c மண்ணும் மக்களும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மண்ணும் மக்களும்

செங்கான் கார்முகில்

கதை கேளு...
கதை கேளு...
செக்கான் பயல்
ஊர் ஊரா பொண்ணு கேட்டுப்  போறான் செக்கான். இவனுக்கு கொஞ்சம் அந்திமாலை. பொண்ணு கேட்ட இடத்தில் அதை மறைச்சிட்டான். கல்யாணமும் ஆகி சீருஞ்சிறப்புமாகப் போகுது பொழுது. காடுகரைக்குப் போனா பொழுது இருட்டுவதற்குள்ளாகவே வீடு வந்து சேர்ந்துவிடுவான். பிறகு வெளியில் வருவதேயில்லை.
ஒரு நா ஆயி அப்பனைப் பாக்கணும்னு ஏக்கப்பட்டுப் புருசன்கிட்ட சொன்னாள் பொஞ்சாதி. வெயில் தாழ சாயங்காலமாகப் புறப்பட்டார்கள். நம்மாள் தந்திரமாக அவள் தலைநிறைய மல்லிகைப்பூவை வைத்துவிட்டான். வாசம் பாதை காட்ட மாமியார் வீடு போனான். அன்னியபொழுது அப்பிடிப்போச்சி.
மறுநாள் உழவு ஓட்ட காட்டுக்குப் புறப்பட்ட மைத்துனனோடு நானும் வர்றேன்னு போனான். உழவு ஓட்டுறேன்னு ஓட்டினான். ‘‘மாட்டு வாலை மட்டும் தொட்டுடாதீங்க மாப்ளெ, ரொம்ப துஷ்டமானது’’ என்பதோடு ஒதுங்கிக்கொண்டான் மைத்துனன்.
செக்கானுக்கு வீராப்பு. நாம பாக்காத மாடாங்காட்டியும்னு மாங்குமாங்குனு ஓட்டறான் ஒழவு. பொழுது இறங்கிக்கிட்டே வருது. போதாக்குறைக்கு மாட்டுவாலையும் தொட்டுட்டான். தொட்டதுதான் தாம்சம், பறவா பறக்குது ரெண்டும். வாலைவிட்டால் வழி தெரியாதே என்பதனால் அது என்ன பறவை பறந்தாலும் இவன் வாலைமட்டும் விடவேயில்லை. புது மாடுகள் என்பதால் பறந்துபோய் மாட்டை வாங்கின வீட்டுல போய் நிக்கிது. வீட்டுக்காரங்களுக்கு என்னமோ ஏதோன்னு ஆகிடுச்சு.  மாடும் நிக்கிது. வாலை பிடிச்சபடியே செக்கானும் நிக்கிறான். விசாரிக்க, சுதாரித்தபடியே இவன் சொன்னான், “என்னய்யா மாடு வளத்து வச்சிருக்க. ஒழவுக்கு ஒண்ணும் லாயக்கில்ல. உட்டுட்டு போயிடலாம்னு ஓட்டிட்டு வந்தேன்’’.
அவன் இப்படி சொல்லவும் அவங்க ரொம்ப  வருத்தப்பட்டார்கள். அப்புறம் அப்பாடா சாமின்னு கெஞ்சிக் கூத்தாடி ஒரு வழியாக அனுப்பி வைச்சாங்க.
இங்கே மாப்பிள்ளையை காணோம் என்று காடே தேடுறாங்க. மாடு போக்கில் நம்மாளு நேரா காட்டுக்கே வர்றார். அடங்காத மாட்ட அடக்கிட்டாருன்னு இவங்களுக்கு ஒரே சந்தோசம். செக்கான் என்ன சொன்னான் தெரியுமா. “என்னய்யா மாடு வச்சிருக்கிறது. ஒரே சாணிப்பத்து மூத்திரவாடை. அதாம் போயி குளுப்பாட்டி தண்ணிகாட்டி ஓட்டிக்கிட்டு வந்தேன்னான்’’ உள்ளதை வெளியே சொல்லலை. அவங்களுக்கு ஒரே பெருமை.
உழவு முடிந்து வெளிச்சமிருக்கவே வீடு போய்ச் சேர்ந்தான். சும்மா குந்தியிருக்க முடியாமல் நெடியாட்டம் போட்டதில் வீட்டுக்கு முன்னாலிருந்த கிணத்தில் விழுந்துவிட்டான். கண்ணு தெரிஞ்சாதானே எழவு. பொண்டாட்டி ஓடிவந்து கூச்சலிட்டாள்.
சிறு பதட்டமும் இல்லாமல் சொன்னான். ‘அடி யாண்டி போடி, கேணியாடி இது. ஒரே சேறுஞ் சகதியுமா கெடக்கு. தட்டுக்கூடைய போடு, தூர் வாரணும். மச்சானுங்கள கயிற்றைப் போட்டு இழுக்கச் சொல்லு’ன்னான்.
அதுவும் முடிஞ்சது. மேலே ஏறி வரணுமே. நல்லவேளை படி இல்லை. ஏணியை உள்ளே விட்டார்கள். ஏறினதும் வீடு தெரியாமல் தடுமா றாமலிருக்க யோசனை பண்ணி, ‘என்னடி ஏணி இது தடதடங்குது. கூரையில சாத்தி புடிமானமா வையி’ன்னான். கூரையைப் பிடித்தபடி வீட்டைப் பாத்துக்கலாம்னு அவன் தந்திரம்.
ஏறினான். ஏறினவன் நெப்பம் பிடிபடாமல் சவ்வாரியாக கூரை மோட்டுவலைக்கே போயிட்டான். பொண்டாட்டி கிண்டல் பண்றா. அவன் விட்டானா. ‘என்னடா கூரையிது. உழவுக் காடாட்டம் பள்ளமா கெடக்கு. எடுத்தாடி ரெண்டு பண்ணல் செத்தையை’ன்னான். மாமனார், மாமியாருக்கு இப்படி ஒரு மருமவனான்னு ஒரே பெருமை.
அதுவும் முடிஞ்சது. இறங்கி வந்தான். வந்தவனுக்கு உடம்பு அரிக்க, பக்கத்திலிருந்த குண்டாந் தண்ணீரை அப்புடியே எடுத்து தலை குப்பறிக்க கவுத்துக்கிட்டான். பொண்டாட்டிக்காரி ‘அட கேண மனுசா, வாசலுக்குக் கரைச்சி வச்சிருந்த சாணிய எடுத்து தலையோட ஊத்திக்கிட்ட’ங்கிறாள். அப்பத்தான் இவனுக்கு விசயமே புரியுது.
“சும்மா இருடி எங்கெங்க போயிட்டு வந்திருக்கன். தலை முழுவணும். எடுத்தா இம்புட்டுப் பாலு கோமியத்தை’’ என்று சமாளித்தான். பறந்து கொண்டு வந்தாள் பொண்டாட்டி.
குளிச்சி முடிச்சி சாப்பிட உட்கார்ந்தான். தலைவாழை இலைபோட்டுப் பலகாரத்தை ரெண்டு கையாலயும் அள்ளி வைத்தாள் மாமியார் ரொம்பப் பெருமையோட. சோறெடுக்கப் போயிட்டு வர்றதுக்குள்ள இலையில் ஒன்றுகூட இல்லை. என்னடான்னு பாத்தா பூனை ஒன்று பூந்து விளையாடிவிட்டது. இந்த நொள்ளைக்குத் தெரியலை. மாமியார் கோபித்துக்கொள்ளவும் - இவன் சொன்னான், ‘என்னங்க நீங்க நா எது சாப்புட்டாலும் ஒரு குழந்தை கிட்ட இருந்தாதான் சாப்புட்ட மாதிரியே இருக்கும். அதான் கொழந்தைமாதிரி நெனச்சி பூனைக்கு ரெண்டு போட்டேன், பாவம்’ என்றான். மாமியார் வச்சக்கண் வாங்காமல் பாக்குறா மருமகனை.
மறுசோறு கொண்டு வரும்போது அதே பூனை திரும் பவும் உள்ளே வருது. மாமியார் அதை முடுக்கிவிட்டு பேரப் பிள்ளையைக் கொண்டாந்து மருமகன் முன்னால் உட்கார வைத்துவிட்டுப் போய்விட்டாள். அது மொச்சிமொச்சின்னு திங்கிற சத்தம்கேட்டு பூனைதான்னு நெனைச்சி ஓங்கி செவுனியிலேயே உட்டான் ஒண்ணு. அது வாழ்...வாழ்னு கதற, மாமியார் ஓடிவந்துக் கேட்டாள், ‘அது பச்சமிளகாயைக் கடிச்சிட்டுக் கத்துது சனியன்’னு சமாளிச்சுட்டான்.
விருந்தெல்லாம் முடிந்து பொழுதோடு ஊருக்குப் புறப்பட்டான். மல்லிகைப் பூவாசத்தோடவே வர்றான். கொஞ்சதூரம் போனதும் ‘இருட்டுல பயமா இருக்கு. நீ முன்ன போய்யா’ன்னாள் பொஞ்சாதி. இவனால் தப்பிக்க முடியல. அவ கைய ரெண்டையும் புடிச்சிக்கிட்டு நடந்தது பூராத்தையும் ஒப்பிச்சான். அவளுக்கு கோபமாக வந்தாலும் பொறுத்துக்கிட்டாள். தாய் தகப்பன்கிட்டேயும் பெருசா காட்டிக்கலை.
“உண்மையிலேயே கண்ணு தெரிஞ்சா இன்னும் எப்படியெல்லாம் உழைப்ப. இம்புட்டு நாள் உன் வேலையை மெச்சிப்புட்டு இப்ப கோவிச்சிக்கிட்டா என்ன அர்த்தம்’’என்று சொல்லிச் சிரிச்சாள். சந்தோசமா இருந்ததுங்க ரெண்டும்.
போர் சுத்திப் பொரி பொறிக்கி

அப்பனுக்கும் பிள்ளைக்கும் சண்டை, மொறப்பு.பிள்ளை ஒரு நட்டாமுட்டி. இந்தத் துப்புக்கெட்டப் பயலை அழைத்துக் கொண்டு விறகு வெட்டப் போறார் அப்பா.
விறகு வெட்டி முடிக்கிறதுக்குள்ளாக “எப்பா பசிக்குது’’ன்னான். அப்பனுக்குக் கடுப்பு. ‘மரத்துல சோத்துச்சட்டி தொங்குது. போய் குடி’ன்னார். கொஞ்சம் செடைச்சாப்ல சொன்னார். தாவித் தாவிப் பார்த்தான். கலயம் எட்டவில்லை. கல்லெடுத்து உட்டான். பொத்துக்கொண்டு ஊத்த, வாயைத் திறந்து குடித்தான். குடிச்சிட்டு எனக்குப் போதும் அப்பாவுக்கு வையின்னான். பானைக்கு கேக்குமா,  சுத்தமாகப் பூடிச்சி.
அப்பன் வந்து பாத்துட்டுக் கடுப்பாயிட்டான். அந்த நேரத்தில் பக்கத்தில் ஓடிய ஆற்றைக் காட்டி இந்த ஆறு  எங்கப்பா போவுதுன்னான். கடுப்பிலிருந்த அப்பா, “அதுவா, ஙோயா நடு ஊட்டுக்குப் போவுதுன்’’ன்னார். சட்டுப்புட்டுன்னு விறகுக் கட்டுகளைத் தூக்கித் தூக்கி ஆற்றில் போட்டான். ‘வீட்டுக்குத்தானே ஆறு போவுது. அப்போ விறகும் வீட்டுக்குப் போய்டும்ல’ என்றான். அப்பனுக்கு வந்ததே ஆத்திரம் ஒரே உதை, ‘நீயும் போடா அதுலியே’ வெனத் தள்ளிவிட்டார்.
‘அரையாளு சோத்துக்காரன்
அஞ்சாளு வேலக்காரன்
அநாதையா ஆத்தோட போறானே, போறானே’
அப்பிடின்னுக்கிட்டே ஒரு வண்ணான் கிட்டப் போய் சேர்ந்தான். அந்தாளு இவனைத் தூக்கிக் காப்பாத்தி, “ஒம்பேரு என்னப்பாங்க’’,  எம்பேரு ‘போனான்’ங்க என்றான். வண்ணான் பொஞ்சாதி வந்தா, பேரக் கேட்டா. ‘வந்தான்’ என்றான். “சரிப்பா வேல செய்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்கள்.
துணிகளை வாரிச் சுருட்டிக்கிட்டு ஓடிட்டான் இவன். வண்ணான் வந்து பார்த்தால் துணியையும் காணோம் ஒண்ணையும் காணோம். பொண்டாட்டியைக் கூப்பிட்டு எங்கடி ‘போனான்’என்று வண்ணான் கேட்க, எங்கங்க ‘வந்தான்’என்று அவள் கேட்க, ஒரே போனான் - வந்தான் ஆகிப்போச்சி.
துணிகளையெல்லாம் ஒரு மரத்தில் காயப்போட்டு விட்டுக் கீழே குந்தியிருந்தான் நம்மாள். அந்த வழியிலே வந்த ஒரு மோடராசா இதென்ன மரமெல்லாம் துணின்னு கேக்க,‘இது துணி காய்க்கிற மரம்’ என்றான் இவன். மோடராசாவுக்கு ஆசை வந்து மரத்தை விலைக்கு வாங்கிட்டார்.
நிறைய காசோடு ஓடினவன் வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போய் நின்னான். பேரு கேட்டாங்க. எம்பேரு ‘போரைச் சுத்திப் பொறிபொறிக்கி’ என்றான்.
“மாடு கன்னு வராம பாத்துக்கறீயா. ஒரு வாய் நீராம் குடிச்சிட்டு வர்றோம்’’ என்று போய்விட்டார்கள். ஆளு, போரைக் கொளுத்திவிட்டுப் பொறிந்து கிடந்த சோளப் பொறிகளைப் பொறுக்கி மென்னுக்கிட்டிருந்தான். விரட்டி விரட்டி அடிக்க, “அப்பவே சொன்னேனே எம்பேரு போரைச் சுத்திப் பொறிப்பொறுக்கி’’ன்னுக்கிட்டே ஓடிட்டான்.
எத்தமுட்டும் ஓடுவான். ஒரு ஊர்ல நின்னான். என்னாடா வழின்னு ஓசிச்சான். கையிலிருந்த காசைக்கொண்டு ஒரு மாடு வாங்கினான். நல்லா குளிப்பாட்டி நகநகவென ஓட்டிக்கிட்டு வந்தான். வழியில் ஒருத்தர் மாட்டை விலை கேட்க, கொள்ளை விலை சொன்னான். ‘‘ரெட்டைக் கன்னு போடும். ஆனா கன்னு போடும்போது கட்டிப்போட்டு தடியால நடு வவுத்திலியே சாத்தணும்’’ என்று விதவிதமாகச் சொல்லி வித்துட்டான்.
மாடு சினையாச்சி. பத்தாம் மாசம் மாட்டைக் கட்டிப்போட்டு வவுத்திலேயே அடிச்சான். மாடு செத்துப் போச்சி. மாட்டை வாங்கினவன் மீண்டும் வந்து முறையிட்டான். சாமர்த்தியமாக ஓசிச்சி, ”மாடு சாவுலப்பா, இனிமேதான் பறக்கும்’’ என்று சொல்லிச் செத்துக்கிடந்த மாட்டைப் பார்த்தான். காக்காய், கழுகுகள் கொறிக்கத் தொடங்கியிருந்தன. காக்கா, பருந்துகளை மாட்டு வயிற்றுக்குள் வைத்துத் தோலை தைத்துவிட்டான். அது பறக்க முயல மாடு அசைந்தது. முன்னாலேயும் பின்னாலேயும் வரகு வைக்கோலை வைத்துத் தினித்துவிட்டான். மாடு பறந்தது. மேற்கொண்டு கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டு மாட்டு மேல் உட்கார்ந்து பறக்க ஆசைப்பட்டான் மாட்டுக்காரன். பறந்தான்.
இன்னும் மேல போக ஆசைப்பட்டுப் பொரிப் பொறிக்கிக்கிட்ட ஓசனை கேட்டான். “வரகு வைக்கோலை கொஞ்சங் கொஞ்சமாப் புடுங்கி வுடு’’ன்னான் நம்மாளு.
அவனும் பிடுங்கிவிட்டான். அம்புட்டுதான். கீழே விழுந்து மேலேயே பூட்டான். ‘‘நீதானே அய்யா ஆசைப்பட்டே. நான்தான் ஏதோ சொன்னேன்னா ஒனக்கு எங்கியா போச்சி ஓசனை’’ என்றுவிட்டு பணத்தோடு வீட்டுக்கு நடையைக் கட்டினான் நம்மாள்.
கழுதை காது
ஒரு ராஜா, ராணி. வாழ்க்கை சும்மா அப்படியே போய்க்கிட்டிருக்கு. வயசும் ஆகிக்கிட்டே வருது. வாரிசு இல்லை. ஒரே கவலை. கடுமையான விரதங்கள் இருந்து சிவபெருமானிடம் புத்திரவரம் கேட்கிறாங்க. நீண்ட வேண்டுதல்கள், விரதங்களுக்குப் பிறகு அவரும் தந்தார். பொறந்தது.
பொறந்தவன், தாலாட்டு, சீராட்டு, பாராட்டுகளோடு திமுதிமுவென வளர்ந்து வர்றான். ஆரம்பத்திலே ஒண்ணும் பிரச்சனையில்லை. அவனுக்கு விவரம் தெரியற சமயம்  காது ரெண்டும் பெருசா வளர ஆரம்பிக்குது.
வீட்டைவிட்டு வெளியே வர கூச்சம். பெண்கள் பார்த்தால் நையாண்டிப் பண்ணுவார்களேங்கிற வெட்கம். பொண்ணு கிண்ணுன்னு எவன்கிட்டயும் போகமுடியாதேங்கிற  விசனம். அதனால் காதை மறைக்க முடியை வளைத்துக் காதைப் பொத்தினமாதிரி கொண்டை போட்டு, கொண்டையோடு சேர்த்து தலைப்பாவும் கட்டிக்கொண்டுதான் திரிவான். ‘என்னடா இது ராஜா முடியும் தலைப்பாவுமா திரியறார்னு யாரும் கண்டுக்கலை. மனசுல இருந்தாலும் வெளியில சொல்லிக் கொள்ளவில்லை, ராஜாவாச்சே. ‘புள்ள ஆசைப்படாறானே’ன்னு பெத்தவங்களும் உட்டுட்டாங்க.
வளர்ந்தாச்சி.
பிள்ளைக்கு கல்யாணம் பண்ண ஆசைப்படுது பெத்த மனம். ஏற்பாடெல்லாம் பலமா நடக்குது. “சரிப்பா. போயி முடி வெட்டிக்கிட்டு வா’’ன்னாங்க. இவனும் போனான். தலைப்பாவை அவிழ்த்தான் அம்பட்டன். காது தொமுக்குன்னு விழுந்தது ஒரு முழத்துக்கு. “ஏ ராஜாவுக்கு கழுத காது. ராஜாவுக்கு கழுத காது’’ன்னு சத்தம் போடறான் அம்பட்டன்.
அவன் கால்ல கையில விழுந்து, வெளியே சொல்லாதேன்னு சமாதானப்படுத்திவிட்டு வந்துவிட்டார் இளவரசர். அம்பட்டன்கிட்டேயே ஓசனையும் கேட்டு, அவர் சொன்னபடியே காதை வெட்டிப் புதைத்துவிட்டான்.
சில நாளில் கல்யாண நாள் வருது.
ஊரே கல்யாண களை.
மாப்பிள்ளை சோடிக்கப்படுகிறார்.
வீதியில் மேளங்கள் முழங்குது. ஆனால் மேளச்சத்தம் ‘ராஜாவுக்கு கழுத காது, ராஜாவுக்கு கழுத காது’ என்றே வருது. ஆடிப்போன ராஜா, அம்பட்டனைக் கூப்பிட்டு ‘எம் மானத்தை வாங்கிட்டியேடா பாவி’ங்க, அவன் ‘அய்யய்யோ ராஜா. நான் ஒண்ணும் செய்யில. நல்லா ஓசிச்சிப் பாருங்க. நான் ரகசியத்தை சொல்லாம இருக்க முடியலன்னு சொன்னேன். நீங்கதான் என்னெ நேரா அழச்சிக்கிட்டுப் போய் காது பொதைச்ச இடத்தைத் தோண்டி ‘அதுல சொல்லுடான்னிங்க. நானும் மூணுதடவை சொல்லிட்டு வந்துட்டன். அதோட சரி. அப்புறம் யார்கிட்டெயும் மூச்சு உடுல. என்கிட்ட இருந்த ரகசியமும்தான் காதோட போயிடிச்சே’ என்றான்.
‘அப்ப மோளக்காரங்களுக்கு எப்படித் தெரியும்’ன்னார் ராஜா.
நாம எங்கியாவது உளறியிருப்பமாவென நினைச்சார். தீவிரமா யோசிச்சு, விசாரித்த அம்பட்டன், ராஜாகிட்டெ வந்தான். ‘ராஜா ராஜா காது பொதைச்ச எடத்துல விளுதி மரம் இருந்ததே. அதுல குச்சி ஒடிச்சி மேளம் கொட்றாங்க, அதான்’ என்றான்.
விளுதிக் குச்சியில் மேளமடிச்சா இப்படிச் சத்தம் வருமா என யோசித்த இளவரசர் ஒருவழியாக, நிம்மதியடைந்து காது புதைத்த நாளை நினைத்துப் பார்த்தார். அன்று அம்பட்டன் ரகசியத்தைச் சொல்லப்போகும்போது, ‘சுத்துபத்துல யாரும் இல்லீங்களா ராசா’ என்று கேட்க, ராசா ‘ஒருத்தரும் இல்ல சொல்லுடா’ என்றார். ‘சரிங்க ராசா’ என அவன் சொல்வதற்கு முன் பக்கத்தில் நின்ற அந்த மரத்தைப் பார்த்தான். சும்மாதான் பார்த்தான். ‘அங்க என்னடா பாக்குற. சொல்றா’ன்னு சொன்னார் ராசா.
அது இப்போ யாவுகம் வந்தது ராசாவுக்கு. ‘அதை மரம்தானேன்னு நெனச்சது தப்பா போச்சோ’ என்று நினைத்துக்கொண்டே அரண்மனைக்குள் போனார்.
- மண் மணக்கும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions