c தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குறுந்தொடர்-2
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தோணியாவது கீதம்-ஒரு பாட்டுப் பயணம் : குறுந்தொடர்-2

காந்திக்குத் தங்கத்தட்டில் விருந்து வைத்த இசைத்தட்டு!

பழநிபாரதி

துர்வாசரால் ஆறு மந்திரங்கள் உபதேசிக்கப் பட்ட குந்தி, மாளிகையில் ஒருநாள் தனித்திருக்கிறாள்.
நீ இந்த மந்திரத்தை யாரை நினைத்து உச்சாடனம் செய்கிறாயோ, அவன் உன் முன் தோன்றுவான். அவனை நீ அடையலாம்’’.
அவள் சோதிக்க நினைத்தாள். சூரியனை உச்சரித்தாள். சூரியதேவன் அவளை ஆரத் தழுவினான். கர்ணனை அவனது கவச குண்டலத்தோடு ஈன்றெடுத்தாள். கன்னியச்சம் அவளை ஆட்கொண்டது.
ஒரு பேழைக்குள் கர்ணனை வைத்துத் தனது முந்தானையின் ஒரு பகுதியையும் அதில் சேர்த்து ஆற்றில் விட்டுவிட்டுத் திரும்புகிறாள். ஆறு முழுவதும் அவளது கண்ணீராக ஓடுகிறது.
கடும் பஞ்சத்தில் நல்லதங்காள் பாதைகளற்ற பாதையில் வாழ்வைக் கடக்க நினைக்கிறாள். வழியில் தென்பட்ட அந்தப் பாழுங் கிணற்றுக்குத்தான் அவளது வலியும் கண்ணீரும் தெரிந்ததுபோல. தன் ஏழு குழந்தைகளின் பசித்த வயிறுகளுக்கு முன் அந்தக் கிணற்றின் ஆழம் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
தமையன் தனக்களித்த கல்யாணச் சேலையின் மீது ஒரு அழுகல் தேங்காயை வைத்துத் தாமரை இலையில் தனது தாலியைக் கழற்றி வைத்துவிட்டுச் சுற்றி நிற்கும் ஏழு குழந்தைகளையும் பார்க்கிறாள். கிணறு அவளது கண்ணீரில் நிரம்பித் தளும்புகிறது. குழந்தைகளையும் மூழ்கடித்துத் தானும் மூழ்குகிறாள். நகரமுடியாமல் நின்றுவிட்ட காலத்தின் துக்கச் சக்கரமாகக் கிணற்று ராட்டினம் உறைந்திருந்தது.
காய்ந்த நதிகளில் ஊற்று தோண்டினாலும் பெண்களின் கண்ணீர்தான் பெருக்கெடுக்கும் போலிருக்கிறது.
பாலாம்பாளுக்கு மூன்று குழந்தைகள். கணவனை இழந்து, வறுமையில் விழுந்து துயருறுகிறாள். ஈரல் ஒதுக்கித் தன் வயிற்றில் குழந்தை வளர இடம் தந்து ஈன்றெடுத்தவள் அவர்களது பசியை எப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பாள்?
ஆற்றுக்கு அந்த மூன்று குழந்தைகளையும் அழைத்து வருகிறாள்.
“ஏம்மா எங்கள ஆத்துக்குக் கூட்டீட்டு வந்த, குளிக்கவா?’’ ஒரு குழந்தையின் குரல் கேட்டதும் அவளது கண்கள் உடைந்து கண்ணீர் பெருகியது.
“வறுமையை என்னால தாங்க முடியல, உங்களோட பசிக்குச் சோறுபோட முடியல, இந்த ஆத்துல நம்ம எல்லாம் சேர்ந்து விழுந்து செத்துடலாம் கண்ணுங்களா’’ என்று தேம்பித் தேம்பி அழுகிறாள் அந்தத் தாய்.
மூத்த பெண் அம்மாவைத் தடுத்து நிறுத்தி வீட்டுக்கு அழைத்துப் போகிறாள். அந்தப் பெண்ணின் குரலில் எட்டுக் கட்டைக்குரிய சுதி இருந்தது.
ஓடும் இரயிலில் அவள் பாட்டுப் பாடினாள். அது யாசகமாகத் தெரியவில்லை. பூமிக்கு வழி தவறி வந்த தேவதை, காற்றிடம் தன் முகவரியைக் கம்பீரமாக விசாரிப்பதுபோல இருந்தது.
அந்தப் பெட்டியில் பயணம் செய்த இரயில்வே அதிகாரி எஃப்.ஜி. நடேசஅய்யர் ஒரு கலாரசிகராகவும் இருந்தார். அந்தக் குரல் உட்கார்ந்து பாட ஒரு கிளையைக் காட்டினார்.
அன்று ஆற்றில் மூழ்கிக் கரைந்துபோக இருந்த அந்தப் பெண்ணின் குரல் காற்றில் எல்லோரையும் மிதக்க வைத்தது. அன்றைய காங்கிரஸ் மேடைகளிலும் நாடகங்களிலும் தேசபக்தியோடு அந்தக் குரல் கொடிகட்டிப் பறந்தது.
1928ஆம் ஆண்டு பாரதியின் பாடல்கள் தடைசெய்யப்பட்டபோது, தியாகி சத்திய மூர்த்தி, வ.ரா, ஜீவா போன்ற தலைவர்கள் கண்டனக் கூட்டங்களை நடத்தினார்கள்.
அந்த மேடைகளில்
நெஞ்சு பொறுக்குதில்லையே -  இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
’’ என்றும்
வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ
’’ என்றும்
உச்சக்குரலில் உரிமை கீதம் பாடி பாரதியை மீண்டும் மீண்டும் ஒலிக்க வைத்தது அந்தப் பெண்ணின் குரல்.
“தங்களைப் போன்ற உத்தமப் பெண்மணிகள் இந்த நாட்டின் விடுதலைப் போரில் பங்கெடுத்தால், என் வாழ்நாளிலேயே இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிவிட முடியும்’’ என்று காந்தியடிகள் அவரை விடுதலைப் போருக்கு அழைத்தார். தன் கைப்பட தமிழிலேயே அவருக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார்.
சிறைச்சாலை இதென்ன செய்யும்
சரீராபிமானம் இலா ஞான தீரரை

என்று தீமூட்டிய அந்தக் குரல் உண்மை யிலேயே சரீராபிமானம் இல்லாமலே வாழ்ந்தும் காட்டியது.
“வாழ்க்கையெனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்
வாலிபம் என்பது கழிகின்ற வேடம் - அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழுமூடன்
வரும்முன் காப்பவன்தான் அறிவாளி - துயர்
வந்தபின்னே தவிப்பவன் தான் ஏமாளி
துடுப்புகள் இல்லா படகு - அலைகள்
அடிக்கிற திசையெல்லாம் ஓடும்- தீமையை
தடுப்பவர் இல்லா வாழ்வும் - அந்த
படகின் நிலை போல ஆடும்
படகின் நிலை போல ஆடும்’’

அன்றைக்கு அந்தக் குரல் ஆற்றில் மூழ்கியிருந்தால் இன்றைக்கு இப்படி நம்மையெல்லாம் துன்பக் கடலிலிருந்து கரை சேர்க்கும் ஒரு பாடலைக் கேட்டிருக்க முடியாது. இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும்... ஆமாம் அந்தக் குரல் கொடிமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாளுடையது.  
ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகில் விலைமதிக்க முடியாத குரலாக சுந்தராம்பாள் இருந்தார்.
35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு படத்தைத் தயாரிக்க முடியும் என்கிற காலகட்டத்தில் ‘நந்தனார்’ படத்தில் பாடி நடிப்பதற்காக ஒரு இலட்சரூபாய் கேட்டார் சுந்தராம்பாள். ஹஸன்தாஸ் சேட், அவர் கேட்ட தொகையைக் கொடுத்து ‘நந்தனாரா’க அவரை நடிக்க வைத்தார்.
ஔவையாரின் முகத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் கற்பிதம் செய்து கொள்ளலாம். ஆனால் அவரது குரலைக் கேட்க நினைத்தால் சுந்தராம்பாளைத் தாண்டிச் செல்ல முடியாது.
பாட்டின் மூலம் அவர் பெருக்கிய செல்வத்தையும் செல்வாக்கையும் சொல்ல ஒரு சம்பவம் போதும்.
1937ஆம் ஆண்டு. மகாத்மா காந்தி கரூர் வழியாக ஈரோடு செல்கிறார். கொடுமுடி அருகே கார் பழுதாகி நிற்கிறது. அவருடன் சென்ற சத்தியமூர்த்தி, “காரை பழுதுபார்த்துக் கொண்டு வாருங்கள். நாங்கள் கே.பி.எஸ் வீட்டில் இருக்கிறோம்’’ என்று ஓட்டுநரிடம் சொல்லிவிட்டு காந்திஜியை கே.பி.எஸ் வீட்டில் தங்க வைக்கிறார். அப்போது காந்திக்கு கே.பி.எஸ் தங்கத்தட்டில் விருந்து வைக்கிறார். விருந்துண்ட காந்தி, “எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு இல்லையா?’’ என்று கேட்டாராம். சுந்தராம்பாள் தங்கத்தட்டையும் அவருக்குத் தந்துவிட்டார். காந்திஜி அந்தத் தட்டை ஏலமிட்டு, கட்சி நிதியில் அந்தத் தொகையைச் சேர்த்துக் கொண்டாராம்.
இந்தச் செய்தியைச் சுதந்திரப் போராட்ட வீரர் க.அர்த்தநாரியிடம் கேட்டு, அதைக் குகை பழனியப்பப் பிள்ளை தனக்குச் சொன்னதாக ப.சோழநாடன் சுந்தராம்பாள் பற்றிய தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
சுந்தராம்பாளின் குரலுக்கு அருகில் எந்தவொரு ஆணின் குரலும் பயணிக்க முடியவில்லை. அருகில் வந்த ஒரு குரல் எஸ்.ஜி.கிட்டப்பாவுடையது. இணையாக மட்டுமல்ல, துணையாகவும் இணைந்து பயணித்த இருவரின் குரல்களும் தமிழர்களைக் கொண்டாட வைத்தது. அவர்கள் சரீரத்தால் காதலித்தார்களோ இல்லையோ சாரீரத்தால் சாகாத காதலர்களாகிவிட்டார்கள். கிட்டப்பா சிவப்பு. சுந்தராம்பாள் கருப்பு. இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். ராகமே அவர்களின் தேகமாக இருந்ததால் அமரகாதலின் கீதமாக அவர்கள் மாறி விட்டார்கள்.
இதையெல்லாம் எதற்காகச் சொல் கிறேன் என்றால் ஒரு பாடல் என்ன செய்யும் என்று சாதாரணமாகக் கேட்டுவிடக் கூடாது. பட்டுக்கோட்டை சொல்வதைக் கவனியுங்கள்!
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்.
துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்பு மொழியில் அமுதம் கலந்து
அருந்தத் தருவதும் கீதம்
எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவது கீதம் - அதை
இணைத்து மகிழ்வதும் கீதம்

-  _ பயணம் தொடரும்...

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions