c கண்டதைச் சொல்கிறோம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கண்டதைச் சொல்கிறோம்

கையேந்திபவன்

ஏழை எளியவர்களும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்த நமது மண்ணில் கையேந்தி பவன் எனும் சாலையோர உணவுக்கடைகள் காலத்தின் கட்டாயம்தான்.
பத்து ரூபாய் இருந்தால் போதும். காரசாரமாக இரண்டு இட்டிலிகள் சாப்பிட்டுவிடலாம். இருபது இருந்தால் இரண்டு தோசை. கையிருப்பைப் பொறுத்து ஆம்லேட், ஆப்பாயில், முட்டை தோசை, கொத்துப் பரோட்டா, வறுத்த கறி என ஒரு கட்டு கட்டலாம்.
மதியம் ஒரு முழுச் சாப்பாடு இருபதே ரூபாய்தான். ஒரு பொரியல், குழம்பு, காரக்குழம்பு, ரசம்  போதாதா! இரவுக்கு இரண்டு இட்டிலி, ஒரு ஆம்லேட், பதினெட்டே ரூபாயில் ‘யேவ்..யேவ்’ என்றுகொண்டே வீடு போய்ச் சேரலாம்.
காலையில் எழுந்து குளித்து, பட்டினியோடு சென்று, குழி விழுந்த கண்களோடு பைலுடன் திரும்பும் ஒரு வேலை தேடும் பட்டதாரிக்கோ,
நண்பரின் அறையிலோ, மேன்சனிலோ தங்கிக் கொண்டு குறைந்த சம்பளத்தில் குடும்பத்தின் எதிர்காலத்தையே தூக்கி நிறுத்தும் பொறுப்பைச் சுமந்து நிற்கும் ஒரு நடுத்தர இளைஞனுக்கோ,
மூட்டைத் தூக்கியோ, குப்பைப் பொறுக்கியோ காலத்தைத் தள்ளும் ஒரு கஷ்ட ஜீவனுக்கோ,
உறவுகளால் கைவிடப்பட்டு நிர்கதியாய் கையேந்தி நாட்களை ஓட்டும் வயதானவர்களுக்கோ,
காரசாரமாகச் சாப்பிட்டு வெகு நாளாகி நாக்கு

செத்துப்போன அரைகுறை வயிற்றுக்கோ ,  
தாயின் கரமாய் நின்று அமுதூட்டுபவை இந்தக் கையேந்தி பவன்கள்தான்.
எல்லாக் கையேந்தி பவன்களுமே ஏழை எளியவர்க்கு மட்டும்தான் என்று சொல்ல முடியாது. ஏகாந்தமான திறந்தவெளி, எளிமையாக நின்றுகொண்டே சாப்பிடும் சுதந்திரம் ஆகியவை காரணமாக இப்போது ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் இளைஞர்களும் அலுவலர்களும் கூட கையேந்தி பவனில் கை நனைக்கத் தொடங்கிவிட்டார்கள். சில ஏரியாக்களில் பலர் கார்களில் உட்கார்ந்தபடியே கையேந்திபவனின் ஆவியை ருசிப்போரும் உள்ளனர். பலர் ரெகுலர் வாடிக்கையாளர்களாகவும் இருக்கிறார்கள்.
சென்னையில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட கையேந்தி பவன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கையேந்தி பவன்களின் இத்தகைய பெருக்கத்திற்கு காரணம் என்ன!
1. சாதாரண ஓட்டலிலுள்ள உணவுக்கும் இதற்கும் உள்ள விலை வேறுபாடு.
2. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், சமயத்தில் பத்து ரூபாய்கூட கடன் சொல்லிக் கொள்ளலாம்.
3. நம்ம வசதிக்கு இரண்டு இட்டிலிகளும் நான்கு கரித்துண்டுகளும் பெரிய ஓட்டலில் முடியாது.
இப்படிப் பல காரணங்கள்.
நகரில் அதுவும் சென்னை போன்ற பெருநகரில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்களின் வயிறுகள் நம்பி இருப்பது இந்தக் கையேந்தி பவன்களைத் தான்.
சரி. நம் ஜனங்களின் அன்றாட வாழ்வுடன் இத்தனை நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள இக்கையேந்தி பவன்கள் எத்தனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா!
அசோக்பில்லரிலிருந்து தி.நகர் வழியாக மயிலாப்பூர் வரை ஒரு ரவுண்ட் அடித்தோம்.
ஓரளவிற்குப் பரவாயில்லை என்பதுபோன்ற ஒரு கையேந்தி பவன் அது! கடும் பசி போல. சற்று மிதமான கிறுகிறுப்புடன் வந்த ஒரு பெரியவர் ‘ரெண்டு இட்டிலி குடும்மா’ என்கிறார், காதடைக்க.
‘தரேன்’ என ஒரு தட்டை, ஏற்கனவே பலமுறை அலசப்பட்ட ஒரு குண்டான் தண்ணீரில் அப்படியே விட்டு எடுத்து மேலே ஒரு மைக்கா தாளைப் போட்டு அதில் இட்டிலிகளை வைத்து நீட்டுகிறார்.
அதை வாங்கிய பெரியவர் உட்கார இடம் தேடுகிறார். இல்லை. நிற்க நல்ல இடம் தேடுகிறார். இல்லை. எங்கும் குப்பை கூளமாகக் கிடக்கிறது. மூத்திர நெடி வயிற்றைப் புரட்டுகிறது. அதைப் பார்த்தால் முடியுமா! வயிறு இருக்கே!
ரோட்டுப் பக்கமாகத் திரும்பியபடி நின்றுகொண்டே சாப்பிடுகிறார். விக்கல். தண்ணீர் குடம் அருகே வந்து டம்ளரை உள்ளே விடுகிறார். டம்ளரில் நிறைய பருக்கைகள் மிதக்கின்றன. குடிக்கிறார். வேறு வழி.
‘ஒரு ஆம்லேட்டு’ என்கிறார்.
ஒரு குண்டானிலிருந்து எடுத்த விளக்குமாறால் தோசைக் கல்லைத் துடைத்துவிடுகிறார் மாஸ்டர். கல்     காயும் இடைவெளியில் மூக்கைச் சிந்திவிட்டு, பாக்கு எச்சிலைத் துப்பிய மாஸ்டர் வேட்டியில் கைகளைத் துடைத்துக்கொண்டு டம்ளரில் முட்டையையும் வெங்காயத் தையும் போட்டு ஆட்டுகிறார். மீசையில் புள்ளிகளாய் நிற்கின்றன சளி மொட்டுகள்.
அதற்குப் பக்கத்தில் சாப்பிட்ட தட்டுகள் குவிந்து கிடக்கின்றன. அதற்கும் அருகில் மைக்கா தாள்கள் ஒரு வாளியில் நிரம்பி இறைந்து கிடக்கின்றன. ஐந்தாறு நாய்க்குட்டிகள் அதை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன.
ஆம்லேட் வருகிறது.
சாப்பிட்டு முடிக்கிறார்.
கை கழுவப் போகிறார்.
அழுக்கு மொழுகிய பாதி கிழிந்த ரப்பர் குடம். காப்பி நிற தண்ணீரில் சிலபல மிதக்கின்றன. அதனாலென்ன, எடுத்து கழுவிக்கொண்டு, துண்டால் வாயைத் துடைத்தபடி யதார்த்தமாக சற்றுத் தள்ளி கண்களால் துலாவுகிறார். பத்து இருபது அடி தள்ளி அது சிறுவர்கள், பாலகர்கள் ஒதுங்கும் இடமென்பதற்கான தடயங்கள் தெறிகின்றன. ‘நம்ப விதி’ என தன்னை நொந்துகொண்டு பணம் கொடுத்துவிட்டுச் செல்ல நீட்டுகிறார்.
ஒரு வட்டாவிலிருந்து ஒரு கரண்டி நிறைய சில மாமிசத் துண்டுகளை எடுத்துத் தோசைக் கல்லில் போட்டு வதக்குகிறார்கள். அந்த இட்டிலித் தட்டிற்கும் பக்கத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மரக்காளான் மாதிரி காய்ந்து வத்திப் போய் கிடப்பது என்னவென்று தெரிகிறதா - மீன்கள், வறுத்த மீன்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவர் செல்கிறார்.
நாமும் நமது ரவுண்ட்டப்பை முடித்துவிட்டு கிளம்புகிறோம்.இது எல்லாமே வெறும் மேலோட்டமான கவனிப்புகள்தான்.
இங்கே பயன்படுத்தப்படும் எண்ணெய், மாமிசம், உணவுப் பண்டங்கள் எல்லாம் எந்தளவிற்குத் தரமானவை, இதன் தரத்தை ஆய்வு செய்ய வழி இருக்கிறதா? இருப்பின் ஆய்வு செய்யப்படுகிறதா?
கையேந்தி பவன்கள் பெரும்பாலும் கழிப்பிடத்திற்கு அருகிலோ, மூத்திரச் சந்து அருகிலோ இருப்பது ஏன்? வேறு இடத்தில் அமைக்க இயலாதா? அமைக்க இயலவில்லையா?
சில கையேந்தி பவன்கள் பிளாட்பாரத்தில் உள்ள டிரைனேஜ் வட்டத்திற்கு அருகிலேயும் அதன் மேலேயும் உண்டு. இங்கு பயன்படும் கழிவு நீர் அதில் போய் விழ சற்று அதை அகலமாக உடைத்தும் விட்டிருக்கிறார்கள். துற்நாற்றமும் கொசுவும் வராதா? கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் உணவில் படராதா? இது சுகாதாரம்தானா?
அவ்வழியே போகிற உயர் அதிகாரிகள், பொதுப்பணி சேவகர்கள் இதையெல்லாம் பார்க்கிறார்களா இல்லையா? அல்லது பார்த்தும் கவனத்தில் படாத மாதிரிப் போகிறார் களா?
குப்பைகள் தினமும் அள்ளப்படுகிறதா?
இந்த கையேந்தி பவன்களையெல்லாம் முறைப்படுத்தவே முடியாதா? குறைந்தது இக்கையேந்தி பவன்களை அமைக்கும் இடம், குடி தண்ணீர் போன்ற வசதிகளையாவது அரசால் தர முடியுமா? அதற்கான செயல்பாடுகள் வகுக்கப் பட்டுள்ளனவா? இல்லையெனில் இனி உருவாக்கலாமே?
என ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
இந்தியாவை தூய்மை தேசமாகக் கனவு காணுகிற நாம் நமது மக்களின் சுகாதாரத்தையும் அன்றாட வாழ்வுத் தேவைகளையும் அலட்சியம் செய்யத் தகாது என்றே நாம் இக்கேள்விகளை முன்வைக்கிறோம்.
அரசையோ ஜனங்களையோ மாற்றிமாற்றிக் குறை சொல்லிப் பிரையோஜனமில்லை. எல்லாவற்றையும் நெறிப் படுத்த வேண்டும். நேராக்கவேண்டும். சுற்றுப் புறத்தையும் ஜனங்களையும் நல்லவற்றுக்குப் பழக்க வேண்டும். தேச ஒழுங்குக்கு சகல தரப்பிலும் கச்சிதம் வலியுறுத்தப்பட வேண்டும். ஜனங்களின் வாழ்வு தரமாகவேண்டும்! அவ்வளவுதான்.
கையேந்தி பவனங்களோ, உழைக்கும் மக்களோ நமக்கு என்றுமே எதிரிகளல்ல!

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions