c மண்ணும் மக்களும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும்
செங்கான் கார்முகில்

குலுவான்கள்
பொதுவாக பள்ளிக்கூட லீவு நாட்களில் விளையாடுவார்கள். பெரும்பாலும் குழுவாகத்தான் விளையாடுவார்கள்.தினசரி காலையிலும் மாலையிலும் பள்ளிக்குப் போகும் முன்னும் வந்தபின்னும் விளையாடினாலும் விடுமுறை என்றால் தனி குஜாலம்தானே. முழுநாளும் விளையாடலாம் இல்லையா.
ஒருத்தன்  ஒருத்தனாய்க் கூடியதும், ‘என்னா வௌயாட்றா வௌயாட்லாம்’ என்பான் ஒருத்தன். “தாத்த புத்தக்கா, புள்ளயார் பந்து, ஐஸ்பாய், அந்திக்கடை சந்திக்கடை, திருடன் போலீஸ், கண்ணங் கண்ணாமூச்சி, தொத்தநாம் புல்லு, பாண்டிக்கல், பஸ் ஓட்றது, ஆபியம் மனியாபியம், கோட்டான் கோட்டான், பில்லுக்குச்சி, செல்லு செதுக்குறது, மச்சியாட்டம் ‘’ என்று ஆளாளுக்கு ஒவ்வொரு விளையாட்டைச் சொல்வார்கள். ஒருத்தன் ‘அது’ ம்பான். இன்னோர்த்தன் ‘இது’ம்பான். கடைசியில் ஏதாவதொன்றை முடிவு செய்வான் ஒருவன்.
இன்று,  ‘அம்மா அப்பா வெளையாட்டு வெளையாட்லாம்’ என்று முடிவானது. ‘சரி சரி’ என்றார்கள் எல்லோரும்.
தாய்தவப்பன் விளையாட்டு என்றால் வீடு வேண்டுமல்லவா. முதல்காரியமாக மண்ணைக் கூட்டிச் சேர்த்து வயலைச் சுற்றியிருக்கும் வரப்பு மாதிரி  செவ்வகமாக கரை கட்டினான் ஒருவன். அதுதான் வீடாம். அதற்குள்ளாக குறுக்கும்நெடுக்குமாக சில கரைகள் போட்டான் ஒருவன். ‘இது - உள்ளூடு, இது- வெளியூடு, இது - திண்ணை, இது - சோறாக்குற ரூம்பு, இது - சாமி கும்புடுற எடம்’  என்றான். இருபுறமும் ஒரு முழம் தள்ளி அதுபோலவே சிலவற்றைச் செய்தார்கள். அவை பக்கத்து வீடுகளாம். இந்த வீடுகளுக்குச் சற்றுத் தள்ளி ஒரு கட்டத்துக்குள் சம்பளங்கால் போட்டு உட்கார்ந்திருந்தான் ஒருவன். கடைக்காரனாம். அவனுக்கு முன்னால்  கூழாங்கற்கள் கூறு கூறாய் இருந்தன. அவைதான் காய்கறிகளாம். தழைகளைப் பறித்து கத்தை கத்தையாய் கட்டி அடுக்கி வைத்தான். கீரைகளாம். குப்பைமேனி தழைகள் கறிவேப்பிலைகளாம். அடுக்கி வைக்கப்பட்ட பலகைக் கற்கள், சோப்பாம். நைசாக்கப்பட்ட செங்கல் பவுடர் மிளகாய்த் தூள், ஒடித்து வைத்த குச்சிகள் பீடி , கஞ்சிக் காயிதத்துக்குள்ளிருக்கும் வரகு வைக்கோல் சுருள்கள் புகையிலை. பூவரசு இலைகள், வெற்றிலை. இப்படி ஒவ்வொன்றும் கடையில் அணி வகுத்திருந்தன. பேப்பர்களை அரிவோசமாகக் கிழித்துச் சிறிய பெட்டி நிறைய வைத்திருந்தான், பணம். வட்டமாக்கப்பட்ட சட்டி ஓடுகள் சில்லரைகளாய் இருந்தன.
யார் அப்பா, யார் அம்மா, யார் யார் மகன் மகள்கள், மாமா, மச்சான், சேத்தாளி எல்லாம் பிரித்துக்கொண்டு விளையாட்டைத் தொடங்கினார்கள்.
வீடுகள் ஒவ்வொன்றின் முன்னும், துண்டை வேட்டியாகக் கட்டி அதைக் கால்சட்டைத் தெரிய மடித்துக் கட்டியபடி நின்றுகொண்டு இதைச் செய், அதைச் செய் என்று கட்டளை இட்டுக்கொண்டிருந்தனர் சிலர். அவர்கள் அப்பாக்கள். அதற்கேற்ற மாதிரி, “சரிங்க, செய்யிறேங்க’’ என்று பயந்தபடி பணிவாக வாசல் கூட்டிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள்தான் அம்மாக்கள். பழைய வட்டத் துணியொன்றை  மாராப்பாகப் போட்டிருந்தார்கள். கொண்டை வேறு ஜம்மென்று இருந்தது. இடுப்பில் ஒரு சுருக்குப்பையும் இருந்தது. எல்லாம் பழைய புகையிலைக் காகிதப் பைதான். சில்லறைகளாய் மனியாங்கற்கள். விளக்குமாறு என்ன தெரியுமா, வயனார மரத்தின் அல்லது வேப்பமரத்தின் இலைகளில்லாத சீவுகள்தான்.
“சீக்கிரம் சோறாக்குடி, பசிக்குது’’ என்றார், அப்பா.
“சரிங்க’’ என உள்ளே போனாள் அம்மா. வீட்டு வாசலில் ஏழெட்டு பேர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் வாரிசுகள்.
“கடைக்கிப் போயி மொளவு சீரவம் வாங்கியாப்பா?’’ என்றாள் அம்மா, மகனிடம். அவனும் காசு வாங்கிக்கொண்டு வாயால் புடுபுடு மோட்டார் ஓட்டியபடியே கடைக்கு ஓடினான்.
இன்னொரு மகன், மற்ற பசங்களோடு வாக்குவாதம் செய்துகொண்டு விளையாடிக்கொண்டிருந்தான். அவனை திட்டிக்கொண்டே உள்ளே போனாள்.
வீட்டின் ஒரு மூலையில் கல்கோனா முட்டாயி சைசில் மூன்று கற்களை முக்கோணமாக வைத்து (அடுப்பு) அதன் மேல் சோற்றுப் பானையாக  ஒரு கொட்டாங்குச்சியை வைத்தாள். மணலையும் (அரிசி), தண்ணீரையும் கொழச்சி கொட்டாங்குச்சியில் போட்டாள். குச்சிகளை அடுப்புக்குள் வைத்து சிறுகல்லில் சின்ன குச்சியை உரசி, அடுப்பு பற்ற வைத்தாள். சோறு வேகும்வரை பனைமட்டை கருக்கு அரிவாள் மனையில் நடுவீட்டில் உட்கார்ந்தபடி காய் நறுக்கினாள்.
கொஞ்ச நேரம்தான். சோறு தயார்!
“சாப்புட வாங்க’’ என்றாள் அம்மா. வட்டமாய் உட்கார்ந்துகொண்டார்கள். உடைந்த சட்டி ஓட்டில் (வட்டி) சோறு போட்டுக் கொடுத்தாள். அப்புக்கு அப்புக்குனு சாப்பிட்டார்கள். சும்மாங்காச்சிக்கும் தான்.
ஊர் கதை, உலகத்து கதை, வந்த கதை, போன கதை எல்லாம் பேசிவிட்டு “சரிசரி நேரமாயிடிச்சி, படுங்க தூங்கலாம்’’ என்றார் அப்பா. படுத்துத் தூங்கினார்கள்.
நடுச்சாமம்!
“அடப்பாவி மனுசா... ஏன் என்ன இப்புடி சித்ரவத செய்ற’’ திடீர் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்கள்.
பக்கத்து வீட்டில் புருஷன் பொஞ்சாதி தகராறு. அவளது தலைமுடிகளைக் கொத்தாகப் பிடித்துத் தரையில்    தள்ளினான். சிண்டைப் பிடித்து ஆட்டினான். “எதுத்தா பேசுறவ, நாற நாயி. தோல உரிச்சி மோளங் கொட்டிப்புடுவன். எவன்டி குடுத்தான் அம்புட்டு தெகிரியம்’’ என்று கடுமையாகத் திட்டினான் புருஷன். செவுனியிலேயே பளிச்சுன்னு அறைஞ்சான். வயிற்றிலேயே உதைத்தான். ஓங்கி ஓங்கி அறைந்தான். அழுதுப் புரண்டாள் அவள். ‘குடிச்சிப்புட்டு தெனமும் இதே பொழப்பா. கட்டியத்திண்ணி எங்கியாவது போய்ட்டாக்கூட நிம்மதியா கெடப்பேன்’ என்று கத்தினாள்.  
பக்கத்து வீட்டுக்காரர்கள் (அப்பா அம்மாக்கள்) வந்து விலக்கிவிட்டார்கள். விலகியும் திட்டிக் கொண்டேயிருந்தான் அவன். “எதுவார்ந்தாலும் காலையில் பாத்துக்கலாம். பேசாம படுடா போ’’ என்று அவனை அமைதிப்படுத்தினார்கள். அவரவர் வீட்டிற்குப் போய் தூங்கினார்கள்.
பின்னியும் கொஞ்ச நேரம்தான்.
‘விடிஞ்சிடிச்சி... விடிஞ்சிடிச்சி’ என சொல்லியபடி எல்லோரும் உடம்பை நெட்டி முறித்தபடி எழுந்தார்கள். சண்டை போட்டவன் வந்து, மற்ற வீட்டுக்காரர்களிடம் சொன்னான்.
“இந்த கழுத சரிப்பட்டு வராதுங்க. இந்த சனியனெ கழிச்சி கட்டிட்டாத்தான் நிம்மதி. அதுக்கு ஆவுற வேலய பாருங்க’’ என்று சொன்னான்.
‘என்னடா இவன். இப்புடி சொல்றா?’  னேன்னு பஞ்சாயத்தைக் கூட்ட முடிவு செய்தார்கள். ஒருத்தன் உடைந்த சட்டி ஓட்டில் மேளமடித்து (அதுதான் அழிக்கிச் சட்டியாம்) தண்டூரா போட்டான். இன்னமாரி இன்னமாரின்னு சொல்லி ‘அதனால் பஞ்சாயத்து கூட்டுறோம், எல்லாரும் வந்துடுங்க’ என்றான்.
பஞ்சாயத்தும் கூடிவிட்டது.
பெருசுகள் பஞ்சாயத்தை அவ்வளவு சீக்கிரத்தில் தொடங்கமாட்டார்கள். நாலு நாழி நேரமாக தலையை நட்டுக்கிட்டு குந்தியே இருப்பார்கள். கொதிப்பும் கோவமும் தாழட்டும் என்பதற்காகத்தான் இது. ரொம்ப நேரத்துக்கு பிறகு ‘ஆளாளுக்கு அப்புடி அப்புடியே ஒக்கார்ந்துருந்தா எப்புடி. விறுவிறுன்னு பேச வேண்டியத பேச வேண்டியதானே’ என்று மவுனத்தைக் கலைக்கும் ஏதாவதொரு பொக்கை வாய்.
அதுபோலவே இந்த சிறுசுகளும் கம்முன்னே ஒக்காந்து இருந்துவிட்டு  பின் பஞ்சாயத்தைத் தொடங்கினார்கள். தொண்டையைச் செருமியபடியே ‘என்னாப்பா விசியம்‘ என்றார் பஞ்சாயத்துக்காரர். குரலில் அப்படியொரு அதிகாரம்.
“நடத்த வொன்னுஞ் சரியில்லங்க சாமி. கழிச்சிக் கட்டிருங்க. இவளால நாம் படுற திண்டனையெல்லாம் போதும்’’ என்று வாய்க்கு வந்தபடி ஒரே மூச்சில் சொல்லி முடித்தான். இல்லாததும், பொல்லாததும் சொன்னதால் ஆத்திரம் பொறுக்காத அவள், பஞ்சாயத்தின் குறுக்கே குறுக்கே பேசினாள்.
பஞ்சாயத்தாருக்குக் கோபம் வந்துவிட்டது. “இந்தாம்மா, பஞ்சாயத்துல பொம்பள பேசக்கூடாதுன்னு தெரியாதா. நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போற. அப்ப நாங்கள்லாம் என்னா சீலயா கட்டியிருக்கம். நாயம், அநியாயம் தெரிஞ்சமாதிரி பேசுறியே’’ ஆளாளுக்கு அதட்டினார்கள். சிவனேன்னு அவளும் அடங்கினாள். வேற வழி. மற்ற பொம்பளைகளும் வெக்கினாற்போல  வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
அவள் முறை வந்தது. சொன்னாள்:
“எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படறாருங்க. முந்தா நாத்து ராத்திரி இவுருக்குச் சோறு போட்டுட்டு வயித்த பெரட்டுதுன்னு ஓடைக்குப் போனன். எவனடி பாக்கப் போனன்னு கேட்டு கூத்து கட்றாரு. நேத்து காலையில் அறுவது ரூபா கொடுத்தாரு. கிழிஞ்ச கால்சட்டையே போட்டுக்கிட்டுத் திரியிறானேன்னு பயலுக்கு ஒரு கால்சட்டையும் எனக்கு ஒரு பாவாடையும் எடுத்துக்கிட்டன்.  செலவுக்காரின்னு இவரு திட்டுவாருன்னு அத சொல்லுல. எங்கடி காசு, எவனுக்குடி குடுத்தன்னு கேக்குறாரு. துணியெடுத்துக்கிட்டன்னு சொன்னன். அது சேந்தவன் குடுத்துருப்பான்டிங்கிறாரு. ஒருத்த ஊட்டுக்கு வாசலுக்குப் போவ முடியில. சேத்துக்கிட்டாங்கிறாரு. இதுக்குப் பயிந்துகிட்டே சொந்தபந்தங்க ஊட்டுக்குக்கூடப் போறதே இல்ல நானு. நானும் மனுசிதானேய்யா. எனக்கும் குடும்பம், ஊடுவாச இருக்குனு தெரியாதா. அப்புடியா துரோகஞ் செய்வன். எது சொன்னாலும் கம்முன்னே இருக்கணுமாம். ஒரு வாத்த வதிலு சொல்லிட்டா போச்சி, எப்புட்றி எதுத்துப் பேசுவ. எவன்டி குடுத்தான் தெகிரியம்னு கேக்குறாரு. வெளிய சொன்னா வெக்கக் கேடுங்க. என் உடம்பே ரணமா கெடக்கு. இந்த புள்ளிவ ரெண்டும் இல்லன்னா எப்பவோ எங்கதைய முடிச்சிக்கிட்டு இருப்பன். ஏம் நேரம், இவங்கிட்ட வந்து அனாதயாட்டம் கெடக்குறன்.’’ மேலும் பேசமுடியாமல் கமறினாள். எல்லோர் மனசையும் ஒரு அசைப்பு அசைத்துத்தான்விட்டது அது.
கொஞ்ச நேரம் ஒருவித இனம்புரியாத அமைதி நிலவியது.
பஞ்சாயத்துக்கார பெரியபெருசு ஒரு சுருட்டைப் பற்ற வைத்து இழுத்தார். எதிரே கூடியிருந்தவர்களும் பீடி, சுருட்டு புகைத்தார்கள். எல்லாம் காகிதச் சுருணைதான். பலர் போதையிலும் தள்ளாடினார்கள்.
“இவ பொய் சொல்றா.  இவளக் கழிச்சிக் கட்டுணும். நாதாரி முண்ட. வாயப் பாத்தீங்களா’’ என்று மூலைக்கு மூலை புருஷனின் வகையறாக்கள் கொதித்துக் கூச்சலிட்டார்கள். பொண்டாட்டியின் அம்மாக்காரி குரலோ, அவளைப் பெத்தவங்களோட குரலோ ஒருவருக்கும் கேட்கவில்லை. பஞ்சாயத்துக்காரர் காதில் ஏதோ கிசுகிசுத்தான் ஒருவன். அவரும் தலையசைத்தார்.
பஞ்சாயத்தில் உரத்துப் பேசும் சிலருக்கு வேண்டியதைக் கொடுத்து சரிக்கட்டியிருந்தான் புருஷன்.
பஞ்சாயத்து நடப்பதற்கும் பின்னால் சற்றுத் தள்ளி, இதைப் பற்றியெல்லாம் கவலையேதுமில்லாமல் சிகரெட் அட்டைகளைக் கொண்டு சீட்டாடிக் கொண்டிருந்தார்கள் இவர்களின் வாரிசுகள். கொஞ்சம் படிச்சவர்களும்கூட அதில் இருந்தார்கள்..
பஞ்சாயத்து சொன்ன முடிவில், புருஷன்காரன் மனசு அப்புடியொரு குஜாலத்தில் குதித்தது.
இப்படியெல்லாம்கூட கிராமப்புறங்களில் விளையாட்டுகள் விளையாடுவார்கள் குலுவான்கள். துண்டை சேலையாகக் கட்டுவது, சின்னூண்டு கலயத்தில் தண்ணீர் குடம் எடுப்பது, வாசல் பெருக்குவது,ஆட்டை பிடித்து கட்டு,நாய்க்குட்டிக்குச் சோறு போட்டியா எனச் சொல்வது போன்றவற்றையெல்லாம் பார்க்கவே மனம் மகிழ்ச்சி கொள்ளும். விளையாடி முடித்தால் பாதிப் பொழுது  போய்விடும். சில சமயம் பல பெருசுகள் வேடிக்கைப் பார்க்கும். அதைக்கூட கவனிக்காமல் அப்படியொரு தன்னையறியாத அர்ப்பணிப்போடு  விளையாடுவார்கள். விளையாட்டு முடித்துச் சலித்ததும் வேறு விளையாட்டுக்குச் செல்வார்கள். இல்லையெனில்  கலைந்து செல்வார்கள். அவர்கள் சென்றபிறகு இருக்கும் அந்த இடம்போலவே அந்தச் சிறுவர்களின் உலகமே தனி அழகுதான்.
என்ன ஒன்று,
அவர்கள் பார்ப்பதைத்தான் செய்கிறார்கள். மனதில் பதிந்ததைத்தான் விளையாடுகிறார்கள்.

- மண் மணக்கும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions