c எங்கள் பகுதி வறண்டு விட்டது!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

எங்கள் பகுதி வறண்டு விட்டது!

- அழகியபெரியவன்

இன்றைய தமிழ்க் கதைப் பரப்பில் தனித்துவமும் ஆற்றலும் கூடிய ஒரு சக்தி அழகிய பெரியவன். தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குகிறார். தெளிந்த அரசியலோடு, தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவராக விளங்குகிறார். பல்சுவை காவியத்திற்காக அவருடன் உரையாடினோம்.

கவிதை, சிறுகதை, நாவல் என தொடர்ந்து தமிழ் இலக்கியத் தளத்தில் இயங்கி வருகிறீர்கள். இருப்பினும் நீங்கள் கதைகள் எழுதிய அளவுக்கு கவிதைகள் எழுதவில்லையே, ஏன்?
அதற்கான காரணம் என்று குறிப்பிட்டு எதையும்  சொல்லமுடியாது. உண்மையில் கவிதைகள்தான் எனக்குப் பிடித்தமானவை. கவிதைகளை எழுதத் துவங்கித்தான் நான் எழுத்துத் துறைக்கு வந்தேன். கவிதைகள் வாசிக்கவும் பிடிக்கும். இருந்தும் தொடர்ச்சியாகக் கவிதைகளில் என்னால் இயங்க முடியவில்லை. புனைகதைகளில் அதிகமாக ஈடுபடுவ    தால் கவிதைக்கான ஈர்ப்பு குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. கவிதை என்பது மின்னல் தெறிப்பு போன்றது. அந்தத் தெறிப்பு அகத்தினுள் எழுவதற்கு பயணம் செய்வது போன்ற பலவிதமான அனுபவங்கள் அடிப்படையாக இருக்கின்றன. எனது தற்போதைய வாழ்க்கைச் சூழல் வேலை, வீடு என ஒரு வட்டத்துக்குள்ளாகவே அடங்கியிருப்பதும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும் நான் கவிதை எழுதுவதை நிறுத்திவிடவில்லை. எனது புதிய தொகுப்பொன்று தயாராகிக் கொண்டி ருக்கிறது.

தமிழ் இலக்கியச் சூழலில் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளைப் பிரசுரிக்க பல பதிப்பகங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் கவிதைத் தொகுப்பை பிரசுரிப்பதற்கு பல  பதிப்பகங்கள் முன் வருவதில்லை. கதைகள் சென்றடையும் பரப்பை கவிதைகள் சென்றடைவதில்லையே?
கவிதைகளை வாசிப்பதற்கு ஒரு பயிற்சி தேவை என நினைக்கிறேன். ஏனெனில் கவிதைகள் நுட்பமான மன உணர்வின் அடிப்படையில் எழுதப்படுவன. கவிதைகளைப் பொறுத்தவரை அவற்றுள் எழுதுபவர்களுக்கும், வாசிப் பவர்களுக்கும் சமஅளவு பங்கிருக்கிறது. உவமை, அணி, வடிவம் மற்றும் நுட்பத்தைப் புரிந்துகொள்ள ஒரு நுட்பமான மனநிலை தேவைப்படுகிறது. முன்பைக் காட்டிலும் இன்றைக்கு நுட்பமான பார்வைகொண்ட மனிதர்கள் குறைந்துவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. கவிதை வாசிப்பை வளர்த்தெடுக்க வேண்டிய தலையாயக் கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அடுக்கு மொழி, துணுக்கு, விடுகதை இவையெல்லாம் கவிதைக்கான இடத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டன. நீர்த்துப்போன, போலியான கவிதைச் சூழல் நிறைந்திருக்கிற இக்காலகட்டத்தில் அசலான கவிதைகளைத் தேடிக் கண்டறிய வேண்டியிருக்கிறது. நானும் கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியமும் இது பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, கவிஞர் கள் எல்லோரும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக கவிதைகளை மட்டுமே பிரசுரிக்கும் ஒரு பதிப்ப கத்தைத் தொடங்கவேண்டும் என்பதைப்பற்றி கலந்தா லோசித்தோம். கவிதைகளுக்கான வாசிப்புப் பரப்பை விரிவாக்க இதுபோன்றவை அவசியம்.

நீங்கள் ஓர் ஆசிரியராகவும் படைப்பாளியாகவும் இருப்பதால் கேட்கிறோம், மாணவர்களிடம் இலக்கிய ஈடுபாடு எவ்வாறு உள்ளது. உங்களால் எந்தளவுக்கு இலக்கியத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்திருக்கிறது?
நான் ஆசிரியராகப் பணியாற்றுவது நடுநிலைப் பள்ளியில் என்பதால் அந்த வயது மாணவர்களுக்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான பக்குவம் குறைவு. எனது பாட வேளைகளில் பாடத்தினூடாகவே நான் சில கவிஞர்கள், எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்வேன். நல்ல இலக்கிய நூல்களை எடுத்துச்சென்று  காட்டுவேன். அவ்வப்போது கதைகள் சொல்வதுண்டு. மாணவர்களுக்குள் இலக்கிய அனுபவத்தை உருவாக்க முயற்சி செய்கிறேன். பேரணாம்பட்டில் நாங்கள் ‘தமிழ்கூடல்’ எனும் இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறோம். அதன்மூலம் இலக்கியக் கூட்டங்கள் நடத்துகிறோம். அக்கூட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைக்கிறோம்.

எப்படியான சூழலை உருவாக்கவேண்டும் என்கிறீர்கள்?
எல்லாப் பள்ளிகளிலும் நூலகம் கட்டாயமாக இருக்க வேண்டும். பல பள்ளிகளில் நூலகம் இருந்தாலும் அதை திறந்து வைக்காமலும் மாணவர்களுக்கு நூல்களை வழங்காமலும் இருக்கின்றனர். தேர்வை முன்நிறுத்திய செயல்பாடுகளால் இன்னபிற புத்தக வாசிப்புக்கான நேரத்தை ஆசிரியர்கள் ஒதுக்கித் தருவதில்லை. புத்தக வாசிப்புக்கு என ஒரு பாடவேளையையே ஒதுக்கலாம். அனைத்துப் பள்ளிக் கல்லூரிகளிலும் இலக்கிய மன்றத்தின் மூலம் இலக்கியவாதிகளை அழைத்து வந்து பேச வைக்கலாம். மாவட்டம்தோறும் அரசு, அறிவியல் கண்காட்சிகளை நடத்துகிறது. அதேபோல இலக்கியம், சிந்தனை, மொழி வளர்ச்சியை மையப்படுத்தி மாணவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியை வடிவமைக்கலாம். அந்த இலக்கியத் திருவிழாவில் மாணவர்கள் தாங்கள்  படித்த நூல்களைப் பகிர்ந்துகொள்வது, நாடகங்கள் போடுவது ஆகியவற்றை ஊக்குவிக்கலாம். வாசிப்பு என்பது மனமுதிர்ச்சி மற்றும் வயதோடு தொடர்புடையது. அதனால் ஆறாம் வகுப்பிலிருந்தே அந்த வயதுக்குப் பொருந்தக்கூடிய இலக்கியங்களை அறிமுகப்படுத்தலாம். அறிவொளி இயக்கக் காலகட்டத்தில் பாமரர்கள் மத்தியில் நல்லனவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக பிரபல எழுத்தாளர்களின் நல்ல கதைகளை எளிய முறையில் கொடுத்தார்கள். அதுபோன்று பள்ளிகளிலும் கொடுக்கலாம்.

தமிழில் சிறுவர் இலக்கியங்கள் பெரிய அளவில் இல்லாததற்கு என்ன காரணம்?
இன்றைய இலக்கியச் சூழலில் குழந்தைகளுக்கு எழுதுவது என்பதை தேர்ந்த இலக்கியவாதியின் செயல்பாடாகப் பார்ப்பதில்லை. குழந்தை இலக்கியவாதிகளை யாரும் இலக்கியாவாதிகளாய் ஏற்றுக்கொள்வது இல்லை என்கிற பொது மனநிலை படைப்பாளிகளிடையே இருக்கிறது. உண்மையில் குழந்தைகளுக்கு எழுதுவதுதான் கடுமை யானதும் சவாலானதும்கூட. அதற்கு தனி மேதமையும் பயிற்சியும் தேவைப்படுகிறது. அந்த முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் குழந்தைகளுக்கான இலக்கியத்தை எழுதியிருக் கிறார்கள். எழுத்துத் துறையில் இருக்கும் பெரும்பாலானோர் கோகுலம், அம்புலி மாமா படிக்காமல் வந்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு குழந்தைகளுக்கான இலக்கிய இதழ் என்பதே அருகிவிட்டது. காமிக்ஸ் படிப்பதன் அனுபவத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்காமல் கார்ட்டூன் சேனலைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். 

ஆசிரியராக இருப்பதால் மேலும் ஒரு கேள்வி, மாணவர்களின் தற்கொலைகள் ஏன் இவ்வளவு அதிகரித்திருக்கிறது?
மாணவர் தற்கொலை பெருகியிருக்கிறது என்பது உண்மைதான். அதை நாம் பல சமூகக் காரணிகளோடு   தான் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும் மாணவர் கள் தற்கொலைக்கு பெரும்பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்கள். தனது குழந்தை எல்லாவற்றிலுமே முதலிடம் பெறவேண்டும் என்கிற அவர்களது எதிர்பார்ப்பு தவறானது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது. அதைக் கண்டறிந்து அதன் வழியில் நடத்திச் செல்வதை விட்டுவிட்டு படிப்பில் முதலிடம் பெறவேண்டும் என்ற நெருக்கடியைத் தருவது, கனவைத் திணிப்பது தவறானது.

ஆசிரியர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது இல்லையா?
ஆம், இதை முற்றிலுமாக மறுக்கவில்லை. ஆசிரியர்கள் மட்டும் அதற்குக் காரணமல்ல. இந்தக் கல்விமுறையும் காரணம்தான். அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 60 சதவிகித தேர்ச்சியைக் காட்டவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. தனியார் பள்ளிகள் முற்றிலும் கல்வியை வணிகமயமாக்கிவிட்டன. நூற்றுக்கு நூறு சதவிகித தேர்ச்சி விகிதத்தைக் காட்டினால்தான் அப்பள்ளியில் சேர்க்கை அதிகரிக்கும் என்பதற்காக மாணவர்களை முதலீடாகப் பயன்படுத்துகிற போக்குதான் நடந்து வருகிறது. ஒரு மாணவனின் அசலான ஆளுமை, தனித்திறமையில் இங்கு யாரும் அக்கறை காட்டுவதில்லை. நவீன கால மாற்றம் சிந்திக்கிற பழக்கத்தைக் குறைத்துவிட்டதாகத் தோன்றுகிறது.

தகப்பன்கொடி நாவல் உட்பட உங்களின் பல கதைகள் நிலம் பறிபோவதைப் பற்றி மிகுந்த கவலையுடன் பேசுகின்றன. அதன் பிண்ணனி பற்றிச் செல்லுங்கள்?
காலம் காலமாகவே பொருளாதாரம் மற்றும் சமுதாய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் விவசாயக் கூலிகளாகத்தான் இருந்திருக்கி றார்கள். என்னுடைய பெற்றோர் மற்றும் மூதாதையர்கள் அப்படிப்பட்டவர்கள்தான். அவர்களுக்கு நிலம் பற்றிய கனவு இருப்பது இயற்கையான ஒன்றுதான். அந்தக் கனவு நிறைவேறுவதற்கான ஆசையும் ஏக்கமும் எனது எழுத்தில் பிரதிபலிக்கின்றன. நிலம் என்பது இங்கு அதிகாரம். தொன்மைக் காலத்தில் நிலம் அரசர்கள் கையிலிருந்தது. அரசர்கள் ஆட்சி முடிந்து, ஆங்கிலேய ஆட்சி முடிந்து, ஜனநாயக ஆட்சிக்கு வந்த பிறகும் கூட நிலங்கள் அனைத்தும் மேல்தட்டு மக்களிடமே தங்கிவிட்டன. எல்லாக் காலத்திலும் நிலங்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடம் போய்விடக்கூடாது என்பதில் சாதிய அதிகார வர்க்கத்தினர் கவனமாக இருந்திருக்கின்றனர். நிலம் என்பது அதிகாரம் மட்டுமல்ல வாழ்வாதாரமும், சமூக மதிப்பீடும்கூட. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேயர்களால் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை என்னுடைய மூதாதையர்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். 99 சதவிகித பஞ்சமி நிலங்கள் இன்றைக்கு ஆதிக்க சாதியினரிடம்தான் இருக்கின்றன. பஞ்சமி நிலத்தை தலித் மக்கள்தான் வைத்திருக்க முடியும். விற்கவேண்டும் என்றால்கூட இன்னொரு தலித்துக்குத்தான் விற்க வேண்டும் என்பது தான் பஞ்சமி நிலங்களுக்கான சட்டம். ஆனால் இச்சட்டங்கள் வெறும் பெயரளவில் மட்டும்தான் இருக்கின்றன. இன்றைக்கு பஞ்சமி நிலங்களை ஆதிக்க சாதியினர் சட்ட அச்சமின்றி வெளிப்படையாக வைத்திருக்கின்றனர். இந்த சாதிய ஒடுக்குமுறை மற்றும் காலத்துக்கும் நிலத்தைச் சொந்தங்கொண்டாட முடியாத அவலம் ஆகியவற்றையே தகப்பன்கொடி நாவல் மற்றும் சில சிறுகதைகளில் பேசியிருக்கிறேன்.

நீங்கள் இருக்கும் பேரணாம்பட்டு பகுதியில் தோல் பதனிடுதல், பீடி சுற்றுதல் போன்ற தொழில்களே அதிகம் உள்ளன. எனில் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் எப்படியிருக்கிறது?
ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நூறாண்டு களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தொடக்கத்தில் மரப்பட்டைகள் மற்றும் எண்ணெய்கள் மூலம் இயற்கை முறையில் தோல் பதனிட்டு வந்தனர். இதனால் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 80களுக்குப் பிறகு குரோம்டேனிங் எனும் ரசாயனங்கள் மூலம் பதனிடும் முறை அறிமுகமான பிறகுதான் எங்கள் பகுதியின் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. வேதிப்பொருட்கள் மூலம் தோல் பதனிடுவதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. இதனால் வேதிப்பொருட்களின் கழிவுகளைக் கட்டுப்பாடுகளின்றி நீர்நிலைகளில் விட ஆரம்பித்தார்கள். நாள்பட நாள்படத்தான் நாங்கள் அதன் விளைவுகளை உணர ஆரம்பித்தோம். நீர்நிலைகள் உப்புத் தன்மையைக் கொண்டதாக மாறியது. எலும்பு பலவீனமடைதல், புற்றுநோய் போன்ற நோய்கள் அதிகரித்தன. பாலாற்றுப் பாசனத்தில் செழித்திருந்த விவசாயம் பொய்த்துப் போனது. பாலாறே செத்துப்போனது. மண் உவர் மண்ணாக மாறியது. தென்னை, வாழை மரங்கள் எல்லாம் பட்டுப்போய் நின்றன. இன்றைக்கு வறட்சிக்காடாய் எங்கள் பகுதி இருப்பதற்கு இந்தத் தொழிற்சாலைகள்தான் காரணம்.

பொதுவுடைமைச் சிந்தனைகள், பெண்ணிய சிந்தனைகள், இன ஏகாதிபத்திய எதிர்ப்பு அளவுக்கு இங்கே எழுத்துத் தளத்தில் சாதிய ஏகாதிபத்தியம் பற்றிய குரல் ஓங்கி ஒலிக்கவில்லை என்று சொல்லலாமா?
ஒலித்திருக்கிறது. ஆனால் மிகவும் குறைவாகத்தான் ஒலித்திருக்கிறது. 90 களுக்குப் பிறகுதான் படைப்புகளுக்குள் சாதிய விமர்சனங்களை வைக்கக்கூடிய போக்கு தீவிரமடைந்தது. அதற்கு முன்பு சாதிய ஒடுக்குமுறையைக்  காந்திய, மார்க்சிய, திராவிடப் பார்வையில்  பார்க்கக்கூடிய எழுத்துகள்தான் இருந்தன. தலித்துகளின் பார்வையிலான எழுத்து 90களுக்குப் பிறகுதான் எழுச்சிகொண்டது. இந்த எழுத்து அம்பேத்கரிய பௌத்த பார்வையை உள்ளடக்கியது. தலித் இலக்கியங்கள் இன்றைய வரையிலும் எழுதப்பட்டு வந்தாலும்கூட அவை போதுமானதாக இல்லை.

சமீப காலமாக பல எழுத்தாளர்கள் அரசியல் மற்றும் திரையுலகம் நோக்கி பயணிக்கிறார்கள். உங்களுக்கும்கூட காட்சி ஊடகத்தில் பணியாற்றும் எண்ணம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதன் தொடக்கப்புள்ளி எது? ஏன்?
திரைப்படங்களை ஏன் நாம் தீண்டத்தகாததாகப் பார்க்கவேண்டும். எழுத்தைவிட வெகுஜன மக்களை அதிக அளவில் சென்றடையக் கூடியது திரைப்படங்கள்தான். இந்த நவீன கலை வடிவத்தை நாம் சரியாகக் கையாளும்போது சமூகத்தில் நல் விளைவுகளை ஏற்படுத்த முடியும். திரைப்படத்துறையில் என்னை இணைத்துக்கொள்ள ஆர்வப்படுகிறேன். இருந்தும் அதன் எல்லைகள் எனக்குத் தெரியும். இன்றைய இளம் இயக்குநர்கள் பலரும் இலக்கியங்களை வாசிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனது ‘குறடு’ எனும் சிறுகதையை ‘நடந்த கதை’ எனும் தலைப்பில் பொன்.சுதா குறும்படமாக இயக்கியுள்ளார். ‘கண்காணிக்கும் மரணம்’ எனும் கதையை அதே பெயரில் ஹரிஹரசுதன் குறும்படமாக இயக்கியிருக்கிறார். ‘மினுக்கட்டாம் பொழுது’ எனும் சிறுகதையை கவிஞர் லீனாமணிமேகலை இயக்க உள்ளார். என் கதைகள் சிலவற்றை அடிப்படையாகக்கொண்டு திரைப்படங்கள் சிலவற்றுக்கு திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் அவற்றுக்கான அறிவிப்பு வரும்.

இலக்கியத்தில் இளம் எழுத்தாளர்களின் வரவு எந்தளவுக்கு இருக்கிறது? அவர்களது எழுத்தின் வீச்சு எப்படி இருக்கிறது?
ஓரளவு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் முன்னைக் காட்டிலும் இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்றைய இளைய தலைமுறையிடம் பரந்துபட்ட வாசிப்பனுபவம் குறைந்துவிட்டது. ஏன் வாசிக்க வேண்டும்? என்கிற அபத்தமான கேள்வியை முன்வைக்கக்கூடிய போக்கு நிலவி வருகிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் எழுதும் மேம்போக்கான எழுத்தைக்கொண்டே தங்களை எழுத்தாளராக கட்டமைத்துக்கொள்கிறார்கள். எதையுமே படிக்காமல் அடுத்தவர்களைக் கிண்டல், கேலி செய்வது என ஒரு தவறான போக்கில் சமூக வலைத்தளங்களில் பலரும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படைப்பாளி உருவாவதற்கு அறச்சீற்றம், சமூக ஏற்றத்தாழ்வுகள் மீதான கேள்வி, சகமனிதனின் மனதை ஊடுருவுவது; அவனை மதிப்பது, பண்பாட்டுக் கூறுகளைப் பதிவு செய்வது என்பவை முக்கியம். அதற்கு வாசிப்புப் பயிற்சி தேவை. நமது முன்னோடிகளை வாசிக்கும்போதுதான் அவர்களின் எழுத்து எதைக் கொடுத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதையும் தாண்டிய வலுவான படைப்பைக் கொடுக்க முடியும். வாசிக்காத அறியாமையில்தான் பலரும் இருக்கிறார்கள். இந்த அறியாமையிலிருந்து வெளி வர வேண்டும்.

மெட்ராஸ் திரைப்படத்தில் டெக்னிஷியன்கள் துவங்கி நடிகர்கள் வரை பலரும் தலித்துகள் தான். கலைத்துறைக்குள் தலித்துகள் நுழைவது என்பது ஒட்டு மொத்த தலித் சமுதாய மாற்றத்துக்கான ஒரு படியாகக் கொள்ளமுடியுமா?
பா.ரஞ்சித் போன்றவர்கள் திரைத்துறைக்குள் கால் பதித்து வெற்றி காண்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. சினிமா மட்டுமல்ல இன்றைக்கு பல துறைகளில் தலித்துகள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த முன்னேற்றம் போதுமானதாக இல்லை. இடஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டால் தாழ்த்தப் பட்டோருக்கென ஒதுக்கப்பட்ட சதவிகிதம் கூட முழுமை யாக நிரப்பப்படவில்லை. தலித் தொழில் முனைவோர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். ரஞ்சித் போன்ற சிலரைக் காட்டி நாம் திருப்தியடைந்து கொள்ளக்கூடாது. மாறாக அவர்களைப் போல் பலரும் பல துறைகளில் இறங்கி செயல்பட முன் வரவேண்டும். அதுதான் சமுதாய மாற்றமாக இருக்கும். வெற்றி என்பது திறமை மற்றும் உழைப்பு சார்ந்ததுதானே ஒழிய சாதி அடிப்படையிலானது அல்ல என்பதை உணர்த்திய ரஞ்சித்தை நான் ‘ட்ரெண்ட் செட்டர்’ என்றே சொல்வேன்.

சிறுபத்திரிகைகள் இன்று எப்படி உள்ளன? ஒடுக்கப்பட்டோருக்கான சிற்றிதழ்களின் பங்களிப்பு குறித்துச் சொல்லுங்கள்?
‘களம்’, ‘குறி’, ‘மணல்வீடு’, ‘சிலேட்’, ‘கல்குதிரை’ போன்ற சிற்றிதழ்கள் பலவும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல மின்னிதழ்களை அச்சிதழ்களுக்கு மாற்றாகப் பார்க்க முடியும். ‘கூடு’ எனும் மின் இதழில் வந்த எனது கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மின்னிதழ்கள் கையிலெடுத்து வாசிக்கும் அச்சிதழ்களின் அனுபவத்தைக் கொடுக்காது என்றாலும் கால மாற்றத்துக்கு ஏற்றவை அவை. ஒடுக்கப்பட்டவர்களுக்கான சிற்றிதழ்கள் முன்பு நிறைய வந்துகொண்டிருந்தன. இன்றைக்கு  ‘தலித் முரசு’ சமூக அரசியல் தளத்தில் தீவிரமாக இயங்குகிறது. ‘தமிழ் மண்’, ‘கோடாங்கி’, ‘மக்கள் களம்’, ‘வெள்ளைக் குதிரை’, ‘ஆதித் தமிழன்’ போன்ற இதழ்கள் தலித் அரசியலை முதன்மைப்படுத்தி வெளியாகின்றன. கலை இலக்கியத்தை முக்கியத்துவப்படுத்தும் இதழ்கள் இப்போது குறைந்துவிட்டன.
தலித் பெண்களின் பங்களிப்பு தமிழ் இலக்கியத்தில் அன்றும் இன்றும் எப்படி உள்ளது?
அன்றைக் காட்டிலும் இன்றைக்கு அதிகமாக இருக்கிறது. சிவகாமி, பாமா, சுகிர்தராணி, உமாதேவி என நிறைய பேர் தீவிரமாக எழுதுகிறார்கள்.

நேர்காணல்: அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions