c காணாமல் போன கழிவறைகள்
2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

காணாமல் போன கழிவறைகள்

நண்பர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஓர் அனுபவத்திலிருந்தே தொடங்குவோம்.
அவர் இராயப்பேட்டையில் இருக்கிறார். அங்கிருந்து தேனாம்பேட்டையிலுள்ள தன் நண்பரைக் காண வருகிறார். பேச்சிலர்களுக்கே வாய்க்கும் வறுமை அவருக்கும் இருக்கவே நடந்தே வருகிறார்.
மியூசிக் அகாதமி அருகில் வரும்போது வயிறு கடமுட செய்திருக்கிறது!
பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நண்பர் மேலும்  நடக்கிறார். வயிறு குண்டுக்கட்டாக வலிக்கத் தொடங்குகிறது. எதிரில், பக்கவாட்டில் தென்படுகிற பெட்டிக்கடை, ஆட்டோக்களிடம் விசாரிக்கிறார்.
‘இங்கெல்லாம் பாத்ரூம் இல்ல சார். லஸ்சுக்குத்தான் போகணும்’ என்கிறார்கள்.
நண்பருக்கு ‘பக்’கென்கிறது. நண்பர் வருவது ஆழ்வார்பேட்டை சிக்னல். போக வேண்டியது வலப்புறம் உள்ள தேனாம்பேட்டை . லஸ் இடப்புறமுள்ள முனை.
அவ்வளவு தூரம் போய்விட்டுத் திரும்புவதற்குப் பதிலாக இப்படியே விரைந்தால் நண்பர் அறைக்கே போய்விடலாம் என பல்லைக் கடித்துக்கொண்டு வருகிறார்.
பேச்சிலர் காலத்து வறுமை தரும் வயிற்று உபாதைகள் தனி ரகம். அது தன் வேலையைக் காட்டத் தொடங்குகிறது. வேகமாக நடக்க முயல்கிறார், நடை பாவவில்லை. ஓட முயல்கிறார். உட்கார்வதுபோல உடல் இறங்குகிறதே தவிர நடை குறையத் தொடங்குகிறது.
எங்காவது சற்று உட்காரலாம் என எண்ணுகிறார். விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வதென பதைக்கிறது. மனதுக்கு எப்போதும் மானப் பிரச்சனை, என்ன செய்ய!
விசாரித்தால், இங்கும் அருகில் ‘பாத்ரூம்’ இல்லை என்கிறார்கள். மறைவிடங்களும்  இல்லை. ரவுண்டானா பூச்செடிப் புதர்களிலும், எலக்ட்ரிக் பெட்டி சந்திலும் தலையை கால்முட்டிகளில் கவிழ்த்துக்கொண்டு குந்தி யிருந்த பலரை பார்த்திருக்கிறார். அதுவெல்லாம் நினைவில் நகர்கிறது. இவரது போறாத காலம்.  கண்ணுக்கு எட்டிய வரை நெடுநாளாய் நிற்கும் புழுதி கப்பிய பாழடைந்த கார்களையும்கூட காணமுடியவில்லை. இராயப்பேட்டையிலிருந்து டி.டி.கே. சாலை வழியாக ஆழ்வார்பேட்டை வரை ஒரு கழிவறைகூட இல்லையா என்று கேட்கத் தோன்றலாம். எதிர்மறை கேள்வியென்றால் எளிதாக கேட்டே பழக்கம் நமக்கு.
சென்னையை உன்னிப்பாகக் கவனித்தால் இக் கேள்விகள் எழாது!
1.சென்னையில் எந்த பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலும் கழிவறை இல்லை, அத்திப் பூத்தாற்போல எங்கோ ஒன்றைத்தவிர.
2.பிரசித்தி பெற்ற கோயில்கள் உட்பட எந்தக் கோயில்களுக்கு அருகிலும் கழிவறைகள் இல்லை. அப்படியே சுற்றிவந்து வெளியில் சிறுநீர் கழித்துவிட்டுப் போக வேண்டியதுதான்.
3.எத்தனை பூங்காக்களில் கழிவறை வசதிகள் இருக்கின்றன. இல்லை. பனகல்பார்க், லஸ் பார்க் மாதிரி ஒன்றிரண்டில் இருந்தாலும், சந்திரமுகி அறையைப் போல மிகப்பெரிய பூட்டுகளால் பூட்டப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு திறந்திருந்தால் நீங்கள் உள்ளே எட்டிக்கூடப் பார்க்க முடியாது என்று அர்த்தம். கழிவறை அமைப்பில் தவறா, பராமரிப்பில் தவறா என்பதில் நாம போகவேண்டாம்.
4.செல்வந்தர்கள் முதல் சாமான்யர்கள்வரை நடைப் பயிற்சிக்கும், பொழுதுபோக்கிற்கும் ஆயிரக்கணக்கில் வந்துபோகும் மெரினா கடற்கரை, பெசன்ட் கடற்கரை, கோவளம், காசிமேடு  கடற்கரை பகுதிகளில் எங்காவது ஒரு கழிப்பறை வசதி அடையாளத்தைப் பார்த்ததாக ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு?
5.நடைபாதை ஓரத்தில் முன்பெல்லாம் எங்கோ ஒன்றாய் கண்ணில்பட்ட யூரின் பீங்கான்களைக் கூடக் காணவில்லை இப்போது.
6.வெளியூரிலிருந்து இரவில் வந்து இறங்குபவர்கள் தாம்பரத்தில் உள்ள இரண்டே இரண்டு பாத்ரூம் அறைக்கு முன் அரை கிலோமீட்டர் வரிசையாய் நிற்பதைப¢ பார்த்திருப்பீர்கள் தானே.
7.பெரிய நிலையம் தவிர ரயில் நிலையங்கள் அனைத்திலும் கழிப்பறைகள் வசதி இருக்கிறதா என்ன?
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஊன்றிப் பா£க்கப் பார்க்கக் குறைகள் தட்டுப்பட்டுக் கொண்டே வரும்.
சுத்தமாகவே கழிவறை இல்லை என்று சொல்லலாமா? இருக்கிறது!
இப்போது மீண்டும் நண்பர் சமாச்சாரத்திற்கு வருவோம்! நண்பரின் அவஸ்தையை முழுதாக அறிந்த ஒரு பெரியவர், ‘அங்கெல்லாம் போவாதப்பா. இப்படியே போ. வரதராஜபுரம் துலுக்கானத்தம்மன் கோயிலுக்கும் அந்தப்பக்கம் இருக்கு’ என்றார்.
நண்பர் போய் சேர்வதற்குள் எல்லாம் எல்லை மீறிவிட்டது. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே விறுவிறுவென போய் உள்ளே சுத்தம் செய்து நனைத்துப் பிழிந்து போட்ட பேன்ட்டோடு வந்தார்.
சுத்தமில்லாது போனதாலும், அதன் விளைவாக எவராலும் பயன்படுத்தாது கிடந்ததாலும் பல கழிவறைகள் காணாமல் போயிருக்கலாம். அவ்வேலையைச் செய் வோர்கள் அதை விடுத்து வாழ்வை மேம்படுத்தியது அதிகரித்ததால் மேற்கண்ட வேலைக்கு யாரும் வராததால் அதைக் கிடப்பில் போட்டிருக்கலாம். அடித்தட்டு மக்களின் இம்சைகள் மீது அக்கறை காட்ட வேண்டியவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம்.
கழிவறைகள் காணாமல் போனதில் இன்னொரு காரணமும் உண்டு. உயர்தர குடியிருப்புகள் பெருகத் தொடங்கியபோது நாகரிகக் குறைவாகக் கருதப்பட்டு பல கழிவறைகள் பெயர்த்தெடுக்கப்பட்டன. குப்பம் மற்றும் பிளாட்பார வீடுகள் உள்ள பகுதிகளில் மட்டுமே ஒருசில மீந்து நிற்கின்றன. அதுவும் அந்தக் காலத்தில் கட்டப்பட்டவைகளே. அப்படியான ஒன்றுதான் நண்பர் போனது! இப்படிச் சில ஆங்காங்கே உண்டு.
சாதாரண ஜனங்களே கூட தமக்கு கழிவறை வேண்டும் என்ற கோரிக்கையை நினைக்காமல் மறந்தே மறந்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்டதும் அதுதான். மெல்ல மெல்ல உயர்தரத்திற்கானதாக மட்டும் நகரம் மாறிவருகிறது என்பதுதான் காரணம்.
இதைப் பயன்படுத்தி தப்பித்துக்கொள்வது சரியல்ல, மக்களைச் சுகாதாரமாக வாழப்பழக்கி தேசத்தின் மீது அவர்களுக்கு நேசத்தை வளர்ப்பதே மானுட மாண்பு.
எண்ணிப் பாருங்கள்!
மக்கள் ஒவ்வொரு நொடியும் பேருந்தில், ரயிலில், ஆட்டோவில், சாலையில், பேருந்து நிறுத்தத்தில், நடைபாதையில் எத்தனை உபாதை அவஸ்தைகளோடு செல்கிறார்கள்.
இது என்றேனும் ஒரு நாள் பூதாகரமான பிரச்சனை யாக வெடிக்கலாம். இடம் சுருங்கச் சுருங்க விளைவுகள் ஊதிப் பெருகலாம். வேறுவழி இல்லையென்கிறபோது ஜனங்கள் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கலாம்.
விழி.பா.இதயவேந்தனின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
“தமது ஊருக்கு கழிவறை வேண்டுமென பல வருடங்களாக மனுப்போட்டும், நேரில் முறையிட்டும், போராடி ஆர்ப்பாட்டம் செய்தும் மக்கள் போராடுவார்கள். சாக்குபோக்குகளும், அதிகாரிகளின் இடம் பார்க்கும் ஏமாற்றமுமே நடந்து வரும். கடைசியில் மக்கள் திரண்டு   மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் முன் நாறடித்து விடுவார்கள்’’
மக்கள் அந்தக் கதையின் முடிவை யோசிக்க வேண்டுமென சொல்லவில்லை. மக்களை அந்நிலைக்கு ஆளாக்கி சோதிக்கக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்!

 
நிகழ்வுகள்

184, வைகை காலனி (கிழக்கு),
அண்ணா நகர்,
மதுரை-625 020.

பின் தொடரலாம்

தொலைபேசி : +91-44-43589876,
மின்னஞ்சல் : info@kaviyam.in
இணையதளம் : www.kaviyam.in

சமூக வலை தளம்  :

\

© 2012 kaviyam All Rights Reserved.Powered by Zeal Soft Technology Solutions