c கண்டதைச் சொல்கிறோம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கண்டதைச் சொல்கிறோம்

வாகனங்கள் நிறுத்தமும் பிரச்சனைகளும்

சென்னையின் பிரமாண்டங்களுள் ஒன்று வாகனப் பெருக்கம்! அதேபோல் சென்னைக்கு இருக்கும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று வாகன நிறுத்தமும் அதனால் எழும் சச்சரவுகளும்!
சாதாரண கேள்விதான் - ‘வாகனங்களை எங்கே நிறுத்தலாம்?’
மிகவும் எளிமையான பதில்தான் - ‘அதற்குரிய இடத்தில்!’
இந்த ‘அதற்குரிய இடம்’ என்பதிலிருந்துதான் பிரச்சனை தொடங்குகிறது.
பேருந்துகளை விட்டுவிடுவோம். அவை அரசால் நடத்தப்படுகிறது. ஆகவே அதற்கான நிறுத்தங்களும், நிலையங்களும் நிறைய உண்டு!
கார்கள், வேன்கள், லாரிகள், பைக்குகள், சைக்கிள்கள், ஆட்டோ வகையறாக்கள் எல்லாம் எங்கே நிறுத்தப்படுகின்றன. எங்கும் நிறுத்தப்படுகின்றன. பெரும் வியாபார நிறுவனங்கள் தவிர்த்து பெரும் பான்மையான ஜனங்கள் புழங்கும் கடை கண்ணிகளுக்கும், அலுவலகங்களுக்கும் வாகனங்கள் நிறுத்துமிடம் என்று எதுவும் இல்லை. வாசலில், அல்லது எதிரே உள்ள சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. கடைகளுக்குள், அலுவலகத்துக்குள் போய் வேலை களை முடித்துவிட்டு எவ்வளவு நேரமானாலும் சாவகாசமாக வருகிறார்கள். அதுவரை வாகனம் அங்கேயே நிற்கும். அவ்வழியாக வரும் ஒரு வேன் அவற்றுக்கு முன்னோ, பின்னோ தன் பணியை முடிப்பதற்காகவோ, தற்காலிக ஓய்விற்காகவோ நிறுத்தப்படுகிறது. இந்த இரண்டிற்கும் நடுவில் நான்கு பைக்குகள் நுழைக்கப்படுகின்றன. அதற்கிடையிலான கேப்பில் ஒன்றிரண்டு சைக்கிள்கள் சொருகப்படு கின்றன. இவை எதையும் எளிதில் எடுக்கவியலாமல் கேட் மாதிரி ஓர் ஆட்டோ வந்து அடைத்துக்கொண்டு நிற்கிறது.
பாம்பின் வயிற்றில் உருளும் இறைபோல சாலையின் நடுவில் இப்படி ஆங்காங்கே வாகனக் கூட்டம் நிற்கிறது! தொடர்ந்து போக வேண்டிய வண்டி வேகம் மிகவும் குறைந்து வளைந்து செல்ல நடுரோட்டில் வர நேர்கிறது. அவசர உலகம் பொறுமையை தின்றுவிட அதற்கும் பின்னால் வருபவர் முந்திப்போக ‘மோதல்’ வந்து கீழே ‘விழுந்து’, தாண்டிக் குதித்து, தகராறு பண்ணி, டிராபிக் ஆகி, டென்சனால் ரத்த அழுத்தம் கூடி இயல்பை இழக்க வேண்டி வந்துவிடுகிறது!
மிகவும் சோகமானது,  பாதசாரிகள் போக நடைபாதை இல்லை, அல்லது மிகவும் சிக்கலாகிவிட்டது. அதாவது சிக்கல் ஆக்கப்பட்டுவிட்டது.
எங்கோ ஓர் இடத்தில் நிறுத்தப்படும் வாகன மொன்றால் எத்தனை சைடு, சென்டர் எஃபெக்டுகள் பார்த்தீர்களா!
பெரிய சாலைகளைத் தாண்டி பக்கச் சாலைகள் வந்தால் சாலைகளுக்கு இருபுறங்களும் வாகனங்களின் கச்சாம்புச்சாம் அணிவகுப்புகள், அத்துமீறல்கள்தான்! அதையும் தாண்டி வீதிகள், தெருக்கள் வந்தால் அவை வாகனங்களால் அடைக்கப்பட்டு ஒத்தையடிப் பாதைகளாக இருக்கின்றன.
சந்துகள் வந்தால் நிலைமையே வேறு!
ஒவ்வொருவரும் அவரவர் வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்துவார்கள். அதற்கு வாய்ப்பில்லாத போது ஒரு பொதுவான வெட்டவெளியில் நிறுத்துவார்கள். அல்லது இடம் அதிகமாக உள்ள ஒரு வீட்டு வாசலில் நிறுத்துவார்கள். ஒருவருக்கு ஓர் இடம் என ஒருமுறை நிறுத்தினால் அது அவருக்கு நிரந்தர இடமாகும். அங்கே வேறு யாரும் நிறுத்த முடியாது! கூடாது! மீறினால் தகராறுகள் வரும். வண்டி எட்டி உதைக்கப்படும். கைகலப்பாகும். திருவல்லிக்கேணி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் போன்ற நெரிசலான சந்துகளைக் கொண்ட பகுதிகளில் தினசரி ஒரு தகராறு இல்லாமல் இல்லை. வெட்டுக்குத்து, கொலைகூட நடந்திருக்கிறது!
ஊன்றிப் பார்த்தால் நாம் முன்பே சொன்ன ‘அதற்குரிய இடம்’ என்பதுதான் பிரச்சனையின் அடிநாதமாக உள்ளது எனலாம்.
ஒன்று நாம் வாகனங்களுக்கு உரிய இடத்தில் மட்டும் நிறுத்துவதில்லை. இரண்டு, வாகனங்கள் நிறுத்தத் தேவையான உரிய இடம் இல்லை.
வீடென்பது வாசல், தாழ்வாரம், தின்னை என்றுதான் தொடங்கும். அப்படித்தான் இருந்தது. வாசல், சைக்கிள், கலப்பை, வண்டிகளுக்கு. தாழ்வாரம் ஆடு, மாடுகளுக்கு. திண்ணை உறவினர்கள் வந்தால் எழும் நெருக்கடிகளுக்கு. அதன்பின் வீடு, வீட்டிற்குப் பிறகு தோட்டம் என்று ஒரு வீடு முழுமையடையும். இவற்றை நாம் இழந்துவிட்டதே இவை அனைத்திலும் பிரச்சனைகள் எழக் காரணமாக அமைந்துவிட்டது!
குழந்தைகள், விருந்தினர் என அதிகரித்த எண்ணிக்கை, இடக்குறைவு, அவசரகதியான வாழ்க்கைச் சூழல் நம் நிதானத்தை விழுங்கிவிட வாசல், தின்னை எல்லாம் போய் பெட்டி பெட்டியான வீடுகளாகிவிட வாகனங்கள் வீதியை, சந்தை, பொந்தை, சாலையை எதிர்பார்த்திருக்க வேண்டியதாகிவிட்டது! தொடக்கத்தில் எதிர்ப்புகள் இல்லாமல் போனதாலும், நெருக்கடி பெரிதாக இல்லாததாலும் இது ஜனநாயகம் போல பொதுவாகிவிட்டது! விளைவு  அனுபவிக்கிறோம்!
இது மேலும் தொடராதிருக்க இருவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது.
1. மக்கள்
2. அரசு
ஒரு பயணத்திற்குத் தேவையான அத்தனை அத்தியாவசியங்களையும் சேகரித்துப் பாதுகாப்பது மாதிரி வாழ்விற்குத் தேவையானவற்றை தொலை நோக்குடன் வடிவமைத்துக்கொள்வது மக்கள் ஒவ்வொருவரின் கடமை. அதற்கேற்ப வீடு மற்றும் சுற்றுப்புறத்தை அமைக்க முன்வரவேண்டும். அப்படியும் வசதியற்றவர்கள் பொதுத்தடத்தில் நிறுத்தும் போது அடுத்தவர் நிறுத்தவும், எவ்விதத் தீங்கும் தடையும் நேராத வண்ணமும் ஒழுங்கு நிலையை மேற்கொள்ள வேண்டும். பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்குக் கூடவா சார் வண்டியில் போகவேண்டும். ஆகவே மக்கள் ஒத்துழைக்காதவரை எத்தேசமும் மின்னலடிக்கும் அதிவெண்மையைக் காண இயலாது!
ஆனால், தன்னையே தானறிந்து சிந்தித்துச் செயல்பட எல்லா மக்களும் சாக்ரடீசோ, அரிஸ்டாட்டிலோ இல்லையே. பல லட்சம் சம்பாதிக்கும் நன்கு படித்த படிப்பாளிக் கொடுக்குகளே தம் வாகனத்தை வீதியிலோ ரோட்டிலோதானே போட்டு விடுகிறது. எனில் சாமான்ய ஜனங்களை ரட்சிக்க என்ன வழி!  
கூர்ந்து பாருங்கள் அரசு வாகனங்களால், இந்த நிறுத்தப் பிரச்சனைகள் பெரிதாக எழுவதில்லை. அரசு வாகன ஓட்டுநர்களும் பெரும்பாலும் கட்டுப்பாட்டை மீறுவதில்லை. காரணம் திட்டமிடல்தான். அதை பொதுமயமாக்கலாம். வியாபார நிறுவனங்கள் வாகன நிறுத்தங்களைக் கட்டாயம் வைத்திருக்கச் செய்யலாம்.
அதற்கு, சந்துகளையும், பொந்துகளையும், அங்கே நிறுத்தப்படும் வாகனங்களையும் அதைப் பயன்படுத்தும் மக்களையும் விசாலமாகவும் அமைதி யாகவும் வைத்திருப்பதும் தமது கடமை என அரசு உணர வேண்டும். அரசையும் தேசத்தையும் மக்களும் உணரப் பழக்க வேண்டும். ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கான காற்றோட்டம் ஒரு சந்திலிருந்தே தொடங்குகிறது!
அக்கறையாகவும் பொறுப்பாகவும் சிந்தித்தால் மார்க்கம் நிச்சயம்!
அதை வாகன மற்றும் போக்குவரத்து விதிமுறை களையும், நடைமுறைகளையும் நவீனப்படுத்துவதி லிருந்து தொடங்குவோம்!

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions