c புதுக்கவிதை: வேரும் விழுதும் - 13
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 13

புதுக் கவிதைக்குச் சிறகுகள் முளைத்தன
எழுத்து, கசடதபற, நடை, இலக்கிய வட்டம் இதழ்களில் தன் வீச்சை மிகுதிப்படுத்திக் கொண்ட புதுக்கவிதைக்கு 1971 அக்டோபர் மாதம் சிறகுகள் முளைத்தன என்று சொல்லலாம். வானம்பாடியின் முதல் இதழ் அக்டோபர் 9ஆம் நாள் கோவை நகரின் செஞ்சிலுவைக் (அதுவும் ஒரு குறியீடோ) கட்டடத்தில் வெளியிடப்பட்டது. கடும் வாதப் பிரதிவாதங்கள் அந்த நிகழ்விலேயே இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


சமூகத்தின் சிக்கலான சூழல், பிரச்சனைகள் இவைகளுக்கெல்லாம் கவிஞர் என்ற முறையில் அமைந்த எதிர்வினையால்தான் வானம்பாடி என்கிற இயக்கம் வந்தது.”


என்ற ஞானியின் கூற்று ஏறத்தாழ உண்மையே.
முன்னரே மரபுக் கவிதையில் அறியப்பட்டவர்களாக இருந்த புவியரசு, சிற்பி, இளமுருகு, சக்திக்கனல் ஆகியவர்களும், சிந்தனையாளர்களாக இருந்த ஞானி, ஜன.சுந்தரம் ஆகியோரும், பேராசிரியர்களாக இருந்த முல்லை ஆதவன் முதலியோரும் கோவை நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட சூழலில் கவிதை இயக்கமாக வானம்பாடி இயக்கமும் அதன் குரலாக வானம்பாடி இதழும் எழுந்தன.


கோவையின் அறிவுச்சூழல் பின்புலமாக அமைய, அன்று வேர் பாய்ச்சியிருந்த தொழிலாளர் இயக்கங்கள் தேர்ந்த வாசக வளத்தை நல்க, புவி இளமுருகு இணையரின் தேனீ, கோவை கவிஞர் மன்றம், கோவை இலக்கியப் பேரவை, தோழமைக் கழகம், சிந்தனைப் பேரவை, பூம்பொழில் இலக்கிய வட்டம், புதிய தலைமுறை என அரசியல் சார்ந்தும் சாராமலும் இயங்கிய  எழுத்தை நேசித்த ஒரு சிந்தனைப் பட்டாளம் படைப்புக் கலைக்கு ஊக்கம் நல்க, பலமுறை நடந்த கலந்துரையாடல்களின் பின் வானம்பாடி பறக்கத் தொடங்கியது.
இது முழுக்க மார்க்சியர்களின் கூடாரம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் திறந்த மனதோடு சித்தாந்தங்களை எண்ணுகிறவர்களாக வானம்பாடிகளில் பலரும் இருந்தார்கள். மிக முக்கியமாக எழுத்து முன் வைத்த புதுக்கவிதை வடிவத்தை சமூகம் சார்ந்து சிந்திக்கிற வகையில் பரவலாக்கம் செய்ய வேண்டுமென  வானம்பாடிப் படைப்பாளிகள் விரும்பினார்கள்.


1971 அக்டோபர் தொடங்கி 1983 செப்டம்பர் வரை (22 இதழ்கள்) வானம்பாடி பாடியும் பறந்தும் கொஞ்ச காலம் காணாமல் போயும் வருகைதந்து ஓய்ந்தது. கடைசி ஒன்பது இதழ்கள் முன்னைய இதழ்கள் போல் கூட்டுப் பொறுப்பில் வெளிவராமல் என் பொறுப்பில் வெளிவந்தன.
பேரெழுச்சியில் உருவாகிய வானம்பாடி தன் பயணத்தை முடித்துக் கொண்டதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் எல்லா இயக்கங்களுக்கும் இதழ்களுக்கும் நேர்கிற இயல்பான காரணத்தையே இதற்கும் கூறலாம். புதுக்கவிதை மற்றொரு கால கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டது என்பதே பொருத்தமான காரணமாகும்.


எனினும் பிறந்தபோதே வானம்பாடியின் கழுத்தை முறிக்கத் துணிந்த மரபின் காவலர்களும், புதுக்கவிதையே பிறழ்மன வெளிப்பாடு எனக் கருதிய கட்சி மார்க்சியர்களும், ‘நம்ம பேட்டைக்குள் இவர்கள் எப்படி வரலாம்’ என்று கருதிய புதுக்கவிதை வைதிகர்களும் இருக்கவே செய்தார்கள். உண்மையைச் சொன்னால் சுப்பிரமணிய ராஜு காலமாவதற்குச் சில மாதங்கள் முன் மாரீஸ் ஓட்டலில் அறந்தை நாராயணனுடன் அவரைச் சந்தித்த தருணம் எனக்குள் பசுமையாக இருக்கிறது. அந்த மனிதர் சொன்னார், “நம் சண்டை சச்சரவுகள் கிடக்கட்டும், வானம்பாடிகளில் சிலரை நாங்கள் மிகவும் மதித்தோம்’’ என்று. அவர் வெளிப்படையான பேச்சில் நான் நெகிழ்ந்து போனேன்.
கணையாழியில் பழைய புழுதியை வெங்கட்சாமிநாதன் கிளறியபோது அவருடைய ஆளுமையை அல்ல, முதுமைக்கால அறியாமையைக் கண்டு நகைக்கத் தோன்றியது.


வானம்பாடிக் கவிஞர்களை ஒரு வேகப் பார்வை பார்க்குமுன் அந்த இதழையே கண்டிராத பேதைகள் இன்னமும் ‘உரத்த குரல்’ என்ற குற்றச்சாட்டை வைப்பதை வரலாறு அறியாத மூடத்தனம் என்றே சாக்கடையில் தூக்கி எறிய மனம் விரும்புகிறது. இருநூற்றி இருபத்தொரு கவிஞர்களின் நானூற்றித் தொண்ணூற்றி ஒரு கவிதைகள் வானம்பாடியில் வெளிவந்தன.
கவிதையை மௌனத்தின் புன்சிரிப்பு என்று கருதுபவர்கள் இருக்கலாம். வானம்பாடியின் ஏறத்தாழ ஐநூறு கவிதைகளில் பத்து விழுக்காடு கூட உரத்து ஒலித்ததில்லை. சிலர் உரக்கப் பேசியிருந்தால் அது எடுத்துக்கொண்ட பொருண்மையின் வெளிப்பாடு என்றே கருதுதல் தகும். கவிதை தேவைக்கேற்ப போர் முரசும் ஆகும். புல்லாங்குழலும் ஆகும் என்பதே இதற்குரிய விடை. வாய்ப்பு வரும்போது விரிவாகப் பேசலாம்.
வானம்பாடி தந்த மகத்தான கவிஞர்களில் ஒருவர் புவியரசு. ஓயாத படிப்பும் ஒழியாத சிந்தனையுமாக இன்றும் விளங்கும் கவிஞர் மரபிலிருந்து புதுக்கவிதையை நோக்கி வந்தவர். எண்பத்தைந்து வயது இளைஞராக இன்றும் வாழ்ந்து வருகிற புவியரசு புதுக்கவிதையில் நவநவமான கோலங்களை வரைந்தவர். எப்போதும் வரலாற்றுணர்வு இவருக்குள் தொழில்புரிந்துகொண்டே இருக்கும்.


‘ஒரு அப்பளத்தின் மரணம்’ என்ற கவிதை செய்யுள் கூடுகளை ஏளனம் செய்து எழுதப்பட்டது. ‘அரைத்த மாவையே குழைத்து உருட்டி’,
“பழமைக் கல்லின்
நடுவில் நிறுத்தி
யாப்பு உருளையால்
எண்சீர் அளவுக்கு
இழுத்துத் தேய்த்து

உவமை மாவைத் தூவி, சிலேடை எண்ணெயில் போட ஊதி எழுகிறது அப்பளம்.  இலையில் போட்ட அப்பளத்தைப் புதுக்காற்று அடித்துத் தள்ள அது உடைந்து போனது. குனிந்து பார்த்தால்,
உடைந்த அதற்குள்
ஒன்றுமே இல்லை

என்று முடியும் கவிதை, யாப்பின் போதாமையை உருவகப்படுத்திற்று.
வானம்பாடியின் ஏழாம் இதழில் இவர் எழுதிய ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ ஒரு சர்வதேச எதிரொலிப்புகளை உருவாக்கிற்று.  சூயஸ் போரின் போது இஸ்ரேல் விமானங்கள் இடித்துத் தகர்த்த மாதா கோயிலில் சிலுவையில் சிதைந்து தொங்கிய ஏசுவைப் பார்த்துக் கவிஞர் பேசுகிறார்.
ஏசுவே
உன்னை இந்த கதிக்கு
ஆளாக்கியவர் யார்?
குஷ்டரோகிகளைத்
தொட்டுத் தொட்டு
அன்பு மருந்திட்ட
உன் அருட்கரங்களை வெட்டிய
கொலை பாதகர்கள் யார்?

என்ற வினாக்களுடன் தொடரும் கவிதை, ‘உன்னை நான் என்ன செய்ய?’ என்று கேட்டு நான் பிலாத்து மன்னனல்ல, இட்லரல்ல என உரையாடிய பின்,
ஏசுவே, தேவகுமாரா
இறைவன் - உன் பரமபிதா
உன்னை ஏன் இப்படிக்
கை கழுவி விட்டான்?

என்று முடிகிறது. எதேச்சதிகாரப் போர்களின் கொடுமை, ஒவ்வொரு தலைமுறையிலும் மாமனிதர்களுக்கு நேர்கிற அவலம், ஆன்மிகம் செத்துப் பிழைக்கும் சோகம் எல்லாம் கூடிக் குவிகின்றன கவிதையில்.
இதன் தொடர்ச்சி போல ஒன்பதாம் இதழில் புவியரசு வரைந்த கவிதை ‘ஒரு கவிஞனின் சிலுவைப்பாடு’. இக்கவிதை சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஒரு கவிஞனுக்கு நேரும் அவலங்களைப் பேசுகிறது. வானம்பாடிக் கவிஞர்களில் சிலர் அந்தரங்கமாக அரசியல் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டபோது (புவி அவர்களில் ஒருவர்) அதனை உதறி எறியும் கோபத்தின் வெளிப்பாடாக இக்கவிதை வெளியாயிற்று.
என் மேனியின்
கரும்பலகையில்
நீங்கள்
சவுக்கு எழுதுகோலில்
கோடுகள் வரைந்து
கணிதபாடம் கற்கிறீர்களா?
..........
ஓ இதென்ன
சிலுவையா
தோள்மீது
சுமத்துகிறீர்களா?
பாரம் தாங்காமல்
நான் அழுவேன்
என்றா எதிர்பார்த்தீர்கள்?”

என்று சரம்சரமாக வினாக்களை எழுப்புகிற கவிஞர் விவிலிய வாசகங்களாலேயே இந்தக் கவிதையை நெசவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கி, முள்முடி, சிலுவை, கல்வாரி மலை என்ற அடையாளம் கூறுவதோடு,
“பாம்புகளே
விரியன் குட்டிகளே
நீங்கள் நரக தண்டனைக்கு
எப்படித் தப்ப முடியும்?”
என விவிலியக் கூற்றுகளை அங்கங்கே இணைத்துக் காட்டும் திறம் அற்புதமானது.
புவியரசு வானம்பாடியில் 17 கவிதைகளை எழுதி யிருக்கிறார்.
நா. காமராசன் வானம்பாடியின் தொடக்க நாட்களில் ஒரு பிரளயம் போல புறப்பட்டவர். அவருடைய ‘கறுப்பு மலர்கள்’ அந்நாளில் பல கவிஞர்களையும் மெய்சிலிர்க்க வைத்ததுண்டு. அவருடைய புகழ்பெற்ற கவிதைகளில், ‘நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன்’ என்பதும் ஒன்று. வாழும் காலத்தில் உந்துவிசை போல் இயங்கித் திரியாமல் சோர்வும் சஞ்சலமும் ஆட்டிப் படைக்க, ‘மரணத்துக்குத் தூது’விடுவதைக் கண்டு புவியரசு அதிர்ந்தார். அதனால் ‘நானும் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன்’ என்று அதற்குப் பதில் சொல்ல விரும்பினார். இக்கவிதை வானம்பாடி நான்காம் இதழில் வெளிவந்தது.


வாழ்க்கையை ‘சுபக்க’மாக எடுத்துக்கொண்டு, தன்னம்பிக்கையின் கதிர்கள் சுடர்வீச வாழ்ந்துகாட்ட வேண்டுமெனச் சொல்ல விழைந்தார்.
“மரணமே
இப்பொழுது உன்னை நான்
சந்திக்கத் தயாராக இல்லை”
என்று தொடங்கும் கவிஞர், வாழ்வில் நான் சாதிப்பதற்கு எத்தனை களங்கள் இருக்கின்றன என்று பேசினார். மரணம் தவிர்க்க முடியாதது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதனை ஓடிப் போய்த் தொட என்ன அவசரம் என்று வினவினார்.
“நிலையாமையின் நிலைபேறே
உன்னைநான் இந்த நித்திய கணங்களில்
எதிர்கொள்ளத் தயாராக இல்லை
.”
என்று நேர்த்தியாய் எழுதினார். நம்பிக்கையின் இதிகாசமாக இக்கவிதை அமைகிறது.
வானம்பாடிக் காலத்துக்குப் பின் பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட புவியரசு, கடைசியாய் வெளியிட்ட தொகுப்பு ‘கையொப்பம்’. வாழ்வின் இனிய, அரிய, பெருமூச்சும் புன்னகையும் கலந்த தருணங்கள் இத்தொகுப்பில் கவிதைகளாகப் பூத்துச் சொரிந்திருக்கின்றன. அண்ட கோளங்களில் சஞ்சரிக்கிற அதே சமயத்தில் அவல வாழ்வின் கணங்களையும் கவிதைகளாக்கிய புவியரசுவுக்கு ‘கையொப்பம்’ நூல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது.


ஐம்பது நூல்களுக்கு மேல் ஓஷோ முதல்  நஸ்ருல் இஸ்லாம் வரை தமிழுக்கு மொழிபெயர்ப்பின் வழியே அறிமுகப்படுத்திய சிறப்பால் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதையும் வென்றார்.  நாடகம், திரைப்படத் துறைகளிலும் கால் பதித்தவர் புவியரசு. கேட்டாரைச் சொக்க வைக்கும் நாவலராகவும் ஒளிர்கிறார் புவியரசு. இவரை வானம்பாடிகளின் தாய்ப்பறவை     என்று கவிதையுலகம் போற்றி ஆராதிக்கிறது.
வானம்பாடி தந்த அனுபவச் சாரம் செறிந்த புவியரசுவைப் போலவே மாணவராக இருந்தபடி அர்த்த கம்பீரமும் அழகும் செறிந்த கவிதைகளைத் தந்தவர் கங்கை கொண்டான். இன்று அவர் இல்லையென்றாலும், அவருடைய ‘கூட்டுப் புழுக்கள்’ தொகுப்பால் என்றும் நினைக்கப்படுவர். தாத்தாவின் கைத்தடி, சில நைலான் கனவுகள் எரிகின்றன, ங்க்கா ஆகிய அருமையான கவிதைகளை வானம்பாடியில் வெளியிட்டார்.
‘பரண் மேலேறிப்
பாரண்ணா’ எனும்
தம்பியின் கெஞ்சலுக் கஞ்சி
ஏணிவைத் தேறி
தவளையாய் அமர்ந்து
புரட்டிப் பார்த்ததில்
கறையான் பாம்புகள்
பழைய பஞ்சாங்கங்கள்
மேலூரும் பரிதாபத்தில்
கிளறினேன், உதறிப்போட
இருட்டில்
பாம்பெனப் பயந்து
தள்ளவும் கீழ்விழுந்து
எட்டுச் சுக்கலாய்த்
தவிடு கொட்டித்
தெறித்தது
செத்த எங்கள்
தாத்தாவின் கைத்தடி”


இந்தக் கவிதையில் செய்நேர்த்தியும், இளமைத் தேடலும், மறைந்த பிறகும் பயமுறுத்தும் தாத்தாவின் கைத்தடியும் மாயமாய் இணைகின்றன.
மேலும் சில வானம்பாடிகளை அடுத்துப் பார்க்கலாம்.
-தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions