c புதுக்கவிதையின் மூன்றாம் அலை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதையின் மூன்றாம் அலை

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 12

ஞானக்கூத்தன்
‘கசடதபற’ இதழ் பிறந்தபோது நவீன ஓவியக் கலைக்கு ஓர் களம் பிறந்தது. சில நல்ல கதைகள் பிறந்தன. புதுக்கவிதையில் மூன்றாவது அலையாக ஞானக்கூத்தன் என்ற கவிஞரும் பிறந்தார். பாலகுமாரன், கலாப்ரியா, நீலமணி, ஐராவதம் ஆகியோருடைய புதுக்கவிதைகளின் ‘ஞானஸ்நானம்’ கூடவே நிகழ்ந்ததென்றாலும்,
“சூளைச் செங்கல் வரிசையிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது”

என்று அவர் கவிதையில் குறிப்பது போல ஞானக்கூத்தன் தனி அடையாளங்களோடு வெளிப்பட்டது வரலாறு.
ஞானக்கூத்தனின் தொடக்ககாலக் கவிதைகள் எதுகை மோனைகளில் அக்கறை கொள்ளாத, உணர்வுத் தெறிப்பில் கவனம் பூண்ட அறுசீர், எண்சீர் விருத்தச் சிதைவுகளாகவே வெளிப்பட்டன. புதுமைப்பித்தன் கையாண்டதும், அங்கதம் மட்டுமே பொருளாகக் கொண்டதுமான மரபுச் சிதைவான கவிதைப் பாணியைத் தமக்கே உரிய ஆழ்மன வெளிப்பாடுகளால் செழுமைப்படுத்தியவர் ஞானக்கூத்தன்.
1970 அக்டோபரில் ‘கசடதபற’ பயணம் தொடங்கி 1973 ஜூலையில் தன் வெளிப்பாட்டை நிறுத்திக்கொண்டது. அதன் மறுபிறப்பு 1975 பிப்ரவரியில் நிகழ்ந்ததெனினும் மீண்டும் சில இதழ்களுக்குப் பின் ஓய்வு கண்டது. முதல் வரவில் ஞானக்கூத்தனும், இரண்டாம் வரவில் ஆத்மாநாமும் எழுச்சி கண்டனர்.
கசடதபறவின் முதல் வரவின் போதே ஞானக்கூத்தனின் முதல் தொகுப்பான அன்று வேறு கிழமை (1973) அழகிய பதிப்பாக வெளிவந்தது. தொடர்ந்து சூரியனுக்குப் பின்பக்கம் (1980), கடற்கரையில் சில மரங்கள் (1983), மீண்டும் அவர்கள் (1994) ஆகிய தொகுதிகளும், 1998இல் ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ முழுத் தொகுப்பும் வெளிவந்தன. முந்நூறுக்கும் மேற்பட்ட அவருடைய கவிதைகளை முழுவதுமாக ஆராய்ந்தால், ‘அன்று வேறு கிழமை’ என்ற முதல் தொகுப்பில் வெளிவந்த கவிதைகளோடு மற்றவை ஈடுகொடுப்பவை அல்ல என்று நான் கருதுகிறேன்.
ஞானக்கூத்தனின் கவிதைச் சாரம் முழுமையும் தொடக்ககாலத்தின் ஏறத்தாழ ஐம்பது கவிதைகளில் குவிந்து கிடக்கிறது என்று சொல்லலாம். அவருடைய கவிதைகள் மானுட வாழ்வின் அகல நீளங்களைவிட, சாதாரண மனிதனின் விருப்பு வெறுப்புகளையும் சிக்கல்கள் சிடுக்குகளையும் தான் பெரிதும் முன்னிலைப்படுத்துகின்றன.
அங்கதமும், சிறுமை கண்டு கெக்கலி கொட்டி நகைத்துப் போகும் ஏளனமும், அபத்தங்களைப் புதை பொருளாக்கும் லாகவமும் ஞானக்கூத்தனிடம் சுடர் வீசுகின்றன.
அரசியல் அவருக்குப் பிரியமான அங்கதக் களம். ‘கால வழுவமைதி’ கவிதையில் மூக்கில் முனகிப் பேசும் மூன்றாந்தர அரசியல்வாதியின் மேடைப்பேச்சு அகப்பட்டுக் கொள்கிறது.
“நாமெல்லாம் வரிப்பொலிகள்
பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை
ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமக்க ளேங் நானின்னும்
யிரு கூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகிறேன். வணக்கொம்”

இன்னொரு வகை அரசியல் அண்ணல் காந்தியை அறியாமலே தேசியம் பேசித் திரிகிறது. இந்த  வேடதாரிகளை மிக  நேர்த்தியாகத் தோலுரிக்கிறார் ஞானக்கூத்தன். ‘மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்’ என்ற கவிதையில்,
“எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழிவாற்றலானார்
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்
மேஜையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்
வேட்டியை இறுக்கிக் கட்டி
‘விடுதலை தவறி’ என்றார்”

உதடுகளில் புன்னகை படராமல் இந்தக் கவிதைகளைப் படிக்க முடியாது. ஞானக்கூத்தனின் தனிப் பேராற்றல் அங்கதம்.
மேலே குறித்த கவிதைகளில் எண்சீர், அறுசீர் விருத்தங்களின் ஓசைமை உலாவக் காணலாம். இதனைக் காரணம் காட்டி ஞானக்கூத்தன் வெறும் மரபிலும் யாப்பிலும் புரண்ட கவி என்று சி.சு. செல்லப்பா, ந. முத்துசாமி, அரூப் சிவராம், சுந்தர ராமசாமி ஆகியோர் அந்த நாட்களிலேயே கையில் விமர்சனக் கத்திகளைத் தூக்கிக்கொண்டு அலைந்தார்கள். அவர்களுக்குத் தார்மீகமான கோபத்தோடு கசடதபற (ஜனவரி 1976) இதழில் ‘புதுக்விதையில் என்ன ஏதுகள்’ என்ற மறுப்புக் கட்டுரையை ஆவேச அனல் பறக்க எழுதினார் ஞானக்கூத்தன்.
“யாப்பும் சப்தமும் இன்றைய அவசரத்துக்குப் பொருந்தாது என்று அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது அறியாமை நிரம்பிய கூற்றாகவே தோன்றுகிறது. உலகத்தின் இதர பகுதி மொழிகளில் பழைய யாப்புருவங்களில் எழுதி முன்னணியில் விளங்கும் இளங்கவிஞர்கள் இருந்து வருவதை அவர் அறியாதவர் போலும், அவருடைய கூற்றுப்படி யாப்பும் சப்தமும் அதீத உணர்வுகளுக்குப் பயன்படாதவையாம், அவை அதீத உணர்வுக்குப் பயன்படாதவை என்ற கூற்றும் நகைப்புக்குரியது.’’
ஞானக்கூத்தன் நியாயப்படுத்துவது போல நல்ல, உயர்ந்த, சீரிய கவிதைக்கு யாப்பும் ஓசையும் ஒருக்காலும் தடையல்ல என்பது சரியான உண்மை. இதனால் அவர்களுடைய கவிதை அழகும் வலிமையும் பெற்றது என்றே கூறவேண்டும். அவரை விமர்சித்தவர்களில் தருமு சிவராம் தவிர மற்றவர்கள் தமிழின் பண்டைய மரபுக் கவிதைகளில் தோய்ந்தவர்களும் அல்ல.
ஞானக்கூத்தனின் இன்னொரு பரிமாணம் அவருக்குப் பண்டை இலக்கியங்களிலும் கதைகளிலும் இருந்த ஆழ்ந்த வாசிப்பனுபவம். இதனடிப்படையில் பிறந்த சில கவிதைகள் அற்புதமான படைப்புகள். திருவிளையாடல் புராணத்தில் நரி பரியான கதை உண்டு. அதை மையமிட்டெழுந்த கவிதை, ‘விட்டுப் போன நரி’. வியப்பு மிகுந்த ஒரு பரிணாமப் பொழுதில் ஒரு நரி
குதிரையாகாமல் விட்டுப் போனதாம். அது சிவபெருமானிடம் விண்ணப்பித்ததாம்:
“குதிரை யாகாமல்
விட்டுப் போனதில்
ஒருவன் சாமீ”
என்று முறையிடுகிறது நரி. தம் பிழையை ஏற்றுக் கொள்ள விரும்பாத கடவுள்,
“நரிகளைப் பரிகளாக்கும்
திருவிளையாடல் முற்றும்
விடுபட்ட பேரை நாங்கள்
கவனிக்க மாட்டோம்... போய் வா”

புராணக் கதைக்குள் புனைந்த கற்பனை புதிய புதிய உள்ளீடுகளுக்கு வழி வகுக்கிறது. உயிர்களின் பரிணாம  வளர்ச்சியில் புதிய இனங்கள் உருவாவ தற்குக் கூட, ஜீன்களில் ஏற்படும் பிழைகள் காரணமா வதை இக்கவிதை கருக்கொண்டிருக்கப் பார்க்கலாம்.
‘யெதிரெதிர் உலகங்கள்’ - விசுவாமித்திரன் திரிசங்கு சொர்க்கம் படைத்த கதையை நினைவு கூர்கின்றது. புதிய உலகம் படைக்க முற்பட்டபோது தேவர்கள் இடையீட்டால் அது பாதியில் நின்று போகிறது. கவிஞரின் கூரிய அங்கதம் ஈட்டி முனைபோல் பாய்கிறது. அந்தப் பாதி உலகம் எப்படி இருக்கிறதாம், அசலுக்குப் பக்கம் போலிகளாம்.
“மயிலுக்கு வான்கோழி, புலிக்குப் பூனை
குதிரைக்குக் கழுதை, குயிலுக்குக் காக்கை
கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்!”

உயர்ந்த அங்கதம் ஞானக்கூத்தனுக்குப் போல் யாருக்கும் வாய்க்கவில்லை. மோசிகீரனார் சங்கப் புலவர். பசியின் கிறக்கத்தால் புனிதமான முரசு கட்டிலில் தூங்கிவிடுகிறார். இந்த நிகழ்வில் ஞானக்கூத்தன் ஊடே பாய்ந்து ஒரு உண்மையைச் சொல்கிறார். கவிதையின் தலைப்பு: ‘தோழர் மோசிகீரனார்’. அதிலே கூட ஒரு கூர்மையான கேலி! ‘மோசி கீரா’ என அழைத்துக் கவிஞர் சொல்கிறார்:
“ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல் மனிதன்
நீதான் என்ற காரணத்தால்.”

குலுங்க வைக்கும் நகைப்பல்ல. குவிந்த சிந்தனை களைத் தூண்டிவிடும் நகைப்பைக் கவிதையில் காண்கிறோம்.
ஞானக்கூத்தன் அபத்தங்கள் நிரம்பிய வாழ்க் கையை சர்ரியலிசக் கவிதைகளாகவும் தந்தவர்.  மீ மெய்மையியல் தோன்றி மறைந்த ஓர் இலக்கிய உத்தி, எனினும் அது தமிழ்க் கவிதையில் நிகழ்த்திய ஒரு தாக்கமாகச் சில கவிதைகளை எழுதியிருப்பவர். ‘தவளைகள்’, ‘எட்டுக் கவிதை கள்’, ‘கனவின் மனிதன்’ முதலியவை இத்தகைய கவிதைகள்.
“விழிக்கிறான் முழங்கால் ஒன்று
காணலை”

என்றும், அம்மாவின் உடலை அப்பாவும் பிள்ளை களும் போட்டிபோட்டுக் கொண்டு,
“வள்ளிக் கிழங்கின் பதமாக
வெந்து போன அவள் உடம்பை”

தின்னத் தொடங்கினார்கள் என்றும், எழுதப்பட்ட கவிதைகள், பிகாசோவின் ஓவியம் போலச் சிதிலங்களின் ஒருங்கிணைப்பாக அமைந்தவை. அவற்றில் ஆழ்ந்த பொருள்களைத் தேடுவது வாசகன் பொறுப்பு. ஆனால் ஒரு காலத்தில் கவிதையின் பரிசோதனை முயற்சிகளாக அவற்றைக் கருதுதல் தகும்.
வாழ்வின் ஆயிரம் சலனங்களையும் - மருத்துவ மனை, காட்டாறு, பைத்தியக்காரப் பெண், லாறி, தண்ணீர்த்தொட்டி, மீன்கள், சுவர், களிற்று யானை, கடைசிப் பெட்டி, ஊசி, அரிசிப்பொரி, பலா, அவனும் தகர டப்பியும், உம், ம், நட்டு, பாண்டூர் மாமியின் தமிழ்ப்பற்று - என எண்ணத் தொலையாத உலகின் இருப்புகளையும், மெல்லிய அபத்தங்களையும், வகைவகையான கோணங்களையும் ஞானக்கூத்தன் கவிதைகள் ஓர் அபூர்வ ஊர்வலம் போல் ஏந்திச் சென்றுகொண்டே இருக்கின்றன. அதனூடே நாமும் பயணிப்பது சொல்லத் தொலையாத அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டே இருக்கின்றது.
உவமைக் கவிஞர் என்று சுரதாவைச் சொல்வது வழக்கம். ஆனால் அவரிடம் ஒரு புனைவியல் கூறு குறுக்கே நிற்கும். ஞானக்கூத்தனின் உவமைகள் ஆச்சரியமானவை. அடடே என்று வியக்க வைப்பவை.
மூடிய கதவுகளின் இடையில் தெரியும் வெளிச்சத்தை ‘குத்திட்டு நிற்கும் குழல் விளக்காகத் தெரிந்திடும் நீலவான்’ என்பார். முருங்கையின் காய்கள் தொங்கும் கிளையை, ‘பிள்ளை வாதக் கிளைகள்’ என்பார். பட்டிப் பூக்களைக் குறிப்பிடும்போது ‘தையல்காரன் புறக்கணித்த வெள்ளைத் துணியின் குப்பைகள்’ என்பார். கொஞ்சம் நிலம் என்பதை ‘ஸ்டேஷன் மாஸ்டர் கொடி போல’ என்பார். உடைந்த கண்ணாடி கீறல்களோடு காட்சி தருவதை ‘சிலந்திப் பூச்சி படத்தைப் போல்’ என்பார்.
ஞானக்கூத்தன் கவிதைகள் உவமைக் களஞ்சியம். பிச்சைக்காரியின் கண்களை, ‘சட்டைத் துணியின் மைத்துளிக் கறை’யாகக் காண்கிறார். கைம்பெண் வெள்ளாடை அணிந்திருப்பதை, ‘நடக்கும் வலம்புரிச் சங்கு’ எனவும், பிளந்த பம்பரத்தை ‘நெடுக்கில் வெட்டிய தென் அமெரிக்கா போல்’ எனவும், பைத்தியக்காரியின் தொப்புளை, ‘புதைந்த புளியன் விதை’ எனவும், நாயரின் மீசையை ‘வெங்காய வேர்’ எனவும், நினைவுகளை ‘சேலையில் சொட்டும் நீர்ச் சுவடு’ எனவும், அணிலை ‘சணலால் செய்தது போன்ற உடல்’ எனவும், கொடியில் தொங்கும் காய்களை, ‘தேவாங்குக் குட்டியின் விரல்கள் போல்’ எனவும் அதிவிந்தையான உவமைகளால் மிகப் பொருத்தமாகப் புனைகிறார்.
நினைத்து நினைத்து நான் வியப்புறுவது திருக்குறள் அடிகளை, ‘மோதிர விரலும் சுண்டு விரலும் போல்’ எனக் கவிஞர் குறிக்கும் உவமையைத் தான்.
ஐயத்துக்கிடமில்லாமல் புதுக்கவிதையின் உவமைக் கவிஞர் ஞானக்கூத்தன் தான்.
ஞானக்கூத்தன் இயற்கையின் கவி அல்ல, படிமங்களின் கவி அல்ல, பிரம்மாண்டமான கற்பனைகளின் கவி அல்ல, தத்துவக் கவி அல்ல, தன்னைச் சுற்றியிருக்கும் தெருவில் திண்ணையில், அண்டையில், அயலில், அலுவலகத்தில், கியூ வரிசையில், திருவிழாவில், பிள்ளை பிறந்த வீட்டில் என எங்கும் எங்கும் கொட்டிக் கிடக்கும் சராசரி மனிதர்களை அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் கூர்ந்து படித்த மானுடக் கவி. அவர்களின் அலைவையும் குலைவையும் வடிவையும் வக்கிரங்களையும் யாரும் எண்ணிப் பார்க்காத கோணங்களில் நுணுகிப் பார்த்த கவி.
புதுக்கவிதை வரலாற்றில் ஒரு காலகட்டத்தின் திசை காட்டும் தீபஸ்தம்பம் ஞானக்கூத்தன் என்பதை எவரும் மறுக்க இயலாது.
ஒரு சமயம் உரையாடலில் பாரதிதாசனை ‘வகுப்புவாதக் கவிஞர்’ என்று அவர் பேசிய போது வருத்தம் கொண்டேன். இன்று அவர் கருத்து மாறியிருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் புதுமைப்பித்தன் குறிப்பிட்டது போல பாரதி விட்டுப் போன சொத்து அல்லவா பாரதிதாசன்?
- தொடரும்


 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions