c எங்கள் தேவை கல்வியும் வேலைவாய்ப்பும் இடஒதுக்கீடும் தான்!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

எங்கள் தேவை கல்வியும் வேலைவாய்ப்பும் இடஒதுக்கீடும் தான்!

- திருநங்கை ரேவதி

திருநங்கைகளின் வலிகளைச் சொல்லும் ‘உணர்வும் உருவமும்’, தன்வரலாறான ‘வெள்ளை மொழி’ ஆகிய புத்தகங்களின் மூலம் பரவலாக கவனம் பெற்றவர் திருநங்கை ரேவதி. திருநங்கைகளின் வாழ்வுரிமைகளுக்காக ‘சங்கமா’ என்ற சேவை நிறுவனத்தின் இயக்குநராக 2008 முதல் 2010 வரை இருந்தவர். வெள்ளை மொழி நூல் இதுவரை 85 முறை நாடகமாக மேடையேறியிருக்கிறது. அவரது பாத்திரத்தில் அவரே நடித்தும் வருகிறார். சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். பல்சுவை காவியத்திற்காக அவருடன் உரையாடினோம்.

உங்கள் பூர்வீகம், பெற்றோர், குடும்பச் சூழல் ஆகியவற்றிலிருந்து தொடங்கலாமா?

நாமக்கல் அருகே உள்ள ஒரு சின்னஞ் சிறிய  கிராமம்தான் நான் பிறந்த பூமி. என் உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா மற்றும் மூன்று அண்ணன்கள். அப்பா லாரி டிரைவர். நடுத்தரக் குடும்பம்தான் எங்களுடையது.

உங்களை நீங்கள் திருநங்கையாக உணர்ந்த போது சுற்றத்தார் மற்றும் சமூகத்தின் புரிதல் எப்படி இருந்தது?
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதுதான் எனக்குள் இருந்த அவளை நான் கண்டறிந்தேன். அந்த பெண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியது அப்போதுதான். இந்த சமூகம் ஒரு வரையறையை வகுத்து வைத்திருக்கிறது. அந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர்களை அது ஏற்றுக்கொள்வதில்லை. பிறப்பால் நான் ஓர் ஆண். ஆணாகப் பிறக்கிறவன் அதற்கான நடை, உடை, பாவனைகளோடுதான் இருக்கவேண்டும் என்றுதான் அது நினைக்கிறது. சமூகம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடிவாளத்தைக் கட்டியிருக்கிறது. அதன் வழியாக மட்டும்தான் பார்க்கவேண்டும். வேறு திசையில் நம் பாதை திரும்புவதை அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது. உணர்வுகள் என்பது வேறு. அது எந்த வரையறைகளுக்கும் உட்படாத ஆன்மா. உணர்வுகளை மதிக்கவேண்டுமே தவிர சமூகத்தின் பார்வையைக் கண்டு அஞ்சக்கூடாது. ஒட்டுமொத்த சமூகத்தின் ஒரு துளிதான் என் குடும்பமும். அதனால் என் வீட்டாரும்கூட என்னை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. மிக நெடிய போராட்டத்துக்குப் பின்னர்தான் ஏற்றுக் கொண்டார்கள்.
திருநங்கையாவதற்கு முன்பு?
பிறப்பிலிருந்தே அத்தன்மை எனக்குள் இருந்தி ருக்கிறது. எங்கள் ஊரில் நடைபெறும் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நாடகம் நடத்துவார்கள். அந்நாடகத்தில் பெண் கதாபாத்திரத்தைத் தேர்ந் தெடுத்து நடித்தேன். பெண்ணாக வாழவேண்டும் என்கிற ஏக்கத்தை அந்நாடகத்தின் மூலமாவது தீர்த்துக்கொள்ளலாம் என்பதற்காகக்கூட இருக்கலாம். அது வேடம் அல்ல, அதுதான் நான். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.


செயல்பாட்டாளராக நீங்கள் மாறிய தருணம் எது?
நான் திருநங்கையாக என்னை உணர்ந்து கொண்டதற்குப் பிற்பாடு முதலில் குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டேன். அதன் பிறகு மும்பை சென்று பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். மும்பையில் சில ஆண்டுகளும், பெங்களூரில் ஐந்து ஆண்டுகளும் பாலியல் தொழிலாளியாக இருந்தேன். அப்போது காவல் துறையாலும், ரௌடிகளாலும் எனக்குத் தொடர்ந்து நெருக்கடிகள் வந்தவண்ணம் இருந்தன. எனக்கு மட்டுமல்ல திருநங்கைகள் எல்லோரும் எதிர்கொள்கிற சிக்கல்தான் இது.
திருநங்கைகள் அமைப்பு சார்ந்து இருக்கும்போது இதுபோன்ற நெருக்கடிகளிலிருந்து விடுபடமுடியும் என்று தோன்றியது. இளவர்தி மனோகர் என்பவர் 1999 ஆம் ஆண்டு ‘சங்கமா’ பாலினச் சிறு பான்மையினரின் ஆவணங்களைத் திரட்டும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். அந்த அலுவலகத்தில் உதவியாளராய் இணைந்தேன். பாலினச் சிறுபான்மையினர் குறித்த செய்திகளைத் தொகுத்து ஃபைல் செய்வது எனது முக்கியமான வேலையாக இருந்தது.
அப்போதுதான் பாலினச் சிறுபான்மையினர் நாளுக்கு நாள் எப்படிப்பட்ட அடக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள், அச்சமூகமே வாழ்வாதாரமின்றித் எப்படித் தவிக்கிறது என்பதையெல்லாம் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னுடைய சமூகத்துக்கு நான் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தேன்.  ‘சங்கமா’ என்பது உதவி நிதியைக் கொண்டு இயங்கும் ஓர் அமைப்பு. இந்த அமைப்பு முறையால் மட்டுமே சமூகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஒன்றுதிரண்டு குரல் கொடுக்கும் நிலையில்தான் அந்த விடுதலை சாத்தியமாகும்.
எனது சொந்த வாழ்க்கை அனுபவம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. தலித் மற்றும் ஆதிவாசிப் பெண்கள் குழுவுடன் இணைந்து வேலை செய்தபோது இந்த ஆட்சி அதிகாரத்தின் மீதான விமர்சனப் பார்வை எனக்கு வலுவானது. திருநங்கைகள் மட்டுமல்ல பெண்களும் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்பதை நேரடியான அனுபவத்தின் மூலம் உணர்ந்திருந்தேன். ஆதிவாசிகளின் நிலத்தைப் பலரும் ஆக்கிரமித்திருந்தனர். அதை மீட்பதற்கான போராட்டத்திலும் பங்கு கொண்டிருக்கிறேன். திருநங்கை களுக்காக மட்டும் போராட நான் வரவில்லை. ஒட்டுமொத்தச் சமூக மாற்றம்தான் எனது பணி.
சமூகம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அந்த அமைப்பின் தலைமையை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களே அதை வழி நடத்திச் செல்லட்டும் என்கிற நோக்கில் ‘சங்கமா’ ஒருங்கிணைப்பில் பாலினச் சிறுபான்மையினருக்காக,  அரசால் நடத்தப்படும் ஹெச்.ஐ.வி விழிப்புணர்வுப் பணிகளைச்  செய்ய ‘சமரா’, சட்ட ரீதியான மாற்றங்களுக்காகப் போராட ‘கர்நாடகா பாலினச் சிறுபான்மையினர் ஃபாரம்‘, ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பாலினச் சிறுபான்மையினருக்காக அரசாங்கத்தின் சேவை களைப்  பெற ‘சாதனே’, பெண் மற்றும் திருநங்கைகள் பாலியல் தொழில் புரிவோர் உரிமைகளுக்காகப் போராட ‘செக்ஸ் ஒர்க்கர் யூனியன்’, ஓர்பால் மற்றும் இருபால் ஈர்ப்புடைய பெண்கள் மற்றும் திருநம்பிகள் உரிமைகளுக்காகப் போராட ‘லெஸ்பிட்’, என ஐந்து சமூக அமைப்புகளை உருவாக்கினோம். ‘சங்கமா’ இதை ஒருங்கிணைத்தாலும் யாருடைய ஆதரவும் இன்றி தனித்துப் போராடக்கூடிய வலு ஒவ்வொரு அமைப்புக்கும் இருக்கிறது.
தவிர, நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் எப்போது இணைந்தேனோ அப்போதி லிருந்தும்,  அகில இந்திய தேசிய மாதர் சம்மேள னத்துடன் (ழிதிமிகீ) பல ஆண்டுகளாக இணைந்தும்  திருநங்கைகள் மற்றும் பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். இந்த மாதர் சம்மேளனத்தில் உறுப்பினராகவும் இருக்கிறேன்.


சமூகத்தின் மேல் எழுந்த கோபம், வெறுப்பு, கேள்வி ஆகியவைதான் உங்கள் எழுத்துக்கான அடித்தளமா?
நிச்சயமாக, என்னுடைய வலிகள்தான் வரிகளாக மாறுகின்றன. எந்தக் கூட்டத்துக்குச் சென்றாலும் ஐந்து நிமிடங்கள்தான் பேச முடியும். அந்த குறைந்த நேரத்துக்குள் முழுமையான கருத்தைச் சொல்ல முடியாது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த இன்னல்கள் எல்லாம் எனக்கு நடந்தது மட்டுமல்ல. திருநங்கைகள் ஒவ்வொருவரும் அன்றாடம் அனுபவித்து வருகின்றவைதான். இதைப் பரவலாக எடுத்துக்கொண்டு போக இருக்கிற ஒரே வழி எழுத்துதான்.
அதன் வெளிப்பாடாகத்தான் 2004 ஆம் ஆண்டு  ‘உணர்வும் உருவமும்’ என்கிற நூலை சங்கமாவில் இருக்கும்போது எழுதினேன். திருநங்கைகளைப் பற்றி திருநங்கையே எழுதிய முதல் நூல் அதுதான். தமிழகத்தில் வாழும் 30 திருநங்கைகளை அதில் பேட்டி கண்டிருந்தேன். தெஹல்கா பத்திரிகையில் அப்புத்தகத்துக்கான விமர்சனம் வந்த பிறகு பென் குயின் புக்ஸ் நிறுவனத்தினர் என்னைத் தொடர்பு கொண்டனர். ‘உணர்வும் உருவமும்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் என்றார்கள். அச்சம யத்தில் நான் எழுதிக் கொண்டிருந்த சுயசரிதையான ‘வெள்ளை மொழி’ நூலை மொழிபெயர்க்கலாம் என்றேன். அதன்படியே 2010 ஆம் ஆண்டு எனது ‘வெள்ளை மொழி’ சுயசரிதை வ.கீதா மொழிபெயர்ப்பில் ‘த ட்ரூத் அபோட் மி’ (The Truth About Me) என்கிற பெயரில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக கன்னடத்தில் ‘பதுக்கு பயலு’ என்றும், மலையாளம் மற்றும் தெலுங்கில் ‘ஹிஜரா ஒப்பல ஆத்ம கதா’ என்றும் மொழிபெயர்க்கப்பட்டது. கண் தெரியாதவர்களுக்காக ஒலி வடிவத் தட்டும் வெளி வந்தது.
‘உணர்வும் உருவமும்’ நூல் வெளியான போதே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தொடர்பு கிடைத்தது. அவர்கள்    என்னுடைய நூலைப் பரவலாக எடுத்துச் சென்றார்கள். ஆங்கிலம், மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் இந்தியாவின் 320 பல்கலைக்கழக நூலகங்களில் அந்த நூல் இருக்கிறது. 20 பல்கலைக் கழகங்களில் துணைப்பாடமாகவும் அதை வைத்திருக்கின்றனர்.
வரும் மே-21ஆம் தேதி லண்டனில் மிகப்பெரிய கலைவிழா ஒன்று நடக்கவுள்ளது. நான் எழுதிய ‘உணர்வும் உருவமும்’, ‘வெள்ளை மொழி’ மற்றும் தற்போது வெளிவரத் தயாராக உள்ள திருநம்பிகள் பற்றிய புத்தகம் ஆகிய நூல்கள் பற்றிப் பேச உள்ளேன். அதே நிகழ்வில் இன்னொரு அமர்வில் எபோவ்ட் இந்தியா (About India) எனும் தலைப்பிலும் பேசவுள்ளேன். ஒரு காலத்தில் எந்த அடையாளமும் இல்லாமல் இருந்த எனக்கு, பாஸ்போர்ட் கிடைத்தும் பங்களாதேஷ், இலங்கை தவிர வேறெங்கும் செல்லமுடியாமல் இருந்த எனக்கு இது பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் என் எழுத்துதான். இதைவிடப் பெரிய விசயமோ விருதுகளோ எனக்கு எதுவுமில்லை.


கடந்த 20 ஆண்டுகளில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் மேல் சமூகம் கொண்டுள்ள பார்வை மாறியுள்ளதா? அவர்கள் எல்லா உரிமைகளும் உள்ள சமூகப் பிரஜைகள்தான் என்பது எந்தளவுக்கு அரசாலும் சமூகத்தாலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது?
நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பெண்ணியவாதிகள், எழுத்தாளர்கள், களப் போராளிகள் எனப் பலரும் எங்களுக்கு ஆதரவான குரலை எழுப்பியும், அது குறித்து எழுதியும் வருகின்றனர். நெடிய போராட்டத்துக்குப் பின்னர்தான் ‘மூன்றாம் பாலினம்’ என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம். திருநங் கைகள் சமூக மாற்றத்துக்கான கொள்கைகள், மற்றும் புதிய சிந்தனைகள் உதயமாகி வருகின்றன. முதலில் பெற்றோர்கள் தங்களது மகனுக்குள் பெண்மையைக் கண்டறிந்தால் அந்த உணர்வுகளுக்கு மரியாதை அளித்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இச்சமூகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? குடும்பத்துடன் இணைந்த வாழ்க்கை திருநங்கைகளுக்கு வேண்டும். அப்போதுதான் அவர்களால் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
பாலியல் கல்வி அவசியம். அதன் மூலம்தான் இது குறித்த புரிதலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும். அந்தப் புரிதலை ஏற்படுத்தினோமென்றால் தீண்டாமை இருக்காது. வாழ்வதற்கும், சாதிப்பதற்கும் பாலினம் எந்த விதத்திலும் தடையாக இருக்காது. இருக்கக்கூடாது. இன்றைக்கு ஒவ்வொன்றையும் போராடித்தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.


போலீஸ் அதிகாரி, கல்லூரி முதல்வர், சட்டமன்ற வேட்பாளர் என திருநங்கைகளுக்கு சமீபகாலமாக கிடைத்து வரும் அங்கீகாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இலைமறை காயாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு களத்தில் இறங்கி குரல் கொடுக்கிறார்கள். என்னை மாதிரி நிறைய பேர்களின்  போர்க்கொடிக்குப் பிறகு கிடைத்த வெற்றி இது. என்ன இருந்தாலும், எத்தனைப் பெரிய பதவியில் இருந்தாலும் எங்களைப் போன்றவர்களால் சராசரி வாழ்க்கையை வாழ முடியுமா?  திருமணம் செய்துகொண்டு சமூகத்துடன் கலந்து வாழ முடியாத சூழ்நிலைதானே இருக்கிறது. திருச்சி சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதாவைத்தான் சட்டமாக்க வேண்டும். பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அரசு உதவ வேண்டும்.


திருநங்கைகள் வாழ்வின் பிரச்சனைகள் புரியாமல் எடுக்கப்படும் சினிமாக்கள் மேல் வழக்கு தொடுத்தும் போராட்டம் நடத்தியும் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் சட்ட நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கிறீர்களா?
திருநங்கைகள் மட்டுமல்ல பெண்களையும் சேர்த்து தான் இழிவாகக் காட்டுகிறார்கள். ‘அடிடா அவளை உதைடா அவளை’ போன்ற பாடல்களெல்லாம் என்ன? பெண்களுக்கு என்றைக்கு சம உரிமை கொடுக்கப்படுகிறதோ, திருநங்கைகளுக்கும் அன்றைக்கு தான் வரும். சம உரிமை என்பது எழுத்தளவில் மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் இருக்க வேண்டும். எல்லா இயக்குநர்களையும் நாம் அப்படிச் சொல்லிவிட முடியாது. ‘தெனாவட்டு’ படத்தின் இயக்குநர் கதிர் திருநங்கைகளை பெருமைப்படுத்தி காட்சி அமைத்து அதில் என்னை நடிக்கவும் வைத்திருந்தார். பம்பாய் படத்தில் மணிரத்னம், காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் என சில இயக்குநர்கள் திருநங்கைகளுக்கு உயர்வான மதிப்பீட்டைக் கொடுத்திருக்கின்றனர். சினிமா என்பது அதிக மக்களைச் சென்றடையும் ஓர் ஆயுதம். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற அறிவு இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் திருநங்கைகளைப் போதைப் பொருளாகப் பார்க்கிற மனப்பான்மைதான் திரைப்படங்களில் வெளிப்படுகின்றது.


அரசு திருநங்கைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
கலைஞர் ஆட்சியில் வீடு கொடுத்தார்கள், மேலும் வங்கிக் கடனும் ஓரளவுக்குக் கிடைக்கிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொடுக்க வேண்டும். பல போராட்டங்களுக்குப் பிறகு எஸ்.பி ஆகியிருக்கும் யாழினி போன்று எத்தனையோ பேரது பெருங்கனவுகளைப் பாழாக்கிவிடக் கூடாது. பெரும்பாலானவர்கள் ‘பாலியல் தொழிலை விட்டு விட்டு கண்ணியமாக வாழுங்கள்’ என்கிறார்கள். இங்கு கண்ணியம் என்றால் என்ன? என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். நான் பாலியல் தொழிலாளியாக இருந்தபோது சம்பாதித்ததை வைத்து தான் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கண்ணியத்தை எங்களுக்கு கற்றுத்தரும் அவர்கள் எங்களது வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக வேலை கொடுத்தார்களா? என்ன செய்தார்கள்? நாடெங்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ஊழல், கல்விக் கொள்ளை என பரவிக் கிடக்கிறது. இதெல்லாம் கண்ணியமா? ஒட்டுமொத்த சேற்றையும் எங்கள்மீது இறைத்துவிட்டு அவர்கள் தங்களைக் கறை படியாதவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
முதலில் எங்களது அடிப்படைச் சிக்கலைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


நிறைய களப்பணி செய்திருக்கிறீர்கள், மறக்க முடியாத சம்பவம் எதையேனும் பகிரலாமே?
எழுத்தாளராக என் சொந்த வரலாற்றை எழுதினேன். எனது கதை நாடகமாக 85 முறை அரங்கேற்றப்பட்டது. அந்த அரங்கேற்றத்தில் நானே என் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். அப்போது பல பார்வையாளர்களைச் சந்தித்தது மறக்க முடியாத நிகழ்வு. கலை எனும் வடிவத்தால் எளிதாக மனதைத் தொட முடியும் என நம்புகிறேன்.


இறுதியாக...?
சாதி, மதம், இனம், மொழி, நிறம் கடந்து மனிதர்களாக வாழ வேண்டும். இவற்றின் காரணமாக மனிதநேயம் வீழ்ந்து விடக்கூடாது.
நேர்காணல் : அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions