c எழுத்துதான் என் போராட்ட வடிவம்!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

எழுத்துதான் என் போராட்ட வடிவம்!

- எழுத்தாளர் இரா. முருகவேள்

‘மிளிர்கல்’ நாவலின் மூலம் தமிழ்க் கதைப் பரப்பில் பரவலாகக் கவனம் பெற்றவர் இரா. முருகவேள். மொழிபெயர்ப்பு, நாவல், கட்டுரை எனத் தொடர்ந்து எழுதி வருகிறார்.இவரது இரண்டாவது நாவல் ‘முகிலினி’ தற்போது வெளிவந்து பெரிய கவனம் பெற்று வருகிறது.
மக்கள் பிரச்சனைகள், சுற்றுச்சூழல், சாதிப் பாகுபாடுகள், விவசாயம், நீர்நிலைகள் பற்றிய ஆய்வு என்பனவற்றையே களமாகக் கொண்டு எழுதிவரும் அவரைப்  பல்சுவை காவியத்திற்காக, சந்தித்தோம்.


உங்களுக்குள் இருந்த எழுத்தாளனை எப்போது கண்டுகொண்டீர்கள்?
எனது எழுத்துக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு. அப்பாவிடமிருந்துதான் எனக்கு வாசிப்புப் பழக்கம் வந்தது. எங்களது வீடு முழுக்க புத்தகங்கள் குவிந்து கிடக்கும். அப்பா தீவிர வாசகர். அவரது வாசிப்பு முழுமையும் தமிழ் இலக்கியங்கள்தான். அவருக்கு தமிழ் மீது அளவில்லாத பற்று இருந்தது. தமிழ் இலக்கியத்தில் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுமளவுக்கு அவரது வாசிப்பு இருக்கும். என் அம்மா, லட்சுமி, இந்துமதி ஆகிய வெகுஜன எழுத்தாளர்களின் வாசகி. இப்படிக் கலவையான புத்தகங்கள் எங்களது வீட்டை நிரப்பியிருந்தன. அப்பா படிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ள மாட்டார். சிலப்பதிகாரம் படித்தார் என்றால் அது சொல்லும் நீதியைப் பற்றி எங்களிடம் பகிர்ந்துகொள்வார். தான் எதைப் படித்தாலும் அது குறித்த அறிமுகத்தை எங்களுக்கு அவர் தரத் தவறியதில்லை. சிறு வயதிலிருந்தே எனக்கு தொடர்ந்து புத்தகங்கள் வாங்கித் தந்தார். அந்தந்த வயதுக்கேற்ற புரிதலுக்கான நூல்களாக அவை இருக்கும். ‘லெனின் வாழ்க்கைக் கதை’, ‘வீரம் விளைந்தது’, ‘தாய்’ என்று இருந்த எனது வாசிப்பு ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் என தீவிர இலக்கியங்கள் மீது திரும்பியது.தோழமை அமைப்புகளில் பணியாற்றிய காலகட்டத்தில் சமூகத்தின் மீதான பார்வை விரிவடைந்தது. புத்தக வாசிப்பைக் கடந்து நிஜ வாழ்க்கையைப் பார்த்தது அப்போதுதான். எல்லாவற்றுக்குப் பின்பும் சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை அச்சமயத்தில்தான் கற்றுணர்ந்தேன். அந்தச் சமூக அரசியல் காரணத்தைத் தேடத் தொடங்கிய எனது தேடலே என் எழுத்துக்கான ஆதாரம்.

 

வழக்கறிஞரான நீங்கள் சமூகப் பிரச்சனைகளுக்காக வாதாடியிருக்கிறீர்களா?
தோழர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு எதிராக வாதாடியிருக்கிறேன். ஆனைகட்டி பழங்குடி மக்களின் நிலப் பிரச்சனைகள், பல்லடம், சுல்தான்பேட்டை பகுதிகளில் நிகழ்த்தப்படும் சாதிய ஒடுக்குமுறைகள்  ஆகியவற்றில் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறேன்.

சென்ற ஆண்டின் சிறந்த நாவலாக பல்வேறு அமைப்புகளாலும் பத்திரிகைகளாலும் பாராட்டைப் பெற்ற ‘மிளிர் கல்’ நாவல், கண்ணகி கோவலனுடன் கவுந்தியடிகள் புகாருக்குப் பயணித்த பாதை வழியே பயணிக்கிறது. இளங்கோவடிகள் மூன்று வழிகளைச் சொல்கிறார். நீங்கள் தேர்ந்தெடுத்த வழி எது? எப்படி அதை தேர்ந்தெடுத்தீர்கள்?
சிலப்பதிகாரம் போன்றொரு இலக்கியம் அந்தக் காலத்தில் உருவாவதற்கான காரணம் என்ன? அக்காலத்தில் தமிழ்நாடு எப்படி இருந்தது? தமிழ்நாட்டு மக்களுடைய மத நம்பிக்கைகள் எப்படி இருந்தன? சமூகத்தில் பெண்கள் நிலை எப்படி இருந்தது? என்பனவற்றை எனது நாவல் வழியே பேச நினைத்தேன். சேரன் செங்குட்டுவன் சிலப்பதிகாரத்தைத் தூக்கிப் பிடிப்பதற்குப் பின்னால் ஓர் அரசியல் காரணம் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழ்நாடு ரத்தினக் கல் வணிகத்துக்குப் புகழ்பெற்றதாய் இருந்திருக்கிறது. இந்த இரண்டையும் இணைத்து சிலப்பதிகாரத்தைப் பார்க்கிற பார்வைதான் மிளிர் கல். கண்ணகியின் காற்சிலம்பில் மாணிக்கம் இருக்கிறது. மாணிக்கம், மரகதம், ரத்தினம், கோமேதகம் ஆகியவையெல்லாம் உலகிலேயே முதலில் கிடைத்தது சேர நாட்டுக்குள் இருந்த காங்கேயத்தில்தான். கல் வணிகம் என்பது முக்கியமான இடத்தில் இருந்தது. சங்க இலக்கியங்களில் காட்டப்பட்டும் முக்கியப் படையெடுப்பு மற்றும் போர்களுக்கு இந்த ரத்தினக் கற்கள் வணிகமே முக்கியக் காரணமாய் இருந்திருக்கிறது. ஆக இத்தனை வரலாற்றுச் சிறப்புகளுக்குரிய ரத்தினக்கல் வணிகம் அன்றைக்கு எப்படி இருந்தது என்பதோடு, இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதையும் சொல்ல நினைத்தேன்.

ரத்தினக் கல் வணிகத்துக்குப் பெயர் போன நகரமாக இருந்த கொடுமணல் நகர் குறித்தும் இந்தியாவின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான நொய்யல் நாகரிகம் பற்றியும் அறிந்துகொண்டீர்களா?

நொய்யல் நாகரிகம் என்பதுகூட ஒரு தேவையிலிருந்து    தான் வருகிறது. நொய்யல் ஆற்றோரமாக ராஜகேசரி பெருவழி என்கிற சாலை செல்கிறது. அந்த சாலை நாகப்பட்டினத்திலிருந்து கோழிக்கோட்டை இணைக்கிறது. அதாவது வங்காள விரிகுடா கடற்கரையையும், அரபிக் கடற்கரையையும் இணைக்கிறது. இந்த சாலைதான் ரத்தினக்கல் வணிகத்துக்கென பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொங்குப் பகுதியில் நொய்யல் ஆற்றோரம் இச்சாலை அமையப்பெற்றதால் அங்கு நிறைய குடியேற்றங்கள் உருவாகின. கொடுமணல் என்பது சேர நாட்டின் வணிக நகரங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. கொடுமணலில் விற்பனை செய்யப்படும் ரத்தினக் கற்களை வாங்குவதற்காக ரோமானியர்கள் வருகை புரிந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக ஏராளமான ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. உலகையே இந்தியாவை நோக்கித் திருப்பியது ரத்தினக் கற்கள்தான். அதன் பிறகுதான் மிளகு, தந்தம் எல்லாம். ரத்தினக் கல் வணிகத்தில் கொடுமணல் மற்றும் வெள்ளலூர் இரண்டும் முக்கியமான விற்பனை மையங்களாக இருந்தன. கொடுமணலில் ரத்தினக் கற்களைப் பட்டை தீட்டும் தொழில் மேற்கொண்டதற்கான அடையாளங்கள் உள்ளன. காங்கேயத்தில் இன்றளவிலும் ரத்தினக் கற்களைப் பட்டை தீட்டும் தொழில் நடந்து வருகிறது.

இப்படியொரு நாவலை எழுதும் பொருட்டு பிரத்யேக பயணம் அல்லது கள ஆய்வுகள் எதுவும் மேற்கொண்டீர்களா?
கோவையிலிருந்து காங்கேயம் 80 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது என்பதால் அடிக்கடி சென்று, வேண்டிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ரத்தினக் கல் வியாபாரிகள் எனது கள ஆய்வுக்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தார்கள். ரத்தினக் கற்களை எப்படி வாங்குவது? எப்படி விற்பது என அதனுள் இருக்கும் சூட்சுமத்தைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். ரத்தினக் கற்களைத் தேடி பணத்தை இழந்த ஏராளமானவர்களின் கதைகளையும் எனக்குச் சொன்னார்கள். என்னுடைய க்ளையண்ட்களிலேயே சிலர் ரத்தினக் கற்களைத் தேடி பணத்தை இழந்திருக்கின்றனர். அந்த வழக்கை எடுத்துக்கொண்டதன் மூலமாகவும் எனக்குச் சில தகவல்கள் கிடைத்தன. மேலும் சங்க இலக்கியங்களில்  எல்லாம் தேவைக்கும் அதிகமான குறிப்புகள் இருக்கின்றன. மேலும் மதுரையில் சாந்தலிங்கன் என்கிற தொல்பொருள் ஆய்வாளருடன் கலந்துரையாடி எனது சந்தேகங்களைப் போக்கிக்கொண்டேன். 

கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கப் பரல்களின் பிறப்பிடமான கொங்குச் சமவெளி, நாவலில் முக்கிய இடம் பிடித்து நாவலின் போக்கையே மாற்றுகிறது. ரோமானிய, யவனர்களை வசீகரித்த இக்கற்கள், கண்ணகி கோவலன் பயணப் பாதையெங்கும் விரிந்து கிடப்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளீர்கள். பொதுவாகவே நாவலெங்கும் நிறைய ஆவணங்கள் சுவாரசியமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. எப்படித் திரட்டினீர்கள்?
எனக்கு இது ஒன்றும் சிரமமான காரியமாக இருக்கவில்லை. மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் என சங்க இலக்கியங்களைப் படித்தாலே இதுபோன்ற பல நூல்களை எழுதி விட முடியும். நம் கண் முன்பே எல்லாமும் இருக்கின்றது.  நாம் கண்ணைத் திறந்து பார்த்தாலே போதுமானது. பரவலாக விரிந்து கிடக்கும் தகவல்களை நமது பார்வைதான் ஒரு புள்ளியில் இணைத்து அதைக் கோர்க்கும் வேலையைச் செய்கிறது.

அவ்வளவு முக்கியமான தொழிலாக இருந்த அந்தக் கல் வணிகம் இன்று எந்த அளவில் இருக்கிறது?
காங்கேயம்தான் ரத்தினக் கற்களின் பிறப்பிடமாக இருந்தது. இப்போது தாராபுரம், கரூர், நாமக்கல், கொடைக்கானல் என நிறைய இடங்களில் ரத்தினக் கற்கள் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். இந்தியாவில் இதற்கென மிகப்பெரிய சந்தையே உருவாகியிருக்கிறது. ஆனால் அது ஒழுங்கு படுத்தப்படாத சந்தை .  ரத்தினக் கற்களைக் கண்டுபிடிப்பது என்பதே சவாலான காரியம்தான். நிலத்துக்கு அடியில் பைப்பைப் போல 300 - 400 அடி நீளத்துக்கு ரத்தினக் கற்கள் இருக்கும். சில இடங்களில் 50 அடி நீளத்துக்குகூட இருக்கும். இன்னும் சில இடங்களில் பாறைக்குன்று மாதிரி இருக்கும். கல் இருப்பதை உறுதி செய்துகொண்ட பின்னர்தான் தோண்டவே ஆரம்பிக்கவேண்டும். கல் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கு ஒரே வழி, அதன் மேற்பகுதி வெளியே தெரிவது மட்டுமே. கல்லின் ஒரு பகுதி வெளியே வந்து மழையின் காரணமாக அடித்துச் செல்லப்பட்டு வேறொரு இடத்துக்கு நகர்ந்திருக்கும். கல் இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு அந்த இடத்தில் தோண்டினால் ஏமாற்றமே மிஞ்சும். அப்படியாக கல்லைத்தேடி எடுக்கும் முயற்சியில் நிறைய பேர் பணத்தை இழந்திருக்கிறார்கள். 300 அடி நீள ரத்தினக் கல் பைப் மட்டும் ஒருவனுக்குக் கிடைத்துவிட்டால் அவன் கோடீஸ்வரன். இந்த ஆசை ஒரு மனிதனுக்குப் போதையைத் தருகிறது. அந்த போதைக்குப் பலரும் பலியாகியிருக்கின்றனர். ரத்தினக்கல் தேடுகிறவர்களை ஏமாற்றுவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது. இது ஒழுங்கு முறையற்ற வணிகமாக இருப்பதால் நல்ல கல் எது? தரமற்ற கல் எது? எனக் கண்டறிய முடியாது. இந்தியாவில் 90 சதவிகிதம் போலிக் கற்கள்தான் விற்கப்படுகின்றன.

இப்போது வந்திருக்கும் ‘முகிலினி’ நாவல் தொழிற்சாலை கழிவுகளால் நச்சாகி தார்போல ஆகிவிட்ட பவானி ஆற்றைப் பற்றிப் பேசுகிறது. இதில் காமராசர், கலைஞர், ராஜாஜி போன்ற தலைவர்கள், போராட்ட இயக்கங்கள், சம்பவங்கள் எல்லாம் நேரடியாகவே, அதாவது கதாபத்திரங்களாகவே வருகின்றன. நிஜ மனிதர்கள் உள்ளே வருகிறபோது இலக்கியத்தின் புனைவுத் தன்மை அடிபட்டுவிடாதா? தமிழில் இப்படியான முயற்சிகள் மிகமிக அரிதென்று சொல்லலாமா?
வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத ஒரு புனைவு தேவையே இல்லை என்பதுதான் எனது கருத்து. உண்மையே புனைவை விட சுவாரஸ்யமானது. நமது வாழ்க்கையே காலத்தால் புனையப்படுகிற ஒரு புனைவுதான். ஆக அது எவ்விதத்திலும் புனைவுத் தன்மையைப் பாதிக்காது. முக்கியமான ஒன்று உண்மைச் சம்பவங்களை எடுத்தாளும்போது புனைவு என்பது அதன் எல்லைக்கு உட்பட்டு இருக்கவேண்டும். வரலாற்றைச் சரியான முறையில் கண்ணியத்தோடு பதிவு செய்ய வேண்டும். ஒரு படைப்பை எப்படிக் கொடுக்கவேண்டும் என்கிற கண்ணோட்டத்தோடு நாம் அதை அணுகவேண்டும். உண்மைச் சம்பவங்களைக் கொண்டு புனைவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. சரித்திர நாவல்கள் இருக்கின்றன. சமகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி நிறைய படைப்புகள் இருக்கின்றன.

முகிலினி நாவல் எழுதுவதற்கு அடிப்படையாக இருந்தது எது?
தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற மூன்று சூழலியல் போராட்டங்கள் என்றால் அது மேட்டுப்பாளையம் விஸ்கோஸ் ஆலை மூடல் போராட்டமும், அமைதிப் பள்ளத்தாக்கின் சோலைக்காடுகளைக் காக்கும் போராட்டமும், பிளாச்சிமடா கொக்ககோலா ஆலை எதிர்ப்புப் போராட்டமும்தான். கோவையிலிருந்து மன்னார்காடு செல்லும் வழியில் இருக்கும் அமைதிப் பள்ளத்தாக்குதான் தென்னிந்தியாவில் மிஞ்சியிருக்கும் ஒரே சோலைக்காடு. மழைக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய அக்காட்டை அழித்து அனல் மின் நிலையம் கட்டுவதற்காக கேரள அரசு முயற்சித்தது. அதற்கெதிராக மலையாளிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் விளைவாக அத்திட்டம் கைவிடப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் விஸ்கோஸ் எனும் மரக்கூழ்  தயாரிக்கும் தொழிற்சாலை வெளியேற்றிய கழிவால் பவானி நதி பாழ்பட்டது. இதற்கெதிராக நடந்த போராட்டத்தின் வெற்றியாக அந்த ஆலை மூடப்பட்டது. இந்தியாவின் மிக முக்கியமான போராட்டங்கள் இவை இரண்டும். ஆனால் இந்த வெற்றி ஒரே நாளில் சாத்தியப்பட்டிருக்கவில்லை. நீதி மன்றத்திலும், நீதி மன்றத்துக்கு வெளியேயும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இப்போராட்டங்கள் பல போராட்டங்களுக்கு முன் மாதிரியாக இருக்கின்றன. ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்றால் எந்தளவுக்கு தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், தொழில்நுட்ப அறிவையும், மக்கள் திரட்டுகிற பாதையையும் இணைக்க வேண்டுமென்பதற்கு உதாரணம் விஸ்கோஸ் போராட்டம்தான். அதைப் பற்றி எந்த விதமான சரியான பதிவும் இல்லாமல் இருப்பதால்தான் அதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
இதைப் பதிவு செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் முதலாளித்துவம் எப்படி இயங்குகிறது? காந்தியவாதிகள், கம்யூனிஸ்டுகள், சூழலியலாளர்கள் என்ன மாதிரியான மாற்றுத் திட்டங்களை முன் வைக்கிறார்கள் ஆகியவற்றைப் பற்றியும் பேச நினைத்தேன். ஒன்றை மறுக்கவேண்டுமென்றால் அதைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பிறகு திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் பல தொழிற்சாலைகள் நுழைந்து கொண்டிருக்கின்றன. இவை நமது காட்டை அழித்து விவசாயத்தையும் அழித்துச் சாப்பிடுவதையே நோக்காகக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் வெற்றி பெற்ற சூழலியல் போராட்டத்தை முன் வைத்த ஒரு பதிவு அவசியம் எனப்பட்டது.

நாலாசிரியர் தம் எழுத்தில் அரசியல் பேசுவது  பொதுவாக நம்மூரில் நடப்பதில்லையே?
அரசியல் இல்லாமல் இங்கு எதுவுமே இல்லை. யார்தான் அரசியல் பேசவில்லை. கல்கி எழுத்தில் அரசியல் இல்லையா? ‘அலை ஓசை’ யில் அவர் அரசியல் பேசவில்லையா? சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் என எல்லோரும் அவரவர்களுக்கான அரசியலை அவர்களது எழுத்தில் பேசியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரைக்கும் நல்ல வாசிப்புத் தன்மையுடைய எழுத்தைக் கொடுக்கவேண்டியது மட்டுமே எனது பணி. நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை நான் என் எழுத்தில் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்?

பவானி ஆற்றின் சீர்கேடு குறித்து நாவலின் பல இடங்களில் அரசியல் சார்ந்தும், நிறுவனங்கள் சார்ந்தும் விமர்சனங்களை மிக வெளிப்படையாகவே முன்வைத்துள்ளீர்கள். எதிர்வினைகள் ஏதேனும் வந்ததா?
புத்தகம் வெளிவந்து குறுகிய காலமே ஆகியிருப்பதால் இதுவரையிலும் எதிர்வினை என்று எதுவும் வரவில்லை. வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறேன். ‘முகிலினி’ நாவல் ‘மிளிர் கல்’லை விட வெகு சீக்கிரமாகவே பலரைச் சென்றடைந்துவிட்டது. என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

‘எரியும் பனிக்காடு’ (Red Tea) நாவலுக்குப் பிறகு மொழிபெயர்ப்பில் பெரும் ஈடுபாடு காட்டவில்லையே?
வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு நாவல் எழுத வேண்டும் என்கிற முயற்சியில் நான் இறங்கியிருந்த போதுதான் நண்பர் ஒருவர் ‘ரெட் டீ’ நாவலைப் படித்துப் பார்க்கச் சொல்லிக் கொடுத்தார். அதைப் படித்ததும் என்னுள் மிகப்பெரும் அதிர்வு. அந்த அளவு அந்த நாவல் என்னை பாதித்தது. இந்த நாவலுக்கு மேல் நாம் ஒரு நாவலைக் கொடுத்துவிட முடியாது என்பது தெளிவானதும் என் நாவல் பணியைக் கைவிட்டு ‘ரெட் டீ’யை மொழிபெயர்த்துவிட்டேன். எனக்குள் ஏற்பட்ட கனத்த அதிர்வைப் பலருக்கும் பாய்ச்ச வேண்டும் எனும் முயற்சிதான் ‘ரெட் டீ’ யின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘எரியும் பனிக்காடு’. அதன் பிறகு சொந்தமாக எழுதுவதன் மேல் ஆர்வம் வந்துவிட்டதால் மொழிபெயர்ப்புமீது கவனம் செல்லவில்லை. இதற்குப் பிறகு ‘ரெட் டீ’ போல என்னை ஏதேனும் நாவல் பாதிக்குமேயானால் நிச்சயம் மொழிபெயர்ப்பேன்.

பிரச்சனைகளை எழுதும் எழுத்தாளராக (வழக்கறிஞராகவும்) இருக்கிறீர்கள். களப்போராட்ட அனுபவங்கள் உண்டா?
நிறைய போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறேன். ஆனால் நான் கள ரீதியாகப் போராடக்கூடிய பெரிய போராளியெல்லாம் இல்லை. எழுத்துதான் எனது போராட்ட வடிவம்.

நேர்காணல்: அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions