c நன்றொன்று சொல்வேன்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நன்றொன்று சொல்வேன்

எங்கிருந்து யார் தொடங்குவது?

நடேசன் ஞானதிரவியம்

அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. சாதாரணமாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் பல வேளைகளில் மகத்தான உண்மைகளை வெளிப்படுத்தி விடுகின்றன. இன்றைய இளைஞர்கள் மிகவும் கூர்த்த மதியுடையோராய்த் திகழ்கின்றனர். ‘வேகமான தொழில்நுட்ப  உலகத்தில், 1980க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் அதற்கு முன் பிறந்த குழந்தை களுக்கும் இடையில் மூளையின் அமைப்பிலேயே வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தக் குழந்தைகள் புதிய விசயங்களை உடனே கிரகித்துக்கொள்கிறார்கள்’     என்கிறார் உளவியல் துறையின் தலைவரும் பேராசிரியருமாகிய கருணாநிதி (11 மார்ச், புதிய தலைமுறை, ப. 67). அவர் குறிப்பிடுவது போன்றே இன்றைய குழந்தைகளின் கற்றல் திறன் பல மடங்காக பரிணமித்துள்ளது.
அந்தக் குறுஞ்செய்தி :
ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோதுதான் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார்.
மாணவர்: அவர் ஒருவேளை வகுப்பறைக்குள்ளே அமர்ந்திருப்பாரேயாகில் அவர் ஒன்றையுமே கண்டு பிடித்திருக்க முடியாது.
என்ன ஒரு கூர்மையான விமர்சனம், நமது கல்விமுறையின்மீது பாருங்கள்!
இந்த மெக்காலே கல்வித் திட்டத்தால் பலனேதும் விளையவில்லையா எனில், ஒட்டுமொத்தமாக நாம் இல்லை என மறுத்துவிட இயலாது. ஒடுக்கப்பட்டோரை அது சமூகநிலையில் ஓரளவிற்கு எழுத்தறிவித்து விடுவித்துள்ளதுதான். ஆனால் இக்கல்விமுறை தோற்றுநிற்கும் இடங்கள் பல, அல்லது அதன் போதாமைகள் பலப்பல.
‘ஒரு கொசுவின் கடவுள் இன்னொரு கொசுவாகத்தான் இருக்க முடியும்’  என்றார் மாக்சிம் கார்க்கி. மக்கள் எதற்குத் தகுதியுடையோர்களாக இருக்கிறார்களோ அதற்குரிய அரசு அமைகிறது என்பர் அரசியல் சிந்தனையாளர்கள். போலவே, இந்தக் கல்விமுறையின் போதாமைகளுடன் உருவாக்கப்படும் ஆசிரியர்களும், இந்தக் கல்வி அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட போதாமைகளைத் தாங்களறியாது தங்கள் ஆளுமையில் தாங்கித்தான் வாழ்வார்கள். அது தவிர்க்க இயலாத ஒன்றுதான். இருந்தாலும், ஒரு ஆசிரியனாக என் சக ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பது என்னவெனில், எந்தப் புள்ளியில் இந்தப் பாடத்திட்டங்களில் ஒரு வெற்றிடம் விழுகிறதோ, அந்தப் புள்ளியில்தான் ஆசிரியரின் பங்களிப்புத் தொடங்குகிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
‘ஆசிரியர்களே தேவையில்லை’ என்பது ரூசோவின் கருத்து. ‘பள்ளிக்கூடமே அவசியமில்லை’என்பது ஜான் ஹோல்டின் பிரகடனம் (நன்றி இரா. நடராசன்). இவைபோன்ற சிந்தனைகள் வளர்ந்து வருவதற்குக் காரணம், “Nothing is Taught Everything is Learnt”  என்பது இந்த அறிவியல் உலகத்தில் இன்னும் இலகுவாக இருப்பதுதான். ஆனாலும், ‘அன்றுகொல் இன்றுகொல் என்றுகொல்’ என்று பின்றையே நிற்கும் கூற்றம் இருக்கும்வரை கடவுளை நாம் எப்படிக் கொல்ல முடியாதோ, அதைப்போலவே ஆசிரியரின் பங்களிப்பில்லாத கல்விமுறையை நாம் ஊக்குவிக்க இயலாது.
ஆசிரியர் என்பவர் ஒரு மாமனிதராக, புனிதராக இருக்கவேண்டும் எனவோ, ஒரு பெரும் சிந்தனையாளராக விளங்க வேண்டும் எனவோ நாம் எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால் குறைந்தபட்சம் கற்றலின் மீது தீராத காதல் கொண்டவராக, (Learning is an everlasting process) ‘கல்வி என்பது உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வருவதுதான். வெளியே இருப்பதை உள்ளே திணிப்பதல்ல’ (அப்துல் ரகுமான்) என்கிற அறிவியல் உண்மையை ஏற்றுக்கொள்பவராக, தாம் பெற்றவற்றை பிள்ளைகளுக்கு விளக்கிச்சொல்லும் ஆற்றல் மிக்கவராக இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில், எழுத்தறிவிக்கும் இக்கல்வி முறையானது வெறும் ‘கற்றுச் சொல்லிகளை’ உருவாக்கி வருகிறது. பிள்ளைகள் என்போர் வெறும்  மனித ஆற்றல்கள் Human Resources) மட்டுமல்லர். அவர்கள் நல்ல மனிதர்களாக வளர வேண்டியவர்கள். அங்ஙனம், தம்மிடம் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளை நாட்டின் அறிவார்ந்த குடிமக்களாக ஆக்கித்தரும் மகோன்னதமான பணி ஆசிரியருடையது.
நமது முன்னாள் குடியரசுத் தலைவரும் தலைசிறந்த ஆசிரியருமாகிய சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சொல்கிறார், ‘Teachers should be the best minds in the country. Teachers need to be leaders in their own life, capable of proactive thinking, open to changes and challenges, able to inspire, motivate, demonstorate by examples and finally with a realisation that they have a huge responsibility of nation building’ - என்று.
தேசக்கட்டுமானத்தில் இன்னபிற துறையினரைவிட நேரடித் தொடர்புடையவர்கள் ஆசிரியர்கள். சமூகத்தில் மற்ற துறைகளில்/தளங்களில் இயங்கும் பொறுப்புள்ள மனிதர்களைவிட ஆசிரியர்களுக்கு அதிக பொறுப்புள்ளது. பிள்ளைகளின் பார்வையில், பெற்றோர்க்கு அடுத்த நிலையில், ‘வாழும் உதாரணமாகிறார்’ ஆசிரியர்.இத்தகைய நடமாடும் தெய்வங்களாகிய ஆசிரியர்கள் எங்ஙனம் உருவாக்கப்படுகின்றனர் அல்லது கண்டெ டுக்கப்படுகின்றனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
போட்டித் தேர்வுகள் மூலம் மற்ற துறைகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதுபோல் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படக்கூடாது. தேசிய தகுதித்தேர்வு (NET)போன்ற தகுதித் தேர்வுகள் உண்மையான ஆசிரியர்களைத் தேர்வு செய்யப் போதுமானவை அல்ல. தெரிவு செய்வதை எளிமைப்படுத்தும் விதமாகவும்,  போட்டிகளைக் குறைக்கும் விதமாகவும் (It is only a shortlisting method), தகுதித் தேர்வுகளை (SET/NET) மாநில, மத்திய அரசுகள் நடத்துகின்றன. இதற்கு, தாங்கள் படித்துப் பட்டம் பெற்ற துறைகளிலும், பொது அறிவுத்தளத்திலும் விடைகளைத் தயார் செய்து தேர்வுகளை போட்டியாளர்கள் எழுதுகின்றனர். இதுபோன்ற தேர்வுமுறை அவசியமே  இல்லை. தாம் தேர்ந்து கொண்ட துறையில் ஒரு மனிதர் முதுகலை பட்டம் பெற்றுவிட்டார். பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெற்றுக் கொண்டார் எனில் அவர் ஆசிரியராக ஆவதற்கு முழுத் தகுதியுடையவராகிறார். மூப்பு / இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களைத் தேர்வு செய்து சில மாதங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவதன் மூலம் மீண்டும் அவர்களை ரெஃப்ரஸ்(Refresh) செய்துவிட முடியும் அல்லது டியூன் (Tune) பண்ணிவிட முடியும். தேவைப்பட்டால் பன்னிரண்டாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவரைத் தேர்வு செய்து அவரை ஆசிரியப் பயிற்சி பட்டயம் / பட்டம் நோக்கி ஆற்றுப்படுத்தும் முறையைக் கொண்டு வரலாம்.
கல்லூரி ஆசிரியர்களைத் தேர்வு செய்கிறபோது ஆய்வுப் பட்டங்களையும் (M.phil,Ph.D.) தகுதித்தேர்வு வெற்றிகளையும் (SET/NET) மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பி.எட்,  எம்.எட். பட்டங்களையும் கட்டாய மாக்க வேண்டும். மாணவர்களை எங்ஙனம் நடத்துவது ,பயிற்றுவது என்பன போன்ற எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்திராத, பயின்றிராத ஆய்வுப் பட்டதாரிகள் எங்ஙனம் சிறந்த ஆசிரியர்களாக ஆக இயலும்?
கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் முறை என்பது லெக்சர் (Lecturing) முறைதான். இதற்கு பி.எட், எம்.எட் பட்டங்கள் தேவையில்லை என்ற கருத்து முன் வைக்கப்படலாம். இது ஓரளவு முதுநிலை/ஆய்வுநிலைப் பட்டங்களுக்கு வேண்டுமானால் பொருந்துமேயொழிய பதினெட்டு வயதில் இளங்கலைப் பட்டத்திற்குள் பிரவேசிக்கும் பதின் பருவத்து மாணவர்களுக்கு, ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்ற பேராசிரியர்களை நியமிப்பதுதான் பொருந்தும்.

உண்மையில் விழுமியங்கள் நிறைந்த, பண்பாடும் மொழியும் புரிந்த, ஆர்வமிக்க நல்ல மனிதர்களாக ஆசிரியர்கள் உருவாக்கப்பட வேண்டும். பாட அறிவு என்பதை முதல்நாள்கூட பெற்றுக் கொள்ளலாம் (a teacher is one day senior to the students) என்று சொல்வதுண்டு. ஏனெனில், ‘பிள்ளைகள் சொல்வதைச் செய்வதில்லை, செய்வதைச் செய்வார்கள்’
ஒரு மதம், மத குருமார்களை எப்படி கவனமுடன் பயிற்றுவித்து உருவாக்குகிறதோ, அதே கவனமுடன் ஆசிரியர்கள் உருவாக்கப்பட வேண்டும். ஓர் ஆசிரியர் விழுமியங்களின் எலும்பும் சதையுமாக வார்க்கப்பட வேண்டும். அதற்கான பாடத்திட்டம் மற்றும் பயிற்சி முறைகளை இன்னும் விரிவாக யோசித்து ஆசிரியர் பயிற்சி பட்டங்களின் பாடத்திட்டங்களும், பயிற்சிமுறையும் கட்டமைக்கப்பட வேண்டும்.
என்னதான் சிறந்த, உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் உயிரார்த்தமான பங்களிப்பு இல்லாமல் சிறந்த மாணவர்களை உருவாக்க இயலாது.
தொழில்நுட்ப அறிவில் அல்லது கூர்மதியில் இன்றைய இளைஞர்கள் பிரகாசமாக விளங்கினாலும் மதிப்பீடுகளில், விழுமியங்களில் பெரும் சரிவினை சந்தித்துள்ளார்கள். வாட்ஸ்அப் போன்ற சேவைகளில் அவர்களின் கூர்மையான அரசியல் விமர்சனங்கள் வியக்க வைக்கின்றன. அதேவேளையில், தாய்மையுற் றிருக்கும் திரை நடிகை ஒருவரின் படங்களை வெளியிட்டு, ‘நேற்றைய கனவுக்கன்னி - இப்போது பன்னி’ என்று கமெண்ட் போடுகிறார்கள். பெண் மீதான பார்வை எத்தனை கீழ்மையுற்றிருக்கிறது பாருங்கள்.
பயணங்களில் நான், என் மகன் உள்ளிட்ட இளைஞர்களைக் கவனிக்கிறேன். ஏறியமர்கிறார்கள். டிக்கட் பெற்றுக்கொண்டவுடன் கால்களின் முட்டிகளை முன்சீட்டில் முட்டுக் கொடுத்துக்கொள்கிறார்கள். காது களில் பாடல் கேட்க, திரைப்படம் பார்க்க ஒலிபெருக்கியைச் செருகிக் கொள்கிறார்கள். கண்களைச் செருகி அறிதுயில் கொள்கிறார்கள். சன்னல் பார்ப்பதில்லை. சனங்களைக் கவனிப்பதில்லை, எதனையும் உள்வாங்கிக் கொள்வதில்லை.
“மாப்ள எந்திர்ரா’’
”ஏண்டா?!’’
“பஸ் ஸ்டாண்ட் வந்துட்டுது’’
“எப்படிச் சொல்றே ஷட்டர ஏத்தாம?!’’
“டேய் தெரியாதா, அதாந் மூத்திர நாத்தமும் சாக்கட நாத்தமுந் தொளைக்கிதே!’’
-என்ற உரையாடலில் பொதிந்திருக்கும் அரசியல் சமூக விமர்சனம் துய்ப்பதில்லை. மொத்தத்தில் பயணம் செய்வதே இல்லை. பயணங்கள் பக்குவப்படுத்தும். சாரதிகள் பயணம்  செய்வதில்லை, பணியைத்தான் செய்கிறார்கள். இளைஞர்கள் இடம் பெயர்கிறார்கள், பயணிப்பதில்லை. இந்த வெற்றிடத்தில் நின்று நிரப்பத் தான் ஒரு ஆசிரியர், தேவையாய் இருக்கிறார்.
ஹிட்லரின் வதை முகாமிலிருந்து தப்பித்த ஒரு பள்ளித் தலைமையாசிரியர், ‘கொல்லும் வாயு நிரப்பும் அறைகளைக் கட்டியவர்கள் நன்றாகப் படித்த பொறியாளர்கள்தான். நன்றாகப் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களால்தான் குழந்தைகள் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டார்கள், பட்டதாரிகளால்தான் பெண்களும் குழந்தைகளும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவற்றை நான் என் கண்களால் கண்டேன். எனக்கு இந்தக் கல்வி மீது மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது’ “My request is to help your students to be human beings, your efforts must never produce learned monsters, skilled psychopaths, or educated maniacs. Reading and spelling and history of arithmetic are only important if they serve to make our students more human” என்று ஆசிரியர்களை விண்ணப்பித்துக் கொள்கிறார்.
இந்தக் கல்வி முறையின் போதாமைகளுடன் உருவாகும் ஆசிரியர் எங்ஙனம் ஒரு சிறந்த ஆசிரியராகப் பரிணமிக்க இயலும் என்கிற கேள்வியுள்ளது. இதற்கு ஒரேயொரு தீர்வு, ஆசிரியர்களாகப் பணியிலிருப்பவர்கள், ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்பவர்கள் தங்களை முழு ஆசிரியர்களாக மாற்றிக்கொள்ள முயலவேண்டும்.
திறன்களைக் கற்றுத் தந்தால் மட்டும் போதாது. ‘மீத்திறன் மனிதனை முடமாக்குகிறது’ (Over Specialisation Cripples a man) என்று லூனா சர்ஸ்கி எனும் ருஷ்ய மேனாள் கல்வியமைச்சர் குறிப்பிடுகிறார்.
கிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட முதல் அணு குண்டு பாராசூட்டிலிருந்து இறக்கப்பட்டது. ஆடியசைந்து வரும் அந்தக் குண்டை மக்கள் வியந்து பார்த்தார்களாம். பின்னர் எரிந்து கரிந்தார்கள். இப்போது வடகொரியா ஹைட்ரஜன் குண்டை சோதித்துள்ளது. மனிதம் கொன்று மனிதர் காக்கின்றனர்!! திறன்கள் வளருமுன்னர் மனிதகுலம் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்தது. மனிதமற்ற திறன் தேவையற்றது, கொடுமையானது.
தமிழ்ச் சூழலில் இரண்டு மனிதர்கள் சந்தித்துக் கொண்டால் (அப்படியும் இப்படியும் திரும்பி நின்று அலைபேசியில் பேசாதிருப்பின்!) என்ன பேசிக்கொள் கிறார்கள்? “அப்புறம்... வீடு கட்டிட்டீங்களா’’ என்பதாகப் போய், “சுகர் எப்டீருக்கு?’’ என்று முடியும். வேறு அரசியல் சமூகப் பிரச்சனைகள் அந்தப் பேச்சில் இடம்பெறுவது அபூர்வம்.
நாங்கள் தொன்னூறுகளில் இளைஞர்களாக இருந்தபோது முழுவதுமாக சமூக, அரசியல் பிராணிகளாக வாழ்ந்தோம். ப்ரஸ்ட்ரோய்க்கா, க்ளாஸ்நாத் என்ற ‘தளர்ச்சித் திட்டங்’கள் அறிமுகம் செய்விக்கப்பட்டபோது ருஷ்யா சிதறப் போகிறது என்று குளத்துக்கரையில் பேசித் திரிந்தோம். பண்பாட்டால், மொழியால், உறவுகளால், விழுமியங்களால் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய இளைய சமூகத்தினரிடம் ஒரு வெற்றிடம் தோன்றியுள்ளது.  இந்த வெற்றிடத்தில் மேற்சொன்னவற்றை இட்டு நிரப்பும் வாய்ப்பை மற்ற எல்லாவற்றையும்விட ஆசிரியர்களே பெற்றுள்ளனர்.
உடலின் உறுப்புகளில் பல நோயுற்றால் எந்த உறுப்பை முதலில் சரிசெய்வது என்ற குழப்பத்தால் நேரும் காலதாமதம், நோய் முற்றுவதற்கும் உடல் அழுகிப் போவதற்கும் வழிவகை செய்யும். எனவே சமூகம் என்னும் பேருடலுக்கு நல்ல உயிர்வளியாக (ஆக்சிஸன்) ஆசிரியர்கள் விளங்கி சுத்திகரிப்பைத் தொடங்கி வைக்கலாமே என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் இக்கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன.

பயணங்கள் பக்குவப்படுத்தும். சாரதிகள் பயணம்  செய்வதில்லை, பணியைத்தான் செய்கிறார்கள். இளைஞர்கள் இடம் பெயர்கிறார்கள், பயணிப்பதில்லை. இந்த வெற்றிடத்தில் நின்று நிரப்பத் தான் ஒரு ஆசிரியர், தேவையாய்   இருக்கிறார்.

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions