c நாமிருக்கும் நாடு-25
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-25

சா.வைத்தியநாதன்
சமயப் புரட்சியாளர் இராமானுஜர்
இந்தியத் தத்துவ ஞான வரலாற்றில் மூன்று பேர் முக்கியமானவர்கள். சங்கரர் (கி.பி.788-_820), இராமானுஜர் (கி.பி. 1017_1137), மத்வர் (கி.பி. 1119_1278). சங்கரர், அத்வைதம் எனும் கோட்பாட்டைத் தந்தவர். மத்வர் துவைதம் எனும் கோட்பாட்டையும், இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் எனும் கோட்பாட்டையும் தந்தவர்கள். இம்மூன்று பேர்களிலும், சமய எல்லையைக் கடந்து, பொது நிலையில் எல்லோராலும் ஏற்று பேசப்படுபவரும், புகழப்படுபவரும் இராமானுஜர் ஆவர். நாத்திகர்களும் அவரைக் கொண்டாடுகிறார்கள். காரணம், சமூகப் படிநிலையில் அடிமட்டத்தில் வைக்கப்பட்ட மக்கள் சார்பாகப் பரிவு கொண்டு தம் தத்துவத்தை மக்கள் தத்துவமாக மாற்றி அற்புதம் செய்தவர் இராமானுஜர்.

சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் கி.பி.1017ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நாளில், பிறந்தவர் இராமானுஜர். தந்தை ஆசூரி கேசவப் பெருமாள். தாய் பூமிப் பிராட்டியார். அவரது பிள்ளைத் திருநாமம் இளையபெருமாள் என்பதாகும். தம் பதினாறாம் வயதில் அக்கால வழக்கப்படி ராமானுஜர்க்குத் திருமணம் ஆயிற்று.  மனைவி தஞ்சமாம்பாள்.

திருமணத்திற்குப் பிறகு, இராமானுஜர் மேலும் கல்வியைத் தொடரும் பொருட்டு, கல்வி நகராக அப்போது கருதப்பெற்ற காஞ்சி மாநகர் வந்தார். அப்போது, காஞ்சியில் யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் வேதாந்தம் கற்கச் சென்றார். ஆனால் அப்பயிற்சி நீடிக்கவில்லை. மறைபொருளுக்கு ஆசிரியர் கூறும் அர்த்தம், மாணவர்க்கு அனர்த்தமாகத் தோன்றவே, இராமானுஜர் விலகினார்.

அக்காலத்து இருந்த ஆசாரியரான ஆளவந்தார், இராமானுஜரின் கல்வி, தத்துவ சாஸ்திர மற்றும் வைஷ்ணவ ஞானம்  இவற்றை எல்லாம் கருத்தில் உணர்ந்து, இராமானுஜரை வைணவர்க்குத் தலைவராக்க விரும்பினார். இதைத் தம் சீடர்களிடம் வெளிப்படையாகவும் தெரிவித்தார். இராமானுஜர் நேரில் சென்று ஆளவந்தாரைச் சந்திக்கப் போகும் நேரம், ஆளவந்தார் மறைந்து போனார்.

வைணவ நெறியில், கோயில் என்றாலே அது ஸ்ரீரங்கம் கோயிலையே குறிக்கும். வைணவத்தின் தலைமை இடமாகவும் அது விளங்கியது. இராமானுஜர் கோயில் நிர்வாகப் பொறுப்பையும், தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, ‘உடையவர்’ என்றழைக்கப்பட்டு பெருமை பெற்றார்.

இராமானுஜர் தன் முப்பத்திரண்டாம் வயதில் துறவியானார். அதாவது 1049ஆம் ஆண்டில், அவர் முதல் பணி, பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதவேண்டும் என்பதாக இருந்தது. அதற்காகத் தொடர்ந்து பலப்பல நூல்களையும் ஆராய்ந்து கொண்டே இருந்தார் அவர்.
ஆசாரியராகத் தம்மைத் திருப்திப்படுத்திக் கொள்ளும் முகமாகத் திருக்கோட்டியூர் நம்பி என்பவரிடம், மறைபொருளின் பொருளைப் பெற, திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்குச் சென்று அவரைக் கண்டார். ‘பிறகு வாரும்’ என்று அனுப்பி வைத்தார் நம்பி. இது அக்கால ஆசாரியர்களின் வழக்கம். மாணவரின் உண்மை ஆர்வத்தை அறிந்துகொள்ள ஆசான்கள் அப்படிச் செய்தார்கள். இராமானுஜர் 18 முறை சென்று நம்பியைக் கண்டு தாள் பணிந்து இறைஞ்சினார். கடைசியாக மனம் இரங்கி, “நான் சொல்லும் அர்த்தத்தை நீர் யாருக்கும் சொல்லக்கூடாது. சொன்னால் நரகம் புகுவீர்’’ என்று எச்சரித்தார்.

இராமானுஜர் ஒப்புக்கொண்டார்.
ரகசிய அர்த்தத்தை அறிந்துகொண்டார்.
‘இதை அறிந்ததால் நீர் மோட்சம் பெறுவீர்’ என்றார் திருக்கோட்டியூர் நம்பி.
ஆசாரியர் சொற்கள் அவர் நெஞ்சில் நிழலாடின. தம்மைச் சுற்றிலும் மனிதர்களைப் பார்த்தார். இவர்களுக்கு எல்லாம் யார் உபதேசம் செய்வது? அவர் மனதில் இரக்கம் சுரந்தது.
திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தின் மேல் ஏறி நின்று மக்களை அழைத்தார். பெரும் கூட்டம் சேர்ந்தது. அவர்களுக்கு திருமந்திரத்தை உபதேசித்தார்.
நம்பி இதை அறிய நேர்ந்ததும் பதறிப் போனார். வரச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.
இராமானுஜர் அவர் முன் போய் நின்றார்.
‘என் கட்டளையை மீறியதால் என்ன பெற்றீர்?’
‘நான் நரகம் பெற்றேன், சுவாமி. ஆனால் இத்தனை மக்களும் பேரின்பத்தை அனுபவிப்பார்களே’
இதைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து போனார் நம்பி.

இந்தக் கருணையும் பிறர் வாழ விரும்பும் பெரு உள்ளமும் எனக்கில்லையே என்று நினைத்த நம்பி, தன் சீடனை ஆரத் தழுவி ‘எம் பெருமானரே நீர்’ என்றார். அது முதல் இராமானுஜருக்கு எம்பெருமானார் என்ற பெயர் ஏற்பட்டது.

வைணவ சமயத்துக்குள் வந்துவிட்ட ஒரு பக்தனை அவன் பழைய சாதியைக்  கேட்கக் கூடாது என்று விதி செய்த இராமானுஜர் காவிரியில் நீராடச் செல்லும்போது, அந்தணரான முதலியாண்டான் கையைப் பற்றிச் செல்வார். நீராடித் திரும்பும்போது, தாழ்த்தப்பட்ட வகுப்புத் தொண்டர் உறங்காவில்லியின்  கையைப் பிடித்துக்கொண்டு திரும்புவார்.

வைணவக் கூட்டத்துக்குள் பண்டைக் குலம் இல்லை. தொண்டர்க் குலம்தான் உண்டு என்று விதி செய்தார்.

ஆழ்வார்கள் பாடல்கள் பரவுவதற்குப் பல முயற்சிகள் செய்தார். அவர் காலத்திலேயே உரை நூல்கள் எழுதப்பட்டன.

அவர் எழுதிய பிரமசூத்திரம் உரை முதலான ஒன்பது நூல்களும் வைணவ சமயத்திற்கான அரண்களாக இருக்கின்றன.

விசிஷ்டாத்வைதம் சமய ஒழுக்கத்தையும் சமய அனுபவத்தையும் பேசுகிறது. அது வெறும் கொள்கை அல்ல. செயலைத் தன் அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை விளக்கம் அது. இறைவன் அருள் எல்லாச் சமயத்துக்கும் சாதியர்க்கும் உண்டு என்று சொன்னது அத் தத்துவம்.

எச்சமய தத்துவமும் மனிதர்களை நேசிப்பது, அன்பு செய்வது, மனித குலத்தை உயர்த்துவது என்பவற்றின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்றவர் இராமானுஜர். சமயத்தை அடிப்படை மனிதனிடம் கொண்டு சேர்த்ததே இராமானுஜரின் பெரிய சாதனை.

இராமானுஜர் வகுத்த வைணவ மதத்தின் அரசியல் விரிவுரையே காந்தி அடிகளிடம் ராமராஜ்யம் என மாறியது.

இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து,   அவர் ஆராதித்த இறைவன் அடி சேர்ந்தார்.

இந்தியா உலகுக்கு அளித்த வைணவத் தத்துவம் உள்ளவரை இராமானுஜர் இருந்துகொண்டே இருப்பார்.

- போராட்டம் தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions