c நன்றொன்று சொல்வேன்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நன்றொன்று சொல்வேன்

தன்னை வருத்திப் பிறருக்கு உதவும்  பெண்கள்

கவிஞர் ச.விசயலட்சுமி

2015 ஆம் ஆண்டு எனக்கு ஆகப் பெரும் புதுப்புது அனுபவங்களைப் பெற்றுத் தந்தது. மே மாதம்  ஊடறு டொட் காம் எனும் பெண்களுக்கான இணைய இதழ் பெண்கள் சந்திப்பு நிகழ்வை ஒருங்கிணைத்தது. இலங்கை நுவரேலியாவில் ஊடறுவும் கொத்தகல கல்வியியல் கல்லூரியும் ஒருங்கிணைத்த இரண்டு நாள்  நிகழ்வும் பெண்களின் பல்வேறு கலைத் தன்மைகளை வெளிக்கொணர்வதாகவும் பெண்களின் சமகாலத்தில் அனுபவிக்கும் பிரச்சனைகள், அரசியலில், சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அதற்கான தீர்வு நோக்கிய விவாதங்கள் எனப் பேசுபொருள்கள் அமைந்தன.
இஸ்லாம் பெண்களுக்கான தனி அமர்வு சிறப்பாக அமைந்திருந்தது. நுவரேலியாவின் ஈரப்பதமும் தேயிலைத் தோட்டங்களும் கண்ணுக்கும் மனதிற்கும் இதமாயிருந்தன. தேயிலைத் தோட்டப் பெண்களின் வலிமிகுந்த வாழ்க்கை இன்னும் கண்ணில் நிழலாடுகிறது.
பெண்கள் முழுக்க முழுக்க தங்களுக்காக கலந்துரையாடியதோடு அந்த இரண்டு நாட்களில் மிகுந்த நெருக்கத்தை உணர்ந்தோம். அந்நிகழ்விற்காக கொத்தகல கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சந்திரலேகா கிங்ஸ்லி  நேர்த்தியான திட்டமிடலுடன் முகம் சுளிக்காத உடல் உழைப்பையும் அளித்தார்.
ஊடறு இணைய இதழின் ஆசிரியர் றஞ்சி சென்னை, மதுரை, மும்பை, மலேசியா, மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோழிகளை அழைத்திருந்தார். நாங்கள் கொழும்பிலிருந்து நுவரேலியா சென்று சேர்ந்தபோது நள்ளிரவை நெருங்கியிருந்தது. அந்நேரத்திலும் ஆர்வத்தோடு நிகழ்ச்சி நடக்கவிருக்கும் இடத்தைக் காட்டியதோடு தேநீர் வழங்கி அத்துனை குதூகலமாக அவர் காட்டிய அன்பு மறக்கவியலாதது. இரவும் பகலுமாக இரும்பு மனுஷியாக அவர் செயல்பட்டார்.
நடைமுறையில் வணிகமும் பண்பாடும் கட்டிய மைக்கிற பெண் குறித்தான கருத்தாக்கம், அவர்களது அழகு நளினம் சார்ந்தவையாக இருக்கிறது. நடைமுறை வாழ்க்கை கட்டியமைக்கிற பெண்ணின் வாழ்வியல் அவளை வேலைக்குச் சலிக்காத இரும்பு மனுஷியாக உருவாக்கி வைத்திருக்கிறது.
நிகழ்ச்சி முடிந்த பின் அங்கிருந்து யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால் பகுதிகளை எமக்கு நேரில் அழைத்துச் சென்று காட்டத் துணிந்த றஞ்சி, மிகுந்த அக்கறையோடும் பாதுகாப்பு உணர்வோடும் வழி நடத்தினார்.
பயணத்திற்கான வழிகாட்டியாக வரலாற்றுத் தடங்களை றஞ்சியும், யாழினியும் பகிர்ந்தபடி வந்தார்கள். கந்தகக் காற்றின் குருதி வீச்சத்தைக் கனத்த மனதோடு நுகர்ந்தபடி கொழும்பை அடைந்தோம். பிணைக்கப்பட்டிருந்த நாட்களை நினைத்து நினைத்து மனம் ஏங்குகிறது. நினைத்தாலும் தினசரி பேசிக் கொள்ளும் வாய்ப்புகள் அற்ற வேலைப் பளுவினதான வாழ்வில் மிக அரிதான விசாரிப்புகளோடு இருந்தாலும், எல்லைகள் கடந்து, கடல் கடந்து வாழ்பவர்களாயினும், எந்த ஒரு சுவரையும் இட்டு நிரப்பமுடியாத அடர்த்தி கொண்டவர்கள் எம் தோழியர்.  நாங்கள் ஒருவருக்கொருவர் உருகிச் செலுத்தும் அன்பும் நம்பிக்கையும் அலாதியானது.
இலங்கைப் பயணம் முடிந்து சென்னை வந்த பின் ஓரிரு நாட்களில் இமாச்சலப் பிரதேசத்தை நோக்கிய பயணம் துவங்கியது.
பயணம் வாழ்க்கையை மெருகேற்றுவது. பித்தளைப் பொருட்களைப் பளப்பளப்பாக தேய்த்து வைப்பதுபோல சற்றே பொலிவிழக்கும் வாழ்வின் நொடிகளை சட்டென துடிப்புமிக்கதாக மாற்றும் சக்தி பயணத்திற்கே உண்டு. இமாச்சலப் பிரதேசமும் காஷ்மீரும் எத்தனை முறை பயணித்தாலும் ஈர்ப்பை மேலும் அதிகப்படுத்தி வரும் பகுதிகள். புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது எனும் பாடலைப் பார்க்கும்போது பனிக்கட்டிகள் மீது பெருகும் ஈர்ப்பை நேரில் தீர்த்துக்கொள்ளலாம்.
1996 ஆம் ஆண்டு ஜம்மு, காஷ்மீர் வரை சென்று கடும் வெயிலைக் கண்டு மிரண்டு போயிருக்கிறேன். அதன் பின்னான பயணங்களில் பனிப்பொழிவின் மைனஸ் டிகிரி குளிரையும் பனி மழையையும் பார்த்திருக்கிறேன். இந்த ஆண்டு இமாச்சலில் காங்ரா மாவட்டத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். காலையும் மாலையும் கேட்கும் பறவைகளின் ஒலி கருவி இசைகளைத் தோற்கச் செய்பவை. அவ்வோசையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இரவில் குளிர் இருக்கும் சாளரங்களை மூடிவைத்துக் கொள்ளுங்கள் என விடுதிப் பணியாளர்கள் கூறினாலும் அதிகாலை பறவைகளின் கொஞ்சலைக் கேட்பதற்காக ஒரு சன்னல் கதவை மட்டும் திறந்தே வைத்திருப்பேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்கும் கொஞ்சல் சில நிமிடங்களில் பெருகிப் பெருகி அப்படியொரு ஜதி சேரும். அந்த ஒலியோடு, பனிமலைகள், பசுமைத் தாவரங்கள், தேயிலைத் தோட்டங்கள்  அத்தனை அழகையும் பார்க்கப் பார்க்க மனம் கொள்ளை கொண்ட பரவசம் படர்ந்தது. காங்ரா மாவட்டத்தில் ஒரு கிராமப் பகுதிக்குள் நுழைந்தேன்.
எல்லாப் பெண்களும் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தார்கள். கோதுமை அறுவடை செய்து மூட்டைகளாக தூற்றித் தூற்றிக் கட்டி அடுக்கினார்கள். மண்ணால் கட்டப்பட்ட குறுகிய வாயிலை உடைய வீடும், அந்த வாயிலுக்கு மேலாக உயரம் தாழ்ந்த மாடிப் பகுதியும் கண்டேன். ஆச்சரியம் அந்த வீட்டில் கதவுகளே இல்லை. அந்த வீட்டுப் பெண்களுடன் பேச விரும்பினேன். சில்லென காற்று வீசி படபடத்த தூறலில் அவரவர் வீடு நோக்கிப் பெண்களும் குழந்தைகளும் ஓடிவந்தனர். ‘இந்த மழை, வெயில், பனி ஆகியவற்றைச் சமாளிக்க என்ன செய்வீங்க?’ என்றேன். பெரிய மரப்பெட்டியும் கோதுமை மூட்டைகள் சிலவும் தான் அங்கிருந்தன. மரப்பெட்டியில் இருந்த கம்பளிப் போர்வைகளை எடுத்துக்காட்டி ‘இதுபோதும்’ என்றாள், பன்னிரண்டாம் வகுப்பு படித்த ரஜினி. அன்று அவளோடு தேனீர் பருகி விடை பெற்றேன்.
தர்மசாலா சென்று தலாய்லாமாவின் புத்தர் கோயிலைக் கண்டேன். தலாய்லாமாவைச் சந்திப்பதற்காக அனுமதிக் கடிதம் பெற்றிருந்த நண்பர்களுக்கு அவரது உடல்நிலை காரணமாக சந்திப்புகள் தவிர்க்கப்படுவதாக பதில் கிடைத்தது. திபெத்திய உணவகம் ஒன்றினைத் தேடிப்பிடித்து பசியாற்றிக் கொண்டோம்.
அடுத்து சிம்லாவை நோக்கிய பயணம், 15 மணிநேர கடும் பயணம். சிம்லாவில் நான் பார்த்து அதிசயித்த விஷயம் அங்கு சுற்றுலாப் பயணிகளால் குப்பைகள் சேர்ந்துகொண்டே இருந்தாலும் உடனுக்குடன் அகற்றப் படுகிறது. குடிநீர் தட்டுப்பாடும்,  கழிவுநீர் மேலாண்மையும் பெரும் சவாலாக இருப்பதாக அறிந்தேன். அங்கு துணை மேயராக தோழர் திக்கந்தர் பொறுப்பில் இருந்தார். அவரைச்  சந்திக்க விரும்புவதாக தெரிவித்தேன்.
நான் நகரின் பிரதான வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தபோது மக்களுடன் கைகுலுக்குவதும் காமரேட் என விளித்துப் பேசுவதுமாயிருந்தவரைப் பார்த்தேன். உடனே திக்கந்தருக்கு கைபேசியில் அழைத்து நான் இருக்குமிடம் சொன்னேன். மக்கள் மத்தியிலிருந்த காமரேட் அருகில் வந்து கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மக்களோடு மக்களாக நின்று அவர்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு தீர்த்துக் கொண்டிருந்தார். அவரது வேலைகளுக்கிடையிலும் அவ்வப்போது கிடைத்த சில நிமிடங்களை எம்மோடு உரையாடவும் உபசரிக்கவுமாக இருந்தார். பதற்றமில்லாமல் அதேநேரம் துரிதமாக அவர் பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த எளிமை அத்தனை அழகானது.
சிம்லாவில் இருந்து சென்னை திரும்பினேன். சென்னை இந்த ஆண்டு கோடையில் கடும் வறட்சியை சந்தித்தது. பள்ளி துவங்கிவிட்டது. பரபரப்பான வாழ்வின் ஓட்டத்திற்கிடையில் அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்ட் என்று வெப்ப நோய்களும் நோய்த் தொற்றுகளும் சென்னையில் அதிகமாக குடியேறியிருந்தன. லாரி களில் குடிநீர் வழங்குவதும் பிளாஸ்டிக் குடங்களின் பெருக்கமும் அதிகரித்தன. ‘மெட்ரோ வாட்டர் லாரிக்கு சொல்லியிருக்கேன்’  என அப்பார்ட்மண்டில் வசிப்பவர்கள் தண்ணீருக்கு அலைய, ‘இன்று தண்ணி லாரி வருதாம், அரைநாள் லீவு வேணும்’ என தண்ணீர் காலமாக மாறிய சென்னையில் மழை வராதா என மக்கள் வானம் பார்த்துக் கொண்டிருந்தபோது, சென்னையில் பெரும் மழை தாக்கும் அபாயம் இருப்பதாக இணையத்தில் வானிலை அறிக்கை சொல்வதாக மகள் பாரதி சொல்லிக்கொண்டிருந்தாள்.
இதோ வந்துவிட்டது மழை. வரலாறு காணாத மழையில்  கடலூர் மாவட்டம் தத்தளித்தது. அடிப்படைத் தேவைகளுக்கும் உணவுக்கும் தட்டுப்பாடு. யாரும் வேலைக்குப் போக முடியவில்லை. மழை அடி அடியென அடித்துத் தாக்கியது. தலைக்குமேலே வானம் கீழே பூமி என்பதெல்லாம் இந்நாட்களில் இல்லை. தலைக்குமேலே மழைநீர் தரைமேலே வெள்ளநீர், நீராலானது உலகு.  நட்புகள் ‘கடலூர் எழும்’ எனும் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து இயங்க ஆரம்பித்தோம். முதல் மழை ஓய்ந்து அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த மழை கூரையைப் பிய்த்துக்கொண்டு ஊற்றியது.
சென்னை நகரம் மிதக்கத் தொடங்கி பாலங்கள் உடையும் அபாயம். ஏரிகள் உடைப்பெடுத்து தனித் தீவான நிலையில் விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து விமான சேவை பாதித்தது. இதன் பின்தான் தேசியச் செய்திகளில் தமிழக மழை கவனம் பெறத் தொடங்குகிறது. வீட்டருகே ஓடும் கூவம் நதியைப் பார்ப்பதும், பாதிக்கப்பட்ட தெருக்கள் குறித்துப் பேசுவதும், செய்திகளைப் பார்ப்பதும், முகநூலிலும் வட்ஸ்அப்பிலும் நட்புகளை விசாரிப்பதுமாயிருந்த மக்கள் மனதை  லேசாக மரணபயம் ஆட்டத் தொடங்கியது. காரணம் மின்சாரம் இல்லை. தகவல் தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்து. நடந்து சென்று விசாரிக்க முடியாத அளவு வீடுகள் தனித்தனி தீவுகளாகிப் போயின. முகநூல் பார்த்தவர்கள் முகங்களைப் பார்க்கத் தொடங்கினர்.
மேடான பகுதிகளை நோக்கிப் படகு மக்களை அள்ளிக் கரை சேர்த்தது. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடியதெல்லாம் நடக்காது. இனி வசமாக மாட்டிக்கிட்டே என்பதாக பேய்பிடித்து ஆட்டுவதுபோல மழை ஆட்டுவித்தது. இயற்கை விடுத்த பெரும் சவால் இது.
எப்படி காப்பாற்றிக்கொள்வது?
மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்படாத என் வீட்டில் அவ்வப்போது மின்தடை இருந்தாலும் முகநூல் பார்க்க முடிந்தது. நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என அறியாத தவிப்பு. ஆங்காங்கே உதவி வேண்டும் என முகநூல் செய்திகள். ஒருவருக்கொருவர் உதவவேண்டும் என்பதன்றி வேறெந்த இலக்கும் இல்லாத காலம் இது.
மகள் பாரதியிடம் வாட்ஸ்அப்பில் குழு ஒன்றைத் தொடங்கச்  சொன்னேன். வீட்டை மழை காரணமாக பகிர்ந்துகொண்டதால் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து. உணவுத் தேவையை நிறைவேற்றுவதில் கவனம் குவிந்திருந்தது. இனி வீட்டுத் தேவையைப் பற்றிக் கவனம்கொள்ள வேண்டாம். இருப்பவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என காலை உணவு தயாரிப்பதோடு என் பணியினை நிறுத்திக்கொண்டு, ‘சென்னை எழும்’ குழுவினை ஒருங்கிணைக்கத் தொடங்கினேன்.
‘கொருக்குப்பேட்டையில் குழந்தைகளுக்குப் பால் தேவை, உதவி செய்யுங்கள்’ எனும் நிலைத்தகவல் பார்த்ததிலிருந்து தேடலும் தீர்வும் நோக்கிய பயணம் தொடங்கியது.
‘சென்னை எழும்’ குழுவில் களப்பணியில் மூன்று பெண்களின் பணி முக்கியமானது. வடசென்னைப் பகுதிக்காக களம் இறங்கிய ஹேமாவதி, தென்சென்னைப் பகுதிக்காக களப் பணியாற்றிய தீபா, வடசென்னை தென்சென்னை என்றில்லாமல் காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் உதவலாம் என ‘சென்னை எழும்’ பணிகளை விரிவாக்க உதவிய சாரா... இவர்களின் செயல்பாடு இப்போதும் தொடர்ந்தபடி இருக்கிறது.
முதல் மழைக்கே களத்தில் இறங்கிய ஹேமாவதி அவளது கைபேசிக்கு உயிர் கொடுத்திருந்தாள். அவளது பகுதியில் அம்மா தேவியோடு இணைந்து சமைத்து வீடுவீடாக உணவு வழங்கும் பணியிலிருந்தாள்.
‘சமைக்க கரண்டி பிடிக்கிற வேலையை இப்போது செய்யவேண்டாம். பல்வேறு இடங்களில் உணவு தரத் தயாராக இருக்கிறார்கள். செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது’ என்று அழைத்தேன். ஹேமாவதி, ‘ஹேம்ஸ்’ என்கிற பெயரில் முகநூலில் இருக்கும் ‘ஹேமா’ களப்பணி ஆற்றுவதில் மிகுந்த அர்ப்பணிப்பு உள்ளவர். இடுப்பளவு தண்ணீரில் கழிவுநீர் நாற்றத்தை மீறி களத்தில் இறங்கி வேலை பார்த்தார். தீபா கோட்டூர் பகுதியில் மூழ்கிய வீடுகளுக்கு மத்தியில்  பணியாற்றியவர். சாரா பெருங்களத்தூர் பகுதியிலிருந்து பரவலாக வெள்ளத்தில் இறங்கிப் பிணங்களை அகற்றத் தொடங்கியதில் ஆரம்பித்து  பரவலாகப் பணியாற்றி வருபவர்.
ஐம்பது குழந்தைகளுக்குப் பால் தேவை என்பதில் இறங்கிச் செயல்படத் தொடங்கிய ‘சென்னை எழும்’ குழு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான நிவாரணப் பொருட்களை வழங்கி இருக்கிறது.
இலங்கை, வடஇந்தியா, சென்னை அனைத்து இடங்களிலும் சந்தித்த பெண்கள் தேனீக்களாய் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் வெட்டிக் கதை பேசுவதும், வில்லத்தனமாய் சித்திரிக்கப்படுவது மான பொதுப்புத்தி மற்றும் ஊடக விஷவித்துகளைக் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது. எல்லைகளும் மண்ணும் மொழியும் மாறினாலும் உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பெண்களின் ஆளுமைத்திறனும் கடின உழைப்பும் சமூகத்திற்கான பங்களிப்பாக காலந்தோறும் இருந்து வருகிறது. சாலை போடும் பணிகளில், மேம்பாலம் கட்டும் பணிகளில், செங்கல் சூளைகளில், சித்தாள் வேலைகளில் என எங்கும் கடினமாக உழைக்கிற பெண்களைப் பார்ப்போம்.
நுவரேலியாவில் சந்திரலேகா தொடங்கி அன்றாடம் சந்திக்கிற உழைக்கும் பெண்கள் அனைவரும் தன்னை வருத்திப் பிறருக்கு உதவுபவர்கள். பெண்களைத் தாயாகவும் பார்க்க வேண்டாம், தெய்வமாகவும் தொழவேண்டாம், ‘பெருசா என்ன செஞ்சு கிழிச்சிட்ட’  என அடக்கி வைக்கும் ஆணாதிக்க வார்த்தைகளில் இருந்து வெளியேறி உழைப்பினை மதிக்கப் பழகுவோம்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions