c புதுக்கவிதை : வேரும் விழுதும்-10
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுக்கவிதை : வேரும் விழுதும்-10

காலத்தைச் சிறைப்பிடித்த கலைஞன்

தமிழ் இலக்கியத்தில் மண்டிக் கிடந்த கசடுகளையும், கழிவுகளையும் அகற்ற வேண்டுமெனத் தீர்மானமான குரல்  கொடுத்த சுந்தரராமசாமியின் முதல் கவிதை 1959 மார்ச் மாத எழுத்தில் ‘உன் கை நகம்’ என்ற தலைப்பில் வெளியாயிற்று. அதுவும் அழுக்குக்கு எதிராகவே குரல் கொடுத்தது.
“நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும்
அகிலமும் சொந்தம் அழுக்குக்கு!
நகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு?”

இந்தக் கவிதை ஒரு வகையில் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை ‘விருதா’வாய், வெறுமையாய்த் தூக்கிச் சுமக்கிறோமே என்ற ஆதங்கத்திலும் ஆத்திரத்திலும் பிறந்ததுபோலும். வலது கை நகத்தை, இடது கை நகத்தை இரண்டையும் வெட்டி எறியும்படி ஆவேசப்படுகிறது கவிதை.
நகத்தை வைத்துக்கொண்டு எதிரியைப் பிறாண்டலாம் தான். ஆனால் ஆரத் தழுவிய அருமைக் கண்ணாளின் தோளில், தூக்கிச் சுமக்கும் அருமைக் குழந்தையின் தொடையில் இரத்தம் கசியவும் காரணமாகுமே.
“குறும்பை தோண்டலாமே - காதில்
குறும்பை தோண்டலாமே”

என்றால் நகத்தின் அழுக்குக் குறும்பையுடன் குடலுக்குக் குடிபெயர்ந்து விடும் அல்லவா? அதனால் ‘நகத்தை வெட்டி எறி அழுக்குச் சேரும்’ என்று அழுத்தமாய்க், கோபமாய்ப் பேசுகிறது சுந்தரராமசாமியின் முதல் கவிதை.
படைப்பிலக்கியம் குறித்த அக்கறையின் மாற்றொலியாகவே இக்கவிதையை நான் அடையாளம் காண்கிறேன். தேங்கிக் கிடந்த இலக்கியச் சூழலில் மாற்றத்தைத் கொணரும் ‘எழுத்து’ இதழின் தொடக்க இதழ்கள் என்ன கருத்தியலை முன் வைத்தனவோ அந்த  நோக்கையே தன் கவிதையில் சுந்தரராமசாமி முன் மொழிந்திருக்கவேண்டும். இடதும் வலதும் வேண்டாம், குறும்பை தோண்டும் சுகம் போலப் பொழுது போக்குக்கு இலக்கியம் வேண்டாம் என்று குறிப்பதாகக் கொள்ளலாம்.
விளக்கம் ஒருபுறம் இருக்க, இந்த முதல்  கவிதையே விமர்சனச் சூறாவளியான க.நா.சுப்பிரமணியத்தின் பாராட்டை  அடுத்த இதழிலேயே பெற்றதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
‘‘3வது இதழில் வெளிவந்திருக்கிற ‘உன் கை நகம்’ என்கிற கவிதை அவசியமான இன்றைய சோதனை முயற்சி’’ என்று க.நா.சு. எழுதி இக்கவிதையை வரவேற்றார்.
சுந்தரராமசாமி (1931-2005) கவிதை எழுதத் தொடங்கிய காலம் முதலாக ‘பசுவய்யா’ என்ற புனைப்பெயரைக் கவிதைக்கென்று தனியாக வைத்துக் கொண்டார். பசுவய்யா என்ற பெயரைச் சூடிக்கொண்டி ருந்த போதிலும், ஆரம்ப காலக் கவிதைகள் ‘புலி அய்யா’ என்று சொல்லும்படி பாய்வதிலேயே குறியாய் இருந்தன.
இயல்பாகவே அவருக்கும் படிப்பாளிகள் மேல் ஒரு வன்மமான கோபம் இருந்தது. ‘மேஸ்திரிகள்’ என்பது அவருடைய இரண்டாம் கவிதை. பல்கலைக் கழகத்தின் முன் ஒரு தோட்டம் போடுகிறார் மேஸ்திரி. அது மிருகக் காட்சி சாலையாகிவிடுகிறது. கவிதையின் முடிவில்,
“தோட்டத்திலே மேஸ்திரி ஒருவரே
எண்ணத் தொலையுமோ உள்ளே”

என்று பல்கலைக்கழகப் படிப்பையும் படைப்பையும் ஏளனம் செய்கின்றார்.
இந்த ஏளனத்தின் தொடர்ச்சிதான் ‘இலக்கிய வட்டம்’ இதழில் வெளிவந்த ‘கொள்கை’ என்ற கவிதை.
“மேற்கே
ரொமாண்டிஸிஸம்
நாச்சுரலிஸம்
ரியலிஸம்
அப்பால்
இம்ப்ரஷனிஸம்
என் மனைவிக்குத்
தக்காளி
ரஸம்’’

என்று தொடங்கும் கவிதை தன் சஞ்சாரத்தை முடிக்கும்போது ‘சுளீரென்று’ ஒரு சாட்டையடி!
“நாம் எல்லாம்
டமில் எழுத்தாளர்
நமக்கோ
ப்ளேஜியாரிஸம்’’

என சாட்டை நுனியில் இரத்தச் சொட்டுப்போல ஒரு குட்டு. பசுவய்யாவின் பார்வையில் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் இலக்கியச் சொரணையற்ற மூடர்களாகவும், புதுமையற்ற படைப்பாளிகள் சண்டுகள், சருகுகள், ஈயடிச்சான் காப்பிகளாகவும் தோற்றம் தந்தனர். அந்த ஆதங்கமும் கோபமும் தொடக்கக் காலத்தில் பசுவய்யாவை ஆட்கொண்டிருந்தன.
அவரிடம் குடிகொண்டிருந்த பழைய மிச்ச சொச்சமான சமூகப் பார்வை காரணமாக ‘மந்த்ரம்’ என்றொரு கவிதை எழுதினார். போலிப் பக்தியைத் தோலுரித்துக் காட்டும் நோக்கில் எழுந்தது இக்கவிதை.
“ட்யூப் லைட் சுந்தராச்சி உபயம்
குத்து விளக்கு கோமுட்டிச் செட்டி உபயம்
உண்டியல் பெட்டி தெ.கு.வெ. உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்’’

எனப் பக்தியை விளம்பரமாக்குவதைப் பகடி செய்யும் நீண்ட இக்கவிதையில் பசுவய்யாவின் கூரிய கிண்டல் குத்திக் கிழிக்கிறது.
“புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு லொசுக்கு
எல்லாம்
ஸ்வாமி உபயம்
ஸ்வாமி
சிற்பி உபயம்’’

என மனிதரையும் கடவுளையும் நோக்கிப் பாய்ந்து சட்டென ஒரு மந்திரம்போல் முடிவெய்துகிறது.
“நம்ம பேரு சாமி மேலே
சாமி பேரு நம்ம மேலே”

வாழ்க்கையையும் இலக்கியத்தையும் குறித்த பிரமைகள் மெல்ல மெல்லச் செதிள் உதிர்ப்பதைத் தொடர்ந்து வந்த கவிதைகள் பிரதிபலித்தன. ‘கதவைத் திற’ என்ற கவிதை இதைப் பேசுகிறது.
“கதவைத் திற
காற்று வரட்டும்
சிறகை ஒடி
விசிறியின்
சிறகை ஒடி
விசிறிக்குள் காற்று
மலடிக்குக் குழந்தை”

இயல்பில்லாத செயற்கைகளின் மீது இன்னும் சினச் சாயல் பசுவய்யாவிடம் கனல்கிறது. இயற்கைக்கு மாறான படைப்புகளைத் தூக்கி எறியும் துணிவு தொடர்கிறது.
“சிலையை உடை
என் சிலையை உடை”

என்று பொம்மைச் சிலைகளைத் தகர்க்கும் வேகம் புலனாகிறது. இங்கெல்லாம் ஆணை பிறப்பிக்கிற தொனி பசுவய்யாவுக்குள் திரண்டிருப்பதை அடையாளம் காண முடிகிறது.
எழுத்திலும் வாழ்க்கைப் பார்வையிலும் நிச்சயமற்ற ஒரு பருவ காலத்தையும் பசுவய்யா கடந்ததன் அடையாளத்தையும் அவர் கவிதை பதிவு செய்கிறது. ‘இந்த வாழ்க்கை’ என்ற கவிதை இதற்கு அடையாளம்.
“என்னை நான் இகழ்ந்து கொண்டதைத் தவிர’’ என்ன பயனை வாழ்க்கை தந்தது என்ற வினாவை எழுப்பிக் கவிஞர் கூறுகிறார்.
“நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை
நான் அணைக்க வேண்டிய தோள்
நான் படிக்க வேண்டிய நூல்
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை”

படைப்பைப் பற்றிய ஒரு பெருமிதம் பசுவய்யாவிடம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. எழுத்து மனிதனின் படைப்பாற்றலின் குவிமையம் என அவர் கருதி வந்திருக்கிறார். ஆரம்பகாலக் கவிதை ஒன்றில்,
“என்னை அழிக்க யாருண்டு?
எழுத்தில் வாழ்பவன் அன்றோ யான்?”
என்று பெருமிதம் கொள்கிறார். பிற்காலக் கவிதை ஒன்றில் (‘சவால்’) ஓர் அறைகூவல் அவரிடம் எழுகிறது.
“வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மன வலியுண்டு
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல, பதுங்கல்
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்
எனது கொடி பறக்கிறது
அடி வானத்துக்கும் அப்பால்”

இந்தக் கவிதையில் ஒரு படைப்பாளியின் செருக்கும், கம்பீரமும் ‘உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?’ என்ற கவிக்குரலோடு பின்னிப் பிணைகின்றன.
பசுவய்யாவின் ‘நடுநிசி நாய்கள்’ உட்படச் சில தொகுப்புகள் வெளிவந்தன. அவருடைய பெரும் பான்மையான கவிதைகளை 107 கவிதைகள் எனப் பெருந்தொகுப்பாகவும் காலச்சுவடு பதிப்பகம் தந்திருக்கிறது.
‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவல்கள் மூலமாகவும் செதுக்கியமைத்த சிறுகதைகள் மூலமாகவும் நவீன தமிழ் இலக்கியத்தில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறார் சுந்தரராமசாமி. எனில் பசுவய்யாவின் கவிதைகளின் இடம் என்ன?
புதுக்கவிதைப் பரிசோதனை யுகத்தின் முதல் அணியில் பசுவய்யாவுக்கு நிச்சயமாக இடம் உண்டு. உணர்ச்சியைவிட அறிவின் பரிமாணமும், வாழ்க் கையை விட மெல்லிய தத்துவத்தின் நீரோட்டமும், பண்டைய இலக்கியச் சாயலைவிடப் புதுமையின் தொனிச்சிதறல்களும் பசுவய்யாவின் கவிதை உருவாக்கத்தின் கூறுகளாக நிலைகொள்கின்றன.
பசுவய்யாவின் சிந்தனை ஆழத்துக்கும், தத்துவ அடியூற்றுக்கும் அடையாளமாக இருக்கிற ‘காலம்’ என்ற கவிதையே அவர் படைப்பின் உச்சி என்று கூறலாம். காலம் என்ற பெருவெளியைச் சொற்களில் சிறைப்படுத்த முயலும் அற்புதம் இக்கவிதை. எழுத்து 51ஆம் இதழில் வெளிவந்த கவிதை இது.
முதலில் காலத்துக்குச் சொல்லப்படும் இலக்கணங் களைப் பசுவய்யா முன் வைக்கிறார்.
மணியின் முள்ளில் காலமில்லை
காலமோ
மாயை என்றான் சங்கரன்
அல்ல மாயையும் அல்ல வென்றான்
அரவிந்தனோ, ‘லீலை’ என்றான்
லீலைதானோ என்று கேட்டான்
அறிந்தறிந்து
தத்துவப் பாகனையே கொல்லும்
யானை அது”

சங்கரனும், அரவிந்தனும் தோற்றுப்போன இடத்தில் பசுவய்யாவின் கவிதை மனம் குவிகிறது. ஐன்ஸ்டீனைப் போல் கவிதைச் சொற்களில் ஒரு சாம்யம் (சமன்பாடு) சமைக்க முனைகிறார் பசுவய்யா.
அருவுருவான காலத்தை உணர முடிகிறது, அறிய முடியவில்லை. ஆயினும் படிமங்களால் காலத்தைக் கட்டிப்போட கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன் போல்  பசுவய்யா முயல்கிறார். முயற்சியில் வெல்கிறார்.
“காலம் என்ற ஒன்று
யாளியின் வாய்க்குள்
விரலுணர
ஓசையெழ உருண்டோடும்
கண்ணுக்குப் படாத
கல் பந்து”

இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் தரிசிக்க நினைக்கிறார் பசுவய்யா. ஒரு ஜாடியிலிருந்து இன்னொரு ஜாடிக்குள் தேன் இழையறாது விழுகிறதாம்.
“குறையாத ஜாடியினின்று
நிறையாத ஜாடிக்குள்
பார்வைக்குத் தெவிட்டாமல்
வில்லாய் வளைந்து விழும்
விழுந்துகொண்டே இருக்கும்
கட்டித் தேன் பெருக்கு”

குறையாத ஜாடி இறந்த காலம், நிறையாத  ஜாடி எதிர்காலம், பார்வைக்குத் தெரியும் தேன் பெருக்கு நிகழ்காலம். அற்புதமான படிமத்தில் அகப்பட்டுக் கொள்கிறது காலம். இன்னும் ஒரு படிமேலே போய்க் கவிஞர் கூறுகிறார்.
“கிணற்றினுள்ளே
கண்ணுக்குப் புலனாகும்
நதியின் பிரவாஹம்”

நிலத்தடியில் ஓடும் நதி காலம். அதன் தொடக்கமும் முடிவும் நமக்குத் தெரியாது. நாம் காண்பது கிணறு என்கிற நிகழ்காலத்தில் தெரியும் நீர் மட்டுமே. மற்றுமொரு படிமம் காலத்தை உச்சிமோந்து கவிதைக்குள் குடி வைக்கிறது.
‘காலம்’ என்ற இந்த ஒரு கவிதை போதும் பசுவய்யாவைக் காலமெல்லாம் வாழவைக்க. பசுவய்யா காலத்தைக் கவிதையில் சிறைப்பிடித்த ஒப்பற்ற கலைஞன், கவிஞன்.
-தொடரும்


 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions