c பி.மதியழகன் கவிதைகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

பி.மதியழகன் கவிதைகள்

பேதம்
மேல் வரப்பு வச்சான்
கீழ் வரப்பு வச்சான்
எதுக்கு வச்சான்?
ஓடுற தண்ணிய கட்ட
மேல கீழ
வித்தியாசம் இருக்கா?
இருக்கு குச்சி ஐஸைப் போல!
பறவைங்கள்ல
கொக்கு வச்சான்
குருவி வச்சான்
கிளிய வச்சான்
கழுகையும் வச்சான்
ஏன் வச்சான்?
வேற வேறயா இருக்க
அது மாதிரி
ஒன்ன தாழ வச்சான்
என்ன மேல வச்சான்
ஏன் வச்சான்?
நான் ஒண்ணு சொல்லட்டா?
சொல்லு
குருவியும் கொக்கும் போனா
முட்ட வருமா?
வராது
கிளியும் கழுகும் போனா?
வராது
ஆனா
நானும் ஒன் தங்கச்சியும் போ...?
அடி செருப்பால நாயே!

நுழைவாயில்
நுழைவாயில் உயரமாயிருந்தால்
காட்டு மரங்களின்
நிமிர்வோடு நுழையலாம்
ஆடுகளாய்
நட்டுக் கவிழ்ந்து
நுழைந்தது போதும்
இல்லங்களினி
வாயிலைப் பெரிதாக்குவோம்!
பணிவு
இங்கிருந்தே தொடங்குவதால்
கட்டுடைத்து
நிமிர்வை
இங்கிருந்தே நிர்ணயிப்போம்
ஆலமரத்தடியில்
ஆதிபோல் வாழ்ந்தாலும் பரவாயில்லை
வாயில் மட்டும் தாழ்வாய் வேண்டாம்
கதவும் தாழ்ப்பாளும்
பூட்டும்கூட இல்லாமல் போகலாம்
இழப்பதற்கு என்ன இருக்கிறது?
வாயில் மட்டும்
தாழ்வாய் வேண்டவே வேண்டாம்!

தவறும் பருவம்
நான் ஆசைப்படுவது
தவறாகக் கணிக்கப்படுகிறது
பத்துக்கு மேல் படிக்கவில்லை என்பது
குற்றமாய்ச் சுமத்தப்படுகிறது
நலியும் வாழ்வில்
நானா காரணம்?
காலங்கள் முழுவதும்
கழனியில் கைப்பிசைந்துக் கிடக்கிறேன்
நேரங்காலம் பார்க்காமல்
கத்தித் துளைக்கும் காட்டுப் பூச்சிகள்போல்
எல்லா மலர்களுக்கும்
ஏதாவது ஒரு வாசனை உண்டு
எனக்கும் கூடத்தான்
மனமும்
பிறரறியா வாசனையுடன்
குறிஞ்சிப் பகுதியில்
மருதம் சுவைப்பவள் நான்
வேலையிலிருக்கும் மணமகன் கேட்டதால்
முகம் சுழித்துச் சரிகிறது ஊர்
அழகும் அன்பும்
அனுபவ அறிவும்
அனுசரிக்கும் குணமும்
போதாதென்கிறது பொருள்நாடும் உலகு
பருவம் தவறிய
வானம் பார்த்த பூமியாய்
சுகம் வேண்டி
தகித்துக் கிடக்கும்
முதிர் கன்னிப் பருவம் நான்.
- வியூகம் கொள்ளும் காய்கள்
(காலச்சுவடு பதிப்பகம்)

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions