c தலையங்கம்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

தலையங்கம்

தேர்தல் காலத்து    நாடகங்கள்...

தேர்தல், நம் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையைச் செய்யச் சொல்லிக் காலம் நம்மை அழைக்கிறது. நாம் இந்தியர்கள் என்பதற்கான முக்கிய ஆவணம், நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாக்குச் சீட்டு என்பதை மறந்துவிடக் கூடாது.
வாக்களிக்கும் முன் இரண்டு விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனநாயக விரும்பிகள் சொல்கிறார்கள். ஒன்று, யாருக்கு வாக்களித்தால் நாடு நலம் அடையும் என்பதைத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இன்னொன்று, தவறாது வாக்களிக்க வேண்டும் என்பது.
அவர்கள் சொல்லாததும் ஆனால் சொல்ல விரும்பியதையும் நாம் இப்படிச் சேர்த்துக் கொள்ளலாம்.
எதற்கும் இணங்கி ஆசைப்பட்டு நீங்கள் உங்களை விற்றுக்கொள்ளாதீர் என்பது.
ஏன் எனில், எதையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற நச்சு மனோபாவம் சமுதாயத்தில் வேரூன்றிவிட்டது என்ப தாலும், ஒரு ஆடு போலவோ, அது தின்னும் செடி தழைகள் போலவோ நம்மை நினைத்துக்கொண்டு அரசியல் சூதாடிகள் நம்மை விலைபேச வருவார்கள் என்பதால் இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது. அவர்கள் பலவும் தருவார்கள். சட்டபூர்வமற்ற முறைகளில் சமுதாய விரோதிகள் சேர்த்து வைத்திருக்கும் கருப்புப் பணம் அது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு வீட்டுக்கு அவர்கள் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை கொடுக்கத் தயாராக இருப்பார்கள். அந்தப் பணத்தைக்கொண்டு, வாழ்க்கையின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடுமோ என்றால் முடியாது. சில தினங்கள் மட்டுமே பயன்படும் சின்னத் தொகையைப் பெற்று, நாட்டுக்கு ஏற்படப்போகும் நலங்களை, மோசமான ஆட்களுக்குப் போடப்போகும் வாக்குகளால், நாம் இழக்கப் போகிறோமா என யோசியுங்கள் என்று சமுதாய அக்கறை யுள்ளவர்கள் சொல்வதை நாம் புறந்தள்ள முடியாது.
நாட்டு நலம் என்பது நம்மோடு முடியும் சங்கதி இல்லை. நம் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் மற்றும் எதிர் காலம் சம்பந்தப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது.
சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில், ஒரு ரூபாய் கொடுத்து, வெங்கடாசலபதி படத்தில் சத்தியம் வாங்கிச் சிலர் வெற்றி பெற்றதாக அக்காலத்துப் பத்திரிகைகள் எழுதின. அன்று ஒரு ரூபாய் மதிப்புக் குரியதாக இருந்தது. இன்று ஆயிரம் மடங்காகப் பணம் வளர்ந்துள்ளது. பல ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மனித மரியாதை தாழ்ந்துவிட்டதை நாம் அனுமதிக்கப் போகிறோமா என்று யோசிக்க வேண்டும். தேர்தலை முன்னிட்டு பல கூத்துகள், நாடகங்கள் நடக்க இருக்கின்றன. இரவு நேரங்களில் உங்களுக்குத் தெரியாமல், நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் வீட்டுக்கும் எதிர் வீட்டுக்கும் இடையே கயிறு கட்டிக் கட்சிக்கொடி ஏற்றியிருப்பதை விடிந்து எழுந்து பார்க்கப் போகிறீர்கள். திடீரென்று, உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி ஒரு பெரும் கூட்டம், ‘எங்களுக்கே ஓட்டுப் போடுங்கள்’ என்று கேட்கும். கும்பிட்டு நிற்கும். (தமிழர்களின் கும்பிடும் பழக்கத்தை இன்னும் உயிரோடு வைத்திருப்பது தேர்தல் காலம்தான்). நீங்கள் கடுகு தாளிக்கும் அவசரத்தில் இருப்பீர்கள். அல்லது ‘செல்லில்’ முக்கிய விஷயம் பேசிக் கொண்டிருப்பீர்கள். அதைப்பற்றி வாக்கு சேகரிக்க வரும் கூட்டத்துக்கு அக்கறை இல்லை.
மனித நாகரிகங்கள் விடைபெறும் காலங் களில் ஒன்று தேர்தல் காலம்.
தெருவில் பெரும் கூட்டம் ஒன்று ‘இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்று கேட்டுக்கொண்டும் ஆடிக்கொண்டும் போகும். யாரிடம் அவர்கள் கேட்கிறார்கள் என்று மக்களுக்கு எப்போதும் புரிவதில்லை. கேட்கிறவர் காதுக்கும் பதில் தேவை இருக்கவில்லை என்பதே விஷயம்.
கொள்கை, தத்துவம், செய்யப்போகும் பணிஇவைகளைச் சொல்லி வாக்குக் கேட்கும் வேட்பாளர்கள் யாரேனும் வந்தால்,(பெரும்பாலும் அவர்கள் வருவதில்லை) அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கலாம் என்று தோன்றுகிறது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் ஆரத்தி  எடுத்து வரவேற்கும் அழகிய மரபிலும், தட்டில் காசுபோடும்வழுவிய பழக்கத்தை நம் அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்துள்ளார்கள்.
பொது வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு தேவை, சாக்கடை அடைப்பு, குளக்கரைப் பிரச்சனை, சுடுகாட்டுக்குப் போகக்கூட வழியில்லை முதலாகப் பல பிரச்சனை களுக்கு நீங்கள் மக்கள் பிரதிநிதிகளை அணுகுகிறீர்கள். அவர் அக்கறை காட்ட வில்லை. ஏன்? இது உங்கள் கடமை இல்லையா என்று நீங்கள் கேட்க முடியாது. ‘சும்மாவா ஓட்டுப் போட்டாய். காசு வாங்கிக்கொண்டு தானே ஓட்டுப் போட்டாய்’ என்று அவர் கேட்க மாட்டார் என்பதற்கும் என்ன உத்தரவாதம்?
நாம் கௌரவம் மிக்க மனிதர்கள். இதைஅரசியல் சட்டம் ஒப்புக் கொள்கிறது. நமக்கு நிறைய உரிமைகள், மரியாதையைக் கொடுத்திருக்கிறது அரசியல் ஆவணம்.அந்த மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ளவே வேண்டும். ‘வாக்களிப்பது என் தனி உரிமை, என் தனி விருப்பம்,  என் தனிக் கடமை, இதுக்காக மட்டுமல்ல எதுக்காகவும் நான் விலை போக மாட்டேன்’ என்று நிமிர்ந்து நிற்கிறவன் மனிதன். அல்லாதவன் தன்னை விலைபேசி விற்றுக்கொள்கிற, விற்கப்படுகிற விறகு, வேர்க்கடலை, நெல்லிக்காய்க்குச் சமானம்.
நாம் யாராக இருக்கப் போகிறோம் என்று தேர்தல் காலமே நமக்கு உணர்த்தும்.

 

அன்பு வணக்கங்களுடன்

என்றும் உங்கள்

ஆசிரியர்

இதழ்கள்
2016

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions