c தனிமை என்னை எழுத வைத்தது!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தனிமை என்னை எழுத வைத்தது!

- பாவண்ணன்

1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளர் தலைமுறையைச் சேர்ந்தவர் பாவண்ணன். இவருடைய முதல் சிறுகதை தீபம் சிற்றிதழில் 1982ல் வெளிவந்தது. வாழ்க்கை ஒரு விசாரணை, சிதறல்கள், பாய்மரக்கப்பல் முதலான நாவல்களையும் 16க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார். பாய்மரக்கப்பல் நாவல்  இவரை தமிழ் இலக்கியப் பரப்பில் வேரூன்றியது. பல்சுவை காவியத்திற்காக அவருடன் உரையாடினோம்.


உங்கள் பூர்வீகம், எப்போது எழுதத் தொடங்கினீர்கள் என்பதிலிருந்து தொடங்கலாமா?
என் அம்மாவும் அப்பாவும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். அம்மாவுக்கு சொந்த ஊர் ரெட்டியார் பாளையம். அப்பா கோர்க்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர். அவர்களுடைய இல்லற வாழ்க்கை புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையிலுள்ள வளவனூரில் அமைந்தது. என் தொடக்கக் கல்வியை வளவனூரிலும், பட்டப்படிப்பை புதுச்சேரியிலும் படித்து முடித்தேன். வளவனூரில் இயங்கி வந்த திருக்குறள் கழகத்தின் தொடர்பால் இலக்கியத்தின் மீது ஈடுபாடு பிறந்தது. என் பள்ளிக்கூட வாழ்க்கையிலும் கல்லூரி நாட்களிலும் எனக்குக் கிடைத்த தமிழாசிரியர்கள் அனைவரும் எனக்கு நல்ல வழிகாட்டிகளாக இருந்தார்கள். என் இலக்கிய ஈடுபாடு நன்கு வேர்விட்டு வளரவும் நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் பெருகவும் அவர்கள் துணையாக இருந்தார்கள். எனக்கு ஏற்பட்ட சின்னச்சின்ன ஐயங்களுக்கெல்லாம் அவர்கள் பொறுமையாக பதில் சொல்லி விளக்கினார்கள். அந்தச் சூழலே சின்னச்சின்ன கவிதை முயற்சிகளில் என்னை ஈடுபடத் தூண்டியது. மரபுக்கவிதை உலகில் ஒரு பறவைபோல பறந்து திரிந்த காலம் அது. ஒருசில குறுங்காவியங்களை அப்போது எழுதினேன். புதுவை அரசு நடத்திய சவரிராயலு நாயக்கர் நினைவு குறுங்காவியப் போட்டியில் நான் எழுதிய ‘பெண்மை போராடுகிறது’ என்னும் குறுங்காவியத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.  முதல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுங்காவியத்தையும் எனது குறுங்காவியத்தையும் இணைத்து அரசே புத்தகமாக வெளியிட்டது. தொலைபேசித் துறையில் இளம்பொறியாளர் பணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குரிய ஓராண்டுப் பயிற்சியைப் பெறுவதற்காக ஐதராபாத்துக்குச் சென்றேன். அந்த ஓராண்டுத் தனிமை என்னை உரைநடையின் பக்கம் தள்ளியது. என் சிறுகதை முயற்சிகள் அபோதுதான் தொடங்கின. ஆழ்மனதில் கொதித்துக்கொண்டிருந்த வெப்பத்தைக் கடந்து வரவும் என்னை நானே மீட்டெடுத்துக்கொள்ளவும் அந்த எழுத்து முயற்சிகள் எனக்கு மிகவும் உதவின.

உங்கள் முதல் கதையை எப்போது எழுதினீர்கள், அது எப்போது வெளிவந்தது?
ஐதராபாத்தில் நான் கழித்த தனிமைத் துயரிலிருந்து மீளும் முயற்சியாகவே எழுதும் கனவை நான் முதலில் வளர்த்துக்கொண்டேன். எனது சொந்த அனுபவத்தையே என் முதல் சிறுகதைக்குரிய கருவாக அமைத்துகொண்டேன். அந்தப் பயிற்சி நிலையத்திலும் எனக்கு ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தார். ஜோஷி என்பது அவர் பெயர். ஊரில் எங்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது. எங்கள் அப்பா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தார். எங்கள் அம்மா தனிமையில் அனைத்தையும் சமாளித்து வந்தார். என் வேலையைத் துறந்து உடனடியாக அவருக்குத் துணையாக இருக்கச் செல்லவேண்டும் என நான் நினைத்து ஒரு விலகல் கடிதத்தோடு ஒரு நாள் நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். நான் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஒரு மூத்த சகோதரர்போல அவர் எனக்கு ஆறுதல் சொன்னார். ‘உலகத்தின் நெருக்கடிகள் புரியாமல் பேசுகிறாய் நீ. இந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு நல்ல வேலைக்காக தவம் கிடக்கிறார்கள். உன்னைவிட பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு வேலையற்றவர்களாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த நாட்டில் அலைகிறார்கள். நீ உன் குடும்பத்துக்குச் செய்ய நினைப்பதை, பயிற்சியை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து செய், போ’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். அன்று இரவு நான் சாப்பிடவில்லை. தூங்கவில்லை. அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் என் மனத்தில் எதிரொலித்தபடியே இருந்தது. இந்த வேலைக்காக நான் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நேர்காணலுக்காக புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு வந்து சென்ற அனுபவங்கள் சட்டென ஒரு தருணத்தில் எனக்குள் பொங்கியெழுந்தன. அக்கணமே அந்த அனுபவத்தை ஒரு சிறுகதையாக எழுத உட்கார்ந்தேன். கதையை எழுதி முடித்தபோது விடிந்திருந்தத்து. அதுதான் நான் எழுதிய முதல் சிறுகதை.

நீங்கள் ஒரு தீவிரமான பரந்த வாசகர் என உங்கள் எழுத்துக்கள் மூலம் அறியமுடிகிறது. வாசிப்பின் பயன்பற்றி இன்றைய வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?
வாசிப்பு என்பது ஓர் இனிய அனுபவம். தெரிந்துகொள்ளும் ஆர்வமும் சுவாரசியத்துக்கான ஆசையும்தான் ஒருவரை வாசிப்பின் பக்கம் இழுக்கின்றன. தொடர்ச்சியாக வாசிப்பில் ஈடுபடும்போது, புத்தகங்கள் அறிவுக் களஞ்சியமாகவும் அனுபவக் களஞ்சியமாகவும் இருப்பதை ஒருவரால் மிக எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். எழுதப்பட்ட படைப்பு என்பது ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு சமூகத்தின் வாழ்க்கை. நாம் அறியாத வாழ்க்கை. கிட்டத்தட்ட அது ஒரு வரலாறு. வாழ்க்கையை அறிந்துகொள்வது என்பது நம் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்கு நிகரானதாகும். இலக்கியம், வரலாறு, அறிவியல், நிலவியல், சமூகவியல், மானுடவியல் என பற்பல துறைகள் சார்ந்து நமது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்புடையவை. எதையுமே ஒருவர் சொன்னார் என்பதற்காக, அதை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. எந்தச் சூழலில் அது சொல்லப்பட்டது, யாரை நோக்கி அது சொல்லப்பட்டது என்பதை உண்மையிலேயே அறிய, அது தொடர்பான புத்தகங்களை நோக்கிச் செல்லவேண்டும். அது அவருடைய புரிதலை இன்னும் விரிவாக்கும். இன்னொருவருடைய ஒற்றை வாக்கியத்தை நம்பி ஒருபோதும் ஒரு வாசகன் இருக்கக்கூடாது. வாசிப்பின் மிகப்பெரிய பயன் என்பதே விரிவான வகையிலும் ஆழமான முறையிலும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதுதான்.

உங்கள் எழுத்துக்களில் பெரும்பாலும் ஒரு துயரம் ஊடாடிக்கொண்டே இருக்கிறதே.  இவ்வளவு  துயரம்  ஏன்?
துயரம் இல்லாத இடம் எங்கே இருக்கிறது, சொல்லுங்கள். புராணங்களிலும் சங்கப் பாடல்களிலும் இல்லாத துயரமா? இலக்கியத்தில் துயரம் என்பது ஒரு பேசுபொருள். மையம். நாகரிகம் கருதி பிறரிடமிருந்து நாம் நம் துயரத்தை மறைத்துக்கொள்ளலாம். மற்றவர்கள் பார்வையில் நம் கண்கள் கலங்குவது தெரிந்துவிடக்கூடாது என்று விலகி சில கணங்கள் ஒளிந்து நிற்கலாம். ஏராளமான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதன் வழியாக தற்காலிகமாக அவற்றை மறக்கலாம். ஆனாலும் அவை நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுமா என்ன? துயரம் பாசிபோல வளர்ந்து நம் வாழ்க்கை என்னும் குளத்தையே மூடிக்கொண்டிருக்கிறது. நம் தேசம் இன்னும் ஏழைகளின் தேசமாகத்தான் இருக்கிறது. வாய்ப்பும் வளமும் வந்து சேராத இடங்களே நம் தேசத்தில் மிகுதி. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட, பள்ளி வாசல் மிதிக்காத தலைமுறையினர் இன்னும் வாழ்கிறார்கள். சிலர் இதை நம்ப மறுக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை, அல்லவா? இத்தனை பெரும்கூட்டத்திலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தி மெல்ல எழுந்து நிமிர்ந்து நிற்க, அவன் அல்லது அவள் எத்தனையோ வலிகளையும் வேதனைகளையும் கடந்துதான் வர வேண்டியிருக்கிறது. என் கதைமாந்தர்களில் பெரும்பாலானோர் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வழியாக விரிகிற உலகத்தையே என் கதைகளில் நான் முன்வைக்கிறேன்.

ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி விவாதித்த உங்களுடைய ‘சிதறல்கள்’ நாவலையடுத்து மூன்று தலைமுறைக் கதையாக வந்த ‘பாய்மரக்கப்பல்’ நாவல் உங்களைப் பரவலாகக் கவனப்படுத்தியது. அதை எழுதத் தூண்டியது எது? அதற்குப்பின் நாவல் முயற்சியில் இறங்கவில்லையே, ஏன்?
உருமாறிக்கொண்டே இருந்த எங்கள் ஊரின் முகத்தை அசைபோட்டபடி இருந்த ஒரு நாளில்தான் என் மனம் பாய்மரக்கப்பல் நாவலின் மையத்தைக் கண்டடைந்தது. அடிப்படையில் விவசாயத்தை மையமாகக் கொண்ட ஊர் எங்கள் ஊர். எங்கள் ஊர் ஏரி, அக்கம்பக்கத்தில் இருந்த பல பாளையங்களைச் சேர்ந்த விவசாயிகளின் பயிர்த்தொழிலுக்கு பக்கபலமாக இருந்த ஏரியாகும். திரும்பிய பக்கங்களிலெல்லாம் பச்சைப்பசேலென விரிந்த வயல்கள் காணப்படும். அவை மெல்ல மெல்ல மறைந்து இல்லாமலாகின. மேழிச்செல்வம் கோழைப் படாது என்னும் நம்பிக்கையோடு உழவுத்தொழிலை வணக்கத்துக்குரிய தொழிலாக ஏற்று வாழ்ந்த விவசாயிகளின் தலைமுறை குறைந்துகொண்டே வந்து ஒரு நாள் அதுவும் இல்லாமலானது. அரசியல் ஒரு புதிய பிழைப்புக்குரிய தொழிலாக மாறியதை கண்கூடாகக் கண்டேன். எண்பதுகளில் நிகழ்ந்த மாபெரும் துரதிருஷ்டம் அது. திரைப்படம் ஒரு புதிய கவர்ச்சியாக வளர்ந்து சிலந்தி வலையாக எங்கெங்கும் விரிந்தது. இளைஞர்கள் அதை நோக்கி ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். அரசி யலும் திரைப்படமும் தமிழ்ப் பண்பாட்டை இயக்கக்கூடிய விசைகளாக மாறின. அரை நூற்றாண்டு காலம் நம் வாழ்க்கைமுறையையும் சிந்தனை முறையையும் அடியோடு மாற்றிவிட்டது. இந்த மூன்று புள்ளிகளை வைத்துக்கொண்டு, அவற்றுக்கிடையே நிகழும் முரண்களையும் சாதகபாதகங்களையும் தொகுத்து விவாதத்துக்குரிய ஒரு புள்ளியைத் தொடவேண்டும் என்னும் ஆவலால் அந்த நாவலை எழுதத் தொடங்கினேன். 

புத்தக மதிப்புரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் அதிகமாக எழுதியவர்களில் நீங்களும் ஒருவர். அது அடுத்த தலைமுறைக்கான அவசியமான பணிதான் என்றாலும் எழுதுதல், வாசித்தலுக்கு நடுவே இதை எப்படி இவ்வளவு ஆழமாகச் செய்யமுடிகிறது?
ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்கும்போது அதைப்பற்றி என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத் தெரிவிப்பதை என்னுடைய கடமை என்றே நினைக்கிறேன். இந்தத் திசையில் நான் க.நா.சு. அவர்களையே வழிகாட்டியாக நினைக்கிறேன். படித்திருக்கிறீர்களா என்னும் தலைப்பில் அவர் ஐம்பதுகளில் நல்லதொரு புத்தகத்தை எழுதினார். அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த  ஏறத்தாழ இருபத்தைந்து புத்தகங்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள். ஒரு வாசகனுக்கான எளியதொரு வழிகாட்டி என்றே நான் அதைச் சொல்வேன். அந்தப் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு புத்தகமாக நான் தேடித்தேடிப் படித்தேன். எல்லாமே தமிழின் முக்கியப் புத்தகங்கள். அந்தக் காலத்தில் அவர் அந்த முயற்சியை எதை எதிர்பார்த்துச் செய்திருப்பார்? தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதன்றி வேறென்ன நோக்கம் இருந்துவிட முடியும்? யதுகிரி அம்மாள் எழுதிய பாரதியார் பற்றிய கட்டுரைத் தொகுதி பற்றி அவர் மட்டுமே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வந்தார். அவர் குறிப்பிட்டிருப்பதைப் படித்துவிட்டுத்தான் நான் அந்தப் புத்தகத்தைத் தேடியெடுத்துப் படித்தேன். இன்றுவரை நான் அந்தப் புத்தகத்தை ஆறேழு முறைகளுக்கும் மேல் படித்திருப்பேன். அருமையான புத்தகம். அழகான மொழி. இது மட்டுமல்ல, உலகத்தின் சிறந்த நாவல்கள், இந்தியாவின் சிறந்த நாவல்கள் என்ற தலைப்பிலெல்லாம் அவர் மிகச்சிறந்த அறிமுகக் கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளார். யாரும் சொல்லாமலேயே அந்தப் பொறுப்பை இந்தத் தலைமுறையில் நானே எடுத்துக் கொண்டேன்.

நிறைய மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். அதற்கென சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறீர்கள். கன்னடத்திலிருந்து நிறைய செய்திருக்கிறீர்கள். பெங்களூரில் பணிநிமித்தமாக இருப்பதால் அது தோன்றியதா! அதுபற்றி கொஞ்சம் விரிவாகவே சொல்லுங்களேன்?
மொழிபெயர்ப்பு முயற்சிகளில் நான் ஈடுபட நேர்ந்தது ஒரு தற்செயல். நான் முதலில் பணியிலமர்ந்த இடம் கர்நாடக எல்லையோர மாவட்டமான பெல்லாரி. பெல்லாரியிலிருந்து ஹோஸ்பெட் வழியாக கொப்பல் என்னும் நகரம் வரைக்கும் நூறு கிலோமீட்டருக்கு தொலைபேசி கேபிள் புதைக்கும் பணிக்குழுவில் நான் இருந்தேன். என்னிடம் ஐம்பது ஊழியர்கள் வேலை செய்தார்கள். வேலைக்குச் சென்ற முதல் நாளே எனக்கு அந்த வேலை பிடித்துவிட்டது. இனி எதிர்காலம் இந்த மண்ணில்தான் என என் ஆழ்மனம் உறுதியாக நம்பியது. அன்றே அரிச்சுவடி வாங்கி முறையாக கன்னடம் படித்தேன். உரையாடும் பயிற்சியை என் ஊழியர்களே எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் வெவ்வேறு மாவட்டங்களில் அலைந்து திரிந்த பிறகுதான் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூருக்கு வந்தேன். அப்போதும் மொழிபெயர்க்கும் எண்ணமெல்லாம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆயினும் நண்பர்களின் பரிந்துரையின் பேரில் நல்ல கன்னட நூல்களைத் தேடி வாசித்து வந்தேன். பெங்களூரில் அப்போது வாழ்ந்துவந்த மூத்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்னாத் அவர்களுடைய தொடர்பு கிடைத்தது. இந்தியிலிருந்து தமிழுக்கும்  தமிழிலிருந்து இந்திக்கும் அவர் ஏராளமாக மொழிபெயர்த்திருக்கிறார். அவர் ஒருமுறை நாடகமொன்றை நான் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்துத் தரவேண்டுமென கேட்டுக்கொண்டார். அந்த அன்பு வேண்டுகோளை என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை. சில நாட்களிலேயே அவருக்காக ஒரு நாடகத்தை மொழிபெயர்த்தேன். அதுதான் என்னுடைய முதல் முயற்சி. எந்த நேரத்தில் அந்த வேலையைத் தொடங்கினேனோ, இன்றுவரைக்கும் ஒன்றையடுத்து ஒன்றாக ஏதேனும் ஒரு புத்தகத்தை மொழிபெயர்த்துக் கொண்டே  இருக்கிறேன்.

மூலத்தில் ஆயிரம் வார்த்தை இருந்தால் மொழிபெயர்ப்பிலும் ஆயிரம் வார்த்தைகள் இருப்பது போன்ற மொழிபெயர்ப்புகளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வாக்கிய அமைப்பு என்பது ஒவ்வொரு மொழிக்கும் வேறுபடும் தன்மையை உடையது. அதைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கு ஒரு வாசகனை ஈர்க்கும் ஆற்றல் இருப்பதில்லை. மூலமொழியில் பத்து சொற்களைக் கொண்ட ஒரு வாக்கியம் தமிழில் மொழிபெயர்க்கப்படும்போதும் பத்து சொற்களாக இருக்கவேண்டும் என்று நினைப்பது தேவையற்றது. சொற்கள் அல்ல, பொருளே முக்கியம்.

கேரளா, கர்நாடக, வங்காள இலக்கியங்கள் தமிழில் பேசப்படுவதுபோல் நவீன தமிழ் இலக்கிய முயற்சிகள் கர்நாடகாவில் எந்தளவிற்கு கவனத்தைப் பெற்றுள்ளன?
போதிய அளவுக்கு கவனம் பெறவில்லை என்றே சொல்லவேண்டும். முதல் காரணம் தமிழின் முதன்மையான நவீன இலக்கியப் படைப்புகள் எதுவுமே கன்னடத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. புதுமைப்பித்தன், அழகிரிசாமி, பிச்சமூர்த்தி, கு.ப.ரா. என எந்த ஆளுமையின் தனித் தொகுப்புகளும் கன்னடத்தில் இல்லை. க.நா.சு.வின் தொகுப்பு முயற்சியில் இருபத் தைந்து தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஒரு தொகுதியாக எண்பதுகளில் வெளிவந்து நல்ல முறையில் அது பேசப்பட்டது. அதில் வெளிவந்த சுந்தர ராமசாமியின் ‘பள்ளம்’ சிறுகதையைப்பற்றி கன்னட விமர்சகர் டி.ஆர்.நாகராஜ் ஒரு கூட்டத்தில் பேசியதைக் கேட்ட நினைவுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட தொகுப்பு முயற்சிகள் அதற்குப் பிறகு தொடரவில்லை. அத்தி பூத்ததுபோல எப்போதாவது ஒரு நல்ல படைப்பு  யாரோ ஒரு புண்ணியவானின் முயற்சியில் வெளிவரும். அவ்வளவுதான். அதற்குப் பிறகு நீண்டதொரு இடைவெளி விழுந்துவிடும். விவேக் ஷான்பாக் என்னும் எழுத்தாளர் ‘தேஷகால’ என்னும் இலக்கிய இதழொன்றை சில ஆண்டுகள் நடத்தி வந்தார். ஜெயமோகன், சு.வேணுகோபால், வா.மு.கோமு ஆகியோருடைய சிறுகதைகளுக்கு அவ்விதழில் ஓர் அறிமுகம் கிடைத்தது. அவையெல்லாம் யானைப் பசிக்கு சோளப்பொரிபோல. பொய்த்தேவு, ஒரு புளியமரத்தின் கதை, புயலிலே ஒரு தோணி, மோகமுள், சாயாவனம், பிறகு என எந்த நாவலும் கன்னடத்திற்கு வரவில்லை. நான் அறிந்தவரையில் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்கள் அணையா விளக்கு, பதினெட்டாவது அட்சக்கோடு, பள்ளிகொண்டபுரம், தென்பாண்டிச் சிங்கம், மீரானின் ஒரு நாவல். கு.சின்னப்பப்பாரதியின் ஒரு நாவல். அவ்வளவுதான். இதை ஒரு பெருமையாகக் கருதமுடியாது. இந்தச் சூழ்நிலையில் நம் படைப்புகள் மீது மற்றவர்களின் கவனம் எப்படிக் குவியும்?

இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
வாசிப்பு, எழுத்து என இடைவிடாமல் இயங்கியபடியே இருக்கிறேன். என் வேலையமைப்பில் ஓய்வுநேரம் என்பது மிகக் குறைவானது. அதில் சிறிது நேரமும் வீணாகாதபடி கவனமாக பயன்படுத்திக்கொள்கிறேன். இடையில் நிறுத்திவிட்ட நாவலை மீண்டும் திறந்து படித்து வருகிறேன். தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான வழியைப்பற்றி யோசித்து வருகிறேன்.

நேர்காணல்: அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions