c இலக்கியத்தில் எதார்த்த வாதமே நிலைக்கும்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இலக்கியத்தில் எதார்த்த வாதமே நிலைக்கும்

எழுத்தாளர் பொன்னீலன்

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்,கட்டுரையாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர்,சாகித்ய அகாதமி தேர்வுக்குழு உறுப்பினர் எனப் பன்முக ஆளுமை கொண்ட  எழுத்தாளர் பொன்னீலன். சமூகப் பிரச்சனைகளை கதைகளாய், நாவல்களாய் கலைத்தன்மையுடன் படைக்கும் அடர்த்தியும், ஆழமும், நுணுக்கமும் நிறைந்த படைப்பாளி. பல்சுவை காவியத்திற்காக அவருடன் உரையாடினோம்.

சமூகத்தில் எழுத்தாளனுக்கு உள்ள இடம் எது?
அது எழுத்தாளனால்தான் தீர்மானிக்கப்படுகிறது. எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு அற உணர்வும், சமூக உணர்வும் அவசியம். அவ்வுணர்வுக ளோடு மக்களுக்கான படைப்பை படைக்கிறவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள். சமூக உணர்வு மட்டுமின்றி இலக்கியத்தின்மீது அவர்கள் கொண்டிருக்கும் பற்றும் அதை தீர்மானிக்கிறது. எழுத்தாளனை சமூகம் கொண்டாட மறுக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தோடு ஒப்பிடுகையில் கேரளாவில் எழுத்தாளர்களைப் பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள். சாகித்ய அகாதமி விருது வாங்கிய எழுத்தாளரை சட்டசபையில் உரை நிகழ்த்த வைத்து பெருமைப்படுத்தும் அளவுக்கு அம்மாநிலம் கலை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கல்விக்கான தினமான ‘சரஸ்வதி பூஜை’ அன்று ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளை அங்குள்ள எழுத்தாளர்களின் மடியில் அமரவைத்து அவரது கையால் குழந்தைக்கு எழுதப் பழக்கிக் கூட்டிச் செல்கின்றனர். மலையாள எழுத்தாளர்களுக்கு நிகரான எழுத்தாளர்கள் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கு இது போன்றொரு மரியாதை இது வரையிலும் கிடைக்கவில்லை.
தமிழகத்தைக் காட்டிலும் கேரளாவில் கல்வியறிவு விகிதம் அதிகமாக இருப்பதே இச்சூழலுக்கு காரணம் என்று சொல்லலாமா?
கல்வி அறிவு மட்டுமல்ல, கலை மற்றும் இலக்கியம் குறித்தான சமூக விழிப்புணர்வும் கேரளாவில் மிகவும் அதிகமாக இருக்கிறது. கலை மற்றும் இலக்கியத்தை வளர்ப்பதில் கேரளாவில் இடதுசாரிகளும், காங்கிரசும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. ஆனால் தமிழ்நாட்டில் அறிவுத் தேடலுக்கும், பண்பாட்டுத் தேடலுக்கும் தொடர்பே இல்லாத அரசியல் மற்றும் ஊடகச் சூழல்தான் நிலவுகிறது.
நமது கல்விமுறையிலும் கூட துணைப்பாடமாகத்தானே இலக்கியங்கள் இருக்கின்றன?
நமது கல்விமுறை வாழ்க்கைக்கானதல்ல, பிழைப்புக்கானது. பிழைப்ப தற்கும், வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. வெள்ளையர்கள் ஆண்ட போது குமாஸ்தா வேலை பார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த மெக்காலே கல்விமுறையால் எப்படி புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்? படிப்பதே வேலைக்காகத்தான் என்கிற போக்கை நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே. பாடப் புத்தகங்களுக்குள் மட்டுமே நமது அறிவை சுருக்கி வைத்திருக்கிற இக்கல்வி முறையில் விஞ்ஞானச் சிந்தனைகளுக்கும் படைப்பாக்க உந்துதலுக்கும் முற்றிலும் இடம் கிடையாது. அரசியல்வாதிகள்தான் இந்நிலைக்கு முக்கியக் காரணம்.  சமூகத்தை மிகவும் மட்டமான சூழலில் தான் அவர்கள் இன்னமும் வைத்திருக்கிறார்கள். இதற்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒன்றிணைய வேண்டும்.
எழுத்தாளர்களுக்குள்ளேயே பல பிரிவினைகள் இருக்கின்றன. சாதி மற்றும் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறார்கள். இச்சூழலில் ஒற்றுமை எப்படி சாத்தியப்படும்?
சாதி மற்றும் அரசியல் ரீதியிலான பிரிவினை என்பது தமிழ் இலக்கியத்துக்கான பின்னடைவுதான். இலக்கியவாதிகள் கட்சிக்குள் இருந்துகொண்டு இயங்கு வதில் தவறொன்றுமில்லை. ஆனால் கட்சி மற்றும் கொள்கைகளைக் கடந்து இலக்கியத்தை அணுக வேண்டும். அவ்வாறு அணுகும் பட்சத்தில்தான் எழுத்தா ளர்களுக்குள் ஒற்றுமை சாத்தியப்படும். கொள்கையை ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் எல்லாவற்றையும் மீறிப்  பார்ப்பதற்கான விசாலப் பார்வை அவசியம்.
நூல்களைப் படைக்க மொழி உணர்வு அவசியம் என மேடைகளில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இங்கு தமிழுக்கோ, தமிழினத்துக்கோ ஒரு பிரச்சனை என்றால் பல எழுத்தாளர்களிடம் புரிந்துகொள்ள முடியாத மௌனம் நிலவுகிறதே?
மௌனம் என்று சொல்லமுடியாது. எழுத்தாளர்களை இச்சமூகம் கவனிப்பதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரைப் பற்றிக்கூட பல பத்திரிகைகள் பெட்டிச் செய்தியாகத்தான் வெளியிடுகின்றன. சில பத்திரிகைகள் மட்டுமே நேர்காணல் வெளியிடுகின்றன. இப்படிப்பட்ட சூழல்கூட இச்சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.  எழுத்தாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்  சார்பில் எழுத்தாளர் தமிழ்செல்வன் தலைமையில் மதுரையில் 50 ஆயிரம் பேரைத் திரட்டி ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் நானும் இருந்தேன் அப்துல்ரகுமானும் இருந்தார். ஆக அரசியலைத் தாண்டியும் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கக் கூடிய பணிகளை நாங்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழினத்துக்கு மட்டுமல்ல ஒடுக்குமுறை எங்கு நடந்தாலும் எழுத்தாளர்கள் என்கிற ரீதியில் நாங்கள் எப்போதும் ஒருமித்துக் குரல் கொடுப்போம்.  
எமெர்ஜென்சி காலகட்டத்தை மையமாகக் கொண்ட  ‘புதிய தரிசனங்கள்’ நாவலை எழுது வதற்கான பின்புலம் பற்றிச் சொல்லுங்கள்?
தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலை துணிச்சலாகப் பதிவு செய்த நாவல் அது. அந்நாவலில் எல்லா கட்சிகளையும் நான் விமர்சித்திருந்தேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி இரண்டும் தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை காங்கிரஸ் மற்றும் இடதுச்சாரிகளின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்று அந்நாவலில் எச்சரித்திருந்தேன். சரியான அரசியல் பார்வையோடு புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவல் அது. என்னுடைய இளமைக்காலத்தில் எமர்ஜென்சியைச் சந்தித்த அனுபவத்தை மையமாக வைத்து எழுதப் பட்டதுதான் இந்நாவல். 14 ஆண்டுகள் உழைப்பில் உருவான அந்த நாவலில் உள்ள நுட்பமான அரசியலை யாரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எழுதப்பட்ட விமர்சனங்கள் அத்தனையும் மேம்போக்கானவையே.
உங்கள் படைப்புகளில் பல இடங்களில் இயக்கச் சார்பும், சில இடங்களில் நேரடியான அரசியல் வீச்சும் இருக்கும். இலக்கியத்தில் அப்படியான அரசியலை (சாதி அரசியல் உட்பட) வெளிப்படையாகப் பேசக்கூடாது என்கிறார்களே?
பாரதி எதைப் பேசினார்? அரசியல், பொருளாதாரம், பண்பாடு இவை மூன்றும் இல்லையென்றால் மனித வாழ்வு இல்லை. எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அரசியலைத் தவிர்த்தால் எதுவுமே இல்லை எனும்போது இலக்கியத்தை எப்படித் தவிர்க்க முடியும்? மனிதனுக்கு அரசியல் என்பது முதுகெலும்பு. ஆனால் அது துருத்திக்கொண்டு வெளியே தெரியக்கூடாது. இலக்கியத்தில் அரசியல் இருக்கலாம், ஆனால் அது முதுகெலும்புபோல இருக்க வேண்டும்.
இன்றைக்கு வரையிலும் தீண்டாமை மற்றும் வர்க்கப் பிரச்சனைகள் பற்றி எழுதிய அளவிற்கு உலகமயமாக்கலால் ஏற்பட்ட வாழ்வியல் மற்றும் சூழலியல் சீர்கேடுகளை முன்வைத்து அவ்வளவாக எழுதப்படவில்லையே?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கைதான் எழுத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கிறது. சாதியப் பிரச்சனை பற்றி எழுதுபவர்கள் அதனை கண்கூடாகப் பார்த்த தாக்கத்தின் விளைவாக எழுதுகின்றனர். கம்யூனிசத்தை உள்வாங்கியவர்கள் வர்க்க விடுதலைக்கான ஆயுதமாய் தங்களது எழுத்தை மாற்றிக்கொள்கின்றனர். தீண்டாமை மற்றும் வர்க்கப் பிரச்சனைகளோடு ஒப்பிடுகையில் உலகமயமாக்கல் நேற்று வந்த பிரச்சனை. அதன் தாக்கத்தை இன்னும் முழுமையாக உள்வாங்கிய பிறகு அதையொட்டிய எழுத்து உருவாகும்.
எழுத்தாளனுக்கு இந்த சமூகம் எதைக் கொடுக்கவேண்டும்?
அங்கீகாரத்தைக் கொடுக்கவேண்டும். விருது கொடுத்து, மேடையேற்றி கௌரவப்படுத்துவதைக் காட்டிலும் எழுத்தாளனை வாசிப்பதுதான் அவனது பணிக்கு இச்சமூகம் செய்யும் கைமாறு. கேரளாவில் பெரும்பாலான எழுத்தாளர்களின் நூல்கள் 10 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு அவை ஒரே ஆண்டில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. தமிழ்நாட்டிலோ ஆயிரம் பிரதிகள்கூட அச்சிடப்படுவதில்லை.
ஒரு எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பி வாழ முடியாது என்கிற சூழல் நிலவுகிறதே?
கசப்பான ஒரு சூழல்தான் அது. நம்மிடம் சிந்தனை வறட்சியும் மிகக் குறைவான எழுச்சியுமே இருக்கிறது. அதனால் ஒரு இலக்கியவாதியை சமூகம் கொண்டாடவேண்டும், அவனது படைப்புகளை வாரி அணைத்துக் கொள்ளவேண்டும் என்கிற எண்ண மெல்லாம் இங்கு இல்லை. ஆயிரம் பிரதிகளை விற்பதற்கே அல்லாடும் ஒரு சூழலில் எப்படி எழுத்தாளன் இந்த எழுத்தை மட்டும் நம்பி தனது பொருளாதாரத் தேவையைப் போக்கிக்கொள்ள முடியும்.
சமூகத்தின் மனசாட்சியாக இருப்பவர்கள் எழுத்தாளர்கள். அந்த மனசாட்சி தாக்குதலுக்கும், கொலைக்கும் ஆளாகும்போது மற்ற எழுத்தாளர்கள் குரல் கொடுப்பது ஒருபுறமிருக்கட்டும், மக்களும் எதிர்வினையாற்ற வேண்டும் என எதிர் பார்க்கலாமா?
மக்களுக்காக இயங்கக் கூடிய ஒரு படைப்பாளி தாக்குதலுக்கு ஆளாகும்போது அதை மக்கள் எதிர்த்துக் குரல் எழுப்பவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன் மக்களுக்கு அது பற்றியான விழிப்புணர்வு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். கல்புர்கி, கோவிந்த்பன்சாரே போன்ற கூர்மையான பகுத்தறிவாளர்கள் வகுப்புவாத சக்திகளுக்கெதிராக குரல் கொடுத்தார்கள். கோவிந்த்பன்சாரே வீரசிவாஜியைப் பற்றி எழுதிய நூல் மூலம் வகுப்புவாதத்தின் ஆதிக்கத்தை உடைத்தார். எந்த மதவாத சக்திகளும் அதை தாங்கிக்கொள்ளாது. இதன் காரணமாய் எழுத்தாளர் மீது நிகழ்த்தப்படும் கொலை மற்றும் தாக்குதலுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடவேண்டும் என்கிற விழிப்புணர்வு எந்த அரசியல் கட்சியிடமும் இல்லை. திராவிடர் கழகம் மற்றும் இடதுசாரிகள் இதற்காக கடுமையான போராட்டம் நடத்தினர். இருந்தும் இன்றைக்கு தமிழக அரசியலில் ஆளுமை உடையவர்கள் இல்லாமல் போய்விட்டனர். தோழர் ஜீவானந்தம், பெரியார் போன்ற ஆளுமைகள் இன்றைக்கில்லை. அவர்கள் இருந்திருந்தால் இக் கொடுமைகளுக்கு எதிராக எப்படிப்பட்ட போராட்டத்தை நிகழ்த்தியிருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
ஒரு காலகட்டத்தில் சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதுடன் களப் போராளிகளாகவும் எழுத்தாளர்கள் இருந்தார்கள். இன்று குறைந்த பட்சம் எழுத்தின் களமாகக்கூட மக்கள் பிரச்சனை கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி?
தவறான குற்றச்சாட்டு என்றுதான் சொல்லவேண்டும். இப்போதும் இருக்கிறார்களே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  மற்றும் கலைஞர்கள் சங்கப்  படைப்பாளிக ளும், கலை இலக்கியப் பெருமன்றத்தின் படைப்பாளிக ளும். தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளைத்தான் எழுதி வருகிறோம். சமூகப் பிரச்சனைகளிலும் பங்கெடுத்துக் கொள்கிறோம். இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வருவதில்லை. காரணம் ஊடகங்கள் இதனை கண்டு கொள்வதில்லை. இவ்விரு அமைப்புகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்பாக ஒரு காலத்தில் வளர்ந்தாலும் இன்று அது மக்களுக்கான அமைப்பாக விரிந்துவிட்டன. பாரதி புத்தகாலயமும் சரி, நியூ செஞ்சுரி புக் ஹவுசும் சரி கம்யூனிஸ்ட் தொடர்பான நூல்களை மட்டுமே வெளியிடுவதில்லை. மக்களுக்கான படைப்புகளை யார் எழுதியிருந்தாலும் எவ்விதப் பாகுபாடுமின்றி வெளியிடுகிறது. எங்களுக்கு கட்சி சாயம் கிடையாது.
சாகித்ய அகாதமி விருதில் உண்மை இல்லை என்று பல எழுத்தாளர்கள் கூறுகிறார்கள். நல்ல பல இலக்கியங்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்படவில்லை என்கிற விமர்சனமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் என்ன அடிப்படைச் சிக்கல் இருக்கின்றது?
சாகித்ய அகாதமி மட்டுமல்ல எந்த ஒரு விருதும் அளிக்கப்படும்போது விருது கிடைக்காதவர்கள் அதை விமர்சிப்பது வழக்கம்தான். எச்சார்புமின்றி நேர்மையான முறையில்தான் சாகித்ய அகாதமி வழங்கப்படுகிறது. தேர்வுக் குழுவைச் சேர்ந்தவன் என்கிற முறையில் எனக்கு பத்து நூல்களை அனுப்புவார்கள். நான் அதை வாசித்து வரிசைப்படுத்தி வைத்திருப்பேன். என்னைப் போன்றே மற்ற இரு நடுவர்களும் வரிசைப்படுத்தி ஒரு பட்டியலோடு வருவார்கள். ஒரு படைப்பைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால் அதன் தன்மை மற்றும் கூறுகளை விளக்கி மற்ற இருவருடனும் விவாதிக்க வேண்டும். இந்தக் கடும் விவாதங்களுக்குப் பிறகு எந்தப் படைப்பு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதனை தேர்வு செய்கிறோம். இவ்விருதில் எவ்விதமான சார்பு நிலைகளும் கிடையாது. எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மீனவ சமூகத்திலிருந்து பேரலையாய் வந்த ஜோ.டி.குரூசுக்கு விருது வழங்கப்படவில்லையா!
நிறைய நல்ல படைப்புகளுக்கு சாகித்ய அகாதமி வழங்கப்படவில்லை என்கிற விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறேன். தேர்வு செய்யக்கூடிய ஒரு படைப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும் என்கிற கால அளவு இருக்கிறது. இது போன்ற சில சிக்கல்களால்தான் சில படைப்புகளுக்கு வழங்க முடியாமல் போனது.
நவீன இலக்கிய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கற்பனை செய்யமுடியாத பல்வேறு தளங்களிலிருந்து கதைகள் புனைகிறார்கள். அந்த அலையில் பலர் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். இமையம் எடுத்துக் கொள்ளும் களமும் கதை சொல்லும் விதமும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஒரு பழம்பெரும் துறைமுக நகரத்தின் வரலாற்றை கொற்கை எனும் நாவல் மூலம் சொன்ன ஜோ.டி.குரூஸ், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அவலங்களை பிரதிபலித்த தூப்புக்காரி எழுதிய மலர்வதி, சோ.தர்மன் என இன்னும் பலர் முளைத்து வந்துகொண்டே இருக்கிறார்கள். ஜெயமோகன் மிகவும் வலுவான எழுத்தாளர். மிகவும் ஆழமாக சிந்திக்கக் கூடிய சிலரில் அவர் முக்கியமானவர். கொற்றவையை தமிழ் இலக்கியத்தின் பிரம்மாண்டப் படைப்பு என்றே சொல்லலாம். இப்படியாக நவீனத்துவ சிந்தனை தழைத்தோங்குவது, இலக்கியத்துக்கான ஆரோக்கியமான சூழலைக் கொண்டு வரும். இலக்கியத்தில் ரியலிஸம் மட்டும்தான் நிமிர்ந்து நிற்கும்.  
தங்களின் தற்போதைய எழுத்துப்பணி குறித்து ?
புதிய தரிசனங்கள் மற்றும் மறுபக்கம் ஆகிய நாவல்களை ஆங்கில மொழிபெயர்ப்பாக கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
நேர்காணல்: அறிவன்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions