c நாமிருக்கும் நாடு-24
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-24

தீரன் சின்னமலை

சா.வைத்தியநாதன்

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தன் பொருள் வாங்கி விற்கும் தொழிலில் இருப்பதைக் காட்டிலும் பிரதேசங்களைக் கைப்பற்றி வரிவசூல் செய்வதில் லாபம் அதிகம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த காலத்தில் அதற்கு இசைவாக இங்கிருந்த பல சிற்றரசர்கள் காட்டிக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். தனக்கு எதிராக இயங்கும் இன்னொரு அரசனைத் தோற்கடிக்க ஆங்கிலக் கும்பினியிடமும் பிரஞ்சுக் கும்பினியிடமும் நிபந்தனை இல்லாத சரணாகதி அடைந்ததன் விளைவாகத் தன் சொந்த பூமியை இழந்து நின்றார்கள். இந்தியா என்கிற மாபெரும் தேசம் ஆங்கிலக் கும்பினிவசம் வந்தது, நிச்சயமாக வீரத்தால் அல்ல, துரோகத்தாலும் கூட .
ஆங்கிலக் கும்பினியின் ஆதிக்க நிழல் பாரத தேசத்தின் மேல் கவிழ்வதைத் தமிழகத்துச் சிற்றரசர்கள் சிலர் முதலிலேயே கண்டுபிடித்தார்கள். வடபுலத்தை விடவும் தென்புலத்தில் அத்தகைய வீரர்கள் அதிகமாகவே வரலாற்றில் தென்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் தீரன் சின்னமலை. கோவை, ஈரோடு பகுதியில் கிழக்கிந்தியக் கும்பினிக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவர் சின்னமலை.
கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தில் பயிர குலத்தில் பழைய கோட்டைப் பட்டயக்காரர் மரபில் இரத்தினச் சர்க்கரை - பெரியாத்தாள் தம்பதியினர்க்கு இரண்டாவது மகனாக 1756 இல் பிறந்தவர் தீர்த்தகிரி. இதுவே சின்னமலை அவர்களுக்குக் குழந்தைப் பருவப் பெயர்.
அக்காலத்து மரபில் குழந்தைக்கு முதல் கல்வியான உடலை வலிமை பெறச் செய்யும் சிலம்பக் கூடக் கல்வியை தீர்த்தகிரி முதலில் பயின்றார். தடி வரிசை, மல்யுத்தம், வில் பயிற்சி, புலிப் பாய்ச்சு, வாள்வித்தை முதலானவைகளைக் கற்றுத் தேர்ந்தார். தீர்த்தகிரியின் தந்தை இரத்தினச் சர்க்கரை, பழைய கோட்டைக்கு அருகில் உள்ள ஆதூரை அடுத்த மேலப்பாளையத்தில் குடியேறினார். அங்கு அவரை முன்னிட்டு ஒரு ஊர் உருவாகியது.
அக்காலத்து கோவை, ஈரோடு முதலிய பிரதேசங்கள் மைசூர் உடையார் பரம்பரையால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. காங்கேய நாட்டு வரிவசூல் பணம், குன்றத்தூர் துர்க்கம் என்ற பெயர் கொண்ட சங்ககிரிக்கு எடுத்துச் செல்லப்படும். மாட்டுவண்டியிலும் சாக்கு மூட்டைகளிலும் எடுத்துச் செல்லப்படும். சந்தைக்கு உப்பு, புளி எடுத்துச் செல்லப்படுவது போல, மக்கள் வரிப்பணம் சங்ககிரி - மைசூர் பாதையில் வரிசை வரிசையாக மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்லப்படுவதையும், அதைச் சில  குதிரை வீரர்கள் காவல் காத்துக்கொண்டு உடன் செல்வதையும் தீர்த்தகிரியும் அவர் சகோதரர்களும் தினமும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் வழக்கம் போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நாள் வந்தது.
ஒருமுறை தீர்த்தகிரி சகோதரர்கள், காட்டு வழியாகச் சென்று கொண்டிருக்கையில், தாராபுரம் ஆட்கள் சங்ககிரிக்கு வரிப்பணம் எடுத்துச் சென்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். கோபமும் எரிச்சலும் தூண்ட, தீர்த்தகிரி சகோதரர்கள் ஆட்களை மறித்து வரிப் பணத்தைக் கைப்பற்றினார்கள்.
காவலர்கள் அஞ்சியபடி, ‘மைசூர் அதிகாரிகள் கேட்டால் என்ன சொல்வது’ என்று கேட்க, ‘இது சங்ககிரி மக்கள் பணம். அவர்களின் ரத்தமும் வியர்வையுமே இப்பணம். இப்பணம் அவர்களுக்கே பயன்பட வேண்டும். மைசூர் அரண்மனைக்காரர் ஆடம்பரச் செலவுக்கு அல்ல’ என்றார் தீர்த்தகிரி.
‘யார் கொள்ளை இட்டது என்று கேட்டால்?’
‘சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை இப்பணத்தைப் பறித்துக்கொண்டான் என்று கூறுங்கள்’.
அன்று முதல் தீர்த்தகிரி சின்னமலை ஆனார்.
மைசூர் அரசு, ஒரு சிறு படையை மேலப்பாளையம் அனுப்பி சின்னமலையைக் கைது செய்ய முனைந்தது. சின்னமலையோடு சிலம்பப் பயிற்சி பெற்ற தோழர்கள், மைசூர் படையை அடித்து விரட்டினார்கள்.
சின்னமலை, மக்கள் மனதில் வீரர் ஆனார். பறித்து எடுத்து வந்த பணத்தை ஏழை மக்களுக்கும் தேவைப்பட்டவர்க்கும் பங்கிட்டு அளித்து இருந்தார். சூழ்நிலை அவரைப் போர்வீரனாக மாற்றிக் கொண்டி ருந்ததை அவர் உணர்ந்தார். மெல்ல மெல்ல ஒரு சிறு போர்ப்படையை உருவாக்கத் தொடங்கினார். மேலப்பாளைய நிகழ்ச்சிக்குப் பிறகு, தன்னோடு கருத்தொற்றுமை கொண்ட பாளையக்காரர்களை இணைக்கத் தொடங்கினார்.
1782இல் ஹைதர் அலி மரணத்துக்குப் பிறகு அவர் மகன் திப்பு சுல்தான் கர்நாடக அரசுக்குத் தலைமை ஏற்றார். தந்தை காலத்திலிருந்து தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு வந்த ஆங்கிலக் கம்பெனிக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தினார் திப்பு சுல்தான்.
திப்பு சுல்தான் தன் படைக்குக் கொங்கு வீரர்கள் சேர்ந்தால் பெரும் பயன் கிடைக்கும் என்று எண்ணினார். வீரர்கள் தயங்கியபடி இருந்த நிலையில் தீரன் சின்னமலை முன்வந்து, பெரும் படையை உருவாக்கித் தந்தார்.
18.4.1792இல் சிவன்மலையை அடுத்த காட்டுப் பகுதியை ரூபாய் இருநூறு கொடுத்து விலைக்கு வாங்கினார் சின்னமலை. அங்கு பலம்கொண்ட கொங்குப் போர்ப்படையை உருவாக்கினார். தொடர்ந்து பயிற்சி அளித்தார்.
திப்புவின் அழைப்புக்கு இணங்கி மைசூர் சென்றார் சின்னமலை. அங்கு இருந்த ‘ஐகோவின் கழகம்’ என்று அறியப்பட்ட பிரஞ்சு வீரர்களிடம் தம் படையைப் பயிற்சியில் ஈடுபடுத்தி, மிகவும் சிறந்த கொங்குப் படையை உருவாக்கினார். சின்னமலையின் நண்பர் கறுப்ப சேர்வை பிரஞ்சு மொழியைக் கற்றுத் தேர்ந்தார். இதில் உள்ள அரசியல், பிரிட்டிஷாருக்கு எதிரான பிரஞ்சுக்காரர்களை நமக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே ஆகும். மட்டுமல்லாமல் பிரஞ்சு அரசுத் தலைவர், நெப்போலியனுக்கு ஒரு தூதுக் குழுவும் அனுப்பப்பட்டு அவர் உதவியும் ஆங்கிலக் கம்பெனிக்கு எதிரான போருக்குக் கோரப்பட்டது. நெப்போலியனும் உதவி செய்ய முன்வந்தார்.
நான்காம் மைசூர்ப் போரில் சித்தேஸ்வரம், மழவல்லி, சீரங்கப் பட்டணம் போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவின் சார்பில் மிகச் சிறப்பாகப் போர் புரிந்தது. 1799இல் திப்பு போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார்.
ஊர் திரும்பிய சின்னமலை, ஓடா நிலையில் வலிமை வாய்ந்த கோட்டை ஒன்றைக் கட்டினார். பிரஞ்சுக்காரர்கள் துணையுடன் பீரங்கிகள் உருவாக்கினார். தன் ராணுவத்துக்குக் கடுமையான பயிற்சி அளித்தார்.
1801இல் பிரஞ்சு படைத் துணையுடன், பவானி காவிரிக் கரையிலும், 1802இல் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே நடந்த போரிலும், 1803இல் அறச்சாலூரில் நடந்த போரிலும், தீரன் சின்னமலை மாபெரும் வெற்றிகளைக் கண்டார்.
சின்னமலையின் வரலாற்றுச்  செயல்பாடுகளில் ஒன்று, தமிழக விடுதலைக் கூட்டணி அமைத்ததாகும். கொங்கு தேசத்தை முன் வைத்து அவர் இந்தக் கூட்டணியை நிறுவினார். திப்புவின் மிகச்சிறந்த தளபதிகளில் ஒருவரான துந்தாஜிவாக், அப்பச்சி போன்றோர், கொங்கு தேசத்துப் பாளையக்காரர்கள் மற்றும் மருதுபாண்டியர்கள் ஆகியோரையும் இணைத்து, 1800 ஜூன் 3 ஆம் தேதி ஆங்கிலப் படைகள் பெருமளவில் இருந்த கோவைக் கோட்டையை அழிப்பது, பிறகு போராட்டத்தை எல்லா மாவட்டங் களுக்கும் விஸ்தரிப்பது என்று திட்டம் இட்டார் சின்னமலை.
ஜூன் மாதம் நள்ளிரவு 2ஆம் நாள் தொடங்க வேண்டிய புரட்சி, சில வீரர்களின் அவசரப்பட்ட செயலால் பகலில் தொடங்கப்பட்டுவிட்டது. செய்திப் பரவல் இல்லாத அக்காலத்தில் அடுத்த ஊரில் என்ன நடக்கிறது என்றுகூட அறிய முடியாது, புரட்சி வீரர்கள் பிடிபட்டுத் தூக்குமேடை ஏறினார்கள்.
சின்னமலையைப் போர்க்களத்தில் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலப்படை, அவருடைய சமையற்காரருக்கு ஆசை காட்டியது. கடைசியில் துரோகம் வென்றது.
1805ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் சங்ககிரிக் கோட்டையில் சின்னமலையும் அவர் சகோதரர்கள் இருவரையும் சேர்த்துத் தூக்கில் இட்டார்கள்.
என்றாலும் என்ன? பாரதம் சுதந்திரம் என்கிற கனியைச் சுவைப்பது காலத்தின் கட்டாயம் ஆனது.
சின்னமலை பரம்பரைக்குச் ‘சர்க்கரை’ என்கிற பட்டப் பெயர் உண்டு. இதன் பொருள், தம்மைச் சேர்ந்தவர்களுக்குச் சர்க்கரை போல இனிமை செய்பவர்கள் என்று அர்த்தம்.
வரலாற்றில் தீரன் சின்னமலை, திகட்டாத சர்க்கரையாகவே இருக்கிறார்.
- போராட்டம் தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions