c கவிதைகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கவிதைகள்

சக்திஜோதி

பறவைகளுக்காக விதைப்பவன்
அவன் தானியங்களை உற்பத்தி செய்பவன்
சேகரிப்பவன்
விதைக்கவும் அறுவடை செய்யவும்
நிலத்தைத் தேர்ந்திருந்தான்.
தானியங்களை பலநூறு மடங்காகப் பெருகப்
பண்ண
அந்த நிலத்தோடு உடன்படிக்கை
செய்து கொண்டான்
மழையென பொழியுமவன்
வருவோர் போவோருக்கெல்லாம்
முதிர்தானியத்தின் உணவையே பரிமாறினான்
மேலும்
அவன் விதைப்பது
பெயர் தெரியாத சின்னஞ்சிறு
பறவைகளுக்காகவும்                                                                              
தான்.


சொல் எனும் தானியம்
என்னை நேசிக்கிறேன்
என்னிலிருந்து துவங்குகிற என் காதல்
பறவையைப் போல திசையெங்கும் பறந்து
அன்பின் முதிர் தானியத்தை விதைக்கிறது.
தனிமையின் வெளி
அடர் கானகம்
கரும்பாறை
பாழ்நிலம்
பாகுபாடு ஒன்றும்  இல்லை
கட்டுப்பாடுகளின் பிடியில்
சிக்குண்டிருப்பினும்                                                                                            
காதலுக்கும் யதார்த்தத்திற்கும்
இடையே காற்றைப் போல ஊடாடிக்
கொண்டிருக்கிறேன்
என் சிறு புறாக்கள்
விடியல் துவங்குகிற அதிகாலையில்
தெளிவுடைய ஒற்றைச் சொல்லின்
திறவுகோலில்          
பரிதாபத்திற்கு உரிய ஓர் உயிரை
மீட்டெடுத்திருக்கும்.
என்னிலிருந்து
என்னை விடுவித்துக் கொள்கிறேன்
யாவற்றையும் நேசிப்பதன் வழியாக.

அன்பின் நிலம்
ஒரு பெண்
தன் எல்லாவற்றையும்  
ஒப்புக்கொடுக்கிறாள்                                                                                        
ஒன்றை உணர்த்த.
பெண் ஒருமை
பன்மையும் ஆகிறாள்
திசையெங்கும் பரவுகிறாள்
சூரியனுக்குக் கீழே உழைக்கிறாள்
நிலவுக்குக் கீழேயும்
வெட்கத்தை அர்ப்பணிக்கிறாள்
வசீகரிக்கும் சொற்களில் வசப்படுகிறாள்
தயை மிகுந்த அணைப்பில்     
மயங்கிக் கிடக்கிறாள்           
ஆயிரம் கரங்கள் விரித்து
உலகு புரந்தூட்டும் மாகாளி எனவும்
ஆவேச கணத்தின் கீறலில் கசிகிற            
ரத்தம் கண்டு
விண்ணோர் உணவு எனவும் களிகூர்கிறாள்
- சொல் எனும் தானியம்
(சந்தியா பதிப்பகம்)

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions