c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

மன அழுத்தமும் மாணவர் மரணங்களும்

அண்மையில் ஓர் சிறுமி கிண்டி மேம்பாலத்தின் மேல் ஏறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்து      கொள்ள முயன்றதாகச் செய்தியைப் படிக்க நேர்கையில் மனம் பதறுகிறது. ஒரு குழந்தையைத் தற்கொலைக்குத் தூண்டுவதும், கொலை நடந்துவிடுவதும் எவ்வளவு பெரிய தேசியத் தலைகுனிவு.
நமக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில், தினமோ, வாரத்திலோ, குழந்தைத் தற்கொலைகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. என்ன காரணம்? மன அழுத்தம் என்கிறார்கள், சமூக ஆர்வலர்களும், மருத்துவ நிபுணர்களும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட என்ன காரணம்?
இந்தியச் சமூகத்தில் அதிகம் வன்முறைகளுக்கு ஆளாகுபவர்களில் மிக முக்கியமானவர்கள் குழந்தைகள். கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிக் கூடங்களில் இன்னொரு நீட்சியாக வீடுகள் இருக்கின்றன. ஐந்து மணிக்குக் குழந்தைகளை எழுப்பிப் படிபடி என்கிறார்கள் பெற்றோர்கள். முதல் மார்க் அல்லது ரேங்க் வாங்க வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்.
முதல் மார்க் இல்லையென்றால் அத்தோடு சரி. அடி, உதை என்று பயம் காட்டப்படுகிறது. ஒரு வகுப்பில் இருக்கும் நாற்பது அல்லது அறுபது மாணவர்களில் அத்தனை பேரும் முதல் மார்க் வாங்குவது சாத்தியம் இல்லை என்பதைப் பெற்றோர்களும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் புரிந்து கொள்வதில்லை. விஷயங்களைக் கிரகித்துக்கொள்வதிலும், மனதில் வைத்துக்கொள்வதிலும் குழந்தைகள் ஒருவர்க் கொருவர் வித்தியாசப்படுகிறார்கள். இது மனித மனம் மற்றும் உடற்கூற்று விதி. உலகம் முழுக்கப் பொதுவான உண்மை இது. மிகு புத்திசாலிகள், புத்திசாலிகள், சுமாரான புத்திசாலிகள் என்று மனிதர்கள் பிரிந்து இருக்கிறார்கள். இது இயற்கை. தங்கள் குழந்தைகள் முதல் மார்க் எடுக்கவில்லை என்று கோபம் கொள்ளும் பெற்றோர்கள் எத்தனை பேர் தாங்கள் மாணவர்களாக இருக்கும்போது முதல் மதிப்பெண் பெற்றார்கள். இல்லை அல்லவா? பின் ஏன் அவர்கள் தங்கள் பிள்ளைகளை இம்சிக்கிறார்கள்? இம்சிக்க வேண்டும்.
குழந்தைகளை ஊக்குவிப்பது என்பது சரி. உயர்வு அவர்களுக்குப் பெருமை என்று சொல்லி வளர்ப்பது சரி. நூற்றுக்கு நூறு அல்லது தொன்னூற்று ஐந்து மதிப்பெண் என்பது பெருமைதான். ஆனால், அறுபது எடுப்பதும் மதிப்புக் குறைவு என்பது அல்ல.
உலகம், ரோஜாக்களால் மட்டும் ஆனது அல்ல. மல்லிகை, கனகாம்பரம் முதல் எருக்கம் பூ வரை எல்லாம் மலர்களே ஆகும். யாருடைய மதிப்பெண்களையும், சிலாகிப்பையும் எதிர்பார்த்து மலர்கள் இல்லை. மலர்கள் மனிதர்களுக்காகப் பூப்பதில்லை. அவை, அவைகளுக்காகப் பூக்கின்றன. மலர்கள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை.
குழந்தைகளும் மலர்கள்தான்.
மண்ணுலகில் மனிதர்கள் அனைவருக்கும் இடம் உண்டு என்பது எப்படி உண்மையோ, அதுபோலவே வாழ்வதற்கும் இடம் உண்டு. மனிதர்கள் சில பேர்கள் மிக அதிக சம்பளம், சௌகர்யத்துடன் வாழ்கிறார்களே என்றால், அது அவர்கள் உழைப்பு, பணியை நேர்த்தியாகச் செய்யும் திறமை, சுறுசுறுப்பு முதலான பல காரணங்கள் அவர்களின் பின்னணியாக இருக்கின்றன.
உலகப் பணக்காரர் ஃபோர்ட் தன் மகனுக்குச் சொன்ன அறிவுரை உலகப் புகழ் பெற்றது.
‘மகனே! நீ குப்பை பொறுக் கித்தான் பிழைக்க வேண்டி வந்தால், அது பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், உலகி லேயே மிகச் சிறந்த குப்பைப் பொறுக்குபவனாக நீ இருக்க வேண்டும் என்பதே என் கவலை.’
இதன் அர்த்தம் உன் உழைப்பையும் திறமையையும் பயன்படுத்திச் செய்யும் தொழிலில் மேம்பாடு என்பதே ஆகும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தர வேண்டியது அன்பையும் நம்பிக்கையையும் தான்.  நீ சிறந்தவன், நீ நல்லவன், நீ முன்னுக்கு வருவாய் என்று சொல்லி வளர்க்க வேண்டுமே அல்லாமல், முதல் மார்க் என்ற தண்டனையைத் தரக்கூடாது.
உலக நாடுகள் பலவற்றில் இப்போது மார்க் சிஸ்டம் இல்லை. அதற்குப் பதிலாக ஏ1, பி1 என்று பிரிக்கிறார்கள். அதோடு உலக நாடுகள் மார்க்கை வைத்து ஒரு மனிதனை, குழந்தையை எடை போடுவதும் இல்லை.
ஒரு குழந்தை குறைந்த மதிப்பெண் பெற்றாள் என்பதற்காக அடிக்கப்பட்டாள் என்றால், முதலில் தந்தை வன்முறையாளன் என்று அறியப்பட வேண்டும். தான் தன் தந்தையால், ஆசிரியரால் அடி, உதைகளுக்கும் அவமானத்துக்கும் ஆட்படுவோம் என்று ஒரு குழந்தை நினைக்கும் போது, முதலில் பயம் கொள்கிறது. பயம் பேரச்சமாக வளர்க்கிறது. மனஅழுத்தம் கொள்கிறது. பயத்திலிருந்தும், பெற்றோர்களிடம் இருந்தும் தப்பிக்கத் தற்கொலையை நாடுகிறது. இதுதான் அடிப்படை. இதுதான் சகல அவலத்துக்கும் காரணம்.
தந்தைகளிடம் இருந்து பிள்ளைகளுக்குப் பயம் செல்லக் கூடாது. அன்பும் நம்பிக்கையும் மட்டுமே சென்று சேர வேண்டும். அன்பு தரப்படாத குழந்தைகள், வன்முறையாளர்களாக மாற வழியுண்டு. அன்பு கிடைக்காத குழந்தைகள் செய்துகொள்ளும் தற்கொலையும் ஒரு வகையான தனக்குத்தானே செய்துகொள்ளும் வன்முறையே ஆகும்.
ஒரு குழந்தை இறப்பது, தேசம் ஒரு பிரஜையை இழப்பது என்பதாகும். இது மானுட நட்டம் என்பதை நாம் உணர வேண்டும்.
ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பிடுவது மனரீதியான குற்றம். ஒரு வன்முறை. குழந்தையின் ‘அகம்’ இதனால் பாதிக்கப்படுகிறது. அக்குழந்தை மன அழுத்தம் கொள்கிறது.
குழந்தைகளுக்கு வாழ்வின் இனிமைகளை அறிமுகப்படுத்த வேண்டியது பெற்றோர், கல்வி நிலையங்களின் கடமை ஆகும்.
பூந்தோட்டங்கள், வயல்கள், அழகிய இடங்கள், அருவிகள், ஆறுகள், குளங்கள் ஆகியவைகளை அழைத்துச்சென்று காண்பிக்க வேண்டும். மற்றும் மிக முக்கியமாக இசை, ஓவியம், சிற்பம் போன்ற கலைகளை அறிமுகப்படுத்த வேண்டும். முடிந்தால் ஏதேனும் ஒரு கலையைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கலையை நேசிக்கும் குழந்தைகள் வாழ்க்கையை நேசிக்கும். வாழ்க்கையை நேசிக்கும் குழந்தைகள் ஒருபோதும், தற்கொலைக்குத் தயாராகாது. ஒருபோதும் மன அழுத்தம் கொள்ளாது.
கலீல்ஜிப்ரான் சொன்னார்.
‘உங்கள் குழந்தைகள் உங்களிடம் இருந்து வருகிறார்கள். உங்களுக்காக வரவில்லை. உங்கள் எண்ணங்களை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்’.

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions