c நாமிருக்கும் நாடு-22
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு-22

மக்கள் தலைவர்
வ.சுப்பையா

சா.வைத்தியநாதன்

இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களில் சுபாஷ் சந்திரபோசுக்கு நிகரான தலைவராக, மக்கள் தலைவர், புதுச்சேரி மாநில விடுதலை வீரர் வ. சுப்பையா அவர்களை வரலாறு புகழ்ந்துரைக்கிறது.
இந்தியா, பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும்போது, புதுச்சேரி, காரைக்கால், மாஹே (கேரளா), ஏகாம் (ஆந்திரா), சந்திர நாகூர் (கல்கத்தா) ஆகிய பகுதிகள் பிரஞ்ச் சர்க்காரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. புதுச்சேரி மாநிலத்தை அந்நிய ஏகாதிபத்தியரிடமிருந்து மீட்க மக்களைத் திரட்டியும், தொழிலாளர்களை ஒன்றிணைத்தும் பெரும் போராட்டங்களை நடத்தி, சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர் வ. சுப்பையா.
1911ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பிறந்தார். அவரை, வரலாற்றில் குறிப்பிடுவது போல வி.எஸ். என்றே குறிப்பிடலாம்.
மாணவப் பருவத்தில், 1919இல் ஜாலியன் வாலாபாக்கில், பிரிட்டிஷ் அரசு மிருகத்தனமாக மக்களைக் கொன்று குவித்த நிகழ்ச்சி, இதைத் தொடர்ந்து காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் ஆகியவை வி.எஸ்.க்கு அரசியல் உணர்ச்சியைத் தூண்டிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாகக் காந்தியின் அரசியலின் பக்கம் சார்ந்தார். சோவியத் ரஷ்யாவின் புரட்சி வெற்றிவிழா பத்தாம் ஆண்டு 1927இல் கொண்டாடப்பட்டபோது, சோவியத்துக்குச் சென்று திரும்பிய நேரு, அது பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி இருந்தார். அது வி.எஸ்.க்குப் படிக்கக் கிடைத்தது. தொடர்ந்து லெனின், இங்கர்சால் படைப்புகள் படிக்கக் கிடைத்து, ஓர் இளைஞனைப் புரட்சிக்காரனாக்கின. அக்காலகட்டத்தில் வளர்ந்து வந்துகொண்டிருந்த சுயமரியாதை இயக்கமும் அந்த இளைஞர் வி.எஸ்.ஐக் கவர்ந்தது.
1930 இறுதி வாக்கில், ‘பிரஞ்ச் இந்திய வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை வி.எஸ். தொடங்கினார். அரசியல் தெளிவோடு அவர் தொடங்கிய முதல், அமைப்பு இதுதான்.
அக்காலத்தைய பிரஞ்ச் அரசு, மக்களுக்கு  எதிராகவே இருந்தது. பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியன மறுக்கப்பட்டிருந்தன. இருபது நபர்களுக்கு மேல் உள்ள, ஒரு குழு, சங்கம் அமைக்க விரும்பினால் காவல்துறை ஒப்புதல் பெறவேண்டும். உளவுப் பிரிவின் கடுமையான விசாரணையைச் சந்திக்க வேண்டும். வழிபாடு, கதாகாலட்சேபம் போன்ற மத நிகழ்ச்சிகளுக்கும் கூட அரசின் முன் அனுமதி பெறவேண்டும்.
இச்சூழலில் வி.எஸ்.க்கு இந்தியக் காப்பீட்டுக் கழகத்தின் புதுச்சேரிக் கிளையின் மேலாளர் பதவி அளிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு அடிக்கடி சென்று தேசியத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரைச் சந்தித்து அரசியல் தெளிவையும், ஞானத்தையும், போர்முறைகளையும் கற்றுக்கொண்டே வந்தார். அக்காலத்தில் அவர் தொடர்பு கொண்டவர்கள், சுதந்திரச் சங்கு ஆசிரியர் சங்கு கணேசன், சா.து.சு. யோகியார், ஏ.என். சிவராமன், டி.எஸ். சொக்கலிங்கம், வ.ரா., வரதராஜூலு நாயுடு போன்றவர்களாவர். இதுவே அவர் நட்பு வட்டம்.
காந்தியடிகள், 1933இல் அரிசன மக்களின் நல்வாழ்வுக்கான இயக்கம் ஒன்றை ஏற்படுத் தினார். அதன் விளைவாக இந்தியா முழுக்க அரிசன சேவா சங்கங்கள் உருவாகத் தொடங்கின. வி.எஸ். புதுச்சேரியில் சங்கம் தொடங்கி, மிகப்பெரிய, மிகக் கடுமையான முயற்சிக்குப் பிறகு, காந்தியைப் புதுச்சேரிக்கு 1934 பிப்ரவரியில் அழைத்து வந்து, புதுவை மக்களுக்கு அரசியல் ஞானம் ஊட்டச் செய்தார். அதன்பிறகே, புதுச்சேரியில் சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடையத் தொடங்கியது.
1934இல் அமீர்ஹைதர்கான் என்கிற கம்யூனிஸ்ட் தலைவர், மீரட் சதி வழக்கில் இருந்து தப்பித்துத் தலைமறைவாகச் சென்னை வந்தார். அவரை இரண்டு பேர் சந்தித்துத் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார்கள். ஒருவர்              வ.சுப்பையா, மற்றொருவர் பி. சுந்தரையா.
அக்காலத்தில், புதுச்சேரியில் முக்கிய தொழில் வளமான பஞ்சாலைத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நிலைமை மிகப்
பரிதாபகரமாக இருந்தது. பண்ணை அடிமை
களைவிடவும் மோசமாக அவர்கள் நடத்தப்பட்
டார்கள். இரவு நேரங்களில், அந்தத் தொழிலாளர்
களைச் சந்தித்த வி.எஸ் அவர்களுக்குப் போராட்ட உணர்வை ஊட்டினார்.
1934ஆம் ஆண்டு ‘சுதந்திரம்’ என்னும் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ‘ஜனசக்தி’க்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய பத்திரிகை இதுவாகும்.
1936 ஜூலை கடைசி வாரத்தில், பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம் தொடங்கியது. ஜூலை 30இல் உள்ளிருந்து தொழிலாளர் அடைத்த கதவை ஆயுதம் தாங்கிய பிரஞ்ச் காவல்படை இடித்துத் தகர்த்தது.
12 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் தொழிலா ளர்கள் சளைக்கவில்லை. பின் வாங்கவில்லை.
இந்தப் போராட்டம் இந்திய அளவில் பெரிய கவனிப்பையும் ஆதரவையும் பெற்றது. அதன் விளைவாக, தொழிலாளர்கள்,
1. நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலை.
2.பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ காலத்தில் முழு சம்பளத்தோடு கூடிய 5 வார விடுமுறை ஆகியவற்றுடன் இன்னும் பத்து ஒப்பந்தங்களை அரசு ஏற்றுக்கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலே, தொழிலாளிக்கு ஓய்வு
ஊதியம் கிடைத்தது.
8 மணிநேர வேலை என்பதும், ஓய்வூதியம் என்பதும், ஆசியாவில் எங்குமே இல்லாத, முதல் முறையாய் தொழிலாளர் பெற்ற வெற்றியாகும். வி.எஸ்.சின் மகத்தான சாதனை இது.
சம்பளம் மற்றும் விடுமுறை, சங்கம் வைக்கும் உரிமை ஆகியவற்றைக் கேட்டு 1935_ஆம் ஆண்டு போராடிய தொழிலாளர் வர்க்கத்தைச் சுதந்திரம் கேட்கும் போராளிகளாக, தேச பக்தர்களாக மாற்றியது தலைவர் வ.சுப்பையா அவர்களின் மகத்தான பங்களிப்பாகும். வெளிப்படையாக இயங்கமுடியாத ஒடுக்கு முறை நிலவிய காலத்திலும் இரவுகளில் தோப்புகளுக்கு நடுவில், லாந்தர் வெளிச்சத்தில் தொழிலாளிகளுக்கு அரசியல் வகுப்பு நடத்தி, புதுச்சேரி சுதந்திரப் போருக்கு அவர்களைத் தயார் செய்து, சுதந்திரப் போருக்குத் தலைமை யேற்று மகத்தான தளபதியும் ஆனார்.
1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி மாநிலம், பிரெஞ்சுப் பிடியிலிருந்து சுதந்திரம் பெற்றது நாடு கடத்தலுக்கு உள்ளாகி, தமிழ் நாட்டுப் பகுதியில் இருந்த தலைவர் வ.சுப்பையா கோலாகலமாக புதுச்சேரி மக்களால் வரவேற்கப்பட்டார்.  
சுதந்திரப் போரைத் தலைமை தாங்கி நடத்திச் சுதந்திர மாநிலத்தையும் உருவாக்கிய வ.சுப்பையா, 1993-அக்டோபர் 12இல்- புகழ் உடம்பு பெற்றார்.

- போராட்டம் தொடரும்

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions