c புதுக்கவிதை: வேரும் விழுதும் - 11
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை: வேரும் விழுதும் - 11

கவிஞர் சிற்பி

தீராத தேடலும், கண்டடைந்த அனுபவங் களைக் கலைநுணுக்கம் மிக்க படிமங்களாக்கும் வித்தகமும், புதிய ஆழங்களைக் கவிதைக்குள் துளைந்து தொடும் அற்புதமும் தமிழ்ப் புதுக்கவிதையின் பூப்புக் காலமான எழுத்து யுகத்தில் ஒற்றை அதியசமான பிரமிள் என்ற கவிஞனிடம் குவிந்து கிடந்தன. மெய்யாகவே கைப்பிடிக்குள் கடலைச் சிறைப்பிடித்த கவிஞன் பிரமிள்.
த.சி.இராமலிங்கம் என்ற பெயரில் எழுதத் தொடங்கிய மேதைமை மிக்க இக்கவிஞர் எண்கணித நம்பிக்கையினாலோ என்னவோ, பிரமிள், தருமு சிவராம், அஜித் அரூப் சிவராம் எனப் பெயர் மாற்றம் செய்துகொண்டே இருந்தார்.
1960 ஜனவரி எழுத்து இதழில்  த.சி. இராம லிங்கத்தின் கவிதை முதன்முதல் வெளிவந்தது. ‘நான்’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை தன்னையே தேடும் அனுபவத்தைப் பகிர்ந்தது.
ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க் குலத்தின்
வேரீன்று வெறும் வெளியில்
ஒன்றுமற்ற பாழ் நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்

என்று தொடங்கும் இக்கவிதை பிரபஞ்ச வெளியைத் தொடுகிறது. ஆற்றல் மிகு சக்தியை அன்னையென அழைக்கிறது. அறுசீர் விருத்தமும், வெண்பா முத்திரையுமாகப் பயணிக்கிறது. வாழ்வு முற்றும் பிரமிள் தேடிய பிரபஞ்ச ரகசியங்களின் தேடலும், ஓர் ஆன்மீக இழையும் இதிலிருந்தே தொடங்குவதை அடையாளம் காண முடியும்.
புதுக்கவிதை தனதான அடையாளத்தைத் தேடிய அந்நாளில் ‘சொல்லும் நடையும்’, ‘சுயேச்சா கவிதை’ என்று கட்டுரைகளையும் பிரமிள் எழுதினார். எனினும் பிரமிள் (திறனாய்வு, சிறுகதை நாடகம் எனப் பலவும் எழுதியிருந்தாலும்) நின்று நிலைப்பதும், பொன்றாப் புகழுக்கு உரியவராவதும் அவருடைய இதிகாச வீச்சும், அறிவியல் பாய்ச்சலும், அபூர்வ தரிசனமும், படிமச் சிற்பமும் பொலிகின்ற கவிதைகளால் தான். கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல் நோக்கிய பயணம் ஆகிய மூன்றும் அவருடைய மேதாவிலாசத்தின் கனிந்த சித்திரங்களான கவிதைத் தொகுப்புகள்.
படிமங்களை வார்த்து உருவாக்கும் கலை கவிஞர்களுக்குப் பொதுவாகப் புலிவேட்டைக்கு நிகர். எது மற்றவர்களுக்குக் கடினமோ அதுவே பிரமிளுக்கு நீச்சல் குளம். புகழ்பெற்ற ‘விடிவு’, ‘எரிகல்’, ‘மின்னல்’ ஆகிய கவிதைகளில் இந்த ஆதிக்கத்தைப் பார்க்கலாம்.
விடிவை, ‘பூமித் தோலில் அழகுத் தேமல்’ என்றும், எரிகல்லை, ‘இயற்கை தன் இருளை மொழிபெயர்த்து உதிர்த்த கவி’ என்றும், மின்னலை, ‘ககனப் பறவை நீட்டும் அலகு’ என்றும் தமிழில் புத்தம் புதிதாய்ப் படிமங்களைக் கொட்டிக் குவித்தார் பிரமிள்.
இந்த உன்னதமான கலைஞனின் முதிர்ச்சியில் கவிதைகள் பிரமிப்பூட்டும் விசுவவெளி ஓவியங்களாகின்றன. இடைவெட்டிப் பாயும் நிகழ்த்து கலையால் கவிதைகள் எல்லைகள் தாண்டிப் பறக்கும் சூரியக் குதிரைகளாகின்றன. மிகுந்த படிப்பையும் அகப் பார்வையையும் பிரமிளின் வரிகள் வாசகனிடம் கோருகின்றன.
ணி = விநீ2 என்ற கவிதை ஐன்ஸ்டைன் கண்டறிந்த சக்தி தத்துவத்தின் விளைவை, அணுவின் வெடிப்பை, அதன் அலகிலா அழிவு வேட்கையை, அதனால் விளைந்த சீரழிவை, இந்தக் கணிதக் குறியீட்டைக் கண்டறிந்த மனிதனின் கண்ணீரைப் பேராற்றலோடு முன் வைக்கிறது.
மேஜையில் அக்ஷர கணிதத்தின்
சங்கேத நதி

என்று இதனை அடையாளப்படுத்தும் கவிஞர் காலமும் வெளியும் என்ற விஞ்ஞானி கண்ட தத்துவத்தில் ஈடுபடுகிறார்.
ஒளியின் கதியை
ஒளியின் கதியால்
பெருக்கிய வேகம்
ஜடத்தைப் புணர்ந்தால்
ஜடமே சக்தி

என்ற உண்மை அணுகுண்டாக உருக் கொண்டதையும் 1945இல் ஹிரோஷிமா நாகசாகியில் இந்த ‘ஜடமே சக்தி’ தத்துவம் பரிசோதிக்கப்பட்டதையும் கவிதை பேசுகிறது. அந்தப் பெருவெடிப்பைப் பிரமிள் கலைநயக் கவிதைப்படுத்துகிறார்.
கண்ணற்ற
சூர்யப் போலிகள்
கெக்கலித்து
தொடுவான் வரை சிதறும்
கணநேர நிழல்கள்

சூரிய மையம் கண் திறக்க மனிதரும் உயிர்களும் இயற்கையும் கணநேர நிழல்களாய்க் காணாமல் போகின்றனர். இந்த மசானக் கோலத்தை, ‘சிவனின் கபாலத்துக் கெக்கலிப்பு’ என்று சக்தி தத்துவம் சுடலைச் சிவனாகும் காட்சியாக்குகிறார் பிரமிள்.
கவிதையின் முடிவு பியானோ வாசிக்கும் ஐன்ஸ்டைனின் கண்ணீரில் தெறிக்கிறது.
இசைவெளியில் சிறகு மடிந்து
கருவி ஜடமாகிறது
பியானோவின் ஸ்ருதி மண்டலம்
வெறிச்சோடிக் கிடக்கிறது
உலகின் முரட்டு இருளில்
எங்கோ ஒரு குழந்தை அழுகிறது
ஐன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்
தெறிக்கிறது பரிதி
ஒரு கணப் பார்வை

சூறாவளியும் புயலுமாக உலகை அலைக் கழித்த சக்தி அமைதிகொள்வதைப் பியானோ வின் இசை வெளியோடு இணைத்துப் படிமப்படுத்தும் பிரமிள், தன் குறியீடு பேரழிவைக் கொண்டு வந்தபோது விஞ்ஞானி கண்ணீர் விட்டதையும், உலகின் கடைசி உயிர் ஒரு அநாதைக் குழந்தையாகிவிட்டதையும் இறுகிய பளிங்கு போல் சிற்பித்து விடுகிறார்.
புதிய தமிழ்க்கவிதை தொட்ட உச்சம் பிரமிளின்    ணி = விநீ2
படிமங்களை உயர்ந்த கவிஞர்கள் காலம் மெச்சும் கலைகளாக்கிவிடுகிறார்கள். ஆனாலும் பிரமிள் அநாயசமாகத் தொட்ட எல்லைகளை இன்னொருவர் போலி செய்வது கூட எளிதல்ல. மொழியின் சிகர சாதனைகளாகவே பிரமிளின் படிமங்களைக் கருதத் தகும்.
முதுமை மானுடத்தின் சோக பிம்பம். இதனைப் ‘பனித்து விழுந்த’ காலமாக, ஓயும் மூளைச் சிலந்தியின் வலைப்பின்னலாக, உணர்வின் ஒளிப்பட்டில் புலனின் வாடைக் காற்று வாரியிறைத்த பழந்தூசாகப் புலப்படுத்தும் கவிஞர் கடைசியில் முத்தாய்ப்பு வைக்கிறார். முதுமை என்ற அந்திநேரம்...
கதிர்க் கொள்ளிகள் நடுவே
ஏதோ எரிகிறது,
ஒன்றுமில்லை
பரிதிப் பிணம்

மனதைச் சிலுவையில் அறைகின்றன பிரமிளின் பிம்பங்கள். கைவிரல் அளவுள்ள சொற்களைக் கொண்டு ஒரு கம்ப காவியத்தை இதிகாசப்படுத்தும் ஆற்றல் பிரமிளினுடையது. அறை குறையான ஆறு வரிகளில் ஒரு காவியம் பிரசன்னமாகிறது.
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

வாழ்வின் நொடிகளுக்குள் காலாதீதம் காணவல்ல கண்ணும் மனமும் மொழியும் பிரமிளின் பெருமித வரங்கள். அணுவுக்குள் இரகசியமாய் உறைந்து கிடக்கும் ஆற்றலைப் போல் சொற்களுக்குள் உயிர்த்திருக்கும் ஜீவச் சிறகுகள் பிரமிளின் கவிதைகளில் விதையுறக்கம் கொள்கின்றன.
குமிழிகள் நதியில், கடலில், மழை வெள்ளத்தில் தோன்றும் கணநேர வியப்புக் கள். எத்தனை குமிழிகள் உடைவதைக் கண்டிருப்போம்! வாழ்வும் சாவுமென்று எள்ளி நகையாடி இருப்போம்! பிரமிளின் குமிழிகளும் ஜீவனை இழக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை மரணமுறவில்லை. மாறாக அவை எல்லையற்ற ஒன்றின் எல்லையைத் தொட்டு விடுகின்றன.
இன்னும்
உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர்மொக்கு.

ஒரு நீர்க்குமிழிக்குள் ஜீவத் துடிப்பையும், அதன் உடைவுக்குள் கால விரிவுகளில் சென்று கலக்கும் கடலின் விரிவையும் ஒருசேரக் காட்டும்போது இன்னதென விவரிக்க முடியாத பேரனுபவப் பேரலைகள் நம் மனசுக்குள் மோதிச் சிதறுகின்றன. இதுதானோ, இதுதானோ சொற்கள் தரும் பிரளய அனுபவம் என்று மனது விம்மித் தவிக்கிறது.
சொற்களுக்குச் சிறகு முளைப்பது இருக் கட்டும். மனிதனுக்குச் சிறகு முளைத்தால்? பல அர்த்த அனுபவ அடுக்குகளால் ஆன பிரமிளின் ‘மேல் நோக்கிய பயணம்’ என்ற நெடுங்கவிதை அதைப் பேசுகிறது. ஏளனங்கள், கூர்ங் கணைகள், எகத்தாளங்கள் பட்டுத் தெறிக்க அந்த மனிதனுக்குச் சிறகு முளைக்கிறது, அந்த மனிதன் பிரமிள்தான¢ போலும்!
திசைக் கிளை முழுதும்
இலைத் தீ முகங்கள்
திசைகள் முறிய
வீசின திவ்ய
வெறிகள் வைரச் சிறகுகள்..

உதிர்ந்த உடல் நீத்து உயிர்த்தது ‘உள்ளல்’. ‘இதயத்தின் அணுத்தொகுப்பில் அண்டத்தின் பெருநிகழ்வு.’
“கணத்தின் மொக்கவிழ்ந்தால்
காலாதீதம்

இன்னொரு சிறகு, இன்னொரு பயணம், மேல்நோக்கிய பயணம்... சக யாத்ரிகர்களுக்குச் சிம்ம சொப்பனமாகிற காலாதீதம் பிரமிளுக்குக் கைவசமாகிறது.
பிரமிளின் கவிதைக்குள் பயணிப்பது யுகங்களி னூடே நிகழ்த்தும் சஞ்சாரம். மின்னலின் சிறகுக்குள் கிடந்து துடிக்கும் உயிரின் பரவசம். நம் சமகாலத்தின் எந்தக் கவிஞனும் எந்தக் கவிதையும் இப்படி உயிரைப் பிடித்துலுக்கி _ ஒரு பிரம்ம ராக்ஷஸ் போல நம்மை வேர்கிழிய ஆட்டி வைத்ததில்லை.
1939 ஏப்ரல் 20இல் திருகோணமலையில் பிறந்து வளர்ந்து, ஏறத்தாழ நாற்பதாண்டுக் காலம் தமிழகத்தில் (இருபது வயது முதல்) வாழ்ந்து 1997 ஜனவரி 16இல் கரடிக்குடியில் சிந்திப்பதை நிறுத்திய பிரமிள் தமிழ்க் கவிதையில் ஒரு தனியுகம்.
ஒருமுறை மதுரையில் மணாவின் உதவியால் அவரை நான் சந்தித்து உரையாடியபோது அவருக்கு வயது நாற்பதிருக்கலாம். வானம்பாடி இதழுக்காக ஒரு நேர்முகம் அளிக்க இசைந்தார். வானம்பாடியில் ‘பட்டகம்’, ‘பாரதிக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்’ என இரண்டு கவிதைகளையும் தந்தார்.
பின்னர் நேர்முகத்துக்கு, வந்த விமர்ச னங்களால் ‘இனி நான் உங்களுக்கு எழுத மாட்டேன்’ என்று பிடிவாதமாய் மறுத்தார்.
அந்தப் பிரளயத்துக்குள் தாக்குப் பிடித்துச் சில மணித்துளிகள் இருந்த அனுபவம் ஒன்றே நான் கடவுள் தரிசனம் போல் பெற்ற கவிதையின் தரிசனம் _ கவிஞனின் தரிசனம்.
-தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions