c யூத் பக்கங்கள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யூத் பக்கங்கள்

வேட்பாளர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒருமுறையும் தேர்தல் வருகிறது. வேட்பாளர்கள் வருகிறார்கள். வாக்காளப் பெருமக்கள் மனமுவந்து நம்பிக்கையுடன் வாக்களிக்கிறார்கள். வேட்பாளர்கள்  எம்.எல்.ஏக்கள் ஆகிறார்கள். மந்திரிகள் ஆகிறார்கள். மக்களின் நம்பிக்கைகள் சில வென்றும் பல கண்டுகொள்ளப்படாமலும் போகின்றன. மக்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழந்ததில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு புதிய பாடத்தைப் புகட்டிக்கொண்டும் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றும் வருகிறார்கள். எப்போதும் ஜனநாயகத்தை மக்களே வழிநடத்தி வந்திருக்கிறார்கள்.
ஆனால், தொலைத் தொடர்பு வளர்ச்சி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் வாயிலாக கடந்த ஒன்றிரண்டு தேர்தல் காலங்களில் இளைஞர்கள் தேர்தலின் ஓட்டத்தையே மடைமாற்றக்கூடிய அளவிற்கு முக்கிய சக்தியாக இருக்கிறார்கள்.
இச்சூழலில் மேலும் ஒரு தேர்தல் வருகிறது. வேட்பாளர்கள் வருகிறார்கள். இளைஞர்கள் மனம் எதை வரைய நினைக்கிறது, வேட்பாளர்களிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்ற கேள்விகளோடு இந்த இதழுக்கான ‘யூத்களைச்’ சந்தித்தோம்!  


சம்பாதிப்பதற்காக வரக் கூடாது!
மஞ்சுஷா மனோகரன் (தனியார் நிறுவன ஊழியர்)

சட்டமன்ற உறுப்பினர் தன் சொந்தக் காசை தொகுதிக்கு தானம் செய்ய வேண்டாம். அரசிடம் இருக்கும் மக்கள் பணத்தைப் பெற்று அதன் மூலம் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தினந்தோறும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, மனுக்களை வாங்கிப் பரிசீலிக்கவும் செய்ய வேண்டும். கோரிக்கைகளைத் தரம் பிரித்து மக்களுக்கு மிகவும் தேவையானவற்றை நிறைவேற்ற சட்டசபையில் பேசவேண்டும். சட்டமன்ற உறுப்பினர் சிரத்தையெடுத்து ஒரு பணியை மேற்கொண்டார் என்றால் நிச்சயம் அந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்க முடியும். முதலில் மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் என்னவென்பதைத் தெரிந்துகொள்ள முன் வரவேண்டும். ஓட்டுக் கேட்க மட்டுமே தொகுதிக்குள் வரும் எத்தனையோ பேரைப் பார்த்துப் பார்த்து மக்கள் சலித்துவிட்டனர். சம்பாதிப்பதற்காக மட்டுமே இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்கிற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றி நிற்கிறது. அந்த எண்ணத்தைப் பொய்யாக்கும் ஒருவரையே நான் தேர்ந்தெடுப்பேன்.

எளிதில் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும்
பார்த்திபன் கௌதமராஜ் (மென்பொறியாளர்)

தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்கிற பகட்டு இல்லாமல் மக்களை நேரடியாக அணுகுபவராகவும், மக்கள் எளிதில் அணுகக்கூடியவராகவும் இருக்க வேண்டும். மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பவராகவும், அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பவராகவும் இருக்கவேண்டும். மக்கள் பிரச்சனைகளைச் சட்டசபையில் பேசுபவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு படித்தவராகவோ, பேச்சுக் கலையில் வல்லவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. தனது தொகுதி மக்களுக்கான கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உணர்ந்தவராகவும் அதற்காகச் செயல்படுபவராகவும் இருக்க வேண்டும். தனது தொகுதியின் தொழில் வளம், இயற்கை வளம் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். தொழிற்  துறையில் முன்னேற்றம் என்கிற பெயரில் இயற்கை வளத்தையும், சூழலையும் சீரழிக்க ஒருபோதும் அனுமதிக்காதவராக இருக்க வேண்டும்.

பொறுப்பை உணர்பவராக இருக்கவேண்டும்!
வெண்பா கீதாயன் (கல்லூரி மாணவி)

அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இன்றைய அரசியல் கறை படிந்ததாக இருக்கிறது. அதனால் நேர்மையான ஒருவரைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று சொல்லமுடியாத சூழல் இங்கு நிலவுகிறது. எதை எதிர்பார்க்க முடியுமோ அதைமட்டுமே எதிர்பார்ப்பது நல்லது என்கிற இன்றைய சூழலுக்கு ஏற்பவே பெரும்பாலோரின்  எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர் என்று ஒருவர் இத்தொகுதியில் இருக்கிறார் என்று தெரியுமளவுக்காவது முடிந்தவரை தொகுதியை எட்டிப் பார்த்து நிறைகுறைகளை விசாரிக்க வேண்டும். அடிப்படை வசதிகளான சாலை வசதி, தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி போன்றதைச் செய்து கொடுக்க வேண்டும். மக்களின் பிரதிநிதியாக அரசிடமிருந்து தேவையானவற்றைப் பெற்றுத் தருவதற்காகத்தான் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சேவை மனப்பான்மை உள்ளவரே வரவேண்டும்!
செல்வகுமார் பழனிச்சாமி (நெசவாளர்)

தொகுதியின் உண்மை நிலவரம் குறித்தும், எது தேவை எது தேவையில்லை என்பது குறித்தும் அறிந்திருக்க வேண்டும். தான் போட்டியிடும் தொகுதியில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்த தெளிவான புரிதலும் அதனை எவ்விதமாகச் சரியாக்கலாம் என்கிற திட்டமிடலும் இருக்கவேண்டும். போட்டியிடும் பகுதி நகர்ப்புறமாக இருப்பின் நகரின் உள்ளாட்சி அமைப்புக்களுடன் இணைந்து ஆலோசித்து தேவைகளை நிறைவேற்றவும், பேரிடர் காலங்களில் உண்மையான மக்கள் சேவகராகவும் இருக்க வேண்டும்.  தனது தொகுதியில் இருக்கும் பஞ்சாயத்துகள், கிராமங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறையேனும் நேரில் வந்து அங்கிருக்கும் பிரச்சனைகளையும், தேவைகளையும் மக்களிடம் ஆலோசனை செய்து அவற்றை நிறைவேற்றவும், அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய  திறனும், சேவை மனப்பான்மையும் உள்ள ஒருவரை எதிர்பார்க்கிறேன்.

முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்
சூர்யபிரபா (கணிணி வடிவமைப்பாளர்)

கருத்துதான் பலவற்றுக்கும் அடிப்படை என்பதால் சட்டமன்ற உறுப்பினர் கருத்தாற்றல் நிறைந்தவராக இருக்கவேண்டும். தனிப்பட்ட தாக்குதல் எதுவும் இல்லாமல் ஆளும் கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவராக இருக்கவேண்டும். அவரது கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும்கூட எவ்வித சமரசங்களுக்கும் இடமில்லாமல் குற்றச்சாட்டை முன் வைக்க வேண்டும். தொகுதிக்கான, மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியைப்  போராடிப் பெற்றுக் கொடுக்கவேண்டும். தொகுதி மக்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்களில் அக்கறை கொள்ளவேண்டும். அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், கல்வி ஆகியவை குறித்துப் பேசுபவராகவும் செயல்படுபவராகவும் இருக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும்!
பார்த்தி பாலு (உதவி இயக்குனர்)

ஓட்டு என்பது ஜனநாயகக் கடமை. ஓட்டுப் போடாமல் தவிர்க்கும் தவறை நாம் செய்யவேண்டாம். ஆனாலும் யாருக்கு ஓட்டுப்போடுவது என்கிற கேள்வி இருக்கிறது. ஏனென்றால் ஊழல் புரியாத கட்சியே இங்கு இல்லை. காமராஜர் போல் ஒரு நேர்மையான அரசியல்வாதிகளை இன்றைக்கு நம்மால் பார்க்க முடியாது. அப்படியொரு நேர்மையானவருக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்று சொல்வதும் இன்றைய சூழலுக்கு ஏற்புடையதாக இருக்காது. குறைதபட்சம் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுகிறவராக இருக்க வேண்டும். குறைந்த பட்ச நேர்மையுடன் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்போடு இருப்பவரைத் தேர்ந்தெடுப்போம். அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இளைஞர்களால்தான் ஒரு முடிவைத் துரிதமாக எடுத்துச் செயல்படுத்த முடியும்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions