நகரில் நடந்தவை
காக்கை பதிப்பகம்
தனித்துவமான, தத்துவம் மிக்க நூல்களை மக்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் ‘காக்கை பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளார் ‘காக்கைச் சிறகினிலே’ இலக்கிய இதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான வி.முத்தையா.
இதன் முதல் நூலாக சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸின் மூன்றாவது நாவலான ‘அஸ்தினாபுரம்’ பதிப்பிக்கப்பட்டது.
பதிப்பகத்தின் தொடக்கவிழாவாக இந்நூலின் வெளியீட்டு விழா சென்னை- எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது. க.சந்திரசேகரன் வரவேற்புரையாற்ற, காக்கைச் சிறகினிலே இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான இரா.எட்வின் தலைமை தாங்க, உலக வங்கியின் முன்னாள் ஆலோசகரும் எழுத்தாளருமான கடலோடி கே.ஆர்.ஏ.நரசய்யா நூலை வெளியிட, வேளாண்மைத்துறை ஆணையர் முனைவர் மு.ராசேந்திரன் இ.ஆ.ப. முதல்படியைப் பெற்றுக் கொண்டார்.
அடுத்தடுத்தப் படிகளை சென்னை கஸ்டம்ஸ் ஹவுஸ் செயலர் ச.நடராஜனும், முதுநிலை துணைப் போக்குவரத்து மேலாளர் சு.கிருபானந்தசாமியும், அருள்பணி ஜான் சுரேசும், பெற்றுக்கொண்டனர். இலக்கிய விமர்சகர் திருமதி. சித்ரா பாலசுப்ரமணியன் மதிப்புரை வழங்க, காக்கைச்சிறகினிலே பதிப்பாளரும் ஆசிரியருமான வி.முத்தையா நன்றியுரையாற்ற விழா நிறைவுற்றது.
நூலாசிரியர் ஜோ.டி.குரூஸ் தன் ஏற்புரையில் ‘கடல், கப்பல் மற்றும் அதைச் சார்ந்த பயணங்கள், பிரச்சனைகள் தான் இந்நாவலின் மையம். இந்தக் கடலும் கடல் சார் வாழ்வுமே என்னுடைய படைப்பு மொழி. இதுவே எனது கடைசி நாவல். இதற்கு மேலாக என்னிடம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் எதுவுமில்லை’ என்றார்.
நீதி கேட்பவனே எழுத்தாளன்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை (நாவல்), என்ன சொல்கிறாய் சுடரே (சிறுகதைத் தொகுப்பு), ஆயிரம் வண்ணங்கள் (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
இந்நூல்களை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்தின் பதிப்பாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வரவேற்புரையாற்றினார். த.உதயசந்திரன் இ.ஆ.ப., திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், ஷாஜகான், மதுக்கூர் இராமலிங்கம், ஓவியர் விஸ்வம், டாக்டர் ஆர்.திருநாவுக்கரசு, ஜீ.எஸ்.மணிமாறன், டி.சசிகுமார், வழக்கறிஞர் தேவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வை ராஜசேகர் தொகுத்து வழங்க, எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்புரை ஆற்றினார்.
நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் ஏற்புரையில், ‘‘இப்போது எழுதப்படுவதும் சரி, நமது முன்னோடிகளால் எழுதப்பட்டவைகளானாலும் சரி படைப்பின் குரல் ஒன்றே ஒன்றுதான். அது நீதிக்காக காத்திருப்பவர்களின் குரல்தான். நீதி மறுக்கப்பட்டவர்களுக்காக நியாயத்தைக் கேட்கிற குரல்தான். ஒரு எழுத்தாளன் ஒரு கட்டத்தில் தன்னை ஒரு நீதி கேட்பவனாக நிறுத்திக்கொள்கிறான். யாருக்காக? தன் இனத்துக்காக, மக்களுக்காக என ஏதோ ஒன்றுக்காக நீதி கேட்கிறான்.
நீதி கேட்காத இலக்கியங்கள் இருக்கிறதா என்றால் இல்லை. ஆகவே, நீதி சார்ந்து எழுதலாமென்று எப்போதோ யோசித்தேன். ஆனால் அதை வெறும் கருத்துருவாக்கம் கொண்டு எழுதமுடியாதே. அதற்கு ஒரு உருவம், கதை, களம் வேண்டுமே! என யோசித்து இந்திய வரலாற்றில் பயணித்தேன். வரலாற்றில் அதிகம் புறக்கணிக்கப்பட்ட ஔரங்கசீப்பை எடுத்துக்கொண்டேன். அப்படித்தான் இந்த நாவல் உருவானது. இதை எழுதும்போது பல நேரங்களில் எந்தப் பக்கம் நிற்பதென தெரியாமல் ஒருவித நெருக்கடிக்கு உள்ளானேன். கதாசிரியனாக கதாபாத்திரங்களின் பக்கமா? அல்லது இந்திய வரலாறு என்கிற மாபெரும் வரலாற்று உண்மையின் பக்கமா? யாரிடமிருந்து யாரை கேள்வி கேட்பது. ஒரு எழுத்தனாய் இருந்து வரலாற்றையும், ஒரு வரலாற்று ஆய்வாளனாக இருந்து ஒரு சாமானியனுக்கு இழைக்கப்பட்ட தீங்கையும் என இரண்டையுமே செய்திருக்கிறேன்’ என்றார்.
- - ஊரகாளி