c யூத் பக்கங்கள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

யூத் பக்கங்கள்

அரசியல்வாதிகள்-பத்திரிகையாளர்கள் உறவு!

காலந்தோறும் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாகிக்கொண்டே இருக்கிறார்கள். உட்சபட்சமாக, பத்திரிகைகள் கொளுத்தப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய தேசத்தின் சக்திவாய்ந்த நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் அவற்றை பாதுகாக்கவேண்டிய முதல் பொறுப்பு அரசையும், அரசியல்வாதிகளையுமே சாரும். ஆனால் அரசியல்வாதிகள்தான் பத்திரிகைகளை அதிகமான  சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகிவர்களாக இருக்கிறார்கள். பாராட்டினால் உச்சிமோந்து  அரவணைப்பது, விமர்சித்தால் வசைபாடி, அவமானப்படுத்தி வழக்குப்போட்டு இழுத்தடிப்பதுமாக உள்ளார்கள்.
அதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். உண்மையில் அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் இடைப்பட்ட உறவு எப்படி இருந்தால் நாட்டிற்கும், மக்களுக்கும் எவ்வளவு அபரிமிதமான நன்மைகள் விளையும் என்கிற கேள்வியுடன் இந்த இதழுக்கான யூத்களைச் சந்தித்தோம்.  

பரபரப்புக்காக செய்யவேண்டாம்!
கீர்த்தனா  
(மென் பொறியாளர்)

பத்திரிகையாளர்கள் என்றைக்கும் மக்கள் பிரச்சனை களைப் பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடியாய் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளைப் பேட்டி காணும் போது ஒட்டுமொத்த மக்களின் குரலாய் அவர்களது குரல் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்படுத்தினால்தான் மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்புணர்வுடன் ஊடகங்களுக்கு அரசியல்வாதிகள் பதிலளிப்பார்கள். மக்களும் தங்களின் குரலாய் வெளிப்படும் ஊடகங்களை விரும்பி  ஏற்று மரியாதை தருவார்கள். அதை விடுத்து பரபரப்பை உண்டாக்கவேண்டும் என்பதற்காக தேவையற்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. அப்படி கேட்கும்போதுதான் அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகை யாளர்களுக்குமான உறவில் விரிசல் ஏற்படுகிறது.

நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்!
வை.சி.அருண்  
(உதவி இயக்குநர்)

பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உறவு என்பதே அவசியமில்லை. பத்திரிகையாளர்கள் நேர்மையாக அரசியல்வாதிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களாகவும், குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்களுமாக இருக்கவேண்டும். அவர்கள் எந்தவிதஅரசியல் சார்புநிலையும் இல்லாமல் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். இன்றைக்கு ஒவ்வொரு கட்சியும் தங்களின் ஆயுதமாக ஒரு ஊடகத்தை வைத்திருக்கிறது. அதில் பணிபுரியக்கூடிய பத்திரிகையாளர்கள் அதற்கேற்ப இயங்குவதுதான் நடந்துகொண்டிருக்கும் பிரச்சனை களுக்குக் காரணமாக இருக்கிறது. நடுநிலைமையுடன் செயல்பட்டால் மட்டுமே அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே அணுகுமுறைச் சிக்கல் இருக்காது.

தர்மத்தைக் கடைபிடிப்பது அவசியம்!
வித்யா விஜயராகவன்  
(கல்லூரி மாணவி)

அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நடுவில் பயமும் அவநம்பிக்கையும் இல்லாத ஓர் சுமுகமான உறவு இருக்க வேண்டும். அதுதான் மக்களுக்கு நன்மையைத் தரும். அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கும்போது அக்கேள்விகள் நேர்மையானதாக சமூகச் சூழலுக்கு உகந்ததாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகளை விமர்சித்து எழுதும்போது அவர்களின்  பழிவாங்கலுக்கு ஆளாகிவிடுவோமோ என்கிற பயம் பத்திரிகையாளர் களுக்கு இருக்கக் கூடாது. தான் சரியாகப் பேசினாலும்கூட பத்திரிக்கையாளர்கள் திரித்து வேறு அர்த்தத்தில் எழுதி தன்னை சிக்கலுக்குள்ளாக்கிவிடுவார்களோ என்கிற பயம் அரசியல்வாதிகளுக்கு இருக்கக்கூடாது. அதாவது ஒரு தர்மத்தின் அடிப்படையில் இருதரப்பும் இருக்கவேண்டும். அதுவே ஜனங்களுக்கு நன்மையைத் தரும்.

தனிப்பட்ட உறவு வேண்டாம்!
தமிழ்ச்செல்வன்
(தனியார் நிறுவன முகவர்)

இருவருக்குள்ளும் எதன்பொருட்டும் எவ்விதத்திலும் காழ்ப்புணர்வு இருக்கக்கூடாது. அதேசமயம் தனிப்பட்ட உறவும் இருக்கக்கூடாது. அப்படி இருக்கும்போதுதான் அரசியல், சமூகம் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து நேர்மையான கேள்விகளை எழுப்ப முடியும். பல ஊடகங்கள் ஒரு சார்பாக  இயங்குகின்றன என்பது மிகப்பெரும் விமர்சனமாய் இருந்து வருகிறது. அதனால்தான் மற்ற கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஊடகங்களை மதிப்பதில்லை. ஜார்ஜ்புஷ் மீது ஷூவை வீசிய துணிச்சல் அமெரிக்கப் பத்திரிகையாளருக்கு இருந்ததுபோல இங்கும் பத்திரிகையாளர்கள் அப்படி இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் அரசியல்வாதிகளிடம் எதிர்மறை கேள்விகளைக் கேட்க அப்படியான துணிச்சல்  வேண்டும். அப்படியிருப்பின் ஒரு சார்பாய் இயங்கும் நிலை ஏற்படாது.

மொழிப் பயிற்சி தேவை!
சி.ரேணுகா  
(விளம்பரப் பட இயக்குநர்)

மக்களுக்குத் தாய், தந்தைபோல் நல்லனவற்றை எடுத்துரைப்பவர்கள்தான்  பத்திரிகையாளர்கள் என்கிற ஸ்தானத்தில் இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் சுயநல நோக்கமின்றி மக்களுக்காகச் செயல்படுபவர்களாக இருக்கவேண்டும். குறைந்தபட்சம் தமது எண்ணத்தை மக்களுக்குச் சொல்லவே பத்திரிகையாளர்கள் தம்முன்நிற்கிறார்கள் என்கிற சிந்தனையுடனாவது   பத்திரிகை யாளர்களின் கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் பதில் தரவேண்டும். கேள்விகள் சற்று சங்கடமாக இருக்க நேர்ந்தால் சகிப்புத்தன்மையோடு பதில் தர வேண்டும். காரணம் அதற்கான காரணம் தாங்கள்தானே தவிர பத்திரிகையாளர்கள் அல்ல. அதேசமயம்  பத்திரிகை யாளர்களும் எத்தனை பெரிய விமர்சனமான கேள்வியாக இருந்தாலும் அதை கண்ணியமாக வெளிப்படுத்தும் மொழிப் பயிற்சியைப் பெற்றிருத்தல் மிகமிக அவசியம். உணர்ச்சி வசப்பட்டு வரம்பை மீறுதல் கூடாது.பரபரப்புக்காக கேள்விகளைக் கேட்காமல் குற்றச் சாட்டுகளை நேர்மையாக முன்வைத்து, வெளிப்படைத் தன்மையுடன் பேட்டி காணவேண்டும்.


பொறுப்பும் அடக்கமும் அவசியம்!
பாரிமைந்தன்  
(தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு)

இருவருமே மக்களின் சேவகர்கள். ஆகவே சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும். இரண்டு பேருடைய நோக்கமும் ஒழுக்கமும் நேர்மையும் கொண்ட  சமநிலைச் சமூகத்தை உருவாக்குவதாகத்தான் இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் சிறிய தவறுகள் செய்யும்போது குட்டுவதும், பெரிய தவறுகளை எழுத்தின் மூலம் அறைவதும் பத்திரிக்கையாளரின் பணியாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் சமூகத்தின் நான்காவது தூணான பத்திரிகைக்கு உரிய மரியாதையைத் தரவேண்டும். அரசியல்வாதிகள் பொதுவாழ்க்கையின் புனிதத்துவத்தை உணர்ந்து நேர்மையாக செயல்படும்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளை எவ்வித தயக்கமுமின்றி எதிர்கொள்ளலாம். அதிகாரம் கைக்கொண்டவர்களே அதிகப் பொறுப்பும் அடக்கமும் உடையவர் களாக இருத்தல் அவசியம் என்பதை மனதார உணரவேண்டும். ஏனெனில் உங்கள் இருவர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது!

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions