c தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குறுந்தொடர்-3
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குறுந்தொடர்-3

நிலம் எழுதிய கவிஞன்

பழநிபாரதி

‘உழவே தலை’ என்று சொன்னான் வள்ளுவன். அந்தத் தலைகள் கடனில் மூழ்கிக் கிடக்கின்றன. அடிக்கடி அங்கங்கே தூக்கில் தொங்குகின்றன.
‘உழவனே உலகிற்கு அச்சாணி’ என்றான். அந்த ஆணிகளாலேயே அவன் அறையப்பட்டுத் துடிக்கிறான்.
அவன் இந்த மண்ணை ஒரு பெண்ணைப் போல் காதலித்தவன். நடவுப் பாட்டு, முளைப் பாரிப் பாட்டு, குலவைப் பாட்டு, ஏற்றப் பாட்டு என்று அவளுக்கேற்ற பாட்டுப்பாடி அவளைப் பூப்போல மலர வைத்தவன்.
மார்பில் மண்புழுக்கள் கூச, இடையில் மீன்கள் துள்ள, அடிவயிற்றில் நண்டுகள் ஊர அவளது பச்சை மேனியில் மழையின் முத்தங்களைப் பரிசளித்தவன். இன்று பசித்த தனது அடிவயிற்றில் ஓர் ஈரத் துணியைக்கூட கட்டிக்கொள்ள முடியாதவனாக இருக்கிறான்.
இன்று தொழில்மயமான நகரங்களில் வீட்டு வேலை செய்கிறவர்கள், கூலி வேலை செய்கிற வர்கள், சாலைப் பணியாளர்கள் என்று யாரைப் பார்த்தாலும் அவர்கள் பெரும்பாலும்  முன்னாள் விவசாயிகளாகத்தான் இருக்கி றார்கள்.
தாய்த்தொழிலான விவசாயத்தை அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்களும் நில விற்பனைத் தொழிலும் அவர்களைத் தவணைமுறையில் கொன்று கையாலாகாதவர்களாகக் கிராமங் களிலிருந்து துரத்திவிட்டது.
முத்துராமலிங்கத் தேவர் தன் கடவுச் சீட்டில் (பாஸ்போர்ட்) தன்னை ஒரு விவசாயி என்று பெருமையுடன் தனது தொழிலைக் குறிப்பிட்டு இருக்கிறார். இன்று விவசாய வருமானத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகைவரை வருமான வரி கிடையாது என்று சலுகை இருப்பதால் பல அரசியல்வாதிகள் விவசாயிகளாக வேஷங்கட்டி இருக்கிறார்கள். எல்லாத் தொழில்களுமே இவர்களுக்கு விவசாயம்தான்.
இந்திய நிலங்களின் வேளாண்மையில் டிராக்டரை அறிமுகப்படுத்தலாமா என்று 1930களில் ஒரு விவாதம் எழுந்தது. “டிராக்டர் நல்லாத்தான் உழும். ஆழமாகக் கூட உழும். ஆனால் நமது மாடுகளைப் போல சாணி போடாதே’’ என்றார் ஜே.சி. குமரப்பா. இவர் காந்தியின் பொருளாதார ஆலோசகர்.   மாடுகளும் சாணியும் நமது நிலத்திற்கு எத்தணை முக்கியம் என்பதுதான் இந்த விவாதத்தின் உட்பொருள். டிராக்டர்கள் மாடுகளைத் துரத்திவிட்டன. உழவுமாடுகள் அடிமாடுகளாகி சோறுடைத்த சோழநாட்டிலிருந்து சேர நாட்டிற்குப் போய்க் கொண்டிருக்கின்றன. டிராக்டர்கள் மாடுகளை மட்டுமா விரட்டின?
“விவசாயி விவசாயி
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி!


முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து
முழு மூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்துப் பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி”

என்று ‘விவசாயி’ படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு டிராக்டரில் வயல்வெளியில் விவசாய வாழ்வின் உன்னதத்தைப் பாடிக்கொண்டே வருவார். மருதகாசியின் பாடல் இது.
இப்போது எனக்கு முன்னால் அந்த டிராக்டர் இல்லை. எம்.ஜி.ஆரும் இல்லை. வேறொரு டிராக்டர் நிற்கிறது. அந்த டிராக்டரில் தஞ்சை சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்கிற விவசாயியை வங்கி ஊழியர்களும் காவல்துறையினரும் தாறுமாறாகத் தாக்குகிறார்கள்.
அரியலூர் ஓரத்தூர் கிராமத்தில் இன்னொரு டிராக்டர் நிற்கிறது. அதன் தனிமை தன் விவசாயி செல்வத்தைத் தேட, அதற்கு முன்னால் அவர் உடல் தூக்கில் தொங்குகிறது. இருவருமே டிராக்டருக்காக வாங்கிய கடனில் இரண்டொரு தவணைத் தொகைகளைக் கட்டவில்லை, அவ்வளவுதான்.
கணக்கில் வராத பல லட்சம் கோடி கருப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் கிடக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தப் பணத்தை மீட்டெடுப்பார்கள் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே பல ஆயிரம் கோடிப் பணத்தை நம் வங்கிகளில் கடனாக வாங்கிக் கொண்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட் டுக்குத் தப்பிவிடுகிறார் ஒரு பெருமுதலாளி. அவரது ஆகாய விமானம் பறந்த வெளியில் நமது சட்டங்கள் வெறும் பட்டங்களாகக் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.
இந்தியா ஒரு விவசாய நாடென்பது பழங் கதையாகிவிட்டது. இந்தியா ஒரு விவசாய நாடா இல்லையா என்பதைப் பூவா தலையா போட்டுப் பார்த்தால், தலை விழுந்தால் அது விவசாயியின் தலையாகத்தானிருக்கும். பூ விழுந்தாலும் அது அவனது மனைவியின் கூந்தலிலிருந்து உதிர்கிற பூவாகத்தான் இருக்கும்.
“என்ன வளம் இல்லை இந்தத்
திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும்
வெளிநாட்டில்?
ஒழுங்காய் பாடுபடு
வயல்காட்டில்
உயரும் உன் மதிப்பு
அயல்நாட்டில்”

என்று பாடிய மருதகாசியின் வார்த்தைகள் தண்ணீரற்ற காவிரிப்படுகையில் தாகத்தில் செத்துக்கிடக்கின்றன.
ஓர் உழவன் மண் வெட்டும்போது அவனுக்கு அவனே குழிவெட்டுவது போல இருக்கிறது. அவன் நாற்று நடும்போது அவனது கல்லறையில் அவனே பூ வைப்பது மாதிரி இருக்கிறது. மண்ணுக்கு மேலே வாழ முடியாமல் போன விவசாயிகள், மண்ணுக்குக் கீழே புரண்டு படுக்கும் உயிர்நடுக்கம்தான் அங்கங்கே நிகழும் நிலநடுக்கம் என்று நான் நினைக்கிறேன்.
“ஏர்முனைக்கு நேர்இங்கே எதுவுமே இல்லை
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை”

என்று எந்த விவசாயியும் இன்று வாய்விட்டுப் பாட முடியாது. இதுவும் மருதகாசியின் பாடல் தான்.
தமிழ்த்திரையிசைப் பாடல்களில் விவசாயக் கலாச்சாரத்தை அந்த நிலத்தின் கருப்பொருள், உரிப்பொருள் இரண்டோடும் இரண்டறக் கலந்த பாடல்களைப் படைத்திருப்பவர் திரைக்கவித் திலகம் மருதகாசி. 35 ஏக்கர் நிலம்கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து கடைசிவரை விவசாயியாகவே அந்த மணமும் குணமும் மாறாமல் இருந்தவர் இந்த மருதநிலத்தின் கவிஞர்.
‘நல்லவன் வாழ்வான்’ என்றொரு படம். எம்.ஜி.ஆர். நடித்தது. அந்தப் படத்தில் அப்போது புதிதாகப் பாடல் எழுத வந்திருந்த கவிஞர் வாலி ஒரு பாடல் எழுதியிருந்தார். அந்தப் பாடலின் பதிவு தடைபட்டுக்கொண்டே இருந்தது. இதை சகுனத்தடை என்று நினைத்து அந்தப் பாடலை மருதகாசியை எழுதச் சொன்னார் இயக்குநர்                ப.நீலகண்டன்.
‘சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்’ என்று வாலி எழுதிய வரிகளைக் கேட்டு வாங்கிப் பார்த்த மருதகாசி, ‘‘இந்தப் பையன் நல்லாதானே எழுதியிருக்கான். இந்தப் பையன் வாழ்க்கை என்னால் கெடக் கூடாது. அதை நான் செய்ய மாட்டேன். இதையே பதிவு செய்யுங்கள்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார். இதுதான் விவசாயி மனம்.
‘மக்களைப் பெற்ற மகராசி’ என்கிற படத்தில், விவசாயப் பொருளாதாரம் என்பது எப்படி எல்லோரையும் வாழவைக்கும் என்பதை மருதகாசி ஒரு பாட்டில் அத்தனை அழகாக அன்பின் மொழியில் படைத்திருக்கிறார்.
‘‘மணப்பாறை மாடுகட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை  உழுதுபோடு
சின்னக் கண்ணு - பசுந்
தழைய போட்டுப் பாடுபடு
செல்லக் கண்ணு
ஆத்தூரு கிச்சிலிச் சம்பா
பாத்து வாங்கி விதவிதைச்சு
நாத்தெ பறிச்சு நட்டுப்போடு
சின்னக் கண்ணு - தண்ணிய
ஏத்தம்போட்டு எறைச்சுப் போடு
செல்லக் கண்ணு
கருதெ நல்லா வெளைய வச்சு
மருதெ ஜில்லா ஆள வச்சு
அறுத்துப் போடு களத்து மேட்டுல
சின்னக்கண்ணு - நல்லா
அடிச்சுத் தூத்தி அளந்து போடு
செல்லக் கண்ணு
பொதிய ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு
சின்னக்கண்ணு - நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு
செல்லக் கண்ணு’’

மணப்பாறை மாடு, மாயவரம் ஏரு, ஆத்தூரு கிச்சிலிச் சம்பா, பொள்ளாச்சி சந்தை, விருதுநகர் வியாபாரி இதையெல்லாம்தான் நீங்கள் கவனிக்க வேண்டும். இவை சும்மா பாட்டுக்காக எழுதிய ஊர்ப்பெயர்கள் அல்ல. விவசாயமும் வணிகமும் சார்ந்த இடங்கள்.
ஓரிடத்திலிருக்கும் இயற்கைவளம், வேறோர் இடத்திலிருக்கும்தொழில் வளம், மற்றோரிடத்தில் இருக்கும் மனிதவளம் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைத் தான் இந்தப் பாட்டு சொல்கிறது.

விவசாயப் பொருளாதாரம் --_ உழவர்களை, தொழிலாளர்களை, வணிகர்களை, மக்களை ஒன்றிணைத்து அனைவருக்குமான வாழ்க் கையை எப்படிப் பகிர்ந்தளிக்கிறது என்பதுதான் இந்தப் பாட்டின் அழகு.
மாடுகள் பூட்டிய டயர்போட்ட சக்கரங் களோடு கூடிய மருதகாசியின் வில்வண்டிச் சத்தம் எனக்குக் கேட்டுக்கொண்டே இருக்கிறது, அவரது இந்தப் பாட்டிலும் காற்றிலும்.
- பயணம் தொடரும்...

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions