c நன்றொன்று சொல்வேன்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நன்றொன்று சொல்வேன்

மரங்கள் நம் உறவினர்கள்

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும்போதெல்லாம், ஓரமாய் அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடி போல் சுகமாய் அரவணைத்துக்கொள்ளும். நாம் ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்குமென்று?
மரங்களைப் பற்றிச் சிந்தித்தபடி வீட்டுத் தோட்டத்தில் உள்ள கொய்யா மரத்தடியில் வந்தமர்ந்தேன். ஓர் ஆண்டை ‘உலகக் காடுகள் ஆண்டாக’ ஐ.நா. அவை அறிவித்துள்ளது என்ற செய்தியை ஒரு காலையில் நாளிதழில் படித்தது நினைவுக்கு வந்தது. உடன், தமிழகத்தில் 5 சதவிகித மரங்களே இருக்கின்றன என்ற தகவலும் நினைவில் நின்று மனத்தைப் பிசைந்தது. சுற்றிச் சூழ்ந்திருந்த மரங்களில் வந்தடையும் பறவைகளின் விதவிதமான ஒலிகள், மரங்களில் அசைந்திடும் கனிகள், அதைக் கொத்த வந்தமர்ந்திருக்கும் கிளி, அதனை ஏக்கத்துடன் பார்க்கும் அணிற்பிள்ளை என அந்த மாலை நேரத்தில் நான் கண்ட காட்சி, அந்த அயர்ச்சியைப் போக்கியது.
மனம் மீண்டும் மரத்தையே நாடியது. எத்தனை அரசர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், வென்றிருக்கிறார்கள், தோற்றிருக்கிறார்கள்.ஆனால் அசோக மன்னன் இதற்காக மட்டுமா புகழ் பெற்றான்? அசோகன் சாலையோரங்களில் மரம் நட்டதாக இன்றும் நம் மாணவர்கள் வரலாறு படிக்கிறார்கள்தானே. வேறு எந்த மன்னனுக்கு இந்தப் பெருமை உண்டு வரலாற்றில்?
தலையில் தொப்பென்று விழுந்தது ஒரு கொய்யாக் கனி. அணில் கடித்தது. ருசியாக இருக்குமென்று நினைத்துக்கொண்டே எடுத்து ஒரு கடி கடித்தேன். கொய்யா மரத்தைப் பார்ப்பதே எனக்கு ஒரு ஆனந்த அனுபவம்தான். அதன் வழவழப்பு. அழகான இலைகள். தொங்கிக் கொண்டிருக்கும் செங்காய்கள். அதில் ஓடி விளையாடும் அணிற்பிள்ளைக் கூட்டம். சிறு வயதில் அதன் மீது ஏற முயற்சித்து, பயந்து, மிக மெதுவாய் அடிமேல் அடி வைத்துப் பின்வாங்கி இறங்கிய அந்தக் கணம் உடனே நினைவுக்கு வர கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டேன். எந்தத் துன்பமும் இல்லாத இளமையின் மலரும் நினைவுகளை நினைத்தாலே கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதுபோல இனிக்கிறது. குறைந்த விலை,  நிறைந்த தரம் கொய்யாதானே.
என் கையால் நீரூற்றி வளர்த்த மரத்தின் அடியில் அமர்ந்திருப்பதே சுகமாக இருந்தது. எங்கள் வீட்டுத் தோட்டத்துக்கு நீர் ஊற்றுவதே ஒரு பெரிய கதைதான். வீட்டில் இருக்கும் பத்து பெயரன், பெயர்த்திகளுக்கும் சுற்று முறையில் இந்த வேலை வரும். காலை 5 மணிக்கெல்லாம் பாட்டி கீழே இருந்து கூப்பிட்டுக்கொண்டே இருப்பார். அவரால் மாடி ஏற முடியாதது பெரிய வரப்பிரசாதம். அம்மாவும் வந்து எழுப்பி, ரெண்டு முதுகில் போட்ட பின் சலித்துக்கொண்டு இறங்குவோம். ஆனால் தோட்டத்துக்குள் காலையில் நுழைந்தால் அது பூவுலக சொர்க்கம்தான். மலர் மலராய்த் தாவும் வண்ணத்துப் பூச்சி, மண்ணில் மேயும் சிட்டுக்குருவிகள், அங்கங்கே அமர்ந்து கரையும் காகங்கள், அன்றிலிருந்து இன்றைக்கு வரை சோகமாகவே கூவிக் கொண்டிருக்கும் குயில்கள், மைனாக்கள் என இயற்கைப் பேரழகின் ஒரு துளி என் வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும். கதிர்க் கிரணங்கள் கை நீட்டித் தொட்டு, கீழே சில்லறைக் காசுகளைச் சிதறடிக்க, மென் ஒளியைப் பருகியபடி செடிகளின் இடையில் நடந்து கை பம்ப்பிடம் போனால், குடத்தில் ஒருவர் நிரப்ப, அடுத்தவர் ஊற்றுவார். பிறகு, சுத்தமாகப் பெருக்கிவிட்டுத் தோட்டத்தில் இருந்த சாமந்தி, மல்லி, கனகாம்பரம், வண்ணமயமான டிசம்பர் பூக்கள் என்று எல்லாவற்றையும் பறித்து மடியில் நிரப்பிக் கொண்டு பாட்டியிடம் போனால், மூன்று நெய் பிஸ்கெட் கொடுப்பார். அது எங்களுக்கு அன்றைய கூலி. அவர் தன் கையால் வைத்த மூன்று தென்னை மரங்களும் ஒரு மாமரமும் இன்றைக்கு அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. தென்னையைக் ‘கற்பகத் தரு’ என்று சொல்வார்கள். உண்மைதான். என் சிறு வயதில் வைக்கப்பட்ட மரம் இன்றைக்கும்  கம்பீரமாய்த் தோட்டத்தில் நின்றபடி வீட்டிற்கு வருபவர்களைத் தலையாட்டி வரவேற்கிறது.
பாட்டி வைத்த வாழைமரம், மருதாணிச் செடி எல்லாம் இப்போது இல்லை. இடப் பற்றாக்குறையில் வெட்டிவிட்டார்கள் வாழையை எழுதும் போக்கில் மரமென்று சொன்னாலும் அது  மரம் அல்ல. பூண்டுத் தாவர வகை. வாழையைப் பற்றி யோசிக்கும்போதே,
நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்
கன்றும் உதவும் கனி
என்னும் நன்னெறிப் பாடல் நினைவில் நின்றாடுகிறது. வாழைக்குத் தான் எத்தனை பெயர்கள். அசோகம், அசோணம், சேகிலி, கதலி, பனசம், பானுபலம், மிருத்தியுபலை, நுகும்பு, முண்டகம் என்று அகராதியை எடுத்தால் ஒரு பெரும் பட்டியலே கிடைக்கும். எதுவுமற்ற ஏழைக்கு இரண்டு வாழைப் பழங்களே உணவாகவும் இருக்கிறதுதானே. சத்துள்ள, வயிற்றை நிறைக்கும் பழமல்லவா. இந்து சமய ஆன்மிகத்திலும் தமிழ்ப் பண்பாட்டுச் சடங்குகளிலும் வாழைக்கும் தேங்காய்க்கும் இருக்கும் முக்கியத்துவம் வேறு பழங்களுக்கு இருக்க முடியாது. தேங்காய் முற்றினாலும் அதைக் காய் என்று தான் சொல்கிறோம் இல்லையா?
வீட்டு முன்னால் வழியை மறிக்குதே என்று முன்னால் நீட்டிக் கொண்டிருந்த சில மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த அந்த நண்பர் பேசும்போதே ‘இடையன் வெட்டு அறாவெட்டு’ என்று ஒரு பழமொழி சொன்னார். ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறதே என்று அந்தப் பழமொழிக்கு விளக்கம் கேட்டேன். இடையன் கையில் இருக்கும் அந்த வளைவான கொம்பால் இடையன் தன் ஆடு, மாடுகளுக்கு தழை வெட்டும்போது, அந்தக் கிளைகளை முழுவதுமாக வெட்டிவிடாமல், லேசாக மரத்தோடு ஒட்டி இருக்கும்படி வெட்டுவாராம். கிளையை அடியோடு வெட்டி விட்டால் அது உபயோகமற்றுப் போய் விடும். ஆனால் மரத்தோடு ஒட்டி இருப்பதால் மீண்டும் தழைக்குமல்லவா என்று ‘இடையன் வெட்டு அறாவெட்டு’ என்பதற்குக் காரணம் சொன்னபோது நான் அசந்துதான் போனேன். இடையர்களுக்கு இருக்கும் அறிவு இன்றைக்கு மெத்தப் படித்ததாகப் பீற்றிக்கொள்ளும் முட்டாள்களிடம் இல்லையே என்று சலித்துக்கொண்டே வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். இரண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்த எங்கள் தெருவை ரசித்துக்கொண்டே நடந்ததில் கால்கள் அனிச்சையாய் இராணி மேரி கல்லூரிக்கு வந்தவுடன் நின்றுவிட்டது. நான் படித்த கல்லூரியைப் பார்க்கையிலேயே ஒரு மகிழ்ச்சி. நன்றாக இருட்டிவிட்டதே என்று வருத்தமாகப் போய்விட்டது. கொஞ்சம் வெளிச்சம் இருந்தாலும் எங்கள் கல்லூரியின் எல்லோருக்குமான ஆலமரத்தடியில் சற்று அமர்ந்துவிட்டு வந்திருக்கலாம். எத்தனை நாட்களாகிவிட்டது. மரங்களுக்குப் பெயர் போனதுதான் எங்கள் கல்லூரி. ஆனாலும் இந்தப் பரந்து விரிந்த ஆலமரத்துக்குக் கொஞ்சம் கூடுதல் சிறப்புண்டு. வீட்டைப் பிரிந்து கல்லூரி விடுதியில் இருக்கும் மாணவிகளின் துயரம், பேருந்துக்குக் காத்திருக்கும் மாணவிகளின் அரட்டை, வகுப்பைக் கட் அடித்துவிட்டு சேட்டை செய்து கொண்டிருப்போர் என்று எத்தனை பேருடைய கதைகளைத் தன் விழுதுகளால் வாங்கிக்கொண்டு, இலைகளால் பாடிக் கொண்டிருக்கிறது? அந்த மரத்தடிப் பிள்ளையாருக்கு மூப்பே கிடையாது. மாணவிகள், ஆசிரியைகள் எல்லோருடைய குறைகளையும் கேட்கத்தானே அவருக்கு அவ்வளவு பெரிய காது? ஆலமரத்தடியில் உட்கார முடியாத வருத்தத்தைப் போக்கக் காலாற கடற்கரைக்கு வந்தமர்ந்தேன்.
கல்லூரிக் காலத்தில் வகுப்பு நேரத்திலும், முடிந்த பின்னும் வந்தமர்ந்து தோழிகளோடு சுற்றுப்புறத்தை மதிக்காமல் அரட்டை அடித்து கலாட்டா செய்த காலமும் என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டது. உச்சி வெயிலைக் கூடப் பொருட்படுத்தாமல் நீர் விளையாட்டு ஆடிய கதையை அது பாடலாக்கிக் கொண்டிருந்தது. என் கல்லூரி ஆசிரியை வகுப்பு நேரத்தில் சொன்ன நற்றிணைப் பாடலொன்று அந்த நெய்தல் நிலத்தில் நினைவுக்கு வந்தது. களவுக் காலத்தில், பட்டப் பகலில், அடிக்கும் வெயிலை மதியாமல் தலைவியைச் சந்திக்கும் ஆவலில் தலைவன் வந்து அவள் வீட்டின் அருகில் உள்ள புன்னை மர நிழலில் காத்திருக்கிறான். தலைவி வரவில்லை. தலைவன் தலைவியை விரைந்து மணமுடிக்க வேண்டுமென்று தோழி விரும்புகிறாள். தலைவனைப் பார்த்துப் பேசுகிறாள்.
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்து இனிதுவளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மோடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசைகடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ கல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே!
(நற்றிணை 172)
வறண்ட, மலைப்பாங்கான, கடற்கரை ஓரங்களில் வளரக் கூடியது புன்னை மரம். சிறு வயதில் நிலத்தில் ஆடிய அவள் தாய் விளையாட்டாய் மண்ணில் புதைத்த புன்னைக்கொட்டை, பிறகு பெய்த மழையில் முளைக்க, அவள் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறாள். அவளும் வளர்கிறாள். திருமணமாகி, குழந்தை பெற்ற அந்தப் பெண், தன் குழந்தைக்கு அந்த மரத்தைத் தமக்கை என்று உறவு கற்பிக்கிறாள். யாராவது தமக்கையின் முன் காதலித்து மகிழ்வார்களா? என்று தலைவனைப் பார்த்துக் கேட்கிறாள் தோழி. சங்க காலத்தில் மரங்களை உறவாக, உயிராக மதித்து மக்கள் வாழ்ந்ததை, இயற்கையைப் போற்றியதை இந்தப் பாடல் காட்சிப்படுத்துகிறது.
சங்கப் பாடல்களிலேயே மரம், செடி, கொடி, பூ, கனி பற்றிய பதிவுகள் இல்லாத பாடல்களே இல்லை. இயற்கையோடு கலந்து வாழ்ந்த நம் வாழ்வு ஏன் இன்று கானலாகிப் போனது? குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமான நம் நிலங்கள் ஏன் பாலையாகிக் கொண்டிருக்கின்றன? இந்தக் கேள்விகளை எப்போதுதான் நாம் நம்மைக் கேட்டுக் கொள்ளப் போகிறோம்? மீண்டுமொரு பெருஞ்சோர்வு என்னைத் தொற்றிக்கொண்டது. மெல்ல எழுந்து கடற்கரையின் சாலைப் பகுதியில் போட்டிருந்த ஒரு கல் மேடையில் அமர்ந்தேன். காற்றில் அடித்துக்கொண்டு வந்த ஒரு பழைய நாளிதழில் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சில கிராமங்களில் இப்போதும் கூட ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தவுடன் ஒரு மாமரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் படித்தவுடன் ஒரு புத்துணர்ச்சி. அந்தத் தாளை எடுத்துப் பத்திரப்படுத்தினேன். இனி மாணவர்களை ‘மரமண்டை, ஏண்டா மரம் போல நிக்குற’ என்றெல்லாம் திட்டக் கூடாது என்று மனதில் உறுதி செய்துகொண்டேன். கடல் காற்று சில்லென்று என்னை வாரி அணைத்துக் கொண்டது.
தி. பரமேசுவரி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions