c நகரில் நடந்தவை
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நகரில் நடந்தவை

இலக்கியத்தைக் காட்சிப்படுத்தும் வித்தை!
- ‘என்று தணியும்’ இசை வெளியீட்டு விழா

சிறுகதை எழுத்தாளர், நாவலர், ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார். இவர் இயக்கிய  ‘’இராமய்யாவின் குடிசை” ஆவணப் படம் பரவலான கவனத்தைப் பெற்றது. ‘‘உண்மையின் போர்க்குரல் வாச்சாத்தி” ஆவணப் படமும் முக்கியமானதே. இதையடுத்து ‘என்று தணியும்’ என்ற முழு நீள திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசைத் தட்டை வெளியிட்டார். இயக்குநர்கள்  பி.வாசு, விக்ரமன், நடிகர்கள் ஜெயம் ரவி, சந்தானம், கருணாஸ், இசையமைப்பாளர் பிரபாகர், பாடாலாசிரியர்கள் யுகபாரதி, நா.முத்துகுமார், தனிக்கொடி, தயாரிப்பாளர் கே.பழனிசாமி  மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ‘‘முன்பெல்லாம் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசி படத்தை உருவாக்குவோம். ஆனால் இப்போது ஒருவர் ஆப்பிரிக்காவிலும் மற்றவர் வேறொரு நாட்டிலும் இருந்துகொண்டு படத்தைத் தயார் செய்கிறார்கள். தொலைபேசியிலேயே கதை விவாதம் செய்கிறார்கள். எல்லாவற்றையும் போனிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். கணவன், மனைவி போல் இருந்த சினிமா பணிகள் குலைந்து போய்விட்டன. இன்றைய இளைஞர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அற்புதமாகப் படமெடுக்கிறார்கள். அவர்கள் படங்களில் அறிவு இருக்கிறது. ஆனால் இதயத் துடிப்பும் ஜீவனும் குறைந்திருக்கிறது. அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசிப் பண்ணவேண்டும். எங்கள் காலங்களில் சினிமா ஓர் அற்புதமான விஷயம்.
இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் ஓர் அற்புதமான பேச்சாளர், இலக்கியவாதி. இலக்கியவாதிகள் திறமைசாலிகள். அவர்கள் புத்தகங்களில் எழுதியதை காட்சிப்படுத்தும் வித்தை எனக்குத் தெரியும். அதே நேரம் படைப்பாளிகளுக்கு சமூகப் பொறுப்பு அவசியம். ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு சினிமாவின் மூலம் நல்ல கருத்துகளைச் சொல்லவேண்டும். சமூகத்தைக் கெடுப்பது போல் படங்கள் எடுக்கக் கூடாது. நமது மண்ணையும், மொழியையும் தொலைத்துவிடாமல் படங்களை உருவாக்க வேண்டும். பாரதி கிருஷ்ணகுமாருக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.
திருலோகம் என்றொரு  கவி ஆளுமை

எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன்,  மொழிபெயர்ப்பாளர் டி.என்.ராமச்சந்திரன் ஆகியோரைப் பற்றிய ஆவணப் படங்களையடுத்து கவிஞர் ரவிசுப்ரமணியன் இயக்கியிருக்கும் ஆவணப் படம் ‘திருலோகம் என்றொரு கவி ஆளுமை’.
`ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை’ தயாரிக்க ரவி சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் திரையிடலும் குறுவட்டு வெளியீட்டு விழாவும் சென்னை நாரதகான சபையில் நடைபெற்றது. அறிஞர்  டி.என்.ராமச்சந்திரன், பேராசிரியர் பாரதிபுத்திரன், திரைக்கலைஞர் ரோகினி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ஆய்வாளர் ப.சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். ஆவணப் படத்தை டி.என்.ராமச்சந்திரன் வெளியிட நடிகை ரோகினி பெற்றுக்கொண்டார்.
பாரதியார் இறந்த பிறகு அவரது படைப்புகள்மீது கொண்ட காதலால் பட்டிதொட்டி எங்கும் பாரதியார் படைப்புகளைப் பரப்பியவர்களில் பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர் வ.ரா, தோழர் ஜீவானந்தம், திருலோக சீதாராம் ஆகியோர் முக்கியமானவர்கள். மற்றவர்கள் மூவரும்  மேடைப்பேச்சுக்கள் மூலம் பாரதியைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள் என்றால், பாரதியார் கவிதைகளை கதாகாலட்சேபம் போல மேடையில் முழங்கியும் இசைத்தும் வந்தவர் திருலோக சீதாராம். தமிழ் இலக்கிய உலகில் அதிகம் அறியப்படாத ஆளுமைகளில் முக்கியமானவர்.
25 வருடங்களுக்கும் மேலாக `சிவாஜி’ இலக்கியப் பத்திரிகையை நடத்தியவர். நோபல் பரிசுபெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் `சித்தார்த்தன்’ புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர். ஆனாலும் அவர் தன்னை `பாரதியாரின் ஆன்மிகப் புத்திரன்’ என அழைத்துக்கொள்வதில் ஆனந்தம் அடைந்தார்.
சீதாராமின் கவிதை வாழ்வின் கஷ்ட ஜீவனத்தை உணர்ந்து, `உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும், என்ன வேண்டும்?’ என ஜி.டி.நாயுடு கேட்டபோது, தனக்கென எதுவும் கேட்காமல், `திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரிக்கு ஒரு பஸ் கொடுங்க’ எனக் கேட்டு வாங்கி, அதை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
பாரதி கவிதைகள் மீது மட்டும் அல்ல, அவரது குடும்பத்தின் மீதும் சீதாராமுக்கு அக்கறையான ஈடுபாடு உண்டு. பாரதியின் துனைவி செல்லம்மாள் பாரதியின் இறுதிக் காலத்தில், அவரோடு மூன்று மாதங்கள் தங்கி, அவருக்குப் பணிவிடைகள் செய்தவர் சீதாராம். செல்லம்மாவின் உயிர் பிரிந்ததும்கூட திருலோக சீதாராமின் மடியில்தான்.
இப்படியான தகவல்களும் படத்தில் திருலோக சீதாராமின் நண்பர்கள் வாயிலாகச் சொல்லப்பட்டிருப்பது சுவாரசியம். பின்னணியில் ஓவியர் மருதுவின் ஓவியச் சேர்ப்பு சிறப்பாக இருந்தது.
கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் “கடம்ப வனம்‘!
தமிழர்களின் பாரம்பரியமும், கலாச் சாரமும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை வாய்ந்தவை. அப் பெருமையெல்லாம் நம் தலைமுறையுடன் முடிந்துவிடாமல் அவற்றைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கவும், அடுத்துவரும் தலைமுறை யினரிடத்தில் எடுத்துச் செல்வதை நோக்க மாகக் கொண்டும் “கடம்பவனம்’’ என்ற தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலத்தை ஏற்படுத்தி, வெளிநாட்டவரிடம் தமிழ் மரபு மற்றும் கலைகளைப் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் கட்டடக் கலைஞரான கணபதியும், அவரது மனைவி சித்ராவும். மதுரை யிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள இக்கடம்பவனத்தின் இயக்குனர் மறைமலை அடிகளின் கொள்ளுப் பேத்தி சித்ரா ஆவார்.
இங்கு மாலை வேளையில் பரமபதம், பாண்டி, சொட்டாங்கல், பல்லாங்குழி போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் சிறுவர்களை பங்கேற்கச் செய்து அதைச் சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. முக்கிய விழா நாள்களில் வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், முதலான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. கலைக்கூட அரங்கில் கர்நாடக சங்கீதம், பரதம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், போன்ற கிராமியக் கலைகள்  சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடத்தப்படுகின்றன. தவிர பிரமாண்டமான ஆண்டு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
இவ்வாண்டிற்கான கலாச்சார நிகழ்வுகள் மார்ச் 14ஆம் தேதி நடந்தன. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி யின் அழகான தமிழாக்கத்தில்  ஷேக்ஸ்பியரின் ‘தி டேம்பெஸ்ட்’ நாடகம் ‘சூறாவளி’ எனும் பெயரில் நிகழ்த்தப்பட்டது. நாடகத்தை நேர்த்தியாகவும் கச்சித மாகவும் வடிவமைத்து இயக்கியிருந்தார் பிரவீன். இதைத் தொடர்ந்து செண்பகம் ராமசாமியின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வாக நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நூலை வெளியிட, மகாத்மா பள்ளிகள் குழுமத் தலைவர் ரெ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொள்ள, கடம்ப வனத்தின் நிர்வாக இயக்குநர் சித்ரா கணபதி நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். நிறைவாக, நிகழ்வை வழங்கிய மேஜிக் லேண்டர்ன் தியேட்டருக்கும், 38 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் நிஜ நாடக இயக்கத்திற்கும் அனைவர் சார்பிலும் பெரும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- ஊரகாளி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions