c நாமிருக்கும் நாடு-23
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-23

தமிழ்ச் சங்கம் கண்ட  தேவர்

ஒரு மொழியின் வளர்ச்சி, அம்மொழிக்குப் புதிது புதிதாக வந்து சேரும் இலக்கிய, அறிவியல் படைப்புகள் மற்றும் பிறமொழி வளமைகளை மொழிபெயர்த்து ஆக்கிக்கொள்ளுதல் ஆகிய செயல்பாட்டினாலேயே சாத்தியப்படுகிறது. இந்த உண்மையைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உணர்ந்தவர் பாண்டித் துரைத் தேவர். பாலவநத்தம் ஜமீன்தார் என்று அறியப்பட்டவர். இராமநாதபுரம் மன்னராக இருந்த பாஸ்கரசேதுபதியின் சகோதரர்.
பாண்டித்துரைத் தேவர் 1867-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி பிறந்தவர். தந்தை பொன்னுசாமித் தேவர். இவர் இசைமேதையாக அந்நாளில் விளங்கியவர். பாலவநத்தம் ஜமீன் பொறுப்பை இவருக்கு அளித்திருந்தார் மன்னர்.
பாண்டித்துரைத் தேவர் அந்நாளைய வழக்கப்படி முதலில் தமிழும், பிறகு ஆங்கிலமும் பயின்றார். உரிய வயதில் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஓய்வு நேரத்தில் தமிழ் இலக்கிய வாசிப்பு, தமிழறிஞர் சந்திப்பு என்று பொழுதைப் பொன் செய்தார்.
தேவரின் தமிழ் அன்பு வெளிப்பட ஒரு நிகழ்ச்சி, வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.  
ஒருமுறை தேவரும் அக்காலத்திய புகழ்பெற்ற தமிழ் அறிஞராகத் திகழ்ந்த சோழவந்தான் அரசஞ் சண்முகனாரும் உரையாடிக்கொண்டிருந்த போதில், ஸ்காட் என்கிற ஆங்கிலப் பாதிரியார் அவைக்கு வந்து சேர்ந்தார். அவர் கையில் ஒரு புத்தகம். வந்தவர் தேவரிடம் அப்புத்தகத்தைத் தந்தார்.
‘ஐயா, திருக்குறளில் பல இடங்களில் எதுகை, மோனை சரியாக அமையவில்லை. ஆகவே, நானே திருக்குறளைத் திருத்தி, எல்லாக் குறள்களிலும் எதுகையும் மோனையும் சரியாக அமையும்படி எழுதி அச்சிட்டும் கொண்டு வந்திருக்கிறேன், பாருங்கள்’ என்றார்.
தேவருக்கு மனதுக்குள் ஆத்திரம். சண்முகனாருக்கு அதிர்ச்சி. அமைதியாகத் தேவர், ‘எத்தனைப் புத்தகம் அச்சிட்டு இருக்கிறீரோ, அத்தனையையும் நானே வாங்கிக்கொள்கிறேன். அதோடு, அதன் கையெழுத்துப் பிரதியையும் நான் வாங்கிக் கொள்கிறேன். பணம் உடனே கொடுத்து விடுகிறேன்’ என்றார். பாதிரியார் மகிழ்ச்சியுடன் எல்லாப் புத்தகங்களையும் விற்றுப் பணம் பெற்றுக்கொண்டு நடந்தார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குப் பின்புறம்  காலி இடம் நிறைய இருந்தது. அங்கே, ஆங்கிலேயர் திருத்திய எல்லா புத்தகங்களையும் போட்டு எரித்துச் சாம்பலையும் புதைத்துவிட்டார்.
இராமநாதபுரத்து அரண்மனையும், தன் வீடாகிய சோமசுந்தரவிலாச மாளிகையும் அறிஞர் களுக்குத் திறந்த வீடு. தேவரைக் காண வந்த எந்த அறிஞரும் வயிறு நிறையவும் கை நிறையவும் மகிழ்ச்சியோடு திரும்பினார்கள்.
அலுவல் காரணமாக ஒருமுறை தேவர் மதுரைக்கு வந்திருந்தார். அங்கிருந்த தமிழ் அறிஞர்கள் திருக்குறள் பற்றி உரையாற்ற வேண்டிக்கொண்டார்கள். பத்து நாட்கள் மாலை வேளைகளில் பேச்சு. தேவர் ஒப்புக் கொண்டார்.
‘‘வரும்போது திருக்குறள் நூல் கொண்டு வரவில்லை. யாரிடமாவது திருக்குறளும் கம்ப ராமாயணமும் கேட்டு வாங்கி வாருங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார். திருக்குறளும் கம்பராமாயணமும் அங்கு எவரிடமும் இல்லை. பல இடங்களிலும் தேடினார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு புதுமண்டபத்தில் தேடிக் கண்டுபிடித்து வாங்கி வந்தார்கள்.
இந்த நிகழ்ச்சி, தேவரை மிகவும் சிந்திக்கச் செய்தது, வருந்தவும் செய்தது. முச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் குறளும் இராமகதையும் இல்லையா? இதை ராமாநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியிடம் சொன்னார். அப்போது தோன்றியதுதான் அந்த யோசனை.
மதுரையில் தமிழ்ச்சங்கம் தொடங்குதல் என்ற அரிய யோசனையும் செயல்திட்டமும் தயாராயிற்று.
‘முன்னர் பாண்டியர்கள் மூன்று தமிழ்ச்சங்கம் கண்டார்கள். நாம் நான்காம் தமிழ்ச்சங்கம் காண்போம்’ என்றார் தேவர்.
1. தமிழ் கற்பிக்க ஒரு தமிழ்க் கல்லூரி தொடங்குதல்
2. ஓலைச் சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிடுதல்.
3. நூல்கள் பாதுகாப்புடன் இருக்க ஒரு நூலகம்.
4. புது நூல்கள் வெளியிடுதல்.
5. சிறந்த அயல்மொழி நூல்களை அச்சிட்டு வெளியிடுதல்.
6. முறையாகத் தமிழ்த் தேர்வு நடத்தி, தமிழ்ப் பண்டிதர்களை உருவாக்குதல்.
7. தமிழாராய்ச்சி மண்டபம் கட்டுதல்.
8.புது நூல்கள், புதிய உரை பதிப்பித்து வெளியிடுதல், அரங்கேற்றம் செய்தல்.
9.புதிய தமிழ்ப் பத்திரிகை நடத்துதல், புதிய இதழின் பெயர் ‘செந்தமிழ்’.
1901 ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் பதினான்காம் நாள், தமிழக மதுரை நகரில்  நான்காம் தமிழ்ச்சங்கம் மன்னர் மற்றும் அறிஞர்கள் முன்னிலையில் உருவாயிற்று. தேவரின் அத்தனைத் திட்டங்களும் செயல்படத் தொடங்கின.
தேவர் இலவச உணவுத் திட்டத்தின் முன்னோடியும் ஆவார்.  கல்லூரி மாணவர்க ளுக்கு உணவும் தங்குமிடமும், இலவசமாக கொடுக்கப்பெற்றன. அச்சிட்ட பல நூல்களை விரும்புகிறவர்களுக்கு இலவசமாகவே வழங்கினார்.
ஆறுமுகநாவலர், உ.வே.சாமிநாத அய்யர் முதலிய பேரறிஞர்கள் நூல் அச்சிடப் பொருள் வழங்கினார்.
சுதந்திர இந்தியாவைக் காண ஆசைப்பட்ட வர்களில் அவரும் ஒருவர். ஆங்கில ஆட்சிக்கு எதிராக வ.உ.சிதம்பரம் பிள்ளை தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் (1900ஆம் ஆண்டு காலத்தில் இதன் மதிப்பு இன்றைய பலகோடி ரூபாய்) அள்ளிக்கொடுத்த வள்ளல், தேவர்.
காலம் அவரைச் சீக்கிரமே அழைத்துக் கொண்டது. தன் 44ஆம் வயதில் 1911ஆம் ஆண்டு மறைந்தார்.
உடம்புதான் மறைந்தது. ‘தமிழுக்குத் தொண்டு செய்தார் செத்ததுண்டோ’ என்பது கவி வாக்கு. இல்லைதான்.
-போராட்டம் தொடரும்
சா.வைத்தியநாதன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions