c மக்கள் மனம் எப்போதும் ஒன்றுதான், மொழிதான் வேறு!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மக்கள் மனம் எப்போதும் ஒன்றுதான், மொழிதான் வேறு!

மொழிபெயர்ப்பாளர்  ஜி. குப்புசாமி

மொழிபெயர்ப்பை மூலப்படைப்புக்கு நிகராகவும் ஒரு படைப்புச் செயலாகவும் கருதும் மொழிபெயர்ப்பாளர்களில் முக்கியமானவர் ஜி.குப்புசாமி.
ஓரான் பாமுக், ரேமண்ட் கார்வர், அருந்ததிராய் என இவர் மொழிபெயர்த்த இலக்கிய ஆசிரியர்கள் ஏராளம். ஒரு மாலைப்பொழுதில் அவருடன் உரையாடினோம்...தொடக்கத்திலிருந்தே மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வருகிறீர்களா, அல்லது இடைக்காலத்தில் மொழியாக்கத்துக்கு வருகை தந்தீர்களா?
என் கல்லூரி தினங்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதியிருக்கிறேன். நாவல் ஒன்று எழுதத் தொடங்கி அதைப் பாதியில் நிறுத்திவிட்டேன். ஏனென்றால் அன்றைக்கு எழுதுவதைக் காட்டிலும் வாசிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளி விடுமுறையில் இருந்தேன். எங்கள் வீட்டில் பைண்ட் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த இந்துமதியின் ‘மலர்களிலே அவள் மல்லிகை’ எனும் (தொடர்கதையாக வெளியாகிய)நாவலை அப்போதுதான் வாசித்தேன். அதன் நாயகன் ஒரு சிற்றிதழ் எழுத்தாளன். நாயகி தீவிர இலக்கிய வாசகி என்பது போன்ற பாத்திரப் படைப்புகள் இருந்தன.
எனது சொந்த ஊரான ஆரணியில் நான் சிற்றிதழ்களையே பார்த்ததில்லை. அந்த நாவலில் அசோகமித்திரன், மௌனி, கு.ப.ரா என தமிழின் சில ஆளுமைகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார் இந்துமதி. அவரது இன்னொரு நாவலான ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலில் ‘கேச்சர் இன்  த   ரை’ (Catcher in the Rye) என்கிற நாவலை குறிப்பிட்டிருப்பார். அவர் குறிப்பிட்ட நூல் மற்றும் எழுத்தாளர்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ என்னைப் புரட்டிப்போட்டது. எனக்குள் பெரியதொரு மனத்திறப்பு ஏற்பட்டது. மீனாட்சி பதிப்பகம் வெளியிட்ட ஜெயகாந்தன் கட்டுரைகள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையெல்லாம் தேடித்தேடி வாசித்தேன்.
எனது கல்லூரிக் காலத்தில்தான் எனக்கு கணையாழி, தீபம் ஆகிய பத்திரிகைகள் அறிமுக மாயின. ஆரணி நூலகத்தின் நூலகர்தான் எனக்கு நல்ல வாசிப்பை அறிமுகப்படுத்தினார். அசோக மித்திரன், சுந்தரராமசாமி ஆகியோரை அப்போது முழுமையாக வாசித்திருந்தேன். மேற்படிப் புக்காக சென்னை வந்தபோது எனது பார்வை மேலும் விரிவடைந்தது. தஸ்தயேஸ்வ்கி, தல்ஸ்தோய் புத்த கங்களை ஆங்கிலத்தில் படித்தேன். சோவியத் ரஷ்யாவின் ராதுகா பதிப்பக மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் எனது பார்வையை இன்னும் வளப்படுத்தின.

குடும்பச் சூழல் கருதி அரசுப் பணியில் அமர்ந்த பிறகு அதிகமாக வாசித்தேன். என் வீடு நிறைய புத்தகங்கள் இருந்தன. திருவண்ணாமலையில் உள்ள எனது நண்பர்கள் அந்நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லி வந்தார்கள். திருவண்ணா மலையில் குஜராத் மத கலவரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தில், ‘கோத்ரா ரயில் எரிப்பு’ தொடர்பாக அருந்ததிராய் ‘அவுட்லுக்‘கில் எழுதிய கட்டுரையை நான் மொழிபெயர்த்து, அதை சிறிய புத்தகமாக வெளியிட்டார்கள். காரசாரமான கலை நயத்தோடு எழுதப்பட்ட கட்டுரை அது. மொழிபெயர்ப்பு மூலத்தின் தன்மையை அப்படியே எடுத்துக்கொண்டு வந்திருக்கிறது என்று ஆ.இரா.வெங்கடாசலபதி குறிப் பிட்டார். தொடர்ந்து பேசிய சி.மோகன், ஞாநி போன்றோர் எனது மொழிபெயர்ப்பைப் பாராட்டினர். அதன் பிற்பாடு ஜூலியன் பான்ஸ், ஏ.எஸ்.பயட், ரேமண்ட் கார்வர் ஆகியோரின் கதைகளையெல்லாம் விருப்பத்தோடு படித்து மொழிபெயர்த்தேன். ஒரு வாசகனாக இருந்து நான் வாசித்துச் சிலாகித்த படைப்புகளை அந்த படைப்பாளியின் குரலிலேயே தமிழ் மொழியில் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் மொழிபெயர்ப்பாளன் ஆனேன்.


ஒரு படைப்பை எந்த அளவுகோலை வைத்து மொழிபெயர்க்க முடிவெடுக்கிறீர்கள்?
என் ரசனைக்கு உகந்த படைப்புகளை முதன்மை யாகத் தேர்ந்தெடுக்கிறேன். ரசனை மட்டுமல்லாமல் அப்படைப்பைத் தமிழுக்குக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் இலக்கியச் சூழலில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியுமா என்பதையும் பார்ப்பேன்.  புதிய பார்வை மற்றும் புதிய உச்சத்தைக் கொடுக்கிற படைப்புகள் இலக்கிய முன்னேற்றத்துக்கு அடிகோலுபவை. மொழிபெயர்ப்பு என்பது அந்நியக் கலாச்சாரத்தை இங்கு கூறுவது என்பது மட்டும் அல்ல. உலகில் எல்லா மனித மனங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன. வாழ்க்கைதான் பல மொழிகளில், பல கலாச்சாரங்களில் வெவ்வேறு முகங்களைக்  கொண்டிருக்கிறது என்பதனைக் காட்டுவ தற்காகத்தான். நான் சமகாலப் படைப்புகளை மட்டுமே மொழிபெயர்க்கத் தேர்வு செய்கிறேன். தஸ்தயேஸ்வ்கி, தல்ஸ்தோய் போன்றவர்கள் ஏற்கனவே தமிழ்ச் சூழலில் அறிமுகமாகிவிட்டார்கள் என்பதனால் நான் பரிச்சயப்படாதவர்களை அறிமுகப்படுத்த விழைகிறேன்.


மொழிபெயர்த்த நூல் அளவுக்கு மொழிபெயர்ப் பாளர் கவனம் பெறுவதில்லையே?

மொழிபெயர்ப்பாளர் எதற்காக கவனம் பெற வேண்டும்? அவன் கவனிக்கப்பட வேண்டியவன் அல்ல. ஒரு படைப்பை நேர்மையாகவும், அதன் ஆன்மாவை சிதைக்காமலும் மொழிபெயர்த்து அவனது மொழிக்குக் கொண்டு வருவதுதான் அவனது வேலை. எப்போதும் ஒரு படைப்பின் மூல ஆசிரியரே கொண்டாடப்பட வேண்டுமே  தவிர மொழிபெயர்ப்பாளர் கொண்டாடப்பட வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் மொழிபெயர்ப்பாளருக்குத்  தமிழ்ச் சூழலில் அங்கீகாரமும், கௌரவமான இடமும் தேவை என்று சொல்வேன்.


ஓரன் பாமுக் எழுத்துகள் மீது விசேஷ கவனம் செலுத்தி அதிக அளவில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். அந்த ஈர்ப்பின் ரகசியம் என்ன?

மை நேம் ஈஸ் ரெட் (My Name is Red) நாவல் வெளியான சில மாதங்களிலேயே எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அதை முக்கியமான நாவல் என்று குறிப்பிட்டு அதை வாசிக்கச் சொன்னார். நான் அவரது ஒயிட் கேசில் (White Castle), மை நேம் ஈஸ் ரெட் ஆகிய இரண்டு நாவல்களையும் வாங்கிப் படித்தேன். அவரது எழுத்து மிகப்பெரிய ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. இந்த இலக்கிய உலகம் என்பது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இணைப்புப் பாலமாக இருக்கிறது. மேற்குலகக் கலாச் சாரத்துக்கும் கிழக்குலகக் கலாச்சாரத்துக்கும் மிகப் பெரும் முரண் இருக்கிறது. துருக்கியில் உள்ளவர்களின் ஆன்மா பிளவுபட்ட ஆன்மாவாக இருக்கிறது. அந்த ஆன்மாக்களுக்கு தங்களது மண் எது என்கிற அடையாளச் சிக்கல் காரணமாகவே  சொந்த நாட்டிலேயே அகதியாக வாழ்கிற மனநிலை துருக்கியர்களிடையே காணப்படுகிறது. இந்த ஆன்மிகக் குழப்பத்தை மையப்படுத்தியதுதான் ‘மை நேம் இஸ் ரெட்’. ஒரு கலைஞனின் மீது அவனுடைய மதம் சார்ந்த கோட்பாடுகள் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதுதான் நாவலின் மையம். அந்நாவலை ‘என் பெயர் சிவப்பு’ என்கிற தலைப்பில் மொழிபெயர்த்தேன்.
ஒயிட் கேசில் (White Castle - தமிழில் : வெண்ணிறக் கோட்டை) நாவலில் துருக்கி அரசனுக்கு மேற்கு நாட்டில் உள்ள அறிவுச் செல்வங்களைக் கொண்டு வரும் ஆர்வம் பிரதானமாக இருக்கிறது. அரசியல், உளவியல் எல்லாம் கலந்து மனிதனுடைய உள்ளார்ந்த வறட்சியை அது பேசுகிறது. கிழக்கு ஐரோப்பியர்கள் துருக்கியை ஐரோப்பாவில் சேர்த்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகள்தான் துருக்கியை ஐரோப்பாவின் துயரம் என்று இளக்காரமாகச் சொன்னார்கள். அதற்கு முதன்மையான காரணம் அவர்களது மதம்.
பாமுக் மிக நுட்பமான மொழியைக் கையாள்வதால் பாமுக்கை மொழிபெயர்ப்பது மிகவும் சவாலானது. அவரது எழுத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தால் உயிரைக் கொடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்பது புரியும். பாமுக்கின் ஆன்மா சிதையாமல் அப்படைப்பைத் தமிழுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் முழுக் கவனத்துடன் மொழிபெயர்த்தேன். அவரது படைப்புகள் ஒரு மொழிபெயர்ப்பாளனாக என்னை அறுதியிட உதவுகிறது.


தமிழில் சமீபகாலத்தில் நிறைய மொழிபெயர்ப்பு கள் வந்துள்ளன. ஆனால் பல நூல்களுக்குள் உள்ளே போகவே முடியவில்லை எதில் பிரச்சனை? மூலத்திலா? மொழி பெயர்ப்பிலா?
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தமிழில் வெளியாகிற பெரும்பாலானவை மோசமான மொழிபெயர்ப்பாகத்தான் இருக்கின்றன. மொழித்தேர்ச்சி குறைவான ஒருவரது மொழிபெயர்ப்பு மூலத்தின் உணர்வைப் பிரதிபலிக்காது. இன்னொன்று ஹாருகி முரகாமி போன்றோரிடம் பார்க்கும் சுவாரஸ்யமான எழுத்தை எல்லா எழுத் தாளர்களிடமிருந்தும் எதிர்பார்க்கக்கூடாது. ஓரன் பாமுக், சல்மான் ருஷ்டி போன்றவர் களையெல்லாம் பொறுமையாகத்தான் படிக்கவேண்டும். நவீன வாசகர்கள் உட்பட பலரும் மொழிபெயர்ப்பு என்பதை   குழந்தைக்கு ஸ்பூனில் ஊட்டிவிடுவதைப் போல எளிமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது தவறான எண்ணம். அந்நிய நிலம் மற்றும் கலாச்சாரம் கூட உள்ளே நுழைவதற்குத் தடையாகத் தோன்றலாம். இஸ்மாயில் கதாரே எனும் எழுத்தாளர் அல்பேனிய நாட்டுக் கலாச்சாரத்தைச் சொல்கிறார். அந்தக் கலாச்சாரத்தை நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடியாது என்றாலும் அதை மொழிபெயர்ப்பில் சொல்லாமல் இருக்கவும் முடியாது. மொழிபெயர்ப்பை எப்படி அணுகுவது என இங்குள்ள பலருக்கும் தெரியவில்லை. படிக்கச் சுலபமாக இருப்பதுதான் நல்ல எழுத்து என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. எந்த நாட்டுக் கதையாக இருந்தாலும் அதை நம் நாட்டில் நடப்பதுபோல் தமிழ்த்தனமாக்கி மொழி பெயர்ப்பது மிகவும் தவறானது. நல்ல மொழிபெயர்ப்பை படிக்கச் சிரமமாக இருக்கிறது என்றால் உங்களது வாசிப்பு அறிவைத்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘என் பெயர் சிவப்பு’ நாவல் வெளியான பிறகுதான் எனக்கு பல இலங்கைத் தமிழர்கள் நட்பாகினார்கள். இதுவரை எந்த ஒரு இலங்கைத் தமிழரும் எனது மொழிபெயர்ப்பைப் புரியவில்லை என்றோ, படிக்கச் சிரமமாக இருக்கிறது என்றோ சொன்னதில்லை. இலங்கைத் தமிழனுக்கு எளிதாகப் புரிவது இங்குள்ளவர்களுக்குப் புரிவதில்லை என்றால் பிரச்சனை பிரதியில் இல்லை, அவர்களது வாசிப்பறிவில்தான் இருக்கிறது.


படைப்பாளி - மொழிபெயர்ப்பாளர் இருவரையும் எந்தப் புள்ளியில் ஒன்றுபடுத்திப் பார்க்க முடியும்?

படைப்பாளிக்கான இலக்கிய ரசனை, மொழி ஆளுமை, இலக்கிய மனம் கொண்டவரால்தான் நல்ல மொழிபெயர்ப்பாளராக முடியும். மூலத்தில் இருக்கும் உணர்ச்சிகளை அப்படியே கடத்தி நமது மொழிக்குக் கொண்டுவருவதற்கு மொழிபெயர்ப்பாளன்  இணையான நிழல் படைப்பாளியாக இருக்க வேண்டும்.


உங்களது மொழிபெயர்ப்பு முறை என்ன?

கதையைத் திரும்பத் திரும்ப வாசித்து மூல ஆசிரியரின் குரலிலேயே அக்கதையை என்னுள் நிரப்பி வைத்துக்கொள்வேன். முழுதாக அது ஊறிய பிறகுதான் மொழிபெயர்க்கத் தொடங்குவேன். மூலத்தின் தாக்கத்தை அப்படியே கடத்தும் விதமாக சொற்தேர்வு இருக்கவேண்டும். உள்மனதின் குரல்தான் அதற்கான சொற்களைத் தேர்ந்தெடுக்கும். மூலத்தில் உள்ள வார்த்தைக்கான நேரடியான தமிழ் வார்த்தையைப் பயன்படுத்துவது சில இடங்களில் பொருந்தாது. Catching the Letter By the spirit of It என்பதுதான் மொழிபெயர்ப்பின் சூத்திரம். இதைத்தான் நான் பின்பற்றுகிறேன்.


நீங்கள் மொழிபெயர்த்தவர்களில் யாருடனேனும் தொடர்புகொண்டு உரையாடியிருக்கிறீர்களா? அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
எழுத்தாளர்கள் முகாம் ஒன்றில் டென்மார்க் எழுத்தாளர் லீனா மரியா லேங் என்பவரைச் சந்தித்தேன். அவரது கதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. நான் அவரது இரண்டு சிறுகதைகளை அவருடன் கலந்துரையாடி மொழி பெயர்த்தேன். அந்த உரையாடல் நல்ல அனுபவமாக இருந்தது. நான் மொழிபெயர்த்தவர்களிலேயே நான் நேரில் சந்தித்ததும், நீண்ட நேரம் உரையாடியதும் அருந்ததி ராயிடம்தான். காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் (God of Small Things) நாவல் எனக்கு நெருக்கமாக இருந்தது. நாவல் நடைபெறும் கேரளா எனக்கு அந்நியமானது. நாவலின் குடும்பமும் என்னுடையதைப் போல இல்லை. ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலக’த்தில் ஹென்றி என்னை பாதித்தது போல இந்நாவலில் எஸ்தா என்கிற கதாப்பாத்திரம் என்னை மிகவும் பாதித்ததோடு என்னைப் பிரதிபலித்தது போலவே இருந்தது. அந்நாவலை திரும்பத் திரும்ப படித்துக்கொண்டே இருந்தேன். 1998 ஆம் ஆண்டு அந்நாவலைத் தவிர்த்து வேறு எதையும் படிக்கவில்லை. பின் நாட்களில் அந்நாவலை ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என தமிழில் மொழிபெயர்த்தேன். சில சிக்கல்களுக்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அம்மொழிபெயர்ப்பு காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளிவந்தது. 2012 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த அருந்ததிராயிடம் கண்ணன் என்னை அறிமுகப்படுத்தினார். நான் அந்நாவலை எவ்வாறு லயித்து லயித்து மொழிபெயர்த்தேன் என்பதை அவரிடம் விளக்கினேன். மிகவும் உணர்ச்சிவயப்பட்டு எனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்.   எஸ்தாவுக்கும் எனக்குமான பிணைப்பைப் பற்றிச் சொன்னபோது அவர் நெகிழ்ந்து போனார். அப்புத்தகத்தில் குப்புசாமி எஸ்தப்பன் - வித் லவ் அருந்ததிராகேல் என்று கையெழுத்திட்டுக் கொடுத்தார். அருந்ததிராயின் சுய பாத்திரப்படைப்புதான் அந்நாவலில் வரும் ராகேல். நாவலில் எஸ்தாவுக்கும் ராகேலுக்கும் சகோதர, சகோதரி உறவு. அதுபோலத்தான் எனக்கும் அருந்ததிராய்க்குமான உறவும்.


மொழிபெயர்க்கும்போது ஏற்படும் சந்தேகங்களை எப்படி தெளிந்து கொள்கிறீர்கள்?
பெரும்பாலும் மொழி ரீதியிலான சந்தேகங்கள் எழும். மொழிபெயர்ப்பாளருக்கு தமிழ் மொழித்தேர்ச்சி இருப்பதற்கு இணையான ஆங்கில மொழித்தேர்ச்சியும் இருக்க வேண்டும். படைப்பாளி என்ன சொல்கிறார் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டால்தான் உண்மையான மொழிபெயர்ப்பைக் கொடுக்கமுடியும். மரபுத்தொடர் எது என்பது தெரியாமல் அதை வாக்கியமாக்கிவிடக்கூடாது. மொழியைத் தாண்டி வரும் சந்தேகங்கள் என்றால் சரித்திரங்கள்தான். ஒரு படைப்பில் அந்நாட்டின் சரித்திர நிகழ்வுகளைப் போகிறபோக்கில் சொல்லிக் கடந்திருப்பார்கள். அந்நாட்டைச் சேர்ந்தவர் களுக்குதான் அதுபற்றித் தெரியும். ஆக இன்றைக்கு இணையதளம் வந்துவிட்டதால் அதன் மூலம் எனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொண்டு மொழிபெயர்க் கிறேன். மொழிபெயர்ப்பாளருக்கு தெளிவு படாத இடங்களை அனுமானமாக மொழி பெயர்ப்பது என்பது அப்படைப்புக்கும் வாசகனுக்கும் செய்யும் பாவம். மொழி பெயர்ப்பு என்பது சோம்பேறிகளுக் கான வேலை அல்ல. ஏறக்குறைய ஒரு படைப்பின்மீது பைத்தியமாக இருக்க வேண்டும். அப்போது தான் அப்படைப்பைச் சிதைக்காமல் அப்படியே மொழிபெயர்க்க முடியும்.


மூலத்தில் சற்று இழுவை போன்று தெரிந்தால் அதை சுருக்கிக்கொள்வது போன்ற சலுகை உண்டா?
கூடவே கூடாது. மொழிபெயர்ப்பாளனின் பணி மூலத்துக்கு நிகரான சொற்களைக் கொண்டு நல்ல வாசிப்புத்தன்மையில் ஒரு படைப்பை மொழிபெயர்ப்பது தான். அப்படைப்புக்குள் மாற்றம் செய்வது மிகவும் அபத்தமான செயலாகும். அன்னாகரீனினாவை மொழி பெயர்த்தவர்கள் அதன் நிறைய அத்தியாயத்தையே தின்றுவிட்டார்கள்.
வட்டார வழக்கைப் பின்புலமாகக் கொண்ட படைப்புகளை மொழிபெயர்ப்பதில் உள்ள மொழிச் சவால்கள் பற்றிச் சொல்ல முடியுமா?
வட்டார வழக்கைக் கையாண்டுள்ள படைப்பை மொழிபெயர்க்கவே முடியாது. அப்படி மொழிபெயர்த்தால் அது மூலத்தைச் சிதைத்ததாக மாறிவிடும். டோபியாஸ் உல்ஃப் (Tobias Wolff) என்கிற அமெரிக்க எழுத்தாளரின் ஹன்டர்ஸ் இன் த ஸ்னோ (Hunters in the Snow) என்கிற சிறுகதையை என்னால் மொழிபெயர்க்க முடியவில்லை. அச்சிறுகதை வேட்டைக்காரர்களின் கொச்சை  மொழியால் ஆனது. அந்த கொச்சை மொழியை அப்படியே மொழிபெயர்க்க முடியாது. கி.ராஜ நாராயணனின் படைப்புகளை உண்மைத் தன்மையோடு எந்த மொழியிலும் மொழிபெயர்க்கவே முடியாததைப் போல. அவரது கரிசல் வட்டார வழக்குச் சொற்களுக்கு நிகரான சொற்பிரயோகத்தை வேற்று மொழியில் கொடுப்பது கடினமானது. வட்டார வழக்கு என்பது அந்தந்த வட்டார மக்களின் வாழ்வியல் சார்ந்த பேச்சு மொழி. அதை இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்வதற்கான சாத்தியங்கள் இல்லை.


தாங்கள் நிறைய அயல்மொழி இலக்கியங்களை வாசிப்பதனால் கேட்கிறோம். தமிழில் அந்த உயரத்தில் உள்ள எழுத்துகள் என்று எவற்றை யெல்லாம் சொல்வீர்கள்?

அசோகமித்திரன் என்று உடனடியாகச் சொல்ல முடியும். உலகில் கொண்டாடப்படும் எந்த ஒரு இலக்கியவாதிக்கும் நிகரானவர் அவர். தமிழின் முக்கியமான நாவல் என ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைச் சொல்லலாம். எந்த நவீன சிந்தனையாளர்களுக்கும் ஈடு கொடுக்கக்கூடிய படைப்புகளை சுந்தர ராமசாமி படைத்திருக்கிறார். புதுமைப் பித்தன், மௌனி என உலக அளவில் ஒப்பிட்டுச் சொல்லும்படியான படைப்பாளி கள் தமிழில் இருக்கிறார்கள்.


மொழிபெயர்ப்பை உங்களைப் போன்றவர்களோ, பதிப்பகமோ செய்வதைவிட அரசோ, தனியார் நிறுவனங்களோ செய்தால் நன்றாக இருக்குமா?

அரசு தீவிரத்தன்மையோடு இதில் அக்கறை செலுத்தினால் பல நல்ல இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வர முடியும். இங்கு அப்படியான அரசியல்   சூழல் இல்லை. தமிழகத்தின் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கூட வாங்குவதில்லை எனும் அவலநிலை தான் இருக்கிறது. கலை மற்றும் இலக்கியங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் பல நாடுகள்  சிறப்பு கவனம் செலுத்தி    வருகின்றன. அயர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான ஜான் பான்வில் எழுதிய ‘கடல்’  (The Sea) எனும் நாவலை மொழிபெயர்க்க முடிவு செய்தேன். சர்வதேச புத்தகக் கண்காட்சி ஒன்றில் அதற்கான மொழிபெயர்ப்பு உரிமையை காலச்சுவடு கண்ணன் வாங்கினார். நான் மொழிபெயர்ப்பதை அறிந்துகொண்ட அயர்லாந்து அரசு 2009 ஆம் ஆண்டு என்னை அயர்லாந்துக்கு அழைத்திருந்தது. அயர்லாந்து செல்வது, தங்குவது, உணவு மற்றும் சுற்றிப் பார்ப்பது என எல்லா செலவுகளையும் ஒரு மாதத்துக்கு அயர்லாந்து அரசே ஏற்றுக்கொண்டது. தனது நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் படைப்பு அந்நிய மொழி ஒன்றில் மொழிபெயர்க்கப்படுவதை அந்நாட்டு அரசே கொண்டாடுகிறது. மொழி வளர்ச்சிக்கான பணிகள் இதுபோன்றுதான் இருக்கவேண்டும்.


அடுத்து...?
நார்வேயை சார்ந்த எழுத்தாளர் டேக் சூல்ஸ் டாட் (Dag Tad Sols) எழுதிய சைனஸ் அன்ட் டிக்னிட்டி (Shyness and Diginity) என்கிற நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.
- நேர்காணல் : அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions