c அஞ்சலி
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

அஞ்சலி

நாடக ராமானுஜம்

அரை நூற்றாண்டுக் கும்மேல் தென்னிந்திய நாடக உலகில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர்  நாடக ராமானுஜம் என்று அறியப்பட்ட பேராசிரியர் சே. ராமானுஜம் (பிறப்பு :1935 - இறப்பு : 2015) டிசம்பர் 7 அன்று தஞ்சாவூர், செல்லையா நகரி லுள்ள அவரது இல்லத்தில் காலமானார். தமிழ்நாட்டைத் தாண்டியும் செல்வாக்கு செலுத்திய நவீன நாடகக் கலை ஆளுமையான அவரைப்பற்றி சில சுவாரசியங்கள்...
‘ஆதாரக் கல்வி’த் திட்டத்தை அமலாக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி பிறகு காந்தி கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ராமானுஜத்தின்  நாடக ஆர்வத்தைக் கண்ட, அங்கே பணியாற்றிய ஜி.சங்கரப்பிள்ளை, எஸ்.பி.சீனிவாசன் போன்றோர் டெல்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர வழிகாட்டவே,சேர்கிறார்.
இந்திய நாடக ஆளுமையான இப்ராஹிம் அல்காஜியின் கீழ் பயின்ற அவர், 1967-ல் நாடகக் கல்வியை முடிக்கிறார். பின்னர் பத்தாண்டுகள் காந்தி கிராமத்தில் ஆசிரியர் பணி. 1977 முதல் கோழிக்கோடு பல்கலைக்கழகம், திருச்சூர் நாடகப்பள்ளியின் துணை இயக்குநர். 1986 முதல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறைத் தலைவர் எனப் பணியாற்றினார்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் படைத்தது, நூற்றுக்கணக்கான பயிலரங்குகள் நடத்தியது, தஞ்சை, கோழிக்கோடு, புதுவை, ஹைதராபாத் பல்கலைக்கழகங்களில் நாடகக் கல்விக்கான அடிப்படையான வரைவுத் திட்டங்களை உருவாக்கியது என தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தியவர்.
1960-களின் இறுதியில் கேரளாவில் ‘நாடகக்களரி’ எனும் முன்னெடுப்புகளில் ஜி.சங்கரப்பிள்ளையுடன் இணைந்து செயல்படத் தொடங்கியபோது, எம்.கோவிந் தனின் ‘தனது நாடக வேதி’ எனும் கோட்பாட்டில் (ஒவ்வொரு மண்ணுக்கும்  உரித்தான ஒரு நாடக மரபைத் தேடிக் கண்டடைதல்) தனது கவனத்தைத் திருப்பலானார்.
‘மண்ணுக்கேயுரிய நாடகங்களை’த் தேடிக் கண்டடைவது, நாடகங்களை இந்திய மயமாக்குதல் போன்ற முயற்சிகளில் மத்திய  அரசின் சங்கீத நாடக அகாடமி ஈடுபடுவதற்கு முன்பே  பேராசிரியர் ராமானுஜம் அக்கோட்பாட்டை வரித்துக்கொண்டவர்.
இந்திரா பார்த்தசாரதியின் ‘கால யந்திரங்கள்’, கூத்துப் பட்டறைக்காக மாக்ஸ்முல்லர் பவனுடன் சேர்ந்து தயாரித்த ஸ்விஸ் நாடகாசிரியர் மாக்ஸ் பிரிஷ்ஷின் ‘அண்டோரா’ போன்றவை பேராசிரியரின் முக்கியமான ஆக்கங்கள். இவை மரபான வடிவங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டவையல்ல, தெளிவான யதார்த்த பாணியில் அமைந்தவை. எந்தவொரு பாணியிலும் தனக்கென ஓர் அணுகுமுறையைக் கொண்டிருந்தார்.
‘ஒப்பாரி வைப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். செயற்கையாக அழுதாலும்  அடி வயிற்றைப் பதற வைப்பார்கள். அந்த  ஒப்பாரியை ஒரு கலையாகப் பார்த்தார் ராமானுஜம். ‘வெறியாட்டம்’ அவரது முக்கியமான படைப்புகளிலொன்று. இது கிரேக்க நாடகமான யூரிப்பிடீஸின் ‘ட்ராய் மகளிரைத்’ [Trojan women] தழுவியது. அப்போது இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ ஒடுக்குமுறையை இந்நாடகம் பிரதிபலித்தது. அந்நாடகத்தில் ‘ஒப்பாரி’ என்பதை வலுவான உத்தியாகப் பயன்படுத்தினார். கூந்தலை அவிழ்த்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்து கைகளைத் தரையில் அறைந்து பாடும் காந்தி மேரியை  தமிழ் நாடகவுலகம் எளிதில் மறக்கவியலாது.
நாடகப் பயிலரங்குகள், வகுப்புகள் எங்கு நடந்தாலும் வந்துவிடுவார். தேசிய விருது பெற்றவர், அரங்கக் கலையில் பலருக்கு வழிகாட்டி.
கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் குழந்தைகள் நாடக அரங்கம் உருவாவதற்கான முன்னோடி.
அவரது ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது திருக்குறுங்குடி ஆலயத்தில் நிகழ்த்தப்பட்ட கைசிக புராணத்தை மறு ஆக்கம் செய்ததுதான். தொலைந்து போயிருந்த ‘கைசிகப் பண்’ பிரதியைச் சிரமப்பட்டுக் கண்டுபிடித்து மெலட்டூர் பாகவத மேளாவில் நடிப்பவர்களையும் தஞ்சாவூர் நட்டுவனார்களையும் அழைத்துவந்து இரண்டு தேவதாசிகளின் ஒருங்கிணைப்பில் மீண்டும் நிகழ்த்திக் காட்டியது மிகப்பெரிய சாதனை. அவர் அந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்காவிட்டால் கோயிலுடன் வெறும் நினைவாகப் போயிருக்கும் கைசிக நாடகம்.
‘பல்சுவை காவியம்’ அவரது நினைவை என்றும் போற்றுகிறது.
- ஊரகாளி

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions