c ஆளுக்கு ஒரு மரம் நாளுக்கு ஒரு முறை!
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆளுக்கு ஒரு மரம் நாளுக்கு ஒரு முறை!

முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப.

அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை.
சுற்றுச்சூழல் மாசுபடுதல்  என்பது  இயற்கை யாகவும், மனித செயல்களின் மூலமாகவும் ஏற்படுகின்றது. இயற்கையாக ஏற்படும் மாசு நம் வாழ்வில் அதிக தாக்குதலை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் அவை மீண்டும் உயிர்த்தெழும்  ஆற்றல் கொண்டவை. ஆனால் மனித செயல்களினால் ஏற்படும் மாசு மிகுந்த இன்னல்களைக் கொடுக்கக்கூடியவை.
மக்கள் தொகைப் பெருக்கத்தினால் வாழ்வுத் தேவைக்காக மனிதர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி யினை இயற்கையின் மேல் திணிக்கும் பொழுது அதன் மூலம் நன்மைகள் மட்டுமன்றி பக்க விளைவுகளும் ஏற்படுகிறது.
திட்டமிடாத மற்றும் தவறான பயன்பாட்டினால் இயற்கை வளங்களான தண்ணீர், காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்கள், நிலம் மற்றும் கனிம வளங்களின் அளவு குறைகிறது.  இது இயற்கைச் சமநிலையைப் பாதிப்பதோடு வாயுமண்டலத்தில் பல தீங்குகளையும் விளைவிக்கிறது. வாயுமண்டலத்தில் அதிகளவு நைட்ரஜன், ஆக்ஸிஜன் சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன. இது  பூமியைச் சூரியக் கதிர்வீச்சில் இருந்து நம்மைப் பாதுகாப்பதோடு இப்புவியில் உயிரினங்கள் வாழ வழிவகுக்கிறது. தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்கள் வளிமண்டலத்தில் கலக்கும் பொழுது மாசடைந்து  உயிரினங்களுக்கு நேரிடையான பாதிப்புகள் உண்டாகின்றன.
எண்ணெய்க் கசிவினால் கடல் நீரில் ஹைட்ரோ கார்பன்கள் அடங்கிய பெட்ரோலியப் பொருள்கள் கலக்கிறது. இவை கச்சா எண்ணெய்க் கப்பல்கள், கடல் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகள் போன்றவற்றிலிருந்து நேரடியாக கடலில் கலக்கிறது.
1952-இல் ஜப்பானின் மினாமிட்டாப் பகுதியில் ஒரு வித்தியாசமான  நோய் கண்டுபிடிக்கப்பட்டது.  அந்தப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை யிலிருந்து வெளியேற்றப்பட்ட பாதரசம் பாக்டீரியாக் களால் மீத்தைல் மெர்குரி என்ற நச்சாக மாறுகிறது. இதை உண்ட மீன்களை மனிதன் உண்ணும்போது கை, கால்கள், உதடு, மார்பு ஆகிய பகுதிகள் உணர்ச்சியற்று போயின. செவிட்டுத் தன்மையும், பார்வைக் குறைபாடும், மனநிலைப் பாதிப்பும் ஏற்பட்டது. இதை மினாமிட்டா நோய் என்றனர்.
ஔவையார் புறநானூற்றுப் பாடலில், ஓரிடத்தில் வாழும் மனிதர்களின் செயல்களே அவ்விடத்தின் வளத்தை உறுதி செய்யும் என்கிறார். தீய நிலமாக இருந்தாலும் நல்லவர் வாழின் நல்ல நிலமாகும், நல்ல நிலமாயினும் தீயவர் வாழ்ந்தால் தீதாகும் என்கிறார்.
மனிதன் பின்பற்றும் நீர்ச் சிக்கனம்,  பறவைகள், விலங்குகள் மற்றும் பிற உயிரிகளைக் காக்கும் முறைகள் ஆகியன சார்ந்தே ஒரு நாட்டின் வளம் பாதுகாக்கப்படும்.  
இயற்கையை வரைமுறையின்றி அழிப்பதால் வனவிலங்குகள் இடம்பெயர்வு, வற்றாத ஜீவநதிகளும் பாலைவனமாதல், சுனாமி, புவி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை எனப் பல்வேறு பிரச்சனைகள் தீவிரமடைந்து,  மனிதர்களை அச்சமடையச் செய்துள்ளன.  
வன உயிரிகளில் தற்காலக் கணக்கெடுப்பின்படி சுமார் 400 வகை ஊர்வன இனங்களும், 200 வகை இருவாழ்விகளும், 3000 வகை மீனினங்களும் மற்றும் 3000 வகைப் பறவைகளும், 20,000 வகைப் பூக்கும் தாவரங்களும், 4100 வகைப் பாலூட்டிகளுமே இந்தியாவில் காணப்படுகின்றன. அதிக அளவில் வன உயிரிகள் அழிக்கப்படுவதால் இயற்கை தன் சமநிலையை இழக்கிறது.
நாகரீக வாழ்வின் உச்சியில் வாழும் நகர்ப்புற வாழ்வினர் தத்தம் வீடுகளில் தரைத்தொட்டிகளில் செடிகளை வளர்க்கின்றனர். அக்காலத்திலும் தமிழர்கள் தாழிகளிலே மணல் போட்டு எருவிட்டுச் செடி வளர்க்கும் முறை இருந்துள்ளதை,  “தாழியும் மலர் பல அணியா” என்ற அகநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கிறது.
சூரியனின் சக்தியை மாற்றிக்கொள்வதில் இந்த பசுமையான செடிகளிடம் உள்ள ஆற்றல் மிகவும் குறைவானதுதான். ஆனால், உயிர் மண்டலத்தின் விதிகளின் மட்டத்தில் பார்க்கும்போது அவை நல்ல சக்தி மாற்றும் எந்திரம் என்கிறார்கள்.அவை பூமிக்கும் மனித இனத்திற்கும் எவ்விதத் தீங்கினையும் தூய்மைக் கேட்டையும் ஏற்படுத்துவதில்லை.  
ஆளுக்கு ஒரு மரம் நாளுக்கு ஒரு முறை நடுகிற திட்டம் வளருமானால் பசுமை எங்கும் படரும்.  

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions