும். பாலைவனமாக்கும். பதைபதைக்க வைக்கும். வதைக்கும். வலியை விதைக்கும். ஊவாமுள்ளெனத் தைக்கும். அல்லது உற்சாகம் தரும். உத்வேகம் தரும். சிகரப் பயணத்தில் ஊன்றுகோலாக வரும். வாழ்க்கை ஓட்டத்தில் வெளிச்சமும் தரும்.
சொல் _ மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் வரம். மரம் பேசும் இலைமொழி சொல்லாகாது. நீர்பேசும் நதிமொழி சொல்லாகாது. காற்றுபேசும் தென்றல்மொழி சொல்லாகாது. சூரியன் பேசும் வெளிச்சமொழி சொல்லாகாது. பூமி பேசும் மண் மொழி சொல்லாகாது.
நாம் பேசுவது மட்டுமே கவிதையாகும். கதையாகும். புதினமாகும். தத்துவமாகும். சரித்திரமாகும். சம்பவமாகும். வள்ளுவரின் திருக்குறளாகும். கம்பனின் ராமாயணமும், பாரதியின் ரௌத்திரமும் ஆகும். கண்ணதாசனின் கனிவுக் கவிதை ஆகும். பெரியாரின் கரிசனத் தத்துவம் ஆகும். தெம்மாங்கு ஆகும். ஆண்டாளின் திருப்பாவை ஆகும். ஔவையின் ஆத்திசூடி ஆகும்.
மார்க்ஸ் சொன்ன தோழர் சிந்தனை சொல்தான். பாப்லோ நெரூடா சொன்ன ‘இன்றிரவு என் கவிதையை எழுதப் போகிறேன்’ சொல்தான். வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்’ சொல்தான். ஷேக்ஸ்பியரின்  கவிதையும் சொல்தான். சிமன்டிபூவாவின் ‘யாரும் பெண்ணாகப் பிறப்பது இல்லை. பெண்ணாக உருவாக்கப்படுகிறார்கள்’ என்பதும் சொல்தான். ‘சுதந்திரம் _ யாரும் கொடுத்துப் பெறுவதில்லை, எடுத்துக்கொள்வதே’ என்பதும் சொல்தான்.
கண்ணகியின் ‘தேறாமன்னா செப்புவது உடையேன்’, ‘ஆண்டாளின் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்’, அங்கவை சங்கவையின் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’, பாஞ்சாலியின் பரிதவிப்பு, ஆங்காரம், சிதையில் தள்ளப்பட்ட பெண்கள், கங்கையில் கரைந்த மௌனப் பெண் வார்த்தைகள், மராட்டா கமாரா என்ற ஆப்பிரிக்கப் பெண்ணின் ‘பைட் ஆப் எ மேங்கோ (Bite of a Mango)’, வாரிஸ் டைரி சொன்ன ‘டெஸார்ட் ஃப்ளவர் (Desert Flower)’, ஆப்கானிஸ்தானத்துப் பெண்களின் எதிர்க் கவிதைகள், அன்னை தெரசா சொன்ன ‘பிறருக்கு அன்பைத் தாருங்கள், எச்சிலை எனக்குத் தாருங்கள்’, ‘பெண்கள் கையில் புத்தகம் கொடுங்கள், துப்பாக்கிகளின் சப்தம் குறையும்,’ என்ற மலாலா _ எல்லாருமே சொல்லின் கூட்டுக் கலவைதான்.
சொல்லின் வீர்யம் இதுதான். சொல் _ ஆளுமையின் முகம். ஆளுமையின் அகம். ஆளுமையின் புறம். சொல்லும் ஆளுமையின் வெப்பமும் அதில் வெளிப்படும். தட்பமும் அதில் வெளிப்படும். ஆங்காரமும் வெளிப்படும். ஓங்காரமும் வெளிப்படும். கோபமும் வெளிப்படும். காலமும் வெளிப்படும்.
இந்தச் சொல்லை நாம் எப்படிக் கையாள்கிறோம்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரிகிறது. முன்பின் யோசிப்பதில்லை. முன்பின் நினைத்துப் பார்ப்பதில்லை. போகிறபோக்கில், நினைத்த மாத்திரத்தில் பேசிவிடுகிறோம். ஏசிவிடுகிறோம். அப்புறம் கூசிவிடுகிறோம்.
திட்டிவிடுகிறோம். முட்டிவிடுகிறோம். அப்புறம் தூசியாகத் தட்டிவிடுகிறோம். எத்தனை வசவுச் சொல்? எத்தனை மலச் சொல்? எத்தனை மூத்திரச் சொல்? எத்தனை சாக்கடைச் சொல்? எத்தனை அருவருப்புச் சொல். அன்றாடம் புழங்குகிறோம்?
பெண்ணின் கற்பைக் குறிவைத்து எறியப்படும் சொல், பெண்ணின் குடும்பத்தைக் குறிவைத்துக் கூறப்படும் சொல், பெண்ணின் மனதைக் குறிவைத்துக் கூறப்படும் சொல், பெண்ணைக் குதறிப்போடும் சொல், பெண்ணைக் கிழித்துப்போடும் சொல் , பெண்ணைப் பழித்துப்போடும் சொல் _ எல்லாமே வேதனையின் உச்சம். அநாகரிகத்தின் எச்சம்.
வெறும் அரை மனிதன் கூட சிகரப் பெண்ணைச் சீண்டிப் பார்ப்பதும் சொல்லால் தீண்டிப் பார்ப்பதும்,  சனாதனத்தின் அடையாளம். குடும்பத்திலும், புறவெளியிலும், சமூக வெளியிலும், பெண்ணைக் குறிவைக்கும் சொல், ஆணின் அரை வேக்காட்டுத்தனத்தைக் காட்டுவதாகவே அமைகிறது. பெண் ஆளுமையை, ஆளுமைப் பெண்ணை மரியாதையாகப் பேசுவதும், பார்ப்பதும் இன்னமும் யாருக்குமே முழுமையாகக் கைவரவில்லை.
காற்றுகூடத் தன் மனைவியைத் தீண்டவிடாமல் அடைகாப்பவனும் கூட அடுத்த பெண்ணை எள்ளி நகையாடுவது, ஏளனமாகப் பேசுவது, இன்னொரு தாயைப் பழிப்பது, இன்னொரு சகோதரியை இழிப்பது என்பதைச் சர்வசாதாரணமாகச் செய்வதைப் பார்க்கிறோம். கேட்கிறோம்.
புழுவைக் குத்திக் குத்தி அது நெளிவதைப் பார்த்து ரசிக்கும் குரூர மனசுதான் இவர்களுக்குள் இருக்கிறது. கூண்டுக்குள் இருக்கும் பறவையைக் குச்சியால் சீண்டும் சின்னப் பயல்களாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள்.
பெண்ணைச் சொல் சிலுவையில் ஏற்றி, ஆணியால் அறைந்து குதூகலிக்கிறது சமூகம். உயிர்த்தெழமாட்டாள் என்றும் நினைக்கிறது சமூகம். ஆனாலும் என்ன செய்வது தோழர்களே? ஆனாலும் என்ன சொல்வது தோழர்களே?
வீழ்த்தும் சொல்லே வாழ்த்தும் சொல்லாக உயிர்த்தெழுகிறாள் பெண்,  காலகாலமாகவே! நேற்று, இன்று, நாளை எப்போதும் அப்படித்தான். அதனால் ஆண் அகராதியில் பெண் சீண்டல் சொல்லைக் கொளுத்திப் போடுங்கள். பெண் இழிவுச் சொல்லை அழித்துப் போடுங்கள். பெண் கேலிச் சொல்லைக் கிழித்துப் போடுங்கள். உங்கள் சொல்லைப் புனிதமாக்குங்கள். நீங்களும் புனிதமாகுங்கள். அப்போதுதான் பூமியின் வெப்பம் குறையும். புயல், சூறாவளி, சுனாமி குறையும். பேரழிவு குறையும். பூமியில் அட்சதைகள் நிறையும். அதன் தொடக்கமாகச் சொல் அட்சதையைச் சேகரியுங்கள், ததாஸ்து!

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions