c மண்ணும் மக்களும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மண்ணும் மக்களும்

பெரிய வீடு

செங்கான் கார்முகில்

ஊரில் பிரமாண்டமான வீடுகள் எத்தனை இருந்தாலும் ‘பெரிய வீடு’ என்றால் ரெங்கம்மாள் வீடுதான். என்னதான் ஆம்படையான் பொழப்பில் கெட்டிக்காரனாகவும் பெலாக்கரசாலியாகவும் இருந்தாலும் சில வீடுகளுக்கு பொம்மனாட்டிகளின் நாமமே நிலைத்துவிடுகிறது.
உற்றார் உறவினர்களோடு உரையாடுவதிலுள்ள வாந்துவம், பதுவுசான அனுசரணை, விட்டுக் கொடுத்துப் போகும் பேருள்ளம், பிறருக்குக் கொடுப்பதிலுள்ள மகராசித் தன்மை, இளையவர்களிடம் காட்டும் கவடத்த தாய்மை போன்றவையெல்லாம் நண்டம்மா வீடு, பாப்பாத்தி வீடு, நைனம்மா வீடு என பொம்மனாட்டிகளின் பெயர் விளங்கக் காரணமாயிருக்கின்றன. ஆம்படையான் பெயரில் விளங்கும் வீடுகள், இவ்வளவு பெரிய ஊரில் பத்துகூட தேறாது. அதுகூட பண்ணையார்கள் போன்ற பெருந்தனக்காரர்கள் வீடுகளாகத்தான் இருக்கின்றன.
வீட்டை ஆள்வது பெண்கள்தான். நிர்வாகம் என்பதும் பெண்களிடமிருந்தே தான் கற்றுக்கொள்ளப்படுகிறது. அவர் கள் நல்லவிதமாக ஆள்வதற்கான அடிப்படைகளைக் கட்டமைப்பதுதான் இந்த ஆம்பளைகளின் பணியோ என்று தோன்றுகிறது.  
ஒரு வீட்டிற்குப் பெயர் விளங்கப் பல காரணங்கள் இருந்தாலும் சில வீடுகள் பொதுவான பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அப்படித்தான் செங்கமலை பொஞ்சாதி ரெங்கம்மாள் வீட்டிற்குப் ‘பெரிய வீடு’ எனும் பெயர் அமைந்ததும்.
அப்போவெல்லாம் நல்ல பொழப்புக் காரன் என்பதற்குச் சில லட்சணங்களைப் பார்ப்பார்கள். முதலில் நல்ல வீடு. நஞ்சையோ பிஞ்சையோ கோவணத்தள வாவது துக்குனி நிலம். கைச்செலவுக்கு பத்து ஆடுகள். சேமிப்புக்கு நாலு அடுக்குப் பானைகள். இப்படிச் சிலவற்றைப் பார்ப்பார்கள். இதைக்கொண்டே ஒரு குடும்பத்தின் ‘மருவாதி’யும் தழைத் தோங்கும்.
நம்ப ரெங்கம்மாளின் ஆம்படையான் பொழப்பில் நல்ல கெட்டி. மூன்று ஏக்கருக்கும் கொஞ்சம் கம்மியாக ஒரு வயக்காடும், ஒண்ணு ஒண்ணரை ஏக்கர் கிட்ட மேட்டாங்காடும் இருக்கிறது. வயக்காடு நெல், கடலை, எள், வெங்காயம் என்று விளையும். நாற்பது கன்றுகள் எழுமிச்சை, பத்து தென்னை, ஒரு நார்த்தங்காய் கன்று, ஓரத்தில் வேம்பும், வயினாரனும், நுணாவும், வாகையும், வன்னியுமாக வயலுக்கு அரண் போல முப்பது நாற்பது மரங்கள் நிற்கின்றன. வயலுக்கு நுழையும் முகப்பில் சின்ன களம். அதன் பிள்ளையார் மூலையில் ஒரு புளியமரமும் நிற்கிறது.
வீட்டு விசயத்துக்கு வந்தோமென்றால்  நான்கு விட்டக்கடை கொண்ட வீடு, கூரை வீடுதான். (ஏழு அடிக்கு ஒரு விட்டம் என்று வைத்துக்கொண்டால் நான்கு விட்டம் போட்டு கட்டினால் அந்த வீட்டின் நீளம் இருபத்தெட்டு அடி என்று அர்த்தம். இதைத்தான் நான்கு விட்டக்கடை, ஐந்து விட்டக்கடை என்று சொல்வது. விட்டத்தின் நீளத்தைப் பொறுத்து வீட்டின் அகலத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஐந்து அடி, ஏழு அடி, ஒன்பது அடி என ஐதீகங்கள் இருக்கின்றன. இது ஒரு கணக்குமுறை.) வீட்டுக்கு முன்னால் சாணம் மொழுகி கோலக்கங்குகள் கொண்ட அழகான விசிலாட்டமான வாசல். வாசலின் கொடியக்காய் அதாவது வடமேற்கு மூலையில் குளுகுளுவென ஒரு வேம்பு. அதனடியில் கை கால் அலம்ப கல்தொட்டி. அதன் கீழ் பாத்திரம் விலக்கவும், நின்று குளிக்கவும் சதுரமான ஒரு பலகைக் கல். அருகிலேயே மாடுகள் குடிக்க வெள்ளைக்கல் தொட்டி. பக்கத்திலேயே பட்டி. வீட்டிற்குப் பின்னால் சிறிய தோட்டம். வீட்டு குழம்புச் செலவுக்குத் தேவையான காய்கறிச் செடிகள் அங்கே சிறு நந்தவனம் போல் மனம் கொத்தும். அவரைப் பந்தலென்ன, கத்தரிச் செடியென்ன, மிளகாய் கொத்தென்ன, வாழை மடலென்ன, பீர்க்கங் கொடியென்ன, தக்காளிச் சிவப்பென்ன - எப்போதும் செழித்துச் சலசலவென பச்சை வாசம் வீசும். பாத்திரம் கழுவலும் குளியலும் தோட்டத்துச் செடிகளுக்கு வந்து பாயும். ஒண்ணும் வீணில்லை.
அந்தக் காலத்தில் இதெல்லாம் ரொம்பச் சாதாரணம்தான். ஊரில் இப்படி வயலோடும் வீட்டோடும் ஆடுமாடுகளோடும் வாழ்வைச் சேகரித்த முதல்வர் அவர்தான்.
செங்கமலை செப்பலோடவே காட்டுக்கு வந்து விடுவார். அப்படியே ஒரு பாட்டை ஜால்ஜாப்பாக காட்டைச் சுற்றி வருவார். விடியும். ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து மென்றுகொண்டே மலஜல விசயமெல்லாம் முடியும். கிணத்துத் துளைமேட்டில் நின்று சும்மானாலும் எட்டிப் பார்த்துக் கண்களால் துழாவுவார். கல்கொப்பறை தொட்டியில் உள்ள நீரில் வாய்கொப்பளித்து நாலு வாய் குடிப்பார். நாரத்தங் கன்றுக்கடியிலோ எழுமிச்சைக்குப் பக்கவாட்டிலோ அப்படியே குந்தி நாலு புற்களைப் பிடுங்குவார். தென்னைகளை நோட்டம் விடுவார். வேலிகளைச் செப்பனிடுவார். மரங்களைக் கவாத்து பண்ணுவார். வயலுள் நுழையுமிடத்திற்கு ஒரு படல் கட்டுவார். அல்லது பழைய படலை கொணக்கிக் கொண்டிருப்பார். வாய்கால்களைச் செதுக்குவார். ஒரு துறும்பு இருக்கக் கூடாது காட்டில். வாய்க்கால், வரப்பெல்லாம் கிராப்பு வெட்டியது மாதிரி கணக்கச்சிதமாக இருக்கும்.
இதெல்லாம் அப்படியே கச்சிதாமாக இன்னொரு சீவனுக்குப் பொருந்தும் என்றால் அது ரெங்கம்மாளுக் குத்தான். ஒண்ணும் மாத்தமில்லை. ஆம்படையான் பின்னாடியே சோறெடுத்துக்கொண்டு வந்தாளென்றால் காட்டில் எதையாவது நோண்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ரெண்டும் களத்துமேட்டுப் புளியினடியில் சோறு குடிப்பதைப் பார்த்து உர்ரென்று நிற்கும் புளி. எந்த வேலையென்றாலும் வெயில் ஏறும்வரை தான். வெயில் ஏறிவிட்டால் ரெங்கம்மாள் எழுமிச்சை பக்கம் போவாள். செங்கமலை ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடுவார். ஒரு வேலையும் இல்லையென்றால் ரெண்டும் ஆளுக்கு ஒரு பக்கம் துண்டை விரித்து முகம் மலர்ந்த தூக்கம் போடுவார்கள். காத்தோட்டமான வாழ்வு.   
நெல், எள், கடலை, கேழ்வரகு காலங்களில் காலைப் பனியில் இரண்டு வயல்களுக்கு இடையிலுள்ள வரப்பில் நின்று வயலைப் பார்ப்பதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ரெங்கம்மாள் ஒரு பக்கம் குனிந்துகொண்டிருப்பாள்.
ஒரு மாட்டு வண்டி பூட்டினார். அது ஒரு பெரிய பேராகிவிட்டது செங்கமலைக்கு. அந்தக் காலத்தில் மாட்டு வண்டி வைத்திருப்பது பெரிய பண்ணையக்காரன் மாதிரி. அப்போதெல்லாம் கல்யாணத்தில் பெண் அழைப்பிற்கு மாட்டு வண்டியைப் பயன்படுத்துவது வசதியானவர்கள் செய்கிற காரியம். ‘அந்தக் காலத்திலேயே மாட்டு வண்டில பொண்ணு அழைச்சேன் தெரியுமா’ என்போர் இன்றும் இருக்கிறார்கள். பொண்ணும் சில முக்கியஸ்தர்களுடன் பெண் தோழிகள் மட்டுமே வண்டியில் வருவார்கள். மற்றொர் பின்னால் நடந்து வருவார்கள். இதில் ரெட்டை வண்டி பூட்டுகிறவர்களும் உண்டு. அவர்கள் ரொம்ப வசதிக்காரர்கள். ஐந்து வண்டிக்காரர்களும் உண்டு. அவனவன் உறவு மற்றும் சொத்துபத்து வலிமையைப் பொறுத்தது அது. இது எல்லாத்தையும் விட பெரியது, சொந்த வண்டியில் போய் வருவது.  பின் வெகு காலங்களுக்குப் பிறகு டயர் வண்டி பெரிய அந்தஸ்தாக வந்தது. இதன் தொடர்ச்சிதான் இன்று கார், பஸ் என்று பயன்படுத்தி வருகிறோம். வீட்டிற்கு ரெட்டைக் கதவெல்லாம் கூட அப்போ பெரிய விசயம்தான்.
வண்டி வந்த பிறகு வண்டியில்தான் காட்டுக்குப் போவார் செங்கமலை. மாட்டை வண்டி நுகத்தில் கட்டிப்போட்டுவிட்டு ஒரு கோடங்கை சோளப் பயிறை அறுத்துப் போட்டுவிட்டு வேலைகளைத் தொடங்குவார். வேலை ஆட்களைக் கூட்டிக்கொண்டு ரெங்கம்மாவும் வந்துவிடும். அதற்குள் நான்கு மெனைகள் களை வெட்டியிருப்பார். ரெங்கம்மாள் முதுகுப் பக்கமாக வலத்தோளில் தாங்கிய குச்சியை நிலத்தில் கீறிக்கொண்டே போய் மெனை பிரித்துப் போடுவாள். வேலையில் கடுகடுப்பு, அவசரமெல்லாம் இல்லை. வேலை முடிந்ததும் குழம்புக்குத் தேவைப்படும் காய்கறிகளைப் பறித்துக்கொள்ளலாம். ஊறுகாய் போட எழுமிச்சைப் பழங்கள் பொறுக்கிக்கொள்ளலாம். விரத நாட்கள், பண்டிகை நாட்களில் வாழை இலைகள், பூசைகளுக்கு இளநீர், தேங்காய், தென்னம்பாலை போன்றவை எடுத்துக்கொள்ளலாம். ஆத்திர அவசரத் திற்கு மாடுகளுக்கு ரெண்டு கொடங்கை சோளப் பயிர்கூட அறுத்துக்கொள்ளலாம். இதெல்லாம் ரொம்ப ‘சலுவை’ செங்கமலை காட்டில், வேலை ஆளுகளுக்கு.
ஒரு அவசரம். நாலு காசு வேணும். ரெங்கம்மாள் வீட்டு கதவைத் தட்டலாம். இருப்பதைக் கொடுப்பாள். சாப்பாட்டுக்கு அரிசி இல்லை. எந்நேரமும் ‘எக்கா...’ங்கலாம். கால் வயிற்றுக்காவது தேறாமல் போகாது. தானியம் அடிக்க பிணைமாடு கேட்கலாம். விசேசங்களுக்கு கைமாத்து பெரலும். இப்படித்தான் ரெங்கம்மாள், செங்கமலை ஊரில் முக்கியஸ்தர்களானார்கள். ‘பெரிய இடம்’ ஆனது குடும்பம். கடை, காட்டுவழி கண்டால் ‘யென்னா பெரியாளு...’ என்றார்கள். அவர் பெரிய ஆளானார், வீடு ‘பெரிய வீடு’ஆனது.
பொழுதிருட்டி கையெழுத்து மறைய ஆட்டுக் குட்டிகளுக்கும், மாடுகளுக்கும் ரெண்டு கட்டு தீனியுடன் வண்டியில் அக்கடான்னு திரும்புவார்கள். வீட்டுக்கு வந்து சோறு தண்ணி காய்ச்சித் தின்றுவிட்டு வாசலில் புள்ளிவளோடு கதைபேசி, அசந்தாப்ல அப்படியே தூங்கிக் கிடக்க வேண்டியதுதான். மாடுகள் தீனி தின்பதும், மூத்திரம் விடுவதும், பெருமூச்சிடுவதும் பின்னணி இசைபோல. மனுசனுக்கு அந்த சத்தம் இல்லாட்டி ஒடம்பு படுக்கை கொடுக்காது.
மழை இருக்கோ இல்லையோ, காடு விளையுதோ இல்லையோ, காட்டுக்குப் போகணும், குனிஞ்சி நிமிரணும். இதுதான் பொழப்பு. இப்படியேதான் வாழ்ந்து, பிள்ளைகள் பெத்து, அதுகளைப் படிக்கவச்சி, பேரப் பிள்ளைகளும் எடுத்தாகிவிட்டது. பிள்ளைகள் படித்தார்கள். பட்டம் பெற்று வேலைக்கும் போனார்கள். இவர்கள் மட்டுமா எல்லாப் பிள்ளைகளும் தான். ஆபீசர், ஆசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் ஆனார்கள். செம்மையாக சம்பாரித்தார்கள். ஊரில் ஆண்டிற்கு ஒன்று, இரண்டு, மூன்று என ஓட்டு வீடுகள், மச்சி வீடுகள், பங்களாக்கள் உருவாகின.
ஆனாலும் ‘பெரிய வீடு’ என்கிற பெயர் மட்டும் இன்றுவரை மாறவில்லை. ரெங்கம்மாளும் செங்கமலையும்கூட மாறவில்லை. பிள்ளைகள் கைநிறைய சம்பாதித்து மூன்று மாடி வீடு கட்டினாலும், நிறைய நகைநட்டுகள் வாங்கி வந்து பூட்டினாலும் அவர்கள் மாறவில்லை. தினமும் காட்டுக்குப் போகிறார்கள். காட்டில் சோறு குடிக்கிறார்கள். வீட்டிலிருந்தால் தோட்ட வேலை செய்கிறார்கள். வாழ்வு வந்துவிட்டது என்பதற்காக கும்பல் கூட்டத்தில் போய் உட்கார்வதில்லை. வெட்டு வெடுக்கென்று எவரையும் பேசுவதுமில்லை. காடு, காடு விட்டால் வீடு.  
கேஸ் அடுப்பு வந்தாலும் பழைய அடுப்பும் இருக்கிறது. கிரைண்டர் வந்தாலும் ஆட்டுக்கல்லும் இருக்கிறது. மிக்சி இருந்தாலும் அம்மியின் தேவையும் இருக்கிறது. டி,வி, கம்பியூட்டர் கேம்கள், வண்ண வண்ண செல்போன்கள் என எத்தனை நவீனங்கள் வீட்டிற்குள் வந்தபோதும் மாட்டுப்பட்டி இருக்கிறது. வீட்டின் வாசலில் கூடுதலாய் ஒரு வேம்பும் தழைகிறது. ஆட்டுக் குட்டிகள் ஓடி விளையாடுகின்றன. வேப்பம் புண்ணாக்கு மூட்டைகள் கிடக்கின்றன. பின்புறம் தோட்டத்தில் இன்னமும் அவரை விளைச்சல் கப்புகிறது. ஜன்னலில் பீர்க்கன் கொடி தொங்குகிறது. கத்தரியும், தக்காளியும், வாழையும் பேரப்பிள்ளைகளுடன் கண்ணாம்பூச்சி ஆடுகின்றன. அடுக்குப் பானைகள்கூட இருக்கின்றன. உரல், உலக்கை, குந்தாணி, தாங்கூடை, பிருமனை, உரி, நீச்சப் பானை, ஊறுகாய் கலயம், உப்புப் பானை, மாடாக் குழி, குதிர், கலவாடு எல்லாம் இருக்கிறது. வீட்டிற்குப் பத்தடிக்கு முன் வரும்போதே வரவேற்க கலப்பையும் இருக்கிறது.
இன்னொரு விசயம் சொல்கிறேன்!
காலையில் எழுந்து போய் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு வேலைக்குப் போகிறான் ரெங்கம்மாவின் பெரிய மகன். வேலை முடிந்து திரும்பும்போது நேரே காட்டுக்குப் போய் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு காய் கசங்குகளோடு வருகிறான் சின்னவன். சனி, ஞாயிறுகளில் பேரப்பிள்ளைகளும் களை வெட்டுகிறார்கள். தட்டுக்கூடை சுமந்து எரு இரைக்கிறார்கள். விடுமுறையில் காட்டில் திரிந்து, காட்டில் குளித்து, காட்டில் உண்டு, எழுமிச்சையில் விளையாடி, மரமேறி குதித்துக் காடாய் கிடக்கிறார்கள்.
இன்னும்கூட ஒரு விசயம் சொல்கிறேன்!!
செங்கமலையின் மகன்கள் மட்டுமல்ல மகள் களுக்கும் நன்றாகவே உழவோட்டத் தெரியும். நீர் பாய்ச்சத் தெரியும். விதை பாவத் தெரியும். உரம் போடத் தெரியும். படித்தவர்களாய் இருப்பதால் முன்னினும் இப்போது சில நுணுக்கங்களுடன் மின்னுகிறது காடு.  
ஊரார், அந்த வீட்டை ‘பெரிய வீடு’ என்பது சரிதானே!
- மண் மணக்கும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions