c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

போலி வாக்கும் அசல் ஜனநாயகமும்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் இந்தியாவுக்கு வருகை புரிகிறார். இப்போதுதானே வந்து போனார் என்கிறீர்களா? மீண்டும் வருகிறார். நமது பிரதமர் மோடி அவர்கள், விருந்தினரைச் சிறப்பாக வரவேற்கப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்திருக்கிறார். விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது ஒபாமாவுக்கு. பிரமாண்டமான விருந்துகள். நம் ஜனாதிபதி அவரைக் கை குலுக்கி வரவேற்று விருந்தளிக்கிறார். சோனியா காந்தி, திருமதி ஒபாமாவுக்குக் காஞ்சி புரம் பட்டுப்புடவையைப் பரிசளிக்கிறார். எல்லாம் சரி. கடைசியாக ஒபாமா நம் பிரதமரிடம் ஒரு வேண்டு கோள் வைக்கிறார். என்ன அது?
“இந்தியாவில் தேர்தல் நடக்கிறதாமே. எனக்கு இங்கே ஓட்டுப்போட ஆசையாக இருக்கிறது. ஏதாவது ஒரு தொகுதியில் நான் வாக்களிக்க ஏற்பாடு செய்ய முடியுமா.”
முடியாது.
பிரதமர் மோடியால் அந்த வேண்டுகோளை ஏற்றுச் செயல்படுத்த முடியாது. ஜனாதிபதிக்கு இருக்கும் மிகப்பெரிய அதிகாரப் பட்டியலில் கூட ஒபாமாவின் இந்த ஆசை நிறைவேற்றத்துக்கு இடம் இல்லை.
இதன் அர்த்தம், ஒரு தேசத்தின் தேர்தல் வாக்கும், வாக்களிப்போர்க்கு இருக்கும் நிகரற்ற உரிமையும் அப்படி இருக்கிறது என்பதாகும். இந்தியாவில் பிறந்த இந்தியர் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிகரற்ற உரிமை, ஜனநாயகத்தின் பெயரால் இந்தியர்க்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியா போன்ற மாபெரும் ஜனநாயக தேசத்துக்கு, உலக அளவில் இருக்கும் முதல் மரியாதையே, ஜனநாயகத்துக்கான தேர்தல் முயற்சிகள் பெரும்பாலும் அப்பழுக்கில்லாமல்  நடந்துகொண்டிருக்கிறது என்கிற யதார்த்தம்தான். எங்கேனும் தவறு நடந்ததாகச் சொன்னால், அதைச் சரிசெய்ய நம் நீதிமன்றங்கள் தவறுவதே இல்லை.
நம் தேசத்தில் ஜனநாயகத்தின் செயல்பாடு வாக்குச் சீட்டில்தான் தொடங்குகிறது. இந்தியர் ஒவ்வொருவருக்கும் வாக்குச் சீட்டு அளிக்கப்பட்டு அதன்மூலம் அவர் விரும்பிய அரசியல் கட்சியையும் தத்துவத்தையும் அதிகாரத்தில் அமர வைக்கும் அதிகாரம் தரப்படுகிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த இந்தியர் வாக்களிக்கிறார். பெரும்பான்மையைக் கொண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதுவே ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தின் துருப்புச் சீட்டே வாக்குச் சீட்டாகும்.
ஒரு இந்தியரை, இந்தியர்தான் என்று உறுதி கூறும் முதல் பெரும் சக்தி வாக்குச் சீட்டாக இருக்க, அண்மைக் காலத்தில் போலி வாக்குகள், போலி வாக்குச் சீட்டுகள் என்ற பேச்சு ஊடகங்களில் முன்னெடுக்கப்படுவது, நிச்சயமாக நம் மாபெரும் ஜனநாயக அமைப்புக்கு விடப்படும் பெரிய சவால் என்றால் அது பொய்யில்லை. நம் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் முதல் வழி போலி வாக்குகளாகத்தான் இருக்கும்.
அண்மையில் எதிர்க்கட்சியின் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் 57 லட்சம் பேர் போலியானவர்கள். மத்திய அரசு அதிகாரிகள், தேர்தல் பதிவு அதிகாரிகள், ஓட்டுச் சாவடி அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு ஆளுங்கட்சியினர் சேர்த்துள்ளனர். எனவே மத்திய அரசு அதிகாரிகளை நியமித்து, வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும்படி உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பது:
“வாக்காளர் - மக்கள் தொகை விகிதம் தற்போது 72 சதவிகிதம். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மட்டுமல்லாமல் விடுபட்டவர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
குறைபாடுகள் குறித்துத் தகவல் பெறப்பட்டால், உடனடியாக விசாரணை நடத்தி குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இறந்தவர்கள், இடமாற்றம் ஆனவர்கள், பல இடங்களில் பதிவான வர்களின் பட்டியலை, தி.மு.கழகம் வழங்கியது. அந்தப் பட்டியல், சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டும் விட்டது.
மனுதாரரின் முறையீடு மீது தேவையான நடவடிக் கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. தேர்தல் பதிவு அதிகாரிகள், ஓட்டுச்சாவடி அதிகாரிகள் போலி வாக்காளர் களைச் சேர்த்ததாகக் கூறுவதை மறுக்கிறேன்.”
நாம் காரணங்களுக்குள் புக விரும்பவில்லை.
போலி வாக்காளர்கள் எந்த காரணங்களால் போலிகள் ஆனார்கள் என்பதல்ல விஷயம். தமிழகத்தில் இன்றைய கணக்குப்படி வாக்களிக்க இருப்பவர்கள் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சம். தொகுதிகள் மொத்தம் 234. பதிவாகும் வாக்குகள் சுமார் 75 முதல் 80 சதம்.
இன்றைய ஆளும் கட்சியும் முந்தைய ஆளும் கட்சியும் இருமுனைப் போட்டி என்றால் தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். மும்முனைப் போட்டி என்றால் 70 முதல் 80 ஆயிரம் வாக்குகள் பெறவேண்டி இருக்கும், வெற்றி பெறும் வேட்பாளர். அப்படி வெற்றி பெறும் வேட்பாளர், அதற்கு அடுத்து வரும் வேட்பாளரிடம் சில ஆயிரம் வாக்குகள் பெற்றாலே வெற்றி பெற்ற வேட்பாளர் ஆகிவிடுகிறார்.
இந்த வெற்றியில் அல்லது தோல்வியில் போலி வாக்குகள் அல்லது கள்ள வாக்குகள் செல்வாக்கு செலுத்தியிருப்பதை முதல் பார்வையிலேயே புரிந்து கொள்ளலாம். இதன் அர்த்தம், வெற்றி பெற்றவர், நியாயமான முறையில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று சொல்ல முடியுமா என்றால் முடியாது. சட்டத்துக்கு உட்படாத போலி வாக்குகளால் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு அல்லது பாராளுமன்றத்துக்கு ஒருவர் செல்வது ஜனநாயகத்தை வெட்கம் அடையச் செய்து விடும்.
அதேபோல, தோல்வி அடைந்த வேட்பாளர் அரசியல் அல்லது தத்துவம் காரணமாக மக்கள் ஆதரவை இழந்தார் என்று இருப்பது சரி. ஆனால் போலி வாக்குகள் காரணமாகத் தோற்றார் என்றால் அது தேர்தல் என்று சொல்லப்படத் தகுதி இல்லாத தேர்தலாகிவிடும் என்பதில் இரண்டு விதமான கருத்துகள் இருக்க முடியாது.
நியாயமான, மனம் விரும்பி அளிக்கப்படும் வாக்குகளே வாக்குகளாகும். அல்லாத எதுவும் நியாயமான ஜனநாயகத்தை உருவாக்காது.
ஒரு தொகுதியில் பதியப்பட்ட பத்தாயிரம் போலி வாக்குகளால், சில ஆயிரம் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர், வெற்றி வாய்ப்பை இழந்தார் என்று சொல்வது நியாயம் இல்லை அல்லவா? அல்லது சில ஆயிரம் போலி வாக்குகளால் ஒருவர் வெற்றி பெற்றார் என்றால் அவர் பெற்ற வெற்றி, ஜனநாயகத்துக்குக் கிடைத்த தோல்வி அல்லவா? ஜனநாயகத் தோல்வி என்பது மக்களின் தோல்வி என்பதை மறந்துவிடக் கூடாது.
மக்களின் தோல்வி என்பது, நாம் பெற்ற சுதந்திரத்தின் தோல்வியாகும்.
பல மேசைகளில் அமர்ந்து சரிபார்த்து, ஒரு போலி வாக்காளர், தன் பெயரை வாக்காளர் பட்டியலில் சர்வ சாதாரணமாகப் பதிய முடியுமா என்றால் முடியாது. அந்தப் போலியாளர், தன் குடியிருப்பு பற்றிய ஆதாரம் முதலான பல படிவங்களை இணைக்க வேண்டும். அதற்கு பல அதிகாரிகள் ஒப்புகை அளிக்க வேண்டும். ஒரு விண்ணப்பம் பல பட்டியலைக் கொண்டு, சரிபார்த்து, பல அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பிறகே வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியும் என்றால், இத்தனை அதிகாரிகளின் தவறுகளுக்குப் பிறகுதான் ஒரு போலி வாக்காளர் இணைக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தமாகும். அப்படி என்றால் அரசின் நம்பகத்தன்மை என்னாவது? தவறுகளுக்குத் துணை போன அதிகாரிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவது நிகழ்ந்திருக்கிறதா என்பதையும் மக்களுக்கு விளக்குவது அரசின் கடமையாகும்.
இந்தியாவின் மிகப்பெரும் பலம், அதன் ஜனநாயகம். ஜனநாயகத்தின் முதல் படி, மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குரிமை. அந்த வாக்குரிமையில் போலி வாக்குகள் நுழைந்துவிடக் கூடாது. நுழைகிறது என்றால் நம் ஜனநாயகத்தின் அஸ்திவாரம் தகர்க்கப்படுகிறது என்று அர்த்தம்.

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions