c நமது நூலகம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நமது நூலகம்

கடலைப் பற்றி ஓர் அற்புதப் புத்தகம்

பிரமன்

நாளேடுகளில் வெளியாகும் பத்திகள், கட்டுரைகளுக்கு அறிவுலகம் இரண்டாம் இடமே கொடுத்து வந்திருக்கிறது. ஆழ்ந்த கவனம், அக்கறை, அடிப்படைப் புரிதல் இல்லாமல் எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் அன்று பிறந்து அன்றே மடிபவை. இந்த நிலைமையைத் தமிழ் இந்து நாளிதழ் மாற்றியமைத்தது, அண்மை வரலாறு. மாற்றி அமைத்த எழுத்தாளர் சமஸ்.
இந்தியத் தேர்தல் பற்றி எழுதத் தொடங்கிய காலம் முதல் ‘கடல்’ என்று  இப்போது நிகழ்கால புத்தகமாக வந்திருக்கும் எழுத்து வரை சமஸ், மிகத் தீவிரமான வாசகர் முதல் சாதாரண வாசகர் வரை படிக்கப்பட்டு சிலாகிக்கப்படும் எழுத்தாளராக உருவாகி இருக்கிறார். ஆங்கிலப் பத்திரிகைகளில்தான் ஆழமான கட்டுரைகளைப் பார்க்கலாம் என்று நிலைபெற்றிருந்த அபிப்பிராயத்தைத் தகர்த்தவர் சமஸ். தமிழிலும் சாத்தியப்படும் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
எப்படி. பத்திரிகை எழுத்தாளர் இலக்கியப் படைப்பாளி என்று சொல்லும் அளவுக்கு வியாபித்து இருக்கிறார்? எடுத்துக்கொண்ட பொருள் பற்றி எழுதும் முன்பாகப் படிக்கிறார். சிந்திக்கிறார். சமகால வாழ்வுக்குத் தான் எழுதப் போவது எந்தப் பயனை அளிக்கும், என்று யோசித்துப் பிறகு எழுதுகிறார். பத்திரிகை நிர்ப்பந்தம் அவரை அசைக்க அவர் அனுமதிப்பதில்லை.
கடல் பற்றிய இப்புத்தகம், நிலத்தில் உள்ளவர்களைக் கடலை நோக்கித் திருப்புகிறது. உண்மையில் நிலத்தைவிட நீர்ப்பகுதி பெரியது. மிகவும் பெரியது. அந்தப் பகுதியான கடலை நம்பி வாழ்கிற மக்களை நிலப்பகுதி மக்கள் எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறிதான். அப்படியான கடல்சார் மக்கள் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் முழுமையான தகவல்களை ஆதாரப்பூர்வமாகவும், ஆவணப்பூர்வமாகவும் ஒரு தேர்ந்த மொழியில் முன்வைத்திருக்கிறார் சமஸ் இந்த நூலில்.
தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி, கன்னியாகுமரி, மணக்குடி என்று நீளும் பட்டியலில் இந்தியக் கடல் எல்லை (நமக்கு) நீரோடி. அங்கிருந்து தன் அறிமுகப் பயணத்தைத் தொடங்குகிறார் சமஸ். இதன் மற்றொரு எல்லை திருவள்ளூர். வாழும் 10 லட்சம் மக்கள்தான் மீனவர்கள்.
இக்கிராமங்களின் துயரம் மிகப் பெரிது. காரணம், அவர்கள் வாழ்க்கை மீதான புறக்கணிப்பு, புரிதல் கோளாறு. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் ஒரு மீனவர், கரையில் குறைந்தது 16 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிறார். மீன்பிடிப் படகு, வலை உள்ளிட்ட உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபட்டவர்கள், ஐஸ்கட்டிகள், டீசல், லாரிகள், மீன்களுக்கு ஏலம் நடத்தும் தரகர்கள், ஏலம் எடுக்கும் மொத்த வியாபாரிகள், நம் தட்டில் விழுந்து நம் வாய்க்குள் மீன் போகும்போது, குறைந்தது 16 குடும்பங்கள் ஒரு மீனவரால் உதவி பெறுகின்றன. இது சமஸ் எழுதும் முறை.
ஒரு நிகழ்ச்சி:
பள்ளம் கிராமத்திலிருந்து அருள் ஜோசும், ஜேசுதாசும் மீன்பிடிக்கச் சென்றார்கள். கட்டுமரத்தில் கடலில் இருந்த வள்ளம் மோதியது. தூக்கி வீசப்பட்டார்கள் இருவரும். ஜேசுதாஸ் பிழைத்துக் கொண்டார். அருள் ஜோசைக் காணவில்லை. தேடினார்கள். 21 நாட்கள் சென்றன. அவருக்குத் திருமணம் ஆகி 4 வருடங்களே ஆயின. மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை. மனைவி சுபாஷினியின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர். அம்மாவைப் பார்த்துக் குழந்தையும் அழுதது.
எல்லா மீனவர் கிராமங்களும் இம் மாதிரி அவலத்தில்தான் வாழ்கின்றன. ஆனாலும் மீனவர் உடம்பில் கடல் ஓடுகிறது. ஒரு போதும் அவர்கள் கடலை விட்டுச் செல்லமாட்டார்கள். ஏனெனில் கடல் அவர்கள் தாய்.
மீனவர்கள் மரபுகள், வாழ்க்கை முறை, பேச்சு, நம்பிக்கைகள், கடவுள்கள், அலைகள் இவையே ‘கடல்.’
சமஸ் என்கிற படைப்பாளிக்கு நிரந்தரப் புகழ் தரும் படைப்பு இது.

நூல் : கடல்,
ஆசிரியர் : சமஸ்,
வெளியீடு:
தி இந்து தமிழ்,
கஸ்தூரி மையம்,
124,
வாலாஜா சாலை,
சென்னை - 2.
விலை ரூ: 180

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions